மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை சீரடைந்து இருப்பதால், அப்பயணம் இந்த வருடம் மீண்டும் திட்டமிடப்பட்டு, தற்சமயம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு, இந்த நிகழ்ச்சி யூனிவர்ட்டி ஆப் மினசோட்டா வளாகத்தில் இருக்கும் நார்த்ராப் (Northrop) ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடிட்டோரியத்தில் 7 மணியிலிருந்து மக்களை உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தனர். ஆடிட்டோரியம் பக்கமிருக்கும் பார்க்கிங் தளங்கள் அனைத்தும் வாகனங்களால் ஆக்ரமிக்கப்படத் தொடங்கி, சாலைகளிலும் வாகனங்கள் நீண்டு ட்ராஃபிக் ஜாம் ஆனது.
முதலில் ரஹ்மான் இயக்கியிருக்கும் ‘Le Musk’ என்னும் வெர்சுவல் ரியாலிட்டி திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஒளிப்பரப்பினார்கள். அடுத்து, இந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வீடியோவை ஒளிப்பரப்பினவுடன், ரசிகர்களது கரகோஷத்தில் அரங்கம் ஆர்ப்பரித்தது. வீடியோ ஒரு உச்சத்தில் முடிய, மேடையில் நேரடியாக ரஹ்மான் தோன்றினார். அவரைப் பார்த்தவுடன் ரசிகர்களின் உற்சாகம் இன்னும் பல மடங்கு கூடியது. வந்த அதே வேகத்தில் ரஹ்மான் தனது குழுவுடன் சேர்ந்து ‘ஜெய் ஹோ’ பாடலைப் பாட, ரசிகர்களும் அவர்களுடன் இணைந்து பாடினார்கள்.
தொடர்ந்து இடைவேளி இல்லாமல், பல மொழிகளிலும் பாடல்கள் பாடப்பட்டன. ரஹ்மான் அறிமுகம் ஆன காலம் நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதைக் கேட்க, கேட்க ஆச்சரியமாகவும், அவருக்கு மட்டுமில்லாமல், நமக்கும் வயதாகிவரும் கடின உண்மையை நினைவு’படுத்துகிறது’. இந்த முப்பது வருடக் காலத்தில் வெளிவந்த படங்களில் இருந்து அவருடைய பாடல்கள் பாடப்படும் போது, அந்தப் படங்கள் வெளிவந்த நாட்கள், பாடல்கள் கேட்ட காலங்களின் நினைவு நம்முன் வந்து, நேரம் நாஸ்டாலஜிக் மொமெண்ட்களாகக் கடந்தது.
வந்தே மாதரம், முக்காலா, ஊர்வசி, யாக்கை திரி, என்ன சொல்ல போகிறாய், பரமசுந்தரி, தும்பி துள்ளல், அழகான ராட்சசியே, ஒட்டகத்த கட்டிக்கோ, முஸ்தபா முஸ்தபா, உயிரே, அழகியே, அந்த அரபிக்கடலோரம், தைய்யா தைய்யா பல தாளம் போட வைத்த, ஆட்டம் போட வைத்த பாடல்கள் பல பாடப்பட்டன. இரண்டரை மணி நேர அளவிற்குப் பாடல்கள் பாடப்பட்டாலும் சலிப்பே இல்லை. இன்னமும் கொஞ்ச நேரம் பாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்ற வைத்துவிட்டது.
மினியாபொலிஸ் போன்ற ஊரில் இவ்வளவு இந்தியர்களை ஒரு கூடாரத்தின் கீழ் கொண்டு வர, ரஹ்மான் போலப் பல மொழிகளில், பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கும் இசை பயணம் தேவைப்படுகிறது. வந்திருந்த அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்த, ஒரு பாடலின் பல்லவி ஒரு மொழியிலும், பாடலின் சரணம் இன்னொரு மொழியிலும், அடுத்தச் சரணம் வேறொரு மொழியிலும் பாடப்பட்டது. அவருடைய நிறையப் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து, பிரபலமானதால் உண்டான அனுகூலம் இது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அந்தந்த மொழிகளில் பாடல்களில் வரிகள் பாடப்படும் போது, அந்தந்த மொழி ரசிகர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்சமயம் பாடல்களில் ரஹ்மான் தலையும் காட்டுவதால், அடுத்தத் தலைமுறையினரிடம் அவருக்கு அறிமுகம் இருக்கிறது. தவிர, இன்னமும் ட்ரெண்டிங்கில் இருப்பதால், இளம் தலைமுறையினரும் நிகழ்ச்சியை ரசித்துக் கண்டுகளித்தனர். பாடல்கள் பாடப்படும் போது, அதற்குப் பொருத்தமான காட்சிகள் பின்னணி ஒளிப்பரப்பானது, கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நன்கு பாடவும் தெரிந்து, ஆடவும் தெரிந்த ஜோனிதா காந்தி இருந்தது, இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு பலம். நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், வண்ணமயமாகவும் சென்றது.
டெக்ஸாஸில் நடந்த நிகழ்ச்சியில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இருந்து ‘பொன்னி நதி’ பாடப்பட்டது. அதனால், அப்பாடல் இங்கும் பாடப்படும் என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ரசிகர்களும் அவ்வப்போது அப்பாடலைப் பாட வேண்டுகோள் வைத்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அப்பாடல் இங்குப் பாடப்படவில்லை. வெவ்வேறு ராகத்தில் தான் இசையமைத்த பாடல்களை ரஹ்மான் விவரித்துப் பாடிய பகுதி அருமையாக இருந்தது. பாடல்களில் பின்னணி இசையின் சில பகுதிகளை ட்ராக்கில் இசைக்க வைத்து ஒப்பேற்றியது தெரிந்தது. ஒரிஜினல் பாடல் பதிவின் போது, தவில், நாதஸ்வரம், சாக்ஸபோன், இன்னும் பெயர் தெரியாத பல கருவிகளைப் பயன்படுத்தி, பலதரப்பட்ட இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி, பலமுறை இசைத்து, இசைக்கோர்வையை உருவாக்கியிருப்பார்கள். நேரடி இசைக்கச்சேரிகளில் இப்படி அனைத்து இசைக்கருவிகளையும், கலைஞர்களையும் மேடையேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், இந்த ட்ராக் இசை நடைமுறையை வேறுவழியில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் உடன் ஹரிசரண், ஜோனிதா காந்தி, ரக்ஷிதா சுரேஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். ரஹ்மானின் மகன் அமீனும் வந்திருந்து, சில பாடல்களைப் பாடினார், இசையமைத்தார். சமீபத்தில் ரஹ்மானின் ஒரு மகளுக்குத் திருமணம் நடந்திருந்தது. ஆனாலும், அத்தகைய வயதின் தோற்றமில்லாமல் ரஹ்மான் ஒரு இளமை துள்ளலுடன் ஆடி பாடினார். சொல்லப்போனால், முன்பு இருந்ததை விட, இப்போது தான் அதிகமாக ஆட்டம் போடுகிறார்.
ஏற்கனவே ரஹ்மான் கச்சேரி பார்த்தாகிவிட்டதே, திரும்பவும் பார்க்க வேண்டுமா என்றொரு கேள்வி இருந்தது. சரி, நம்மூருக்கு வருகிறார், எப்படி மிஸ் செய்ய முடியும் என்று போய்ப் பார்த்தாச்சு. இப்ப, அடுத்த முறை எப்போது வருவார், வந்தால் திரும்பவும் போய்ப் பார்க்க வேண்டும் என்று மினியாபொலிஸ் இசைக்கச்சேரியில் தோன்ற வைத்துவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
- சரவணகுமரன்