#பாய்காட்
அண்மைக்காலங்களில், இந்திய வட்டாரச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணப்படும் சொல் ‘புறக்கணிப்பு’. இந்த புறக்கணிப்பு அழைப்புகள் அரசியல் கொள்கை, கட்சி, தலைவர் அல்லது வன்முறை இயக்கங்கள் குறித்தவை அல்ல; சமூகத்தைப் பாதிக்கும் வியாபாரப் பொருட்கள், போதை வஸ்துகள் சம்பந்தப்பட்டவை அல்ல; சுற்றுச் சூழலைப் பாதிக்கும் மாசுப் பரவல், பசுங்குடில் வாயுக்கள் பற்றியவை அல்ல; திரைப்படங்கள் குறித்தவை – அதிலும் புராணத்தை இழிவுப்படுத்தி, வரலாற்றைத் திரித்து சமூகத்தில் கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் குறித்து அல்ல; இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான அம்சங்களுடன் உருவான ஜனரஞ்சகத் திரைப்படங்களை பகிஷ்கரித்திட விடுக்கப்படும் அழைப்புகள்; படத்துடன் சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள் அல்லது அவர்களின் கருத்துகள் மீதான காழ்ப்புணர்ச்சி கொந்தளிப்பால், அற்ப விஷயங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இவை.
படம் வெளியானவுடன், முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, சமூக ஊடகங்களில் ஒத்தை வரி விமர்சனங்கள் பிரபலமடைந்து படத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் வேளையில், படம் வெளியாகும் முன்னரே படத்துக்கு எதிரான பிம்பத்தைக் கட்டமைத்து, ‘பாய்காட்’ ஹேஷ் டேக்குகளை பரப்பி, அதில் சந்தோஷமடையும் வக்கிரம் கலையுலகத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
‘லால் சிங் சத்தா’
அண்மையில், ‘பாய்காட்’ பிரச்சாரத்துக்கு இரையான படம், ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. 1994 ஆம் ஆண்டு, டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் தான் ‘லால் சிங் சத்தா’. ஆமிர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா இன்னபிற பிரபலங்கள் நடித்திருந்தனர். கெளரவத் தோற்றத்தில் ஷாருக் கானும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் ‘கொரோனா’ தாக்கம் குறைந்த பின்பு தொடரப்பட்டு, சென்ற ஆகஸ்ட் 11ஆம் நாள் திரைக்கு வந்தது. சுமார் 180 கோடி ரூபாய் செலவில், ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வையாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்க, அத்வைத் சந்தன் இயக்கியிருந்தார்.
படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் துவங்கியச் சமயத்திலேயே தொடங்கிய இந்தப் பட சர்ச்சைகள், படம் வெளியாவதற்கு முந்தைய வாரம், “#BoycottLalSinghChaddhaMovie” என்ற மிகக் கடுமையான எதிர்மறை பிரச்சாரத்தைச் சந்தித்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் 128 கோடி ரூபாய் சம்பாதித்த இந்தப்படம் வசூல் ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
‘பாய்காட் லால் சிங் சத்தா’ வுக்கு காரணம், ஆமீர் கான் 2015 ஆம் ஆண்டில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’ எனவொரு கருத்தை வெளியிட்டது தான். அதே ஆண்டு உத்திரப் பிரதேசத்தில், தாத்ரி நகரில் மாட்டுக் கறி உண்டதற்காக இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும், எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்ட சம்பவத்தையும் குறித்த வேதனையோடு ஆமீர்கான் வெளியிட்ட கருத்து இது. மேலும் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிகே’ திரைப்படத்தில் இந்து, இஸ்லாம், கிறித்துவ மதக்கோட்பாடுகளைக் குறித்த அவரது கருத்துகளும் சர்ச்சைக்குள்ளானது கூட காரணமாகயிருக்கலாம்.
இந்த சர்ச்சைகளுக்குப் பின் ஆமீரின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்த ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ பெரிய வெற்றி பெற்றன. அந்தக் காலங்களில் டிவிட்டரின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லை அல்லது டிவிட்டரில் கண்ணியமான கருத்துகள் மட்டுமே பகிரப்பட்டு வந்தது எனலாம்.
