\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (நவம்பர் 2022)

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை, கடந்த மே மாத பகுதியில் பார்த்தோம். அதன் பின், வந்த படங்களில் உள்ள ஹிட் பாடல்களின் தொகுப்பை இப்பகுதியில் காணப் போகிறோம். படங்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. அதனால், இப்பகுதியில் ஐந்து பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களைப் பார்க்க போகிறோம்.

டான் – ப்ரைவேட் பார்ட்டி

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அனிருத்தின் பாடல்கள் மட்டுமல்ல, அவர் இசையமைத்த படங்களும் ஹிட் அடித்தன. சிவகார்த்திக்கேயன் – அனிருத் வெற்றி கூட்டணி ‘டாக்டர்’ படத்திற்குப் பிறகு, இதிலும் தொடர்ந்தது. அவர்களுடைய டார்க்கெட் – 2கே கிட்ஸ். பாடல் வரிகள் மற்றும் இசையில் அவர்களை வசியம் செய்யும் ரகசியம் புரிந்தவர்கள் இக்கூட்டணி. தொடர்ந்து இதிலும் வெற்றியைச் சுவைத்தார்கள்.

விக்ரம் – பத்தல பத்தல

இப்படத்தில் கமலுடன் இணைந்தது மூலம், தமிழின் இன்றைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் இசையமைத்த பெருமை பெற்றார் அனிருத். இப்படத்தின் பாடல்களை விட, பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார் அனிருத். விஜய் சேதுபதி அறிமுகமாகும் காட்சியில் இருந்து இறுதியில் சூர்யா முடித்து வைக்கும் காட்சி வரை அவருடைய அதிரடி இசையில் அமர்க்களப்படுத்தியிருந்தார். ஒரு படத்தின் பின்னணி இசையையே பாடல்கள் கேட்பது போல் கேட்க வைத்திருத்தார் அனிருத்.

வாரியர் – புல்லட் சாங்

நீண்ட இடைவெளிக்கு பிறகு, லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் இவ்வருடம் வெளியானது. தெலுங்கு நடிகர் ராம் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்திற்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். புல்லட், விசில் என இப்படத்தின் குத்துப்பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு, படம் ரசிகர்களைக் கவராமல் போனது. புல்லட் பாடலை நடிகர் சிம்புவுடன் இணைந்து பாடகி ஹரிப்ரியா கிறங்கடிக்கும் குரலில் பாடியிருந்தார். (பின்குறிப்பு – தமிழ்ப்பாடல் வீடியோ தற்சமயம் யூ-ட்யூப்பில் இல்லை. என்ன பஞ்சாயத்தோ?)

லெஜண்ட் – கோனே கோமானே

தொழிலதிபர் சரவணன் அருள் தனது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி, அதன் பிராண்ட் அம்பாசிடராகத் தானே ஆனது மட்டுமின்றி, அத்துடன் திரைப்படங்களில் நடித்துத் தனது பிரபல்யத்தைப் பெருக்கி கொள்ள நினைத்ததின் விளைவு, இந்த லெஜண்ட் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி சிறு கிண்டலுக்கு உண்டான படத்தை, ஓடிடியில் வெளியிட்டு மேலும் கிண்டலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நினைத்து, இன்று வரை படம் டிவியிலோ, ஓடிடியிலோ வெளியாகவில்லை. படத்தில் தனது பங்குக்குச் சில நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ‘தில்லானா தில்லானா’ பாணியில் இசையமைக்கப்பட்டிருந்த ‘கோனே கோமானே’, அப்படி ஒரு பாடல்.

விருமன் – மதுரை வீரன்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்திருந்த ‘விருமன்’ திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அறிமுகமாகியிருந்தார். நடிப்பு, நடனம் மட்டுமின்றிப் பாடகியாகவும் ஒரு பாடலைப் பாடி அசத்தியிருந்தார். இப்பாடலை முதலில் வேறொரு பாடகி பாடி, பின்பு அது மாற்றப்பட்டது என்று ஒரு சர்ச்சையிலும் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

திருச்சிற்றம்பலம் – மேகம் கருக்காதா

தனுஷ் – அனிருத் கூட்டணியில் சிறிது இடைவெளிக்கு பிறகு வெளிவந்த திரைப்படம். ரொம்பவும் ஆர்பாட்டமில்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் நன்றாகவே ஓடியது. முதலில் வெளிவந்த ‘தாய் கிழவி’ பாடலை விட, படத்தில் இருந்த மற்ற பாடல்கள் நன்றாக இருந்தன. மேகம் கருக்காதா, மயக்கமா, தேன்மொழி ஆகிய பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் நன்றாக இருந்தன. ’மேகம் கருக்காதா’ பாடல் படமாக்கம், ’லா லா லேண்ட்’ பாடலை நினைவுபடுத்தும்வண்ணம் அமைந்திருந்தது.

 

கோப்ரா – ஆதிரா

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில், நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வெளிவந்த படம். படம் வெளிவருவதற்கு முன்பு வெளியான ‘தும்பி துள்ளல்’, ‘ஆதிரா’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் கிளப்பி இருந்தன. ஆனால், படமோ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்திச் செய்ய முடியாமல் போனது. விக்ரமுக்கோ, அவரது ரசிகர்களுக்கோ இது ஒன்றும் புதிதில்லை.

வெந்து தணிந்தது காடு – மல்லிப்பூ

கௌதம் தனது பாணியில் இருந்து வெளியில் வந்து எடுத்த படமிது. எழுத்தாளர் ஜெயமோகன் கதை, கௌதம் மேனன் மேக்கிங் என வித்தியாசமாக வந்த படம். சிம்புவும் அவர் பங்குக்கு வித்தியாசமாக நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தாமரையின் பாடல்வரிகளில் ‘மல்லிப்பூ’ பாடல் நல்ல பரவலான கவனிப்பைப் பெற்றது. தூரத்தில் வேறு ஊரில் பணியாற்றும் கணவனை எண்ணி, ஒரு பெண் ஏக்கத்துடன், வலியுடன் பாடுவதை இப்பாடல் நன்றாக பதிவு செய்திருந்தது.

பொன்னியின் செல்வன் – பொன்னி நதி

தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தமிழ் சமூகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த படம் – பொன்னியின் செல்வன். கல்கியின் மூலக்கதை, மணிரத்னத்தின் திரைக்கதையில், இயக்கத்தில் தான் படமாக வெளிவர வேண்டி இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் பாடல்களுக்குக் கலவையான வரவேற்பு வந்தாலும், பின்பு ரஹ்மான் மேஜிக்கை ரசிகர்கள் ரசித்தார்கள். பொன்னி நதி அனைவருக்கும் பிடித்த பாடல் என்றால், தேவராளன் கூத்து, அலை கடல் பாடல்களுக்கெல்லாம் தனி ரசிகர்கள் உண்டு.

ப்ரின்ஸ் – பிங்கிலிப்பிப் பிலாப்பி

சிவகார்த்திக்கேயன் படங்கள் என்றால், பொதுவாக இசை அனிருத் அல்லது இமான் என்று இருக்கும். அதில் இருந்து நகர்ந்து முதல் முறையாகத் தமனுக்கு வந்திருக்கிறார். தமன் தொடர்ந்து தமிழில் அவ்வப்போது இசையமைத்து வந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் என்று இல்லாமல் இருந்தது. இப்போது, சிவகார்த்திக்கேயன், விஜய் என்று தொடங்கியிருக்கிறார். அனிருத்திற்குச் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் சரியாகப் போகாததால், அடுத்து ‘வாரிசு’ படத்தில் எப்படிக் கவர்கிறார் என்று பார்க்க வேண்டும்.

வருடத்தின் முதல் பாதியில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் அனிருத் இசையமைத்திருந்தார். அவருடைய வெற்றி சதவிதமும் அதிகமாக இருந்தது. பிறகு வந்த மாதங்களில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அதிகமாக ஒலித்தது. யுவன், ஜி.வி. பிரகாஷ் இசையிலும் அவ்வப்போது படங்கள் வெளிவந்தாலும், பெரிய வெற்றிகள் ஏதுமில்லை. கந்தாரா என்ற கன்னடப் படத்தில் பாடலும், பின்னணி இசையும் பெரிதாகக் கவனத்தை ஈர்த்தன. இனி அடுத்து பெரிய சம்பவங்கள் பொங்கலில் நிகழ இருக்கின்றன. தொடர்ந்து, கேட்டுக் கொண்டு இருப்போம்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad