\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டிவிட்டரின் (Twitter) வணிகம் ஏன் உடைகிறது?

புதிய உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) விளம்பரத்தை வெறுக்கிறேன் என்று கூறுகிறார். இது ஒரு தலையாய பிரச்சனை. ஏனென்றால் விளம்பரம் சார்ந்த வருமானமே, கீச்சகம் எனப்படும் ‘டிவிட்டரின்’ சமூக ஊடகத் தளத்தின் வருவாயில் 90 சதவீதத்தை வழங்குகிறது.

எலான் மஸ்க் டிவிட்டர் கீச்சகத்தினை வாங்குவதற்கான தனது ஒப்பந்தத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் விளம்பரதாரர்களுக்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார். பெரு நிறுவனங்கள் பலவும், கீச்சகத் தளத்தில் உள்ளடக்க மிதவாதத்தின் (content moderation) அளவை வியத்தகு முறையில் குறைப்பதற்கான தனது திட்டங்களைப் பற்றி ஆர்வமாக இருப்பதை எலான் மஸ்க்கும் அறிந்திருந்தார். போதிய ஆய்வின்றி, கட்டண அடிப்படையில், பயனாளர்களுக்குத் தர முத்திரை (நீல சரிகுறி – blue tick) தருவது, தங்களது “அடையாள பாதுகாப்பு”க்கு (Brand safety) அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதுகிறார்கள் விளம்பரதாரர்கள். தவறான எண்ணம் கொண்ட, தர முத்திரை பெற்ற பயனர்கள், இந்நிறுவனங்களின் விளம்பரத்தைத் திரித்து, எதிர்மறையான உள்ளடக்கத்துடன் கீச்சிடும் (tweet) செய்யும் அபாயமுள்ளது.  

மஸ்க்கும் நிறுவனங்களின் கவலையை உணர்ந்து கொண்டார். ஆனால் ட்விட்டர் “உலகின் மிகவும் மரியாதைக்குரிய விளம்பர தளமாக” மாற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், அந்த தளம் “அனைவருக்குமான இலவச நரகமாக” மாற முடியாது என்பதையும் கூறினார். பின்னர், அடுத்த இரண்டு வாரங்களில், அவர் கிட்டத்தட்ட தனி மனிதனாக, விளம்பரதாரர்களின் மிகப்பெரிய கவலைகளை நனவாக்கினார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் (Nancy Pelosi) கணவரான பால் பெலோசியைப் (Paul Pelosi) பற்றிய வலதுசாரிகளின் சதிக் கோட்பாட்டின் இணைப்பை மஸ்க் ட்வீட் செய்தார். மேலும், செய்தி நிறுவனங்களின் தொழில்நுட்ப பயன்பாட்டினை கிண்டலாகக் குறிப்பிடும் வகையில், ஜெர்மனியின் நாஜிப்படை வீரர் ஒருவர் அக்காலத்தில் செய்தி பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்திய புறாக்களை கூண்டில் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் புகைப்படைத்தினை வெளியிட்டு கடுப்பேற்றினார். கட்சி சார்பில்லா வாக்காளர்களை குடியரசுக்கு கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தார் மஸ்க். ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர் நாட்டின் அதிபராக இருந்து, இரு அவைகளிலும் அக்கட்சி பெரும்பான்மை பெற்றால் ஊடகச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் அபாயமிருப்பதை வெளிப்படையாகச் சொன்னார்.

டிவிட்டர் ஆதரவாளர்கள் சிலர் விளம்பரங்களை எதிர்ப்பதால், விளம்பரதாரர்கள் கீச்சகத்தைப் புறக்கணிப்பதை உணர்ந்த மஸ்க், இந்த ஆர்வலர் குழுவினர் தங்கள் போக்கை மாற்றியமைக்காவிட்டால் அவர்களை பகிரங்கப்படுத்த நேரிடுமெனவும் அது நியூக்ளியர் குண்டுகளைப் போல வெடித்து அவர்களை அவமானப்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கையில், மஸ்க் அவசரமாக ட்விட்டரின் ‘நீலச் சரிகுறி’ (blue-check) தரவமைப்பினைத் திருத்தியமைத்தார். முன்னதாக, நீலச் சரிகுறி என்பது சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க, தீமை விளைவிக்கும் செய்திகளைக் கீச்சிடாத  நபர் என சரிபார்த்தலுக்குப் பின்னர், தரக் குறி போல வழங்கப்பட்டு வந்தது. 

மஸ்க்கின் புதிய திட்டம், முற்றிலும் புதிய கணக்குகள் உட்பட, ஒரு மாதத்திற்கு $ 8 சந்தா செலுத்தும் எவருக்கும் நீலத் சரிகுறியை வழங்கியது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளே யாரோ ஒரு விஷமி, ஜார்ஜ் புஷ் (George W. Bush) பெயரில் புதுக்கணக்கினை, கட்டணம் செலுத்தி பெற்ற நீல சரிகுறியுடன் தொடங்கி, ‘ஈராக்கியர்களைக் கொல்லத் துடிப்பதாக’ பகிடி செய்திருந்தார். அதே போல, மருந்து தயாரிக்கும் நிறுவனமான ‘லில்லி’ (Eli Lilly) என்ற பெயரில் போலிக் கணக்கினை நீலச் சரிகுறியுடன் தொடங்கி, நீரிழிவு நோய்க்கான ‘இன்சுலின்’ மருந்துகள் நாடு முழுதும் இனி இலவசமாக வழங்கப்படும் என்ற போலிச் செய்தினை வெளியிட்டு அதிரடித்தார். இதனால் பங்கு சந்தையில் ‘லில்லி’ நிறுவனத்துக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. இன்னொரு நபர் பெப்சி பெயரில் போலிக் கணக்கினைத் தொடங்கி, ‘கோக்’ (Coke) சிறந்த பானம் என ஒப்புக்கொள்வதாக கீச்சிட்டிருந்தார்.

இவை யாவும் விளம்பர நிறுவனங்களையும், பெரு நிறுவனங்களையும் கொந்தளிக்க வைத்தது. 

வர்த்தக அடையாளம் பிராண்ட் ஆபத்து எப்படி இருக்கும்?

சமீபத்தில், உலகின் இரண்டு பெரிய விளம்பர நிறுவனங்களான ஐபிஜி (IPG) மற்றும் ஆம்னிகாம் (Omnicom), தங்கள் வாடிக்கையாளர்கள, டிவிட்டர் தளத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தன. கார் உற்பத்தியாளர் ஔடி (Audi), ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பாளரான ஜெனரல் மில்ஸ் (General Mills) மற்றும் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே டிவிட்டரை புறக்கணித்திருந்தார்கள். இன்று டிவிட்டரில், பெரும்பாலும் சிறுகுறு நிறுவனங்களின் புதிய, தரம் நிருபிக்கப்படாத சிறு உபகரணங்கள் பற்றிய விளம்பரங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இந்த பெரும் விளம்பரதாரார் கொந்தளிப்புகள் அனைத்தும் வணிகத்திற்கு மோசமானவை என்பதை மஸ்க் வெளிப்படையாகவே அறிவார். அவர் டிவிட்டரை முற்று முழுதாக வாங்கிக் கொள்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் வருவாயில் சுமார் 90 சதவீதத்தை விளம்பரம் கொண்டிருந்தது. மஸ்க்கின் நெடுங்காலத் திட்டம் டிவிட்டரை சந்தா வருவாய் மூலம் இயங்கும் தளமாக மாற்றுவது என்றாலும், குறுகிய காலத்தில் அவருக்கு விளம்பர டாலர்கள் தேவை. அப்படியானால், அவர் ஏன் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்?

இதன் பதில், சற்று எளிமையானது: மஸ்க் விளம்பரத்தையோ அல்லது விளம்பரதாரர்களின் கவலைகளையோ புரிந்து கொள்ளவில்லை, எனவே அவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை எனலாம்.

டெஸ்லா விளம்பரம் இன்றி விற்றலே ஈலான் சிந்தனை

விளம்பரத்தைப் புரிந்து கொள்ளாததைத் தாண்டி, மஸ்க் அதை தீவிரமாக வெறுக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் பெருநிறுவனங்கள் செய்யும் அடையாள விற்பனை (Brand sales). அவரது ‘டெஸ்லா’ கார் நிறுவனம் டெஸ்லா, நுகர்வோரின் வாய்மொழியாகவே பிரபலமடைந்தது. இந்நிறுவனம் விளம்பரத்திற்காகப் பெருந்தொகையைச் செலவழித்ததில்லை. (டெஸ்லா நிறுவனம் தன் வருடாந்திர அறிக்கைகளில், ‘சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர செலவுகளை’ ‘இதர முக்கியமற்ற செலவுகள்’ (Miscellaneous expenses) என்றே விவரிக்கிறது.) 

ஆரம்பத்தில், டெஸ்லா விளம்பரங்களை இயக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் அது அப்படி இருந்திருக்கலாம். வாங்க விரும்புவோரை டெஸ்லா அதன் கார்களுக்கான நீண்ட காத்திருப்பு பட்டியலில் போட்டது.  எனவே தூண்டுதல் தேவை சிறிது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் மின்சார வாகன சந்தையில் போட்டி அதிகரித்துள்ள நிலையிலும், விளம்பரங்களுக்கு செலவு செய்வதை மஸ்க் பிடிவாதமாக எதிர்த்து வருகிறார். 

டெஸ்லா கார் உற்பத்தித் தாபனம், பொதுப்பங்குதாரார் முதலீட்டு உரிமை கொண்ட தாபனம். 2020 ஆம் ஆண்டில், டெஸ்லாவின் பெரிய பங்குதாரர் ஒருவர் ஆட்சிக்குழு கூட்டத்தில் பதிலாள் (Proxy) வாக்குச்சீட்டில் விளம்பரம் செய்யத் தொடங்குவதற்கான ஒரு முன்மொழிவைக் கொணர்ந்தார். ஆனால் மஸ்க்கின் கூற்றை ஏற்று, பெரும்பாலான பங்குதாரர்கள் இந்த முன்மொழிவை எளிதாக நிராகரித்தனர்.

மஸ்க்கைப் பொறுத்தவரை, ஒரு நிறுவன அடையாள (பிராண்ட்) விளம்பரம் இயல்பாகவே மேலோட்டமானது மற்றும் ஏமாற்றக்கூடியது. மேலும் அவர் சிந்தனையின் படி பெருநிறுவன வெற்றிக்குப் பொருத்தமற்றது.  2019 ஆம் ஆண்டில், “டெஸ்லா விளம்பரங்களுக்கு விளம்பரம் செய்யவோ அல்லது பணம் செலுத்தவோ இல்லை. அதற்கு பதிலாக, நாங்கள் அந்த பணத்தை தயாரிப்புகளை சிறந்ததாக மாற்ற பயன்படுத்துகிறோம்.” என்று கீச்சிட்டிருந்தார்.

ஊடகங்கள் பெரிய விளம்பரதாரர்களைப் பற்றிய உண்மையான, மோசமான நோக்கங்களை எழுதாததால், அவை பிரபலமடைந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார். விளம்பரதாரர்களுக்கு அவர் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் கூட, மஸ்க் மறைமுகமாக பிராண்ட் விளம்பரத்தை வெறுத்தார். “வாடிக்கையாளர்களே நீங்கள் ஒருபோதும் அறிந்திராத ஒரு சேவை அல்லது தயாரிப்பு அல்லது மருத்துவ சிகிச்சையை உங்களுக்குக் காட்ட முடியும் என்ற விளம்பரம் உங்கள் அறியாமையை பணமாக்குகிறது” என்பது மஸ்க்கின் கருத்து. பெருநிறுவனங்கள் இவ்வகையான விளம்பரங்களை ஊக்குவிக்கக்கூடாது என்ற கொள்கை கொண்டவர் மஸ்க்.

விளம்பர நிறுவனங்களின் ‘அடையாள அபிவிருத்தி’ (Brand promotion) விளம்பரங்கள் அர்த்தமற்றவை, உண்மையற்றவை என்று மஸ்க் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் டிவிட்டர் போன்ற சமூக ஊடகத்தளத்துக்கு விளம்பரநிறுவனங்கள் பற்றிய அவரது கருத்து பொருட்டல்ல. ‘அடையாளப் பாதுகாப்பு’ அதாவது பொய்க் கணக்குகள் மூலம் நிறுவனங்களின் நற்பெயரைச் சிதைக்கும் சாத்தியம் குறித்து மஸ்குக்கு போதுமான புரிதல் இல்லை; அவர் குழப்பமடைந்திருக்கிறார் என்கின்றன விளம்பர நிறுவனங்கள்.

விளம்பர நிறுவனங்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது உண்மைதான். ‘இந்நிறுவனங்கள் சுதாரிக்க வேண்டும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு விளம்பரமின்றி நான் செய்த அபிவிருத்திகள் நன்றாக வேலை செய்தன’ என்று சமீபத்திய மாநாடு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் மஸ்க். ஆனால் பொது ஊடகத்தில் இச்சவால்களை எதிர்கொள்வது சாத்தியமற்றது. திரிக்கப்பட்ட, எதிர்மறையான விளம்பரங்கள் ‘நியோ நாஜி’, ‘கியுஏ நான்’ போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்ற விளம்பரநிறுவனங்கள் கருதப்படக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

பெரும் வர்த்தக விளம்பரதாரர்கள் ட்விட்டரிலிருந்து தொடர்ந்து விலகி இருந்தால், மஸ்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவர் ஏற்கனவே பெருங்குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியிருப்பது, அவரின் நிர்வாகத் திறனைத் தொடர்ந்து  நம்புவதற்கு போதிய ஆதாரங்களைக் கொடுப்பதாகயில்லை.

பல மில்லியன் ரசிகர்கள், ஈலான் மஸ்க்கின் நிர்வாகத் திறமையில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு புரட்சிகர கார் நிறுவனத்தை உருவாக்கி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பினார், எனவே அவரால் ஒரு சிறிய சமூக ஊடக நிறுவனத்தை திறமையாக நடத்த முடியும் என்கிறார்கள். ஆனால் ஒரு துறையில் அவர் செய்ததை, அனைத்து துறைகளிலும் செய்ய முடியும் என்ற அனுமானம் எவ்வளவு தூரம் ஊர்ஜிதமாகுமென்பது தெரியவில்லை.

சகலகலா வல்லவன் முதலாளி

மஸ்க் ஒரு துறையில் சிறந்த முதலாளியாக இருப்பதால் எல்லா துறை வியாபாரங்களையும் அவரால் சிறப்பாக நடத்தமுடியும் என்ற கருத்துகளை டிவிட்டருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தகர்த்துவிட்டன. வியாபாரத் திறன் மற்றும் தன்மைகள் அனைத்தும் ஒன்று போலிருப்பதில்லை. ஒரு துறையின் போட்டியாளர்களை உணர்ந்துகொண்டு அவர்களை சிறப்பாகச் செயல்படுவதில் தான் வெற்றிக்கான சூத்திரமுள்ளது. முந்தைய வியாபாரத்தின் அனுபவத்தை மட்டுமே கொண்டு, புதிய தொழிலின் சூட்சுமங்களை புரிந்துகொள்ளாமல் பொருந்தாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் பொதுவாக போராடுகிறார்கள்.

நிறுவன நிர்வாக அனுபவங்கள் பற்றிய ஆய்வுகள்

2006இல் ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ Harvard கட்டுரை, பிற வர்த்தக நிறுவனங்களை நடத்தச் சென்ற G.E. கம்பனி நிர்வாகிகளின் குழுவை ஆய்வு செய்தது (கீழே உச்சாந்துணையில் தரப்பட்டுள்ளது). அந்த நேரத்தில் G.E. ஒரு பெரிய, மாறுபட்ட நிறுவனமாக இருந்தது, அதாவது வெவ்வேறு நிர்வாகிகள் மிகவும் வெவ்வேறு தொழில்களில் பணிபுரிந்தனர். பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இது ஒரு முதன்மையான பயிற்சிக் களமாகவும் இருந்தது— மற்ற பெரிய நிறுவனங்கள் G.E தாபனத்திழ் நிர்வாக அணிகளில் தவறாமல் சோதனை நடத்தும். ஆயினும்கூட, இந்த முன்னாள் மாணவர்கள் உலகளவில் வெற்றிகரமாக இல்லை என்று அந்த தொகுப்புக் கட்டுரை ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

இந்த் தாபனத்தில் அவர்கள் நடத்திய பிரிவுகள் செழித்ததைப் போலவே இதே போன்ற “மூலோபாய திறன்கள்” தேவைப்படும் நிறுவனங்களுக்குச் சென்ற நிர்வாகிகள் சிறப்பாக நாடத்திக்கொண்டனர். ஆயினும் வேறு பட்ட வர்த்தக அனுபவங்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்குச் சென்றவர்கள் தடுமாறினர். இதேபோல், அவர்கள் முன்பு பணியாற்றியதிலிருந்து மிகவும் மாறுபட்ட தொழில்களில் நிறுவனங்களை எடுத்துக் கொண்ட நிர்வாகிகள் மிகவும் மோசமாக செயல்பட்டனர். அவற்றின் நிறுவனங்கள் சராசரியாக 29 சதவிகிதம் குறைந்த பங்குதாரர்களின் வருவாயைக் கண்டன .

மேலே குறிப்பிட்ட ஆய்வு, ஒப்பீடுகள் நியாயமாக இருப்பினும் பெறப்பட்ட தரவு எண்ணிக்கைகள் சிறிய அளவாகவே இருந்தது. அதே சமயம் இன்னும் ஒரு வர்த்தக அறிஞர்கள் குழு 2001 முதல் 2014 வரை கிட்டத்தட்ட 1,300 தலைமை நிர்வாக அதிகாரி நியமனங்கள் ஒரு பகுப்பாய்வு செய்து, இதே போன்ற முடிவை அடைந்தது (கீழே உச்சாந்துணையில் தரப்பட்டுள்ளது). வெளியிலிருந்து வரும் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரி தோல்வியடைவாரா என்பதை தீர்மானிப்பதில் மிகப்பெரிய காரணி என்னவென்றால், “தலைமை நிர்வாக அதிகாரியின் பெரும் வர்த்தக தாபன பின்னணிக்கும் நிறுவனத்தின் நிறுவனப் பண்புகளுக்கும் இடையிலான பொருத்தமின்மை” ஆகும். தொழில்நுட்பம் மற்றும் பொறியியலைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களை நடத்துவதில் இருந்து, சமூகத் தொடர்புக்கான வரவேற்புச் சூழலை உருவாக்கி, பெருநிறுவன விளம்பரதாரர்களின் குறிப்பிட்ட கவலைகளைத் திருப்திப்படுத்துவதில் தங்கியிருக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துவதில் இருந்து ஒரு தலைமை நிர்வாக அதிகாரி செல்வதைத் துல்லியமாக அத்தகைய பொருத்தமின்மை உள்ளடக்கியிருக்கலாம்.

டவீட்டர் முறிவு உடனடியானதா?

மேற்சொன்ன கருத்துகள், டிவிட்டர் பொருளாதார முறிவு நிலையை நோக்கிச் செல்கிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்நிறுவனம், தினசரி அடிப்படையில் பயன்படுத்தும் 240 மில்லியன்  வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம் அமெரிக்காவில், மற்ற பொது ஊடகச் செயலிகளைக் காட்டிலும், படித்த மற்ற நல்ல வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களைப் பெற்ற செயலியாக டிவிட்டர் உள்ளதால், விளம்பர நிறுவனங்கள் டிவிட்டர் வாடிக்கையாளர்களை துறந்துவிடாது. அக்காரணத்தால் மட்டுமே விளம்பர நிறுவனங்களை உதாசீனப்படுத்தும் மஸ்க்கின் அலட்சியம், டிவிட்டரின் எதிர் காலத்திற்கு, ஒரு தோல்வி மூலோபாயமாகும்.

இந்த விஷயத்தில், ட்விட்டரின் மனித மூலதனத்திற்கான அவரது அணுகுமுறை சமூக இயக்கத்திற்கு ஏற்புடையதல்ல. பல மணி நேரப் பணிக்கு வற்புறுத்துவதும், அதனை ஏற்காதவர்களை வெளியேறச் சொல்வதும் டிவிட்டர் மீதான நன்மதிப்பை மிகப்பெரியளவில் பாதித்துள்ளது.  

மேலாண்மை திறன்களின் ஒரு புதிய தொகுப்பைக் கற்றுக்கொள்வதை விட, அவர் எளிதான, மிகவும் விவேகமான பாதையை எடுக்க வேண்டும்: ட்விட்டரை இயக்க சமூக ஊடகங்களில் உண்மையான அனுபவம் மற்றும் விளம்பரதாரர்களுடன் வலுவான உறவுகளைக் கொண்ட ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

மஸ்க் வருமானத்தைக் குறி வைத்து தொழில்செய்யும் ஒரு வியாபார மேதை என்று வர்த்தகத்துறை சொல்வதுண்டு. ஆனால் சமூகவியல் தாக்கங்களையும் அவர் மனதில் கொள்ள வேண்டும். சுய லாபங்களைக் கடந்து, புத்திசாலித்தனத்தையும், அனுபவங்களையும், தொழில்நுட்ப உற்பத்தி மூலம் சமூகவியல் வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்த மஸ்க் முயலவேண்டும். 

    யோகி

உச்சாந்துணைகள்

1 – HBR: Are Leaders Portable? Boris Groysberg, Andrew N. McLean, and Nitin Nohria

2  –  PHYS.ORG The loneliness of the CEOs hired from outside, by Dovev Lavie, Bocconi University

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad