வெப்பகால யாழ்ப்பாண உணவு
சென்ற பனிப்பூக்கள் இதழில் சமையல் குறிப்பில் யாழ்ப்பாணக் கூழ் பற்றிப் பார்த்தோம்.
வெட்பதட்பம் அதிகரித்த மினசோட்டாவில் நாம் எமது ஈழத்து, தமிழகக் கிராமிய வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆராய்ந்தால் உடலுக்கும் உளத்திற்கும் மிகுந்த அனுகூலமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.
Mid June, July இல்லை தமிழில்ஆனி, ஆடி மாதங்கள் எம் ஊரைப் பொறுத்தளவில் முதுவேனிற் காலம் என்பார்கள். இந்த வெப்பம் கூடிய காலத்தில் பித்தம், கபம், தலை சுற்றுதல் போன்றவை ஆரம்பிக்கலாம்.
இதே சமயம் வாதங்களும் சில சமயம் வந்து போக வாய்ப்புண்டு. வாதங்களைப் போக்க இனிப்பு உணவுகளை இந்தச் சமயம் மக்கள்
உட்கொள்வதும் வழக்கம். ஆடிப்பிறப்பை ஒற்றி ஆடிக்கூழும், இனிப்பு கொழுக்கட்டையும் உண்பது பண்டைய தமிழர் வழக்கம்.
நாம் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எடுத்துப் பாரத்தால் அவ்விடம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிக் கூழ், கொழுக்கட்டை தயார் பண்ணுவதைப் பற்றிப் பாடலாக தந்துள்ளார்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம்ஆனந்தம்தோழர்களே
கூடிப்பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டைதின்னலாம் தோழர்களே
பாசிப்பயறு வறுத்துக்குற்றிச் செந்நேற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காயுடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரையுங் கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவையதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு
வில்லை வில்லையாக மாவைக்கிள்ளித்தட்டி
வெல்லக் கலவை உள்ளேயிட்டுப்
பல்லுக்கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப்பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப்பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக்கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப்பொட்டிட்டு பூமாலைசூடியே
குத்து விளக்குக்கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம்பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிபொறுக்கியே
வந்து மடித்துக்கோலிக் கொண்டே
அன்னஅகப்பையால்அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே.
வாழைப்பழத்தை உரித்துத்தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத்தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே!
ஆடிமாதம் தமிழர்கட்கு அமாவாசை பௌர்ணமி தினங்களை ஒட்டி விசேஷமான உணவுகள் தயார் பண்ணும் மாதமாகும். மேலும் சைவ சமயத்தவர்கள் தொடர்ந்து ஆடி அமாவாசையில் மறைந்த பெற்றார்களையும், சந்ததியினரையும் போற்றி விரதம் இருந்து, கடலில் நீராடும் மாதமாகும்.
– யோகி அருமைநாயகம்