‘லைகர்’
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியான படம் ‘லைகர்’. ஒரே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில், உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், அனன்யா தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். 125 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படமும் “பாய்காட்” பிரச்சாரத்தைச் சந்தித்தது. காரணம், ‘லால் சிங் சத்தாவை’ பார்த்துவிட்டு விமர்சனம் பண்ணுங்கள்; படம் வருமுன்னரே காழ்ப்புணர்ச்சியில் படத்தைப் புறக்கணிக்காதீர்கள் என படத்தின் நடிகரான விஜய் தேவரகொண்டாவும், தயாரிப்பாளர்களில் ஒருவரான கரன் ஜோஹரும் பேசியிருந்தனர்.
‘லால் சிங் சத்தா’ தொடர்பான புறக்கணிப்பு குறித்து ஹாலிவுட் அமைதி காத்த நிலையில், ‘லைகர்’ படத்தின் இசை வெளியீட்டில் ‘திரைப்படப் புறக்கணிப்புகள் ஆரோக்கியமானதல்ல’ என்ற கருத்தை இருவரும் தெரிவித்த காரணத்தால் #BoycottLigerMovie பரப்பப்பட்டு, படம் புறக்கணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. செப்டம்பர் முதல் வாரம் வரையில் ‘லைகர்’ 55 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது.
‘ரக்ஷா பந்தன்’
அக்ஷய் குமார் நடிப்பில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானபடம் ‘ரக்ஷாபந்தன்’. அவரது சொந்தத் தயாரிப்பில் பூமி பட்நேகர், சாதியா கதிப் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஹிமான்ஷு ஷர்மா, கனிகா திலன் எழுதிய கதையை இயக்கியிருந்தவர் ஆனந்த் ராய்.
அக்ஷய் குமார் தனது முந்தைய ‘ஓ மை காட்’ (2 பாகங்கள்), ‘லக்ஷ்மி’ படங்களில் இந்து மதக் கோட்பாடுகளைப் பேசும் கதாபாத்திரங்களை கேலியான வகையில் சித்தரித்திருந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. பின்னர் அவர் தேசிய நீரோட்டத்தில் கலந்து, ‘டாய்லட் – ஏக் பிரேம் கஹானி’, ‘பத்மன்’ படங்கள் வெளியான பொழுது ‘மூன்று கான்’ நடிகர்களுக்கு (ஆமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்) மாற்று எனக் கொண்டாடப்பட்டார். எனினும் சமீபத்தில் வெளியான ‘பச்சன் பாண்டே’, ‘சாம்ராட் பிரிதிவிராஜ்’ படங்கள் வெற்றி பெறாத நிலையில் ‘ரக்ஷா பந்தனை’ பெரிதும் நம்பியிருந்தார். படத்தின் கதாசிரியரான கனிகா திலன், கோமியம் குறித்தும், ஹிஜாப் குறித்தும் முன்பு வெளியிட்ட டிவிட்டர் கருத்தகள் தோண்டியெடுக்கப்பட்டு, ‘#BoycottRakshaBandhanMovie’ உருவாகக் காரணமாகிவிட்டது. இதனைக் கவனித்த கனிகா பழைய ட்வீட்களை அகற்றியவுடன், அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளை பதிவிட்டு நடிகை கங்கணா ரனாவத் ‘இவர்களுக்கு பொருளாதார இழப்புதான் சரியான பதிலடி.. அந்தப் பயம் மட்டுமே இவர்களை இந்து மதத்துக்கு எதிரான ட்வீட்களை நீக்க வைக்கும்.’ என்று விசிறிவிட்டார்.
‘பிரம்மாஸ்திரா – பகுதி 1 – சிவா’
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா நடிப்பில் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா – சிவா’. ஆலியா பட் நடித்த ‘டார்லிங்ஸ்’ வெப் சீரிஸ் சில சர்ச்சைகளை எழுப்பியது. கதைப்படி, தன்னை துன்புறுத்தும் கணவனுக்கு அதே பாணியில் பதிலடி கொடுப்பதான பாத்திரம் ஆலியாவுக்கு. இதன் எதிரொலியாக “ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை ஏன் இயல்பாக்கப்படுகிறது அல்லது மோசமாக கேலி செய்யப்படுகிறது? இந்தியாவில் 3.4 கோடி ஆண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர். இதை ஏற்க முடியாது.” என்று ஒரு பெண்மணி டிவிட்டரில் பதிவிட்டு, ‘#BoycottDarlings’, ‘#boycottAliaBhatt’ என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார். சரசரவென பரவத் தொடங்கிய ரீடீவிட்டுகள் #BoycottBrahamastra என உருவெடுத்து நிற்கிறது.
ரன்பீர் கபூர், 2011 இல் ‘ராக்ஸ்டார்’ படவிழாவில் பேசும்பொழுது, “நான் இந்துதான்; ஆனால் பீஃப் விரும்பி” எனச் சொல்லியிருந்தார். அதுவும் ‘பிரம்மாஸ்திரா’ பகிஷ்கரிக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளது. (ரன்பீரின் தந்தை, மறைந்த ரிஷி கபூரும் மாட்டுக்கறி குறித்த கருத்துக்கு டிவிட்டரிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மான் கறி, கங்காரு கறி, ஒட்டகக் கறி என பரிமாறியிருந்ததைக் குறிப்பிட்டு ‘மாட்டுக்கறிக்கு தடை விதித்ததால், சீதையின் பாசத்துக்குரிய மான் உணவாகப் பரிமாறப்படுகிறது’ என்று தொலைக்காட்சிப் பேட்டியில் பேச, கபூர் குடும்பத்தை முற்றிலும் பகிஷ்கரிப்போம் என்ற கோஷமெழுந்ததும் ‘பிரம்மாஸ்திரா’வுக்கு சிக்கலாகி நிற்கிறது. )
#BoycottBrahamastra தோன்றிய இன்னொரு முக்கியமான காரணம் – கரண் ஜோஹர்; 2016 ஆம் ஆண்டு, அதுவும் பாகிஸ்தான் வன்முறையாளர்கள் ‘உரி’ தாக்குதலை நடத்திய பிறகு, தனது ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்துக்காக பாகிஸ்தான் நடிகர் ஒருவரை இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இதனைக் கண்டித்து குரல்கள் எழும்பியபோதும் கரண் பின்வாங்கவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கரண் இந்திய ராணுவ நலச்சங்கத்துக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்க முன்வந்தபோது இந்திய ராணுவம் அதை நிராகரித்துவிட்டது. அப்போதிருந்தே ‘கரண் ஜோஹர்’ மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு ‘நெபோடிசம்’ எனப்படும் குடும்ப ஆதிக்கம் காரணம் என்றொரு கருத்து உருவான பொழுது, கரண் மீதும் ஏகப்பட்ட புகார்கள் சொல்லப்பட்டன. (கரணின் தந்தை யாஷ் ஜோஹர் திரைப்படத் தயாரிப்பு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்). நடிகை கங்கனா ரனாவத்தும் கரண் ஜோஹர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்தப் பின்ணணி கொண்ட கரண் ஜோஹர், ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் புறக்கணிப்புக்குப் பிரதான காரணம்.
‘விக்ரம் வேதா’ (ஹிந்தி)
2017 ஆம் ஆண்டு, மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ தமிழ்ப்படத்தின் மறு உருவாக்கம் தான் விக்ரம் வேதாவின் ஹிந்திப் பதிப்பு. செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது இப்படம். படத்தில் ஹிருதிக் ரோஷன், சாயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே என பலர் நடித்துள்ளனர்.
‘லால் சிங் சத்தா’ படத்தையும், ஆமீர்கானின் நடிப்பையும் ஹிருதிக் ரோஷன் பாராட்டிப் பேசிய ஒரே காரணத்துக்காக, விக்ரம் வேதா புறக்கணிப்பு ஆரம்பித்தது. #BoycottVikramVedha டிரெண்டானது. இன்று இப்படத்தின் வெற்றி கேள்விக்குறியாக உருவாகியுள்ளது.
தனிப்பட்ட ஓரிருவரின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கானோரின் உழைப்பில், கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் உருவாகும் ஒரு படத்தைக் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது மிகவும் கீழ்த்தரமானதொரு சூழ்ச்சி. பிரபலமானவர்கள் யாருக்கும் எந்தத் தனிமனித கருத்தும் இருக்கக் கூடாது என்பது போன்ற அரசியல் உருவாகி வருவது ஆரோக்கியமானதல்ல. ஒரு படத்தின் வியாபாரத்தை டிவிட்டர் ஹேஷ்டேக் தீர்மானிப்பது மிகவும் ஆபத்தானது.
கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கானின் எந்தப்படமும் முதல் நாள் ‘ஓப்பனிங்’ வசூல் இவ்வளவு குறைவாகயிருந்ததில்லை. ‘லால் சிங் சத்தா’ பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் முதல் நாளே லட்சக்கணக்கான ‘ரேட்டிங் சர்வே’ நிரப்பப்பட்டு, குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளது. படத்தைப் பார்க்காமலேயே ரேட்டிங் பதிவு செய்துள்ளது புலப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பாவிலிருக்கும் திரைப்பட ‘விசிறிகள்’ சிலர், ‘பிரம்மாஸ்திரா’ முன்பதிவு நிலவரத்தை (advance booking / seat reservation) டிவிட்டரில் மணிக்கொரு முறை போட்டு, திரைப்படத்தின் தோல்வியை உறுதி செய்து கொக்கரிக்கின்றனர். ஒரு படத்தைப் பார்க்காமல், அதில் பணியாற்றிய ஒருவரின் / சிலரின் கருத்துகளுக்காக, திரைப்படத்தை முடக்குவது கடைந்தெடுக்கப்பட்ட வன்மம். தாங்கள் வெறுக்கும் ஒரு படத்தைப் பாராட்டியதற்காக அவரது படங்களையும் வெறுப்பதும், ஒதுக்குவதும் அருவருக்கத்தக்கது. அன்றாடம் எந்த நடிகை, நடிகரையாவது எதோவொரு காரணத்துக்காக ‘பாய்காட்’ செய்வது வாடிக்கையாகி வருகிறது.
‘பாலிவுட்’ திரைத்துறையைக் கடந்து, மற்ற மொழி படங்களுக்கும் இந்தக் கலாச்சாரம் பரவ வெகு நாட்களாகாது. ஆனாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது, நாம் ஆட்சேபித்தால் நம் படங்களுக்கும் இதே கதி நேருமோ என்ற அச்சம் பரவியிருப்பதை உணர முடிகிறது. இனியும் இந்த ‘வுட்’ கலாச்சாரத்தை (பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்) தொடராமல் ஒட்டுமொத்தத் திரைத்துறையாகப் பார்க்கவேண்டும் என்ற ‘ஒற்றுமை’ கோரிக்கை கிளம்பியுள்ளதைப் பார்க்க முடிகிறது. திரையுலகைச் சார்ந்தவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் கருத்து சொல்ல தனிப்பட்ட உரிமையுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தனிமனித துதி பாடலும், வசை பாடலும் படத்தின் தலைவிதியை நிர்ணயிப்பது வருத்தத்துக்குரியது. படங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய வணிக உலகம் இயங்குவதையும், சமூகப் பொருளாதாரம் சுழல்வதையும் நினைவில் கொள்ளவேண்டும். நாட்டின் பொருளாதாரத்துக்கும், கலைத்துறைப் பாலத்துக்கும் ‘பாய்காட்’ கலாச்சாரம் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது என்பதை உணரவேண்டும். இவை போன்ற புறக்கணிப்புகள், ஆமீர்கானின் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது’ என்ற கருத்துக்கு வலு சேர்த்துவருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- ரவிக்குமார்-