\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பண்ணை வீடு

நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி.

பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார்.

அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண ஓட்டங்களின் ஆக்கிரமிப்பில் வலுவாகவே சிக்கியிருந்தார். இதுபோன்ற விழிப்பு நேரங்களில் மீண்டும் உறங்குவதற்கான வழிமுறைகளை நண்பர்கள் மூலம் சொல்லக் கேட்டது, யூடியூபிலும் சமூக வலைதளங்களிலும் கண்டது என அனைத்தையும் முயற்சித்துப் பார்த்திருந்தார். ஊஹூம். முடியவில்லை.

இது பல வருடங்களாக அவர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனைதான் என்றாலும் சற்றே அதிகப்படியான வேலைப்பளு என்பதால் உடல் மிகுந்த அயர்ச்சியுடன் இருந்தது. இப்பொழுது ஒழுங்காக உறங்கினால்தான் இன்றையபொழுது நல்லபடியாக அமையும் என்பதாக இருந்தது புண்ணியமூர்த்திக்கு.

முதலாளியிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதில், மனைவி சொன்ன விஷயங்கள், மகள்களுடனும் பேரன் பேத்திகளிடமும் ஃபோனில் பேசியவை என பட்டியலிடமுடியாத அளவில் அனைத்து எண்ணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டி, அலைகள் போல் மூளைக்குள் வந்து போய்க்கொண்டிருந்தன.

புண்ணியமூர்த்தி கத்தாருக்கு வந்து இருபத்து மூன்று வருடங்களாகியிருந்தது.

மன்னார்குடிக்கு அருகேயிருக்கும் அழகிய சிறுகிராமமான அரிச்சபுரம்தான் அவரது சொந்த ஊர். மனைவியின் நகைகளை அடகு வைத்து தனது சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த புண்ணியமூர்த்திக்கு, அனுசரணையுடன் அறிமுகமான கூத்தாநல்லூர் நசுருல்லா பாய் மூலமாகத்தான் கத்தாரும் அறிமுகமானது.

பக்கத்து நிலத்தைக் குத்தகைக்கு எடுக்க வந்த பாய், புண்ணியமூர்த்தியின் நிலத்தையும் சேர்த்து பார்த்துக் கொள்ளலாமா எனக் கேட்ட கேள்விதான் அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

“இல்ல பாய், கோவிச்சுக்காதீங்க. இதை குத்தகைக்குக் குடுத்துட்டு வேற தொழிலுக்குப் போறதுக்கு எனக்கு வழி கெடையாது. இந்த நெலத்தை நம்பித்தான் இருக்கேன். மூணு புள்ளைங்க இருக்கு..”

“அச்சச்சோ, கட்டாயமெல்லாம் ஒண்ணும் கெடையாது. கேட்டுப் பார்ப்போமேன்னுதான் கேட்டேன். மத்தபடி உங்க விருப்பம்தானே. ஆமா, மூணு புள்ளைங்கள வச்சுகிட்டு இந்த நெலத்தை மட்டுமா நம்பி இருக்கீங்க?”

“ஆமா பாய். என்ன பண்றது, பரம்பரை பரம்பரையா விவசாயம் பாத்துகிட்டே வந்தவங்க, கஷ்டம் தாங்கமுடியாம கொஞ்ச கொஞ்சமா நெலத்தை வித்துகிட்டே வந்துட்டாங்க. மிஞ்சியிருக்கறதை விட்டுடக்கூடாதேன்னு இழுத்துப் புடிச்சுகிட்டிருக்கேன். சாப்பாட்டுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லன்னு வைங்க. வெளையறது ஜீவனத்துக்கு சரியா இருக்கு. என்ன, புள்ளைங்களை பட்டணத்துக்கு அனுப்பி நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. அது ஒண்ணுதான் நம்ம சக்திக்கு மீறி செய்ய முடிய மாட்டேங்குது”

“நெலத்தை பாத்துக்க உங்களுக்கு ஒத்தாசையா யாரும் இருக்காங்களா?”

