\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவரிமான் ராமாயி

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2022 0 Comments

உழைத்து உரமேறிய உடம்பு. நாவல்பழ நிறம். கண்களில் வைராக்கியம். அலங்காரமோ, நகைகளோ கிடையாது. பின்கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை. அள்ளிச் செருகிய கொண்டை. கால்களில் ரப்பர் செருப்பு. ஆரம்பத்தில் அணிந்த தண்டட்டியால் வளர்ந்த காதுகள். இதுதான் ராமாயி. மானாமதுரையை அடுத்த கொம்புக்காரநேந்தல், அவள் பிறந்த ஊர். 

ஒரு தடவை, 1970 வாக்கில் அக்கரையில் இருக்கும் அம்மாவின் தோழி மதுரம் மாமி வீட்டுக் கொலுவிற்குப் போன போது அறிமுகம். நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொம்மைகள். சுத்தமாகத் துடைக்கப் பட்ட வீடு. ஆங்காங்கே பளிச்சென்று செம்மணிடப்பட்ட கோலங்கள். வண்ணத் தோரணங்கள். 

கண்மலர்ந்து, அம்மா அந்த நேர்த்தியைப் புகழ்ந்தவுடன் மாமி கையைக் காட்டியது, இந்த ராமாயியைத்தான். வெட்கத்துடன், சிரித்தமுகத்துடன் அதை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்ணை மறக்க முடியுமா? அப்போது அவளுக்கு வயது 25 இலிருந்து 30 க்குள் இருக்கலாம். கள்ளமில்லாத குழந்தை முகம். 

மானாமதுரையில் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை கூடும். அங்குக் காய்கறிகள் வாங்கப்போன மாமிக்குச் சிலமாதங்கள் முன்பு அறிமுகமாகியிருந்த ராமாயி, சிறுகச் சிறுக அவர்கள் வீட்டுச் செல்லப் பெண்ணாகி விட்டாள். 

நம் வீட்டில் உதவியாளராக இருந்த மீனாவிற்கு வயதாகி விட்டது. கண்பார்வை சரியில்லை. இருந்தாலும் தினமும் காலை ஐந்து மணிக்கு வந்து, முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள். அதிகப்படியான வேலைகளைச் செய்ய ராமாயியைக் கூப்பிட்டுக் கொள்ளலாமென்ற அம்மாவின் விருப்பத்திற்கு அவளும் உடனே சம்மதித்து விட்டாள். 

ஒப்புக் கொண்டபடி, ராமாயி வாரத்தில் நான்கு நாட்களாவது நம் வீட்டிற்கு வருவது வழக்கமாகி விட்டது. காலை ஒன்பது மணி வாக்கில், தன் எட்டு வயது மகனைத் தொடக்கப்பள்ளியில் விட்டுவிட்டு அம்மாவைப் பார்க்க வந்து விடுவாள். 

பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்கி மெழுகுவது, மாட்டுக்கொட்டில் சுத்தம் செய்வது, துணிகள் தோய்த்துக் காயவைப்பது, உரலில் மாவு இடித்துக் கொடுப்பது, ஆட்டுக்கல்லில் தோசைமாவு அரைத்துக் கொடுப்பது, மாவுமில் சென்று அரைத்து வந்த மாவைச் சலித்துக் கொடுப்பது என்று இப்படி ஏதாவது பணிகள் இருக்கும். சிரித்த முகத்தோடு மாலைக்குள் செய்து முடிப்பாள். 

அம்மா கொடுக்கும் உணவை ஆசையாகச் சாப்பிடுவாள். அம்மா எது செய்தாலும் குழந்தைக்கும் கொடுத்து அனுப்புவார். நான்கு மணிக்குப் பள்ளி சென்று பையனை அழைத்துக் கொண்டு, ஊருக்குக் கிளம்பி விடுவாள். கையில் கூலியாக அம்மா கொடுக்கும் பணத்தை நிறைவாகப் பெற்றுக் கொள்வாள். 

நம் வீட்டின் வாசல் அறையில் ஒரு நெல் சேகரித்து வைக்கும் குதிர் வைத்திருந்தோம். வருடத்திற்கு இரண்டு முறை நெல் அரைத்து, புடைத்து, கல்நீக்கிச் சுத்தம் செய்து, அரிசி, குருணை பிரித்தெடுத்துப் பத்திரமாக உருள்கலன்களில் போட்டு வைப்பது வரை அவள் பொறுப்புதான். ‘உமி’ வரட்டி தட்டுவதற்கும், ‘தவிடு’  வீட்டு மாட்டுத் தீவனத்திற்கும் கவனமாக எடுத்து  வைப்பாள். 

அரிசி புடைக்கும் நேரம் அவள் வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும். வளர்ந்து தொங்கும் காதுகள் தாளகதியில் அசைந்தாடும். முறத்தை இலாகவமாக உயர்த்தித் தணித்து, அசைக்கும் நேரம், ரவிக்கை அணியாத தோள்களின் கீழ், கைக்கு ஒன்று என்று பச்சை குத்தப்பட்ட அன்னப் பறவை வாயில் கவ்விப் பிடித்த அல்லிப் பூங்கொத்துடன் மலர்ந்து விழிக்கும். இது மறக்க முடியாத காட்சி. 

அந்தக் காலகட்டத்தில் இலங்கை வானொலி மிகவும் பிரபலம். ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீது, கே. எஸ் ராஜா இவர்களது அமுதத் தமிழ் உச்சரிப்பில் “பொங்கும் பூம்புனல்”, “இரவின் மடியில்” இவற்றைக் கையடக்க வானொலிப் பெட்டியில் குடும்பத்தோடு கேட்டு மகிழ்வோம். 

அவர்கள் ஒலிபரப்பும் புதுப்பாட்டுகளில் மயங்கி, அந்தப் படங்கள் மானாமதுரை அமுதா கொட்டகைக்கு வரும் நாளை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். அது ஒரு கனாக்காலம். 

ஒரு சித்திரைமாதப் பிறப்பு வந்தது. மதிய நேரம். நல்லவெயில். குளுமையான குரலில் எங்கள் ஊர் சவுண்ட் சர்வீஸ் முருகேசனின் அறிவிப்பு – சைக்கிள் ரிக்‌ஷாவில் கட்டிய பெரிய ஒலிபெருக்கியுடன், ஓர் அரசருக்குண்டான கம்பீரத்துடன் அமர்ந்து நாலாபுறமும் பார்வையை மலரவிட்டு, “நீங்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம், இனிய பாடல்கள் நிறைந்த படம், சிறந்த கதையம்சம் கொண்ட படம், நடிகர் திலகத்தின் நடிப்பில் மக்கள் மனம் கவர்ந்த படம் ‘சவாலே சமாளி’, புத்தம் புதிய காப்பி, இன்று முதல் உங்கள் அபிமானம் பெற்ற ‘அமுதா’ திரையரங்கில் நடைபோடக் காத்திருக்கிறது. சித்திரைப் பிறப்பை முன்னிட்டு தினமும் நான்கு காட்சிகள். திரண்டு வருக. கண்டு மகிழ்க” என்று அழைப்பு விடுக்க, தெருவே மகிழ்ந்தது. 

பறந்து விழுந்த மிட்டாய்ச்சிவப்பு, கிளிப்பச்சை, ஆகாய நீல வண்ண நோட்டீஸுகளைப் பொறுக்க ஓடிய குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும். அவற்றைப் பறித்து வாங்கிப் படிக்கும் பெரியவர்களின் முகபாவம், ஆஹா!

எங்கள் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. ராமாயி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள், சலனமே இல்லாமல். அம்மா அவளிடம், “ராமாயி! குழந்தைகளை அழைத்துக் கொண்டு இன்று மதிய காட்சிக்கு நீயும் போய்விட்டு வருகிறாயா? உனக்கும் ஒரு மாறுதலாக இருக்குமே!” என்றார்.

ராமாயியின் கண்களில் மளுக்கென்று நீர் பெருகுகிறது. “ஓ! உனக்குச் சினிமா பிடிக்காதென்றால் போக வேண்டாம். அழாதே” என்றார் அம்மா. கண்ணீரைத் துடைத்தபடியே,  “சினிமா பிடிக்கும். ஆனால் இந்தக் கொட்டகையில் கால் வைக்க மாட்டேன்” என்ற ராமாயியை அதிசயத்துடன் பார்த்த அம்மாவுக்கு, அவளுடைய இந்தப் பதில் தூக்கிவாரிப் போட்டது. “ஏன்னா அந்த உரிமையாளர்தான் என் பையனுக்கு அப்பன்.”

அவர் எத்தனை பெரிய மனுஷன்! ஓட்டு கம்பெனி, செங்கல் காளவாய், பல ஏக்கர் விவசாய நிலங்கள், காய்கறித் தோட்டங்கள்! அவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்யும் குடும்பங்களே 200 இருக்கும். யோசித்த அம்மா அவளிடமே கேட்டு விட்டார். “வசதியான குடும்பப்பெண், உனக்கு ஏனம்மா இத்தனை கஷ்டங்கள்? ஏனிப்படி உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கிறாய்?”

அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்த ராமாயி, சலனமில்லாமல் அம்மாவிடம் சொன்ன அவளது சுயசரிதை இதோ-

“நான் பிறந்தது, கொம்புக்காரநேந்தல் விவசாயக் குடும்பத்தில். ஓரளவு வசதி படைத்த பெற்றோர்கள். ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு வீட்டு வேலை, மாடுகன்று பராமரிப்பு, நிலத்தில் இறங்கி பயிர்பச்சை வளர்ப்பு, விளைந்த காய்கறிகள், சோளம், கம்பு, கேப்பை இவற்றைப் பெற்றோருடன் சென்று சந்தையில் விற்பது இப்படி நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. 

எனக்குச் சுமார் 18 வயதிருக்கும். குலசாமி கும்பிடக் கொம்புக்காரநேந்தல் வந்த குடும்பத்தினரை வரவேற்று ஆதரித்த எங்கள் குடும்பத்தின் மீது, என் முன்னாள் கணவனின் அம்மாவிற்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டு, என்னைப் பிரியப்பட்டு மருமகளாக்கிக் கொண்டார். 200 பவுனுக்கு நகைகள், பட்டுப்புடவை சீர்செனத்தி எல்லாமே அவர்கள் செய்து, மதுரைக்கு அவர்கள் பங்களாவிற்கு அழைத்துப் போய் ராசாத்தியாக என்னை வாழ வைத்தார்கள். 

என்னப் பெத்தராசா என் பையன் பிறந்து நான்கு வருடங்கள் வரை வாழ்க்கை அமைதியாகப் போச்சு. பிறகு என் கணவனது சகவாசம், நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தன. இதற்கிடையில் நான் கருவுற்றேன். மாமியார் காலமானார். 

மசக்கைக் காலத்தில் பிறந்தவீடு அழைத்து வந்தனர். திடீரென ஒருநாள் கருச்சிதைவு ஏற்படத் தொடங்கி, உதிரப்போக்கு அதிகமாகி, உயிருக்கு ஆபத்தாப் போச்சு. மாட்டுவண்டியில் அள்ளிப்போட்டு அரசாங்க மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். 

என்னோட கெட்ட நேரம் பெண்மருத்துவர் விடுப்பு. ஆண்மருத்துவரும், செவிலியரும் இருந்திருக்கிறார்கள். மதுரை வரை எடுத்துச் செல்ல என் உடம்பில் திராணிஇல்லை. ஆபத்துக்குப் பாவமில்லை என்ற நோக்கில், மருத்துவ சிகிச்சைகள் கொடுத்து உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள். சேதி சொல்லி அனுப்பியும் என் கணவன் வரவில்லை. 

பத்து நாள்கள் ஓய்விற்குப் பின் என்னை ‘பிளசர் கார்’ வைத்து, மதுரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். வெளியூர் போயிருந்த கணவன், தன் பெண் தோழியுடன் வீடு திரும்பினான். என்னை அன்று எதிர்பார்க்கவில்லை போலருக்கு. 

‘எங்கவந்தே? ஆண்தோழனுடன் (மருத்துவரைச் சொல்கிறான்) மருத்துவமனையில் நாடகமாடி முடிச்சாச்சா புள்ள?’ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டாம் பாருங்க – 

தாலியக்கழட்டி அவன் மூஞ்சீலயே விட்டெறிஞ்சேன். அவங்கம்மா போட்ட நகைநட்டு, புடவைகள் வைத்திருந்த பெட்டியை உதவியாளர்களைத் தூக்கி வரவச்சு அவன்ட்ட ஒப்படைச்சேன். பூவைக் கழட்டினேன், பொட்டழிச்சேன். உடம்பில் போட்டிருந்த நகைகளைக் (தண்டட்டி முதல், தண்டைவரை) கழட்டி வச்சேன். 

அள்ளி முடிச்ச கொண்டையுடன், எம்மவனைக் கையில் பிடிச்சுக்கிட்டு, கட்டிய புடவையோட வெளியேறியவதான். கடைசி பஸ் பிடிச்சு ஊர் வந்து சேந்தேன். நிலாவெளிச்சத்தில ஒத்தையில, தூங்கறபிள்ளையத் தோளுல போட்டு வந்த என்னைப் பாத்துப் பதறி ஓடிவந்த சனங்க, ‘என்ன ஆச்சு புள்ள, இத்தன வெரசாத்திரும்பிட்ட?’ன்னு அலறினாங்க. 

இன்னிவர என் அப்பன் ஆத்தா உட்பட யாருக்கும் வெவரம் சொல்லல. ஏதோ மனஸ்தாபம், நாளாவட்டத்துல சேந்துடுங்கன்னுதான் நெனக்கிறாங்க. செத்தாலும் அவன் மூஞ்சீல முளிக்கமாட்டேம்மா” என்று சொல்லி முடித்து விட்டு, கொண்டு வந்த வெண்ணெயