நட்பு
உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக்
கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ
படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப்
பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ!
இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ
எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற
மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ
அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!!
– மதுசூதனன் வெ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில்
அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்!
அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில்
அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்!
– ரவிக்குமார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவசரம் வந்திடலாம் புறவியல் வாழ்வினிலே
அவகாசம் குறைந்திடலாம் அனுதின நடப்பினிலே
அவனியெங்கும் பயணிக்கலாம் வணிக நோக்கினிலே
அவமானம் ஏதுமில்லை பொருளீட்டும் பணியினிலே
அவதானம் குன்றிடலாம் அகவையின் ஏற்றத்தினிலே
அவயவங்கள் ஒடுங்கிடலாம் இயற்கை விதியினிலே
அவயத்து வாழ்வுநீத்து அமைந்திடலாம் அவ்வுலகினிலே
அவனவன் தூயநட்பு அடங்கிடாது அவசரத்தினிலே!!!
– மதுசூதனன் வெ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதற்கவிதையில் அன்னையென அருகிருந்த நட்பு
மறுகவிதையில் அவசரத்தில் அடங்கா தூயநட்பானது.
மலிந்திட்ட உறவுகளுடன் மதிப்பிழந்திட்டது நட்பும்.
மல்லாடி வகைப்படுத்துகிறோம் இன்னமும் நாம்.
சிறுபாலர் நட்பு சின்னப்பிள்ளை சினேகமாம்!
இருபாலர் நட்பு இளவயது இச்சையாம்!
ஒரேபாலர் நட்புக்கு புதுஇலக்கணம் இயம்பினரே – ஆக
பெரும்பாலர் நட்பிங்கே தாமரையிலை நீரே!
– ரவிக்குமார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில்
அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால
நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன்
சிரிக்க சிரிக்க பேசினோம்
கடற்கரைக்குப் போவது என்று முடிவானது
தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு
வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம்
குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி,
கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா,
நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் பேசினோம்
பேச்சு நிகழ் காலத்துக்கு திரும்பியது
அலைபேசி மாடல், வீட்டு லோன், பள்ளி கூட அட்மிசன்
எல்லாம் பேசி ஆகி விட்டது
சிறிது நேரம் கடலை அமைதியாக வேடிக்கை பார்த்தோம்
இரவு சாப்பாட்டு நேரம் வரை பேச ஒன்றும் இல்லை என்றானது
வீட்டுக்கு கிளம்பினோம்
நண்பன் தந்த்துவிட்டு சென்ற அலைபேசிக்கு
இன்றாவது அழைத்துவிட வேண்டும்.
“மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ
அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!!”
அருமையாக பறைசாற்றினாய் நட்பின் இலக்கணம்
பெருமையாக நினைத்தேன் நண்பனின் கவிநயம்
வறுமையிலும் கைகொடுக்கும் தோழனின் கொடைக்குணம்
மறுவாதமில்லை உன்கருத்தே எனக்கு சம்மதம்