“மச்சினன் இருக்காப்ள. அவருக்கு பக்கத்துல சித்தாம்பூர்லதான் நெலம். அங்க போறப்ப வர்றப்ப வழியில அப்புடியே இங்க வந்துட்டு, எதாச்சும் வேலை சொன்னேன்னா பாத்துக்குவாப்ள”

“என்ன படிச்சிருக்கீங்க நீங்க?”

“எட்டாவது வரைக்கும் பாய்”

“இல்ல, எதுக்கு இவ்ளோ டீட்டெய்லா கேக்கறேன்னா, என் தம்பி கத்தார்ல இருக்கறான். அவன் வேலை பாக்கற மொதலாளியோட பண்ணை வீட்ல ஏக்கர் கணக்குல பெரிய தோட்டம் இருக்கும் போலருக்கு. அதை பாத்துக்கறதுக்கு ஒரு நல்ல ஆளா வேணும்னு கேட்டான். சும்மா எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தா போதும். உங்களுக்கு எதுவும் ஐடியா இருந்தா சொல்லுங்க. அவன்கிட்ட சொல்றேன்”

நசுருல்லாவின் கேள்விக்கு உடனடியாக ’வேண்டாம்’ என மறுக்கத் தோன்றவில்லை. ஊரில் பலரும் ஃபாரின் செல்வதாகக் கூறிவிட்டு செல்லும்பொழுது ஏக்கப் பெருமூச்சு விட்டவர்தான் புண்ணியமூர்த்தி. காரணம், அவ்வாறு சென்ற பலரும் சில வருடங்களிலேயே தங்களது வீடுகளை இடித்துக் கட்டி சுகமாய் வாழத் துவங்கியதையும், குழந்தைகளை விரும்பிய இடங்களில் படிக்க வைத்ததையும் கண்டவர் அவர்.

“யோசிச்சு சொல்லட்டுமா பாய்?”

“தாராளமா யோசிங்க. அப்புடியே உங்க வீட்டம்மா, மச்சினன்னு எல்லார்கிட்டேயும் பேசிட்டு உங்களுக்கு வசதி எதுவோ அதை முடிவு பண்ணுங்க”

வீட்டில் நீண்டதொரு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மனைவி முத்துலட்சுமியின் பெரும்பாலான பதில்களின்பொழுது தொண்டை அடைத்துக்கொண்டு, கண்களில் நீர் நின்றபடியே இருந்தது. இந்த விஷயத்தில் முத்துலட்சுமிக்கு உடன்பாடு இல்லாமலிருந்தது.

’கூழோ கஞ்சியோ குடிச்சுகிட்டு கண்ணு முன்னால இருந்தா எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்’ என்பதுதான் அவளது மையக் கருத்தாக இருந்தது. புண்ணியமூர்த்தி இல்லாதநிலையில் குழந்தைகளின் மனநிலை, தனது தனிமை என அனைத்தையும் கலக்கத்துடனே பேசினாள் அவள்.

“நீ சொல்ற எதையும் இல்லன்னு சொல்லல முத்து. நானும் யோசிக்காம இல்ல. காலம்பூரா இப்புடியே வாய்க்கும் வயித்துக்கும் மட்டுமே உழைச்சுகிட்டு இருக்கறது நல்லாவா இருக்கு? வாய்ப்பு வராதவரைக்கும் வேற வழியில்லாம கஷ்டப்படறோம், சரி. ஆனா, இப்புடி வீடு தேடி வர்ற நல்ல சந்தர்ப்பத்தையும் வேணாம்னு சொல்றது நல்லதா படல. நம்ம படிப்புக்கெல்லாம் இந்த ஊர்ல வேலைக்கி போவணும்னா ஓட்டல்ல எச்சி எலை எடுக்கத்தான் போவணும். நமக்குத் தெரிஞ்ச வெவசாய வேலைக்கே ஃபாரின்ல ஒருத்தன் கூப்புடறான்னா யாரோ செஞ்ச புண்ணியம்னுதான் தோணுது”

தன்னை மீறி வெளியே வரும் கண்ணீரைத் தடுக்க முடியாமல் அமைதியாய் முந்தானையை எடுத்து ஒற்றிக் கொண்டாள். ’எதற்காக அப்பா சோகமாகப் பேசுகிறார், ஏன் அம்மா அழுகிறாள்’ போன்ற குழப்பங்களுடன் குழந்தைகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.

“மாமா, நீங்க எதையும் போட்டு குழப்பிக்காம போய்ட்டு வாங்க. நீங்க சொல்றமாதிரி, வந்த சான்ஸை விட்ற வேண்டாம். புள்ளைங்களையும் நெலத்தையும் நான் பாத்துக்கறேன். கொஞ்சநாளைக்கி எல்லாருக்கும் கஷ்டமாதான் இருக்கும். பாத்துக்கலாம்” – மைத்துனன் சரவணனின் வார்த்தைகள் அவருக்கு ஆறுதலைக் கொடுத்தன.

இப்படி முடிவானதுதான் புண்ணியமூர்த்தியின் கத்தார் பயணம்.

வேலைக்கு வந்த மறுவருடமே முதல் வேலையாக குழந்தைகளின் பள்ளியை மாற்றினார். ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்ற பள்ளிக்குள் காலடி வைத்ததில் அவர்களின் மகிழ்ச்சி அளவற்றிருந்தது. அந்த மகிழ்ச்சியில் முத்துலட்சுமியும் புண்ணியமூர்த்தியும் பூரித்தார்கள்.

மைத்துனனின் துணையோடு ஓட்டு வீடும் புது வடிவம் பெற்று ஒட்டுக் கட்டிடமாக மாறியது. விலைக்கு வருவதாக சொன்ன விளைநிலங்கள் சிலவற்றையும் வாங்கிப் போட்டுவிடச் சொல்லி பணத்தை அனுப்பினார்.

மைத்துனனுக்கு பொறுப்பு கூடியது. ஆனாலும் தனது அக்காவின் குடும்பம்  மேன்மையடைவதில் தனது பங்காக அந்த உழைப்பை எடுத்துக்கொண்டு முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்துகொண்டிருந்தான் அவன்.

வந்த இடத்தில் நல்லபடியாக வேலை செய்துகொண்டிருந்தாலும், நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சில சூழ்நிலைகளால் இடம் மாறவேண்டிய கட்டாயம் வந்தது. புண்ணியமூர்த்தி பொறுப்பு மிகுந்த உழைப்பாளியாக இருந்த காரணத்தால் இடம் மாறுவதில் சிக்கல்கள் எதையும் பெரிதாக சந்தித்திருக்கவில்லை. இத்தனை வருடங்களில் இரண்டு மூன்று இடங்கள் மட்டுமே மாறியிருப்பார். வேலைக்குச் சேரும் இடங்களிலெல்லாம் இவரது பணித் திறன் முதலாளிகளுக்குப் பிடித்துப் போக, விட்டுவிடாமல்  இறுகப் பிடித்துக் கொண்டார்கள். ஒவ்வொரு இடத்திலும் நீண்டகாலம் பணிபுரிவார். வேறுவழியே இல்லாத சூழல்களில் மட்டுமே வேறு இடத்திற்கு செல்வது குறித்து யோசிப்பார்.

ஓரத்தில் நீலத்தையும் சிவப்பையும் மாறி மாறி பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன் கவரில் கடிதங்கள் வரும்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு குதூகலமாக இருக்கும். கவரில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய ஸ்டாம்ப்புகள் அவர்களைப் பெரிதாகக் கவரும். தபால்காரரிடமிருந்து கடிதத்தை வாங்குவதில் சகோதரிகளுக்குள் கடும் போட்டி நிலவும். ’அம்மா.. அப்பாகிட்டேர்ந்து கடுதாசி’ என்று அலறியபடியே ஓடிச்சென்று முத்துலட்சுமியிடம் கொடுப்பார்கள்.

இன்றைய நாட்களைப் போல் நினைத்தவுடன் பேசும் நிலையோ, வீடியோ கால் மூலம் பார்த்துக் கொள்ளும் நிலையோ இல்லாத அந்தச் சூழலில், பக்கத்து ஊரான தேவங்குடியில் அய்யர் வீட்டிலிருந்த கறுப்பு ஃபோன்தான் புண்ணியமூர்த்தி உட்பட பல வெளிநாடு வாழ் கிராமத்தாருக்கு உதவிக் கொண்டிருந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஃபோனில் பேசுவார்.

ஒரு வெள்ளிக்கிழமை விட்டு ஒரு வெள்ளிக்கிழமை, அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் புண்ணியமூர்த்தி. பக்கத்து ஊர் என்பதால் நினைத்தவுடன் ஃபோன் செய்து குடும்பத்தாரை அழைக்கமுடியாது என்பதால், அய்யர் வீட்டிற்கு தொல்லையில்லாத நேரமாக ஒன்றைத் தேர்வு செய்து வைத்திருந்தார்.

வைக்கோல் பரப்பி பெட்ஷீட் போடப்பட்ட உறவினர்களின் கூண்டு வண்டி ஏதேனும் ஒன்றை கட்டிக் கொண்டு அனைவரையும் அழைத்துச் செல்வான் சரவணன். அய்யர் வீட்டுத் திண்ணையில் அழைப்புக்காகக் காத்திருக்கும்பொழுது சத்தம் போட்டு விளையாடும் குழந்தைகளை அதட்டி அமைதியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வாள் முத்துலட்சுமி.

தொலைபேசியின் அந்த நீண்ட ஒற்றை ஒலி, புண்ணியமூர்த்தியின் சர்வதேச அழைப்பு என்பதை மறைமுகமாகச் சொல்லும்.

“உள்ள வாம்மா. ஃபோனை எடு” – வீட்டினுள் வரத் தயங்குபவளின் மனநிலையறிந்து அன்புடன் அழைப்பார் எம்.எஸ் சுப்புலட்சுமி போல் மங்களகரமாய் காட்சியளிக்கும் அய்யரின் மனைவி.

“அப்பறம்.. என்ன சேதி?” என்று ஆரம்பிப்பார் புண்ணியமூர்த்தி. மாடு கன்று ஈன்றதில் ஆரம்பித்து அனைத்தையும் குறுகிய காலத்திற்குள் சொல்லி முடித்துவிடுவாள் முத்துலட்சுமி.

அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் எவரேனும் அங்கிருந்து வருவதாக இருந்தால் பொருட்கள் கொடுத்துவிட்டிருக்கும் செய்தியை சொல்லிவிட்டு, வேறு எதுவும் கொடுத்துவிட வேண்டுமா எனவும் கேட்டுக் கொள்வார் புண்ணியமூர்த்தி. இன்றுவரை அப்படி எதையும் அவள் கேட்டதில்லை.

குழந்தைகள், மைத்துனன் என ஒருவர் பின் ஒருவராக அனைவரும் பேசிமுடித்து வீடு திரும்புவார்கள். முத்துலட்சுமி ஒரே ஒரு கேள்வியை மட்டும் சலிக்காமல் ஒவ்வொருமுறையும் புண்ணியமூர்த்தியிடம் கேட்பாள். அது..

“எப்பங்க லீவு? எப்ப வருவீங்க?”

எவ்வளவு முயன்றும் புண்ணியமூர்த்தியின் இரவு அரைகுறையாகவே கழிந்திருந்தது. எழுந்திருக்கவேண்டிய வேளையில் கண்களை திறக்கவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது தூக்கம். வேறுவழியின்றி வலுக்கட்டாயமாக எழுந்தமர்ந்து இயல்பு நிலைக்கு வர முயற்சித்தவருக்கு, முதலாளியின் ஞாபகம் வந்தது. ’இன்று பதில் சொல்வதாக சொல்லியிருந்தவர் நல்ல பதிலாக சொல்லவேண்டுமே. என்ன சொல்வாரோ?’

