மினசோட்டா மீன் தேடல்
தூத்துக்குடி போகும்போதெல்லாம் காலையில் எழுந்து துறைமுகம் பக்கமிருக்கும் கடற்கரைக்குச் செல்லும் வழக்கமுண்டு. அச்சமயத்தில் அங்குக் கடலுக்குள் சென்றிருக்கும் சிறு சிறு படகுகள் கரை திரும்பி வரும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். படகுகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில் நிறைய மீன்கள் பிடிக்கப்பட்டுக் கரைக்கு வந்து சேரும். கடற்கரையில் அந்த மீன்கள் மற்றும் இதர பிடிபட்ட கடழ்வாழ் உயிரினங்கள் கொட்டப்பட்டு, வகைவாரியாகப் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படும். நடைபயிற்சிக்கு வந்தவர்கள், வீட்டிற்கு மீன் வாங்க வந்தவர்கள், கூடையில் போட்டு வீதி வீதியாக விற்பவர்கள் என்று பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள், அங்குப் பங்கு போட்டு வைத்திருக்கும் மீன்களை ஏலத்தில் எடுத்து, வாங்கிச் செல்வார்கள்.
ஏலம் போட்டு விற்றுக் கொடுப்பவர், அவருடைய பங்காக, விற்கப்படும் மீன்களில் இருந்து, சிலவற்றை எடுத்து வைத்துக்கொள்வார். மீன் வாங்குவதோ, சமைப்பதோ பெரிய விஷயம் இல்லை. சமைப்பதற்கு முன்பு, மீன்களின் செதில்களை நீக்கி, தேவையற்ற பாகங்களை நீக்கி, மீனைக் கழுவி, வெட்டுவது தான் பெரிய விஷயம். இந்த வேலையைச் செய்து உதவச் சிலர் அங்கு ஏலம் நடக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்கள். அவர்களிடம் வாங்கிய மீன்களைக் கொடுத்து, சிறிது பணமும் கொடுத்துவிட்டால், சமைப்பதற்கு ஏதுவாக மீன்கள் சுத்தம் செய்யப்பட்டு, நறுக்கப்பட்டு, துண்டுகளாகக் கிடைத்துவிடும்.
அப்புறமென்ன, வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட வேண்டியது தான். இதற்காகக் கடற்கரைக்குத் தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிற்கே வந்து பலவகை மீன்களை விற்பவர்கள் உண்டு. கடல் பகுதி என்பதால், மீன்களின் விலை அதிகமாக இருக்காது. செவ்வாய், வெள்ளி தவிரப் பிற வாரநாட்களில் நிறைய வீடுகளில் மீன் தான் பிரதான உணவாக இருக்கும். தற்போதைய நிலவரம் எப்படி என்று தெரியவில்லை.
இப்படி, மீன் என்றால் உணவு, தொழில் எனும் பின்புலத்தில் இருந்து வருபவர்களுக்கு, அமெரிக்க ஏரிக்கரை மீன் பிடித்தல் என்பது ஆச்சரிய நிகழ்வே. இங்கு மீன் பிடித்தல் என்பது பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு. மினசோட்டாவில் இருக்கும் ஏரிகளுக்குச் செல்லும்போது, அங்குக் கரையோரமாக ஏரியின் மேல் சிறிது தூரம் நடந்து செல்லும் வகையில் மரப்பலகைகளால் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். Fishing Pier என்றழைக்கப்படும் இந்த நடைமேடையில் பொழுதுபோக்கிற்காக மீன் பிடிப்பவர்கள் வரிசையாக நின்று, பொறுமையாக மீன் பிடிப்பதைக் காணலாம். அவ்வளவு பொறுமையாக நின்று மீன் பிடிப்பவர்கள், பிடித்த மீன்களைப் பார்த்து விட்டு, மீண்டும் தண்ணீருக்குள் விடுவதைக் காணும் போது ஆச்சரியமாக இருக்கும்.
ஆம், மினசோட்டா மாகாண இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் துறையான DNR (Department of Natural Resources), ஒவ்வொரு பகுதிக்கும், ஏரிக்கும், காலத்திற்கும் எனக் குறிப்பிட்டு, வருடம்தோறும் மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகளை வெளியிடும். மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ளவர்கள், இவற்றைப் படித்துக் கவனித்து, மீன் பிடித்து ‘விடுகிறார்கள்’.
இப்படித் தூண்டில் கொண்டு மீன் பிடிப்பவர்களைத் தூண்டிலாளர்கள் (anglers) என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பொறுமையான மீன்பிடி அன்பர்களின் மீன் தேடல் கவனத்திற்குரியது. அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், மீன்கள் குறித்த பல தகவல்களைப் பெறலாம். மீன் பிடித்தல் என்பது ஒரு நுட்பமான கலை எனலாம். எங்கு, எத்தகைய மீன்கள் இருக்கும், எவ்வகை மீன்கள் என்னென்ன உணவை விரும்பி உண்ணும், எந்தக் காலத்தில் எந்த இடத்தில் என்ன மீன்கள் இருக்கும் எனப் பல நுணுக்கங்கள் தெரிந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
மீன் பிடித்தல் என்பதை ஒரு விளையாட்டு என்றும் சொல்லலாம். மனிதனும் மீனும் விளையாடும் விளையாட்டு இது. யார் யாரைப் பற்றி அதிகம் கற்கிறார்கள், யார் யாரிடம் அதிகம் ஏமாறுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த விளையாட்டில் வெற்றி-தோல்வி இருக்கும். வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒரு மீனுக்கா இவ்வளவு அக்கப்போர் என்று தோன்றும். மீன் பிடிப்பவர்களிடம் பழகி, மீன் பிடித்தல் குறித்துச் சிறிது அறிந்துவிட்டால், இப்பழக்கம் கொடுக்கும் பலவகை உயர்நிலை பண்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சரி, யார் வேண்டுமானாலும் ஒரு தூண்டில் வாங்கி விட்டால் மீன் பிடிக்கச் சென்றுவிடலாமா என்றால் முடியாது. இதற்கான உரிமத்தை (license) பணம் கட்டி பெற வேண்டும். மினசோட்டா இயற்கை வளங்களுக்கான துறை (DNR) பல வகை உரிமங்களை இணையம் மூலமாகவும், அலுவலகங்கள் மூலமாகவும் விற்கிறது. நமது தேவைக்கேற்ப உரிமத்தைப் பெற்று மீன் பிடிக்கச் செல்லலாம். மீன் பிடிக்கச் செல்பவர்கள் எந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்களோ, அங்கு என்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் படித்து அறிந்துவிட்டு செல்ல வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் மினசோட்டா ஏரிகளில் இருக்கும் மீன் வளம் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறது. மீன் பிடிப்பவர்களின் மீன் பிடி வாய்ப்புகள் சமமான முறையில் வழங்கப்படுகிறது.
கரையில் இருந்து மட்டுமில்லாமல், படகில் சென்று நடு ஏரியில் இருந்து மீன் பிடிப்பது, குளிர்காலத்தில் ஐஸ் கட்டியாக உறைந்து இருக்கும் ஏரியில் துளையிட்டு மீன் பிடிப்பது, அத்தகைய பனி ஏரியில் கூடாரம் அமைத்து தங்கி மீன் பிடிப்பது என்று மீன் பிடிப்பதில் பல தூரங்களுக்குச் செல்லலாம். பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும், ஒருமுறையாவது மீன் பிடிக்கச் செல்வது ஒரு நல்ல அனுபவத்தை அளிக்கும்.
மினசோட்டாவில் மீன் பிடித்தல் குறித்த மேலும் தகவல்களுக்கு,
https://www.dnr.state.mn.us/regulations/fishing/index.html
https://www.dnr.state.mn.us/licenses/fishing/index.html
- சரவணகுமரன்