சாலைகளைத் தத்தெடுப்போம்
மினசோட்டாவின் சாலைகளில் பயணிக்கும் போது கவனித்திருப்பீர்கள்!! இந்தச் சாலையைத் தத்தெடுத்திருப்பது என்று ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கும். சாலையைத் தத்து எடுப்பது என்றால் என்ன? பொதுவாக, சாலைகளை அமைப்பது, பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அரசு எடுத்து செய்யும். இதில் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையில் பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின்படி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி சார்பாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று லேக்வில் (Lakeville) நகரில் ‘கவுண்டி ஹைவே 50’ (County Highway 50) என்ற சாலையில் 4 மைல்கள் அளவிலான பகுதியைத் தத்தெடுத்துத் தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடனும், மாணவர்கள் தங்கள் நண்பர்களுடனும் வந்து, ஆர்வத்துடன் இப்பணியில் இணைந்து மகிழ்ச்சியாகச் செயலாற்றினார்கள்.
இந்தப் பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான பொருட்களை, சாலை போக்குவரத்துத் துறை அமைப்பு வழங்கிவிடும். ஞாயிறு காலை ஆரம்பித்த சுத்தப்படுத்தும் பணி, மதியம் வரை நடந்தது. சாலைகள் சுத்தமாகக் காட்சியளிப்பது, அரசின் பராமரிப்புச் செலவு மிச்சமாவது, பொதுச் சேவையில் ஈடுபடுவதின் மூலம் கிடைக்கும் திருப்தி, நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் உள்ள மகிழ்ச்சி என்று இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் பல ஆதாயங்கள் உள்ளன. வாய்ப்புக் கிடைப்பின், நிச்சயம் இத்திட்டத்தில் கலந்து கொண்டு, நகரின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உங்கள் பங்களிப்பை அளித்திடுங்கள்.
- சரவணகுமரன்