******

மூன்று பெண் குழந்தைகளில் இருவருக்கு திருமணம் முடிந்து புண்ணியமூர்த்தி தாத்தாவாகியிருந்தார். மகள்களின் திருமண விஷயத்தில் புண்ணியமூர்த்திக்கு ஆற்றிக்கொள்ள முடியாத மிகப்பெரிய உறுத்தல் இன்றுவரையிலும் உண்டு. திருமண செலவுக்கான பணத்தை அனுப்பி வைத்துவிட்டு, திருமணத்திற்கு முதல் நாள் ஊருக்கு வந்திறங்கியதுதான் அந்த உறுத்தல்.

மாப்பிள்ளை வீட்டாரின் வருகையில் மகிழ்வது, மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்வது, திருமண மண்டபங்கள் பார்ப்பது, சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்வது, சொந்தபந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் நேரில் பத்திரிக்கை வைத்து அழைப்பது என எந்தவொரு அழகான அனுபவத்தையும் உணர்ந்து பார்க்கமுடியாமல் கத்தாரிலேயே முடங்கிப் போனதில் தன்மீதே வெறுப்பும் கோபமுமாக வந்தது அவருக்கு.

முத்துலட்சுமியாலும் இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. புண்ணியமூர்த்தி புதிதாய் வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்த ஃபோனில் புலம்பினாள்.

“என்னங்க.. நீங்க இப்புடி போயி உக்காந்துகிட்டு சம்பாதிக்கறதே புள்ளைங்களுக்காகத்தானேங்க? அவங்க கல்யாணத்துக்கு கூட இங்கேர்ந்து எதுவும் செய்ய முடியலேன்னா எப்புடீங்க? உங்க முதலாளிகிட்ட கொஞ்சம் பேசிப் பாருங்களேன்”

“பேசாம இருப்பேன்னு நெனைக்கறியா? அவரை சொல்லியும் தப்பு இல்ல முத்து. எனக்கு தலைவலி காய்ச்சல்னாகூட மாத்தி விடறதுக்கு சரியான ஆள் கிடைக்க மாட்டேங்கறாங்க. ரெண்டு நாள் தோட்டத்தை பாக்காம விட்டுட்டோம்னா அத்தனையும் கருகி வீணாப் போயிடும். எங்கேயும் பாக்கமுடியாத செடிங்களையெல்லாம் என்னை நம்பித்தான் ஆயிரக்கணக்குலேயும் லட்சக்கணக்குலேயும் காசு குடுத்து வாங்கியாந்து வச்சுருக்காரு. கல்யாணத்தன்னைக்கி நான் வர்றதே பெரியபாடா இருக்கு. அந்த நாலு நாளைக்கும் பாத்துக்கறதுக்குகூட சமையல்காருகிட்டதான் சொல்லியிருக்கேன்”

“ஆமாமாம்.. நல்லா சொன்னீங்க போங்க”

இப்படியே இரண்டு பெண்களின் திருமணம் துவங்கி, வளைகாப்பு, பேரன் பேத்திகளுக்கான மொட்டை, காதுகுத்து என அனைத்தும் முடிந்திருக்க.. சம்பாதித்தார், சம்பாதித்தார், சம்பாதித்துக் கொண்டேயிருந்தார் புண்ணியமூர்த்தி.

*******

முதலாளியிடமிருந்து இன்று அவர் எதிர்பார்க்கும் பதில், ’தாராளமா லீவு எடுத்துகிட்டு போயிட்டு வாங்க புண்ணியமூர்த்தி’ என்பதுதான்.

அந்த லீவுக்கான அவசியம், கடைக்குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகியிருந்ததுதான். மாப்பிள்ளையின் ஃபோட்டோவைப் பார்த்து அவள் பிடித்திருப்பதாகச் சொல்ல, இவள் ஒருத்திக்காவது அனைத்து வேலைகளையும் தானே வந்திருந்து செய்வதாக முத்துலட்சுமியிடம் உறுதியளித்திருந்தார். இருப்பினும், இவரால் மட்டுமே அந்த முடிவை எடுக்கமுடியாத சூழலில் மாட்டிக்கொண்டிருப்பது அவருக்குள் கலக்கத்தைக் கொடுத்தது.

சாப்பாட்டுவேளையில் முதலாளியின் மேலாளர் ராமலிங்கத்திற்கு ஃபோன் போட்டார். அவரும் மயிலாடுதுறை பக்கத்திலிருந்து வந்திருந்த டெல்டாவாசிதான் என்பதால் மொழிப் பிரச்சனை எதுவுமின்றி சகஜமாகப் பேசுவதற்கு வசதியாக இருந்தது புண்ணியமூர்த்திக்கு.

“ஐயா ஏதாச்சும் சொன்னாருங்களா?”

”வேலையெல்லாம் முடிச்சுட்டு சாயந்தரமா ஒரு எட்டு வந்துட்டு போங்க. திரும்பவும் போயி பேசுவோம்”

’ஊருக்குச் சென்று மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி விசாரித்தறிய வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் வந்து செல்ல, பெண் பார்க்கச் செல்ல நாட்கள் குறிக்க வேண்டும். எதிர்பார்க்கும் வகையில் இவையிரண்டிலும் நல்ல முடிவு கிடைத்துவிட்டால் நிச்சயம் செய்துவிட்டு மளமளவென்று மற்ற காரியங்களைத் துவக்கவேண்டும்.’

******

தோஹாவிலிருந்த முதலாளியின் அலுவலகத்தில், யோசித்தபடியே அவரது அறை வாசலில் காத்திருந்தார்.

தனது அறையிலிருந்து வெளியே வந்த ராமலிங்கம், புண்ணியமூர்த்தியின் தோள்களில் அன்புடன் கையைப் போட்டுக் கொண்டார்.

“அப்பறம்..? ஊருக்கு பேசுனீங்களா? எல்லாரும் சவுக்கியம்தானே?”

“ம்.. நல்லா இருக்காங்க சார்”

“வாங்க, மொதலாளிகிட்ட பேசுவோம்”

முதலாளியின் அறைக்குள் சென்றார்கள். ராமலிங்கம் நன்றாக இந்தியும் உருதுவும் பேசக்கூடியவர். புண்ணியமூர்த்திக்காக பேசினார்.

“சார்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே புண்ணியமூர்த்தி சார் லீவைப் பத்தி. அது விஷயமா முடிவு தெரிஞ்சுக்கலாம்னு வந்துருக்கார் சார்”

“ஓஹோ.. புதுசா என்ன சொல்லப் போறேன்? புண்ணியமூர்த்தியோட கை ரொம்ப ராசியானது ராம். திரும்பற பக்கமெல்லாம் பச்சை பசேல்னு மாத்தி வச்சுருக்காரு. இவரோட புண்ணியத்துலதான் கொஞ்சநாளா மரம் செடிங்களுக்கு நடுவுல கட்டிலை போட்டு படுத்துகிட்ருக்கேன். இவரு இல்லாதப்ப வேற எவனாச்சும் வந்து தோட்டம் மொத்தத்தையும் காலி பண்ணிட்டு போய்ட்டான்னா என்ன பண்றது?”

“இல்லீங்கய்யா.. அவரோட பொண்ணு கல்யாணம்..” – இடைமறித்தார் ராமலிங்கம்.

“அதான் அன்னைக்கே எல்லாத்தையும் விலாவாரியா சொல்லிட்டீங்களே. அவரோட நெலமை எனக்கு நல்லா புரியுது. கட்டாயப்படுத்தி இருக்க வைக்கவும் கஷ்டமாதான் இருக்கு. ஒண்ணு பண்ணுங்க. நீங்களா பாத்து ஒரு முடிவு எடுத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. அப்பறமா பேசுவோம்”

என்ன சொல்வதென்று தெரியாமல் தலையாட்டிவிட்டு புண்ணியமூர்த்தியுடன் வெளியே வந்தார் ராமலிங்கம்.

“என்ன மூர்த்தி, இப்புடி நம்மள தர்மசங்கடத்துல வுட்டுட்டாரு இந்தாளு?”

“என்ன சார்? என்ன சொல்றாரு?”

“கரெக்டான ஆள் ஒருத்தரை ரெடி பண்ணிட்டு அப்பறமா உங்களை அனுப்பணும்கறதைதான் சொல்லாம சொல்றாரு அந்த மனுஷன். நான் எங்கேன்னு போய் தேடறது சொல்லுங்க? அவரு சொல்றமாதிரி, எவனாச்சும் வந்து குண்டக்க மண்டக்க பண்ணி வச்சுட்டு போயிட்டான்னு வைங்க, நான் தொலைஞ்சேன்”

“இப்புடியே இழுத்துகிட்டே போச்சுன்னா என்னைக்கிதான் சார் நான் கெளம்பறது..?”

“என்னைக்குள்ள போவணும் நீங்க?”

“நாள் கெழமையெல்லாம் இல்ல சார். நீங்க இன்னைக்கே டிக்கெட் போட்டு குடுத்தாலும் கெளம்பறமாதிரிதான் மூட்டை முடிச்சையெல்லாம் ரெடியா கட்டி வச்சுருக்கேன்”

யோசித்தார் ராமலிங்கம்.

“சரி. சீக்கிரமா முடிவு பண்ணிருவோம்”

********

அலுவலகத்திலிருந்து வெளியே வந்த புண்ணியமூர்த்திக்கு மனது என்னவோ போலிருந்தது. என்றைக்கு கிளம்பப் போகிறோம் எனத் தெரியாமல் அல்லாடுவது பெரிய மனஉளைச்சலாக இருந்தது. சிறிய நடைபோட்டு பாபூஸ் சலாம் டீக்கடைக்கு வந்தவர், டீ ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தார்.

’ஏன் இப்படியொரு நிம்மதியற்ற நிலை, மன உளைச்சல் எல்லாமும்? வீடு கட்டுவது, குழந்தைகளை படிக்க வைப்பது, திருமணம் செய்து வைப்பது.. இவை எல்லாமும்தானே இந்த ஊரை நோக்கி நம்மை வர வைத்தது? அனைத்தும் நிறைவேறியும்கூட எதற்காக பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்? மீண்டும் மீண்டும் இங்கேயே வந்தாகவேண்டும் என்ற சக்கர வாழ்க்கையிலேயே எதற்காக உழன்று கொண்டேயிருக்கிறோம்?’

’குழந்தைகள் புதிய வாழ்க்கையை துவக்கிக்கொண்டு வாழப் பழகிவிட்டார்கள். ஆனால், நமக்கென காத்துக்கிடக்கும் ஜீவன், முத்துலட்சுமியின் நிலை? பணக்கட்டுகளை பீரோவில் அடுக்கி வைத்து அழகு பார்க்கக்கூடியவளா அவள்? நாவிற்கு சுவையாய் சமைத்துப் போட்டு, நமக்கு நல்லுறக்கம் கொடுக்கத்தானே காத்திருக்கிறாள்? ஒவ்வொரு அழைப்பிலும் நாம் அருகில் இல்லாத ஏக்கம் எப்படியெல்லாம் அவளது குரலில் வெளிப்படுகிறது? அவளது உணர்வுகளை இரண்டாம்பட்சமாக்குவது எந்தவிதத்தில் நியாயம்?’

டீ வருவதற்கும் தீர்மானமான முடிவை நோக்கி புண்ணியமூர்த்தி நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

‘எதுவுமே இல்லாமல் வயலில் கிடைத்த அரிசியோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த நமக்கு இந்த அதீத வசதி ஏன் திருப்தியைக் கொடுக்க மறுக்கிறது? மிச்சமிருக்கும் காலத்தை ஊரிலேயே உழைத்துக் கழிக்கமுடியாதா? உடல் ஒத்துழைக்கவில்லையெனில் ஒரு பெட்டிக்கடையாவது போட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட முடியாதா என்ன?’

’உலகில் நாம் ஒருவன்தான் இருக்கிறோமா முதலாளியின் தோட்டத்தை பார்த்துக் கொள்ள? நாம் இல்லையெனில், மற்றொரு நல்ல தொழிலாளியைப் பணியமர்த்திக் கொள்வார் அவர். நசுருல்லா பாய் நம்மை அனுப்பி வைத்ததைப் போல, கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனிதனை நம்மால்கூட பரிந்துரைக்க முடியும். இனியும் தாமதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதற்குமேல் நமக்குத் தேவைப்படுவது பணமல்ல’

மிகத் தெளிவானதொரு முடிவுக்கு வந்தவர், மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று ராமலிங்கத்தைப் பார்க்கத் முடிவெடுத்திருந்தார். ’முதலாளி லீவு குடுக்க யோசிச்சார்னா பேசாம விட்ருங்க சார். நான் ஒரேயடியா எல்லாத்தையும் முடிச்சுகிட்டு ஊருக்குக் கெளம்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆகவேண்டியத பாருங்க’ எனச் சொல்லத் தயாராகியிருந்தார்.

கடையை விட்டு வெளியேறி, ஐம்பதடி தூரம் வந்திருப்பார். வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு ஒலி வந்ததது. முத்துலட்சுமி.

“சொல்லு முத்து. நானே இப்ப ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன். நீ பண்ணிட்ட”

சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்க, பதிலெதுவுமின்றி அமைதியாக இருந்தது அவளது பக்கம்.

“முத்து.. முத்து.. ஹலோ..”

முத்துலட்சுமி விசும்பும் ஒலி கேட்டது.

“முத்து.. என்னாச்சு..?”

“ரெண்டு மாசமா ஜோதி உடம்பு முடியல, உடம்பு முடியலன்னு சோர்ந்து சோர்ந்து படுத்துகிட்டே இருக்கான்னு சொன்னேன்ல..”

தனது தம்பியின் மனைவி பற்றி அழுதபடியே சொல்லத் துவங்கியவள், மேலும் பேசமுடியாமல் இடைவெளி விட்டாள்.

“சொல்லும்மா.. ஜோதிக்கு என்ன? நல்லா இருக்குல்ல? போனமாசம் டாக்டர்கிட்டகூட கூட்டிட்டு போனீங்கள்ல?”

“அப்ப எதோ டெஸ்ட் மாதிரி எடுத்து அனுப்புனாங்களாங்க. அது ரிசல்ட் இப்ப வந்துருக்கு”

ஓவென கதறினாள்.

“அவளுக்கு கேன்சர்னு சொல்லிட்டாங்க”

உடைந்து போனார் புண்ணியமூர்த்தி. அவள் அழுது ஓயும்வரை எதுவும் சொல்லாமல் காத்திருந்தவருக்கு கண்களில் நீர் நின்றது.

“சரிம்மா. ஒண்ணும் கவலைப்படாத. இப்பல்லாம் அது ஒரு பிரச்சனை இல்ல. எத்தனையோ சீரியஸான கேஸையெல்லாம் கூட ஈஸியா சரி பண்ணிட்றாங்க. அநேகமா இது ஆரம்பமாதான் இருக்கும். எத்தனை லட்சம் செலவானாலும் பரவால்ல, பாத்துக்கலாம் விடு. யாரும் மனசை போட்டு குழப்பிக்காதீங்க. நான் சரவணன்கிட்டேயும் ஜோதிகிட்டேயும் பேசறேன்”

யோசித்தபடியே ஃபோனை வைத்தவர், அலுவலகத்திற்குச் செல்லாமல் திரும்பி நடக்கத் துவங்கினார். ’நமது குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவர்களை நாம் பார்த்துக் கொள்ளவேண்டிய வேளை இது..’

பண்ணைக்குத் திரும்பியதும் ராமலிங்கத்திற்கு ஃபோனை போட்டார்.

“சார்.. முதலாளிகிட்ட எப்புடியாச்சும் பேசி லீவை ஓகே பண்ணிடுங்க சார். ஒரு பத்து நாள் குடுத்தார்னாகூட போதும் சார்..”

 

 

  • சந்துரு மாணிக்கவாசகம்,

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad