\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புலால் வேற்றுமை தேசியம்

தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் இந்திய முஸ்லிம்களுக்கு அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் குருகிராமில் (Gurugram) அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.  இந்தியாவில் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் விவகாரம் புலால் வேற்றுமை மனப்போக்கை எவ்வாறு இந்தியப் பொதுமக்கள் எதிர்கொள்வது என்ற நீண்ட கால கேள்வியை எழுப்புகிறது. இது போன்று சமீப காலங்களில் வலதுசாரி இந்துத் தீவிர குழுக்களால் திணிக்கப்பட்ட தொடர்ச்சியான தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் பல்வேறு இடங்களிலும் பரவி வருகின்றன என்பது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியா ஒரு பன்சமூக நாடு, அதன் பொலிவு இன, மத சமூகங்கள், தமது வாழ்வை, தமது சமூகத்தைப் பேணிட அதே சமயம் தேசிய அடையாளத்துடன் பெருமையாக வாழ்வதே ஆகும். இதுவே நாட்டைத் தாபித்தவர்களின் குறிக்கோளாக இருந்தது. இன்று இந்த நிலைப்பாடு சிறிது சிறிதாக சறுக்கியவாறு உள்ளது எனலாம்.

வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், ஒரு முஸ்லீம் இறைச்சி வர்த்தகர் தனது கசாப்புக் கடைக்குள் அமர்ந்து, புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியில் மொய்க்க முயன்ற ஈக்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார். திடீரென சமண/ஜெயின் பண்டிகை காரணமாக ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை இறைச்சி விற்பனைக்கு பிராந்திய அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்தனர். இதுவரை சமூகத்தில் பின்பற்றபடாத விடயம் எவ்வாறு திடிரென நியாயமாகும் என இந்திய நீதி மன்றத்தைக் கேட்டனர் வர்த்தகர்கள். இதன் நடுவில், இந்திய நீதிமன்றம் இறைச்சி விற்பனையாளர்கள் தொடர்ந்து வணிகம் செய்யலாம் என்று கூறியது. ஆனால் பல வர்த்தகர்கள் அச்சத்தால் கடையைத் திறக்க அச்சப்பட்டனர்; அல்லது இரகசியமாக செயல்பட முடிவு செய்தனர்.

மேலே கூறிய இறைச்சி வியாபாரி தனது கடைக் கதவை பாதி திறந்தே வைத்திருந்தார்,  சமண பண்டிகை கொண்டாடதவர்கள் கடைக்குக் கோழி இறைச்சி தேடி வந்தார்கள். இறைச்சி விற்பனையை வயிற்றுப் பிழைப்பாகக் மேற்கொண்ட வர்த்தகர்கள் வழமையான விற்பனையில்லாமல் வியாபாரம் நொடித்துவிட்டது.

ஆயினும் தற்போதைய இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா (பி.ஜே.பி) கட்சியின் ஆட்சியில், கடுமையான இந்து தேசியவாதச் செல்வாக்கின் கீழ் உள்ள நாட்டில் இறைச்சி வர்த்தகர்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. இறைச்சிக் கடைகளின் சிறு உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் நிலையில், பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) உறைந்த இறைச்சியை விற்பனை செய்வதை அதிகாரிகள் தடை செய்யவில்லை என்பதும் இவ்விடம் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்தியாவில் இறைச்சிக் கடை வர்த்தகத்தைப் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் செய்து வருகின்றனர். அவர்கள் இந்திய புலால் உண்ணும் சமூகத்திற்கு இதை பலநூறு ஆண்டுகளாக செய்து வருகின்றனர். “எங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்காக எங்களைத் தண்டிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தமல்லவா? கசாப்புக் கடைக்காரர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள் என்பதை நன்கு அறிந்துள்ளனர் தானே?” என்று இந்த வர்த்தகர்கள் அங்கலாய்க்கின்றனர்.

விஷ்வ இந்து பரிஷத் (Vishwa Hindu Parishad) மற்றும் பஜ்ரங்தள் (Bajrang Dal) போன்ற வலதுசாரி இந்துத் தீவிர குழுக்கள் இறைச்சிக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை இந்திய அடையாளத்துடன் பிணைக்கும் “புலால் தவிர்க்கும் தேசியவாதம் ” எனும் எழுச்சியின் ஒரு பகுதியாக இறைச்சித் தடைகள் உள்ளன. இது பன்சமூக இந்திய அடையாளத்திற்கு, பொதுச் சமூக வாழ்வியலிற்கும் மாற்றான விடயமே ஆகும். இந்தக் குழுக்கள் தற்போது ஆளும் பி.ஜே.பி. கட்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளன; அவை இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களுக்கும் தமது அரசியல் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

அரசியல் மற்றும் சமூகவியல் வல்லுநர்கள் பலர், புலால் உண்ணலை தவிர்க்கும் உந்துதலை நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான பரந்த அழுத்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் காண்கின்றனர். இந்திய சனத்தொகையில் முஸ்லீம் மக்கள் மொத்தத்தில் சுமார் 15% ஆக உள்ளனர். அதே சமயம் 2021 இல் Pew Research Center அறிக்கையின் படி இந்தியாவில் 39% சதவீதமானவர்களே புலால் உண்ணாதவர்கள். இது எமக்கு என்ன கூறுகிறதென்றால் இந்து சமயத்தவர் யாவரும் புலால் உணவைத் தவிர்ப்பவர்கள் அல்லர்.

இந்தியாவில் மாட்டிறைச்சி எப்போதுமே இந்துக்களுக்கு சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. பல இந்திய மாநிலங்களில் இந்த வகை உணவை தடை செய்ய முனைந்தனர். ஆயினும் 2014 ஆம் ஆண்டில் பி.ஜே.பி அரசாங்கம் வந்ததிலிருந்து, இந்த விடயத்தில் அனைத்து இறைச்சிப் பொருட்களும் அடங்கும் என்று மாறிவிட்டது.

இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது: இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்துத்துவாவின் அரசியல் கோட்பாடு, பி.ஜே.பி.யின் சித்தாந்த பிரதான அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயமேவக் சங்கத்தில் (Rashtriya Swayamevak Sangh) வேரூன்றியுள்ளது. இந்துத்துவம் இறைச்சி நுகர்வை இந்து விரோதம் என்றும், இந்தியாவுக்கு எதிரானது என்றும் கருதுகிறது. புலால் விரோதத் தேசியவாதிகள் இறைச்சி உண்பவர்களை – முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஆதிவாசிகளை – இணங்குமாறு கட்டாயப்படுத்துமாறு கண்டித்துத் தமது ஐதீக பாதைக்குத் தள்ளுகின்றனர். இது இந்திய பன்சமூக சனநாய போக்கிற்கு மாறான விடயமே ஆகும்.

அரசியல் விமர்சகரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அபூர்வானந்த், இந்திய கலாச்சாரத்திற்கும் சைவ உணவுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு ஒரு கட்டுக்கதை என்று கூறுகிறார்.  கட்சி சார்நத தேசியவாதிகள் புலால் உணவை உட்கொள்பவர்களை அவமானப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தைக் கட்டமைக்கிறார்கள் என்று பேராசிரியர் கூறுகிறார் – இது ஒரு “சந்தர்ப்பவாத புலால் வேற்றுமை” சில இந்தியப் பகுதிகளில் போர்க்குணத்துடன் ஊக்குவிக்கப்படுகிறது. தீவிரவாத இந்து என்று கூறிக்கொள்ளும் ஐதீகவாதிகள் இந்திய மக்கள் அனைவர் மீதும் தங்கள் மதப் பழக்கங்களை நிறுவவும், முஸ்லீம்களைப் பொருளாதார ரீதியாக முடக்கவும் விரும்புகிறார்கள்,” என்றும் பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

மேலே கூறியது போல சமீபத்திய ஆண்டுகளில் ஹரியானாவில் உள்ளதைப் போன்ற தடைகளுக்கு பல எடுத்துக்காட்டுகளைக் காணமுடிகிறது. ஏப்ரல் 4, 2021 அன்று, டெல்லியில், பி.ஜே.பி யினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஒருவர் இந்து பண்டிகையான சைத்ரா நவராத்திரியின் (Chaitra Navratri) ஒன்பது நாட்கள் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து நவராத்திரி விழாவின் போது, வலதுசாரி அமைப்புகள் பல வட இந்திய நகரங்களில் முஸ்லிம்களை தங்கள் இறைச்சிக் கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தின.

அந்த நவம்பரில், தற்போதைய இந்தியப் பிரதமர் சொந்த மாநிலமான குஜராத்தில், இறைச்சியைப் பார்ப்பது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்று வாதிட்டு, “முறையாக மூடப்படாவிட்டால்” புலால் உணவை விற்கும் அனைத்து சாலையோர குடிசைகளையும் அகற்ற அதிகாரிகள் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதன் தந்திரமான விடயம் என்னவென்றால் வெளிப்படையான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படாவிடினும் கூட, சில எச்சரிக்கையான முஸ்லீம்கள் இந்து பண்டிகைகளின் போது தங்கள் இறைச்சிக் கடைகளை மூடிவிடுகின்றனர், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அதைவிட மோசமாக இருக்கும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். “இறைச்சியை விற்க விரும்புபவர்கள் நகரத்தை விட்டு வெளியேறி, ஒரு தனி சந்தையில் அவ்வாறு செய்ய வேண்டும்” என்று ஹரியானாவில் உள்ள ஒரு இந்து அமைப்பின் தலைவர் குருகிராம் நகரத்தைக் குறிப்பிட்டு வாதிட்டார்.

ஹரியானாவின் சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதியின் (Sanyukt Hindu Sangharsh Samiti) மாநிலத் தலைவராக மகாவீர் பரத்வாஜ் உள்ளார், இது திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனையைத் தடை செய்ய அழைப்பு விடுத்து, குருகிராமில் புதிய இறைச்சி விற்பனையாளர் உரிமங்களை வழங்குவதைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. “புலால் அற்ற உணவு உண்பவர்கள் இந்த இறைச்சிக் கடைகளுக்கு முன்னால் வெட்டப்பட்ட இறைச்சியைத் தொங்கவிடுவதைப் பார்க்கும்போது, அது அவர்களைப் புண்படுத்துகிறது, தூக்கி எறிய விரும்புகிறது” என்று பரத்வாஜ் கூறினார், அவர் தன்னை ஒரு பெருமை மிக்க இந்து குடிமகன் என்று விவரிக்கிறார். இதுவரை பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் அன்றாடம் நடைபெறாத இது போன்ற விவரணைகள், சாதிப்புக்கள் அனைவரையும் ஆதாரிக்கும் பன்சமுக சனநாயகச் சிந்தனைக்கு மாறான விடயம்.

இது போன்று புலால் உணவு வர்த்தகர் குடும்பங்கள் 2021 நவராத்திரியின் போது, காவி தாவணி அணிந்து இந்து மந்திரங்களை உச்சரித்த 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல்களால் தாக்கப்பட்டதாகவும் ஆதாரங்களுடன் ஹரியானாவில், காசியாபாத் (Ghaziabad) தொழில்பேட்டை நகரில் தெரிவிக்கப்படுகிறது. காஜியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது, அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு பி.ஜே.பி. தலைவரும் கூட, வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்து யுவ வாகினி (Hindu Yuva Vahini) என்ற அமைப்பை நடத்திய இந்து துறவி ஆவார். எனவே அவ்விடத்தில் உள்ளூர் அதிகாரிகள் புலால் விற்பனைத் தடையை மாற்றியிருந்தாலும், வர்த்தகர்கள் குண்டர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. எனவே உதவியற்ற நிலையில், கசாப்புக் கடை வியாபாரிகள் நவராத்திரி வாரம் மூடிவிட்டனர். அந்த வாரம் தினவருமானத்தில் வாழும் இந்த சிறுகடை வர்த்தகர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்பட்டனராம்.

புலால் வெறுக்கும் தேசியவாதத்தின் பரவல், பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் இணைந்துள்ளது. சுயாதீன வெறுப்புக் குற்றச் செயல் கண்காணிப்பாளர்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான 400-க்கும் மேற்பட்ட வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு இறைச்சித் தடைகள் தற்காலிகமானவையாக இருந்தாலும், இந்தியா எதைக் குறிக்கிறது, அதன் கலாச்சாரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது, பொருளாதாரத்திலும் சமூகத்திலும் அவர்களுக்கு ஒரு இடம் இருக்கிறதா என்பது குறித்து அவர்கள் நீண்டகால கவலைகளை எழுப்புகிறார்கள்.

இதில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இந்து தேசியவாதிகளின் எதிர்ப்பு, புலால் உணவு உண்பதைப் பற்றியது அல்ல; விலங்குகள் அல்லது நாட்டின் மீதான அவர்களின் அன்பைப் பற்றியதும் அல்ல. இது அவர்களின் அதிகாரத்தை நிறுவுவது, அவர்களின் வாழ்க்கை முறையை அனைவருக்கும் திணிக்கும் முயற்சி மட்டுமே. இது இந்திய சனநாயக வாழ்வுக்கும், ஒற்றுமைக்கும் ஏற்புடையது அல்ல என்பதை மக்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

–    வேலிக்குருவி

 

உச்சாந்துணை

1 – பேராசிரியர் அபூர்வானந்த் ஜா   https://en.wikipedia.org/wiki/Apoorvanand

CASI Spring 2010 Visiting Scholar

2 – Political Veganism: An Empirical Analysis of Vegans’ Motives, Aims, and Political Engagement, Deborah Kalte https://doi.org/10.1177/0032321720930179

3- New hate crime tracker in India finds victims are predominantly Muslims, perpetrators Hindus – Hate crimes in India: New tracker finds victims are predominantly Muslims, perpetrators Hindus (scroll.in)

4 – BBC: Uttar Pradesh: India’s Muslim victims of hate crimes live in fear, Feb 21, 2022 –Uttar Pradesh: India’s Muslim victims of hate crimes live in fear – BBC News

5 – Eight-in-ten Indians limit meat in their diets, and four-in-ten consider themselves vegetarian – PEW Research 2021 https://www.pewresearch.org/fact-tank/2021/07/08/eight-in-ten-indians-limit-meat-in-their-diets-and-four-in-ten-consider-themselves-vegetarian/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad