சுழல் – The Vortex சீசன் 1
’விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய இயக்குனர் தம்பதிகளான புஷ்கர்-காயத்ரியை ரொம்ப நாளைக்குக் காணவில்லை. இந்தியில் அப்படத்தை இயக்குவதாகச் செய்திகள் வந்தன. இப்போது ‘சுழல்’ இணையத்தொடர் (Web series) மூலம் தங்களது அடுத்தப் படைப்பைத் தந்துள்ளனர். அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள இந்த இணையத்தொடரை, பிரம்மாவும், அனுசரணும் இயக்க, புஷ்கர்-காயத்ரி எழுதி, உருவாக்கியுள்ளனர். அமேசான் ப்ரைம் வெளியீடு என்பதால் உலக மொழிகள் பலவற்றில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
கதை சாம்பலூர் என்ற, உதகை போலுள்ள கற்பனை ஊரில் நடைபெறுகிறது. ஒருபக்கம், அந்த ஊரில் இருக்கும் கோவில் திருவிழா பத்து நாட்களுக்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற, மற்றொரு பக்கம், அங்கிருக்கும் சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒருநாள், மர்மமான முறையில் அந்தத் தொழிற்சாலையில் தீ பரவி வெடிக்கிறது. அதே நாள், தொழிற்சங்கத் தலைவரான பார்த்திபனின் மகள் காணாமல் போகிறார். அவ்வூரில் போலீஸ் அதிகாரிகளாக இருக்கும் ஸ்ரேயா ரெட்டியும், கதிரும், காணாமல் போன பெண்ணைத் தேடி துப்பு துலக்க, பார்த்திபனின் இன்னொரு மகளான ஐஸ்வர்யா ராஜேஷும் தனது தங்கையைத் தேடி செல்கிறார். இந்தத் தேடலில் அவர்கள் அறியும் விஷயங்களும், இந்தத் தொடரின் இறுதி வரை பல மர்மங்களை விலக்கிக்கொண்டே வருகிறது.
தொழிலாளர்கள் – முதலாளி, போலீஸ் – தொழிலாளர்கள், கணவன் – மனைவி, அப்பா – பெண், நாத்திகவாதி – ஆத்திகவாதி எனப் பரிமாண முரண்பாடுகளையும், நிதி மோசடி, கள்ளக் காதல், துரோகம், பாலியல் வன்முறை எனப் பல பிரச்சினைகளையும் இணைத்து, பின்னி இந்தக் கதை செல்கிறது. யார் நல்லவர், யார் கெட்டவர் எனப் புரிந்துக்கொள்ள முடியாமல் ஒரு தடுமாற்றத்தைக் கதையின் ஓட்டம் கொடுத்துவிடுகிறது. ஒரே நபர் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருப்பார் என்ற யதார்த்தம் கதை எங்கும் காட்டப்படுகிறது.
பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, சந்தானபாரதி, ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல் என்று நீண்டு செல்கிறது, இதில் நடித்துள்ள நடிகர்களின் பட்டியல். பெயர் தெரியாத புது நடிகர்கள் முதற்கொண்டு அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயற்கையான சூழலில் நகர்ந்து செல்லும் கதையை, காண்பதற்கும் நன்றாக உள்ளது. கோவில் திருவிழா காட்சிகளைக் காட்சிபடுத்தியிருக்கும் விதம் அருமை. மிக முக்கியமாக, இசையின் பங்கைக் குறிப்பிட வேண்டும். பின்னணி இசைக்குப் பெயர் போன சி.எஸ். சாம், இதிலும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் வசனங்கள் ‘அட!!’ போட வைக்கின்றன.
மற்ற வகை இணையத்தொடர்களை விட, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைத் தொடர்கள், பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு முழுத் தொடரையும் பார்க்க வைத்து விடும். இதிலும் அப்படியே. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு நல்ல திருப்பத்தை வைத்து விடுகிறார்கள். எட்டாவது பகுதி வரை விறுவிறுப்பாகப் பார்க்க வைத்து விடும் திருப்பங்கள் தொடர்ந்து வருகின்றன். ‘விலங்கு’ தொடருக்குப் பிறகு, தமிழில் மீண்டும் ஒரு கவனிக்கத்தக்க நல்ல த்ரில்லர் சீரிஸ்.
நடிகர்களின் நடிப்பு, கதைக் களம், கதாபாத்திரங்களின் பன்முகச் சித்தரிப்பு, தயாரிப்புத் தரம், ஒளிப்பதிவு, இசை, வசனம் என இந்த இணையத்தொடரில் பாராட்ட நிறைய அம்சங்கள் உள்ளன. ஒரு சிற்றூரைச் சுற்றி, இணையத்தொடருக்கேற்ற வடிவத்தில் எழுதப்பட்ட கதையை, அதற்கேற்ற பார்வையாளர்களின் கவனத்தில் கொண்டு படமாக்கி, சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளனர். சீசன் 1 என்று குறிப்பிட்டுள்ளதால், இதன் அடுத்த சீசனும் வருவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிகிறது. நாம் நெருங்கி பழகிவிட்டதாகத் தோன்றும் இந்தக் கதாபாத்திரங்களின் அடுத்த பிரச்சினை என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.
- சரவணகுமரன்