வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்
மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN அலைவரிசை. என்னவரின் இந்தக் காட்சிதான். ஓ!!! இன்னைக்கு ஞாயித்துக்கிழமையா!! அப்ப எனக்கும்தானே?!!!
இடதுகை மிக்சியின் மூடியையும் வலது கை அதன் ஸ்விட்சையும் பிடித்தபடியே சமையலறையைத் திரும்பிப் பார்த்தேன். ஒருபக்கம் லொடக்குலொடக்குன்னு கிரைண்டர் ஓடிக் கொண்டிருந்தது. அதனுடன் வாஷிங் மிஷின் நீயா நானா எனப் போட்டி போட்டுக்கொண்டிருந்தது. கடைக்காரன் கன்னாபின்னாவென்று வெட்டி விடுகிறான் என்று தோலை மட்டும் உரித்து வாங்கி வந்த கோழி என்னை வெட்டித்தான் பாரேன் என்று வீராப்பாய் பாத்திரம் கழுவும் இடத்தில் கவுந்து கிடந்தது. மறுப்பக்கத்தில் காலை சமையல் பாத்திரங்கள் கழுவ கிடந்தன. சமையலறை மேடையை, இந்த வாரம் முழுவதற்கும் தேவை என்று மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறி பழங்கள் பைகள் எல்லாம் முழுவதும் அலங்கரித்தபடி என்னைப் பார்த்து நக்கலடித்தன.
எனக்கும்தானே ஞாயிற்றுக்கிழமை? மீண்டும் அதே கேள்வி. நானும் வேலைக்குதானே போயிட்டு வரேன். அவருக்காவது கம்பெனி பேருந்து வீட்டுக்கு எதிர்புறம் ஏறினால் கம்பெனி வாசலில் கொண்டுபோய் இறக்கி விட்டுவிடும். நானோ, அவர் கிளம்புவதற்கு முன்னால் மகளை கிளப்பிப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு அவருக்கும் மதிய உணவைக் கட்டி வைத்துவிட்டு கிளம்பவேண்டும். வீட்டிலிருந்து பேருந்தில் டாம்பனீஸ் சென்று அங்கிருத்து எம்ஆர்டி எடுத்து தஞ்சோங்பகார் செல்ல வேண்டும். சிங்கப்பூரில் பனி பொழிந்தது என்று சொன்னால் எவ்வளவு உண்மையோ அப்படித்தான் காலை நேரத்தில் பாசிர் ரிஸ்சிலிருந்து வரும் ட்ரெயின் காலியாக வரும் என்பதும் அந்த அளவுக்கு உண்மை. அந்த ரயிலில் உள்ளே நுழைந்து என்னை நிலைநிறுத்தி நிற்பதற்கே எனக்குப் பல நாள் பயிற்சி தேவைப்பட்டது. இரயில் நிற்கும் தளத்திற்கு வரும்போதே எந்த வரிசையில் கூட்டம் குறைவாக இருக்கிறது என்று முதலில் பார்க்க வேண்டும். ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றதும் நான் நிற்கும் இடத்தில் கதவு திறக்கும்போது அங்கிருக்கும் பாதுகாப்பு பணியாள் எனக்கு முன்னால் உள்ள நபர் வரை உள்ளே அனுப்பிவிட்டு நான் நுழையும்போது சிகப்பு லைட் கம்பை நீட்டுவதற்கு முன் முண்டிக்கொண்டு லாவகமாக உள்ளே நுழைய வேண்டும். இதில் உட்கார இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது, என் வீட்டுக்காரர் ஒரு நாள் எனக்கு சமைத்து கொடுக்கமாட்டாரா என்று எதிர்பார்ப்பதுபோல ஆகும். வேலை முடிந்து திரும்பி வரும்போதும் இதே கூத்துதான். எனக்கு முன்னால் மகளைப் பள்ளி மாணவர்கள் காப்பகத்திலிருந்து அழைத்துக்கொண்டு அவர் திரும்பி இருப்பார். நான் போய்தான் இரவு உணவு தயாரிக்கவேண்டும்.
செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அந்த இடத்தில் நின்றால் அந்தக் காட்சி கண்களை உறுத்தும். பிறகு அரைத்துக்கொள்ளலாம் என்று அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். வானொலியை ஆன் செய்தேன். விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.
ஐயோ பாவம் பெண்டாட்டி தனியா வேலை செய்கிறாளே. நம்மாலான உதவிய செய்வோம்னு தோணாதா? இதெல்லாம் நம்ம வேலை கிடையாது என்கிற அலட்சியப்போக்கா? நான் வெங்காயத்தை வேகவேகமாக வெட்டினாலும் திரும்பி நின்று அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டு வெறியாட்டம் ஆடும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னொரு வெங்காயத்தை எடுத்து வெட்ட பார்க்கும் பொழுது கூடையில் அது முடிந்திருந்தது. ஐயோ வெங்காயம் இல்லையா என்று மனம் அடுத்த கவலைக்குத் தாவுவதற்கு இடம் கொடுக்காமல் விலை குறைவு என்று வாங்கிப் போட்ட குட்டி வெங்காய மூட்டை எனக்கு விடுதலை கொடேன் என்று என்னைப் பார்த்துக் கெஞ்சியது.
அதைத் தூக்க நான் குனிந்த போது திடீரென்று அந்த வெங்காய மூட்டை இருந்த இடத்தில் காலை நீட்டிக்கொண்டு காபியை ருசித்துக்கொண்டே உட்கார்ந்தபடியே உலக நடப்புகளை அலசிக்கொண்டிருக்கும் என்னவரின் காட்சி வந்து தொலைந்தது. “இனிமேலும் நான் நல்லவளாக இருக்க மாட்டேன் என்று மனம் வாயுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு “என்னங்க இந்த வெங்காய மூட்டையைத் தூக்கி வைச்சி எனக்கு பிரிச்சிக் கொடுங்க” என்றது.
அங்கிருந்து எந்தச் சத்தமோ பதிலோ இல்லை.
“நான் சொன்னது காதுல விழுந்துதா இல்லையா?”
“நான் செவுடா? காதுல விழாம இருக்க?”
“நீங்க ஊமையும் இல்லைதானே. ஒருத்தி ஒரு சேதி சொன்னா பதில் சொல்லணும்தானே? மௌன அஞ்சலி செலுத்துற மாதிரி அமைதியா இருந்தா திருப்பிக் கேட்காம இருக்க முடியுமா?”
“சரி சரி காலையிலேயே ஆரம்பிக்காத. இந்தச் செய்தியப் பார்த்துட்டு வரேன்.”
மனதில் தோன்றுவதை யோசிக்காமல் சொல்ல வேண்டியது. அது எதிராளிக்கு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்றெல்லாம் புரியறதில்லை. வாரம் ஒருமுறைதான் சந்தைக்குச் செல்வதால் எல்லாவற்றையும் வாங்கி தூக்கிக்கொண்டு வருவது சிரமமாய் இருக்கும். போகும்போது நடந்து சென்றுவிட்டு வரும்போது பேருந்தில் வருவேன். ஒரு பேருந்து நிறுத்தம்தான். இறங்கி வீட்டுக்கு கொஞ்ச தூரம் நடந்துதான் வரவேண்டும். நீ சந்தைக்குப் போகும்போது எழுப்பு. நானும் உன் கூட வருகிறேன் என்று முதல் நாள் இரவு படுக்க செல்லும் போது சொன்னாரே என்று காலையில் எழுப்பினால் “இவ்வளோ சீக்கிரமாவா! இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகலாம்” விலகிக் கிடக்கும் போர்வையையும் நன்றாக விரித்துப் போர்த்திக்கொண்டு புரண்டு படுத்து தூங்கவேண்டியது. நான் எழுப்புவதே எட்டு மணிக்குதான். நான் சந்தைக்குச் செல்வதைப் பொறுத்துதான் மற்ற எல்லா வேலைகள் எல்லாமே அமையும் என்பதால் தனியாகவே சென்றுவிடுவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் தூங்கி எழுந்ததுமே சாப்பாடுதான். அதன் பிறகுதான் காபியே. அது என்ன “காலையிலேயே ஆரம்பிக்காத” என்று சொல்வது? அப்போ நாள் முழுக்க நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேனா? சொல்லியும் பார்த்தாயிற்று. சண்டையும் போட்டாச்சு. ம்ஹும்.. ஓட்டைப் பாத்திரத்தில் ஊத்தின தண்ணி மாதிரிதான்.
இரவு பாத்திரம் தேய்க்கிறது, வாஷிங் மிஷினிலிருந்து துணிகளை எடுத்து காய வைக்கிறது இதெல்லாம் என் ஹஸ்பெண்ட் வேலைப்பா என்று சில அலுவலக தோழிகள் சொல்லும்போது அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று எனக்குள் சொல்லிக்கொண்டு திருப்தி பட்டுக்கொள்வேன். நான் வேலை பார்க்க வேண்டுமல்லவா? “உன்மேல்தான் தப்பு. நீ ரொம்ப இடம் கொடுத்துட்ட. முடியலன்னா என்னால முடியலன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதானே” என்று என்னைத் திட்டவும் செய்வார்கள். அன்று திட்டவரைவு சமர்பிக்க இறுதிநாள் என்பதால் கோப்பைச் சரிபார்ப்பது மின்னஞ்சல் அனுப்புவது என்று அலுவலகத்தில் ஒன்று மாற்றி ஒன்று சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை இருந்துகொண்டேயிருந்தது. தோழி லிண்டா செய்வது மாதிரி நானும் வீட்டுக்குத் திரும்பும் வழியில் கடையிலிருந்து இரவு உணவை வாங்கி வந்துவிட்டேன். “வயிறு சரியில்லாதது மாதிரி இருக்கு ரெண்டே ரெண்டு தோசை ஊத்திக் கொடுத்துடேன். முடியலன்னா நானே ஊத்திக்கிறேன்” என்றார். அவர் ஊத்திய பிறகு சமையலறை கிடக்கும் காட்சி கண்முன்னே வந்ததும் தோசைக்கல் அடுப்பில் ஏறியது.
செய்தியைப் பார்த்துவிட்டு “ஞாயிற்றுக்கிழமையிலகூட நிம்மதியா இருக்க விட மாட்டியே” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்கு வந்தவர் “வெங்காய மூட்டை எங்கிருக்கு?” என்றார்.
‘வெங்காயம் எங்கு வைத்திருப்பேன் என்றுகூட தெரியாது.’ இடத்தை காண்பித்தேன்.
வெங்காய மூட்டையைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். மூட்டையைப் பார்த்தார். என்னைப் பார்த்தார்.
ஒருமுறை இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பி டாக்சி எடுத்து வீட்டில் வந்து இறங்கும்போது என் வீட்டுக்காரர் டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு வருவதற்குள் பெட்டிகளையெல்லாம் நான் இறக்கி வைத்துவிட்டேன். ஊரிலிருந்து வருகிறோம் என்றால் விமான நிறுவனம் அனுமதிக்கும் அளவைத் தாண்டி நூறு கிராம் அதிகமாக எடுத்து வருவோமே தவிர குறைத்து எடுத்து வர மாட்டோம். ஒவ்வொரு பெட்டியும் முப்பது கிலோ எடை இருந்தது. இன்று எப்படி முழிக்கிறாரோ அதேபோல்தான் அன்றும் செய்தார்.
அப்படிப்பட்டவள் தன்னை இத்துனூண்டு வெங்காய மூட்டை தூக்கி வைத்து பிரிக்க அழைத்திருக்கிறாள். அதுவும் அமெரிக்க அரசியல பார்க்கவிடாம கூப்பிட்டு கெடுத்து விட்டாளே என்பது அவர் காதல் கனிந்த பார்வையைச் சொரிந்ததிலிருந்தே எனக்கு புரிந்துவிட்டது.
நான் வாய்க்குப் பூட்டு போட்டுவிட்டேன். ஆனால் எனக்குள்ள இருந்ததை அடக்க முடியவில்லை. சற்றுமுன் கண்ட காட்சியைக் கலைத்துவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் நாக்கை துருத்திகிட்டு கைய மடக்கி கட்டைவிரலை உசத்தி குத்தாட்டம் போட்டு பட்டையக் கிளப்பிகிட்டு இருந்துது.
முனகிக்கொண்டே மூட்டையைத் தூக்கி சமையலறை மேடை மேல வைத்து பிரித்தார். “என்னவோ இளவட்ட கல்ல தூக்க சொன்ன மாதிரி சீன் போடுறீங்களே” என் வாய் தானாகப் பூட்டை உடைத்துக்கொண்டது. மீண்டும் காதல் சொரியும் பார்வை.
“அப்படித் தூக்க வச்சிருந்தாலாவது நான் தப்பிசிருந்திருப்பேன்.”
“என்ன?”
“ஒண்ணும் இல்ல. மூட்டையப் பிரிச்சாச்சு” கடுப்பாகச் சொல்லியபடிச் சமையலறையை விட்டு வெளியேறினார்.
கோழியை நறுக்கியபடியே திரும்பிப் பார்த்தேன். வாங்கி வந்த சாமான்கள், பைகளைத் தள்ளி வைத்து இந்த மூட்டையைப் பிரித்திருக்கிறார். அதை வெட்டி பிரிப்பதற்கு எடுத்த கத்திரிக்கோல் பக்கத்திலேயே கிடந்தது. விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் பாதி வெங்காயங்கள் வெளியே சரிந்து கிடந்தன. அதில் இரண்டு மூன்று வெங்காயங்கள் தரையில் கோலி விளையாடிக் கொண்டிருந்தன.
திரும்பி அவர் செல்வதையே பார்த்தேன். மனைவி காலையில் தான் எழுவதற்கு முன் சந்தைக்கு சென்று வந்திருக்கிறாள். அதன் பிறகு உணவு தயாரித்திருக்கிறாள். சமையலறையில் எங்குத் திரும்பினாலும் ஏதோ ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது. சினிமா பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறுவது போன்று தனக்கும் அங்கு நடக்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை. இதெல்லாம் உன் வேலை என்று மீண்டும் உலக அரசியலை அலச செல்பவரை என்னவென்று சொல்வது. நானும் போய் அதுபோல உட்கார்ந்தால் என்ன நடக்கும்? என்னாலதான் உட்கார முடியுமா? அலுவலக வேலை என்றால் செய்யவேண்டும் என்று கட்டமைத்ததுபோல வீட்டு வேலைகளையும் இருவரும் செய்யவேண்டும் என்று ஏன் கட்டமைக்கப்படவில்லை. தோழிகள் சொல்வதுபோல நானும் அதற்கு உடந்தையாக இருக்கிறேனோ? திடீரென்று உடல் சூடேறியது. கத்தவேண்டும் போல் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மகள் எழுந்துவிடுவாள். அதற்குள் முடிந்த அளவு வேலைகளை முடித்துவிடு. சற்றுமுன் நாக்கைத் துருத்தி குத்தாட்டம் போட்ட மனம் ஞான உபதேசம் செய்தது. மூடி இருந்த சமையலறை சன்னலைத் திறந்துவிட்டேன். உள்ளே வர ஆரவாரம் செய்து கொண்டிருந்த காற்று என் முகத்தை ஆரத்தழுவியது. இதமாக இருந்தது. நெஞ்சாக்கூடு நிரம்பும் வரை மூச்சை இழுத்து விட்டேன்.
கோழியைக் கழுவி உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஊறவைத்துவிட்டு கிரைண்டரிலிருந்து உளுந்தை எடுத்துவிட்டு அரிசியைப் போட்டு சுற்றவிட்டேன். என் வேலையை சமத்தாக முடித்துவிட்டேன் என்று வாஷிங் மிஷின் இனிமையான இசையெழுப்பி அறிவிப்பு செய்து அரைமணி நேரம் ஆகி இருந்தது. வெயிலை வீணாக்க விரும்பாமல் துணிகளை எடுத்து காய வைத்தேன். எழுத்தாளர் மணிமாலா மதியழகன் எழுதிய “வெயிலை குடித்தவள்” என்கிற சிறுகதையைத் தோழி எனக்கு அனுப்பி என்னைப் படிக்க சொன்னாள். அதில் வரும் கதாபாத்திரம் நீதானே என்றும் கேட்டாள். என் வீட்டுக்கு வெளியே வராண்டாவை என் இரு பக்க அண்டை வீட்டுக்காரர்களும் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் அதன் முழுப் பயன்பாடும் எனக்குத்தான். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தலையணை போர்வை என்று அனைத்தையும் கட்டை சுவருக்கும் அந்த கம்பிக்கும் இடையில் அமுக்கிச் சொருகிவிடுவேன். இதெல்லாம் நானாக இழுத்துக்கொள்ளும் அதிகப்படியான வேலை என்று கூட சில சமயம் தோன்றும்.
மாவை எடுத்துக் கரைத்து வைத்துவிட்டு, ஃபிரிட்ஜிலிருந்த பழைய காய்கறிகளை எடுத்து உடனடி பயன்பாட்டிற்கு வைத்துவிட்டு வாங்கி வந்தவற்றை எடுத்து உள்ளே அடுக்கி வைத்தேன். மற்ற சாமான்களையெல்லாம் பிரித்து வைத்துவிட்டு கோழி குருமாவுக்கு வதக்கி இருந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு மல்லி கலவை இருந்த மிக்சியை ஆன் செய்தேன்.
“அம்மா…..” என் மகளின் அலறல் சத்தம். செவி வழியே கேட்ட அந்த சத்தம் என் மொத்த உடம்பையும் அப்படியே உலுக்கிவிட்டது. சமையலறை வாயிலுக்கு நான் வருவதற்கும் மகள் பயந்துபோய் கதறிக்கொண்டே வருவதற்கும் “என்னடா என்னாச்சு?” என்று கேட்டபடியே என் கைகளை நீட்ட அடுத்த நொடி அவள் என் நெஞ்சோடு நெஞ்சு இருக்கிறமாதிரி தன் கால்களால் என் இடுப்பை கிடுக்கிப்பிடி பிடித்தபடி என் இடுப்பில் இருந்தாள். அவள் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது. எனக்கு உதறல் எடுத்தது. “என்னாச்சுடா?” பாதி அழுகையினிடையே அவளுக்கு மேல் நான் கத்தியபடி கேட்டேன். என்னவென்று சொல்லாமல் அலறிக்கொண்டே அறைப்பக்கம் கையை நீட்டினாள். அவளை தூக்கிக்கொண்டே ஓடினேன்.”அவதான் கத்துறா. நீ ஏன் கத்துற. நிறுத்துறியா?” என்னைத் திட்டபடியே என் கணவர் எங்கள் பின்னால் ஓடி வந்தார்.
மகள் தூங்கி எழுந்து கதவை திறந்துகொண்டு வந்திருக்கிறாள். வெளியே அவளை வரவேற்க அது காத்திருந்திருக்கிறது. கரப்பான்பூச்சி. அதுவும் செத்துப்போன கரப்பான்பூச்சி. அதற்குதான் அந்த அலறல். உயிர் போய் வந்தது என்று சொல்வார்களே. மகளின் அலறல் எனக்கு அது என்னவென்று காட்டியது. “இதுக்காம்மா இப்படி கத்தின?” நான் பயந்த பயம் மகளுக்குத் திட்டாய் விழுந்து கொண்டிருந்தது. பனை மரத்தில் ஏறி அதைப் பிடித்துக்கொண்டிருப்பதுபோலப் பத்து வயது மகள் என் இடுப்பையும் கழுத்தையும் பிடித்திருந்த கிடுக்கிப்பிடி இன்னும் விடவில்லை. நானும் எடுக்கவில்லை. இந்த நிலையிலேவா சமையலறையிலிருந்து ஓடி வந்திருக்கிறேன். “ஐயோ மிக்சியை ஆன் செய்யும் போதுதானே இவள் கத்தினாள்!” வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, தேங்காய் கலவை உள்ளேயிருத்து தெறித்து சமையலறை மேடையிலும் சுவரிலும் வாரி இறைந்திருக்கும் காட்சி கண்முன் விரிந்தது. இறுக்கி அணைத்திருந்த கைகளை அவசரமாகப் பிரித்து மகளைத் தொப்பென்று கீழே விட்டேன். “இருக்கிற வேலை பத்தாதென்று நீ வேறம்மா…?” மேலும் திட்டியபடியே அடுக்களை நோக்கி ஓடினேன்.
அங்கே என்னவர் சமையலறை டிஷ்யூ-வை வைத்து சுவரில் தெறித்திருந்ததையெல்லாம் துடைத்துக்கொண்டிருந்தார். வானொலியில் “காற்றுகென்ன வேலி. கடலுக்கென்ன மூடி” பாடல் பாடிக்கொண்டிருந்தது. அப்படியே பின்புறமாக சென்று அவரின் இரண்டு கைகளுக்குள்ளும் என் கைகளை விட்டு இறுக்கி அணைத்தபடி அவரின் முதுகில் என் முகத்தை வைத்து சாய்ந்து கொண்டேன்.
-செல்வி ராஜன்
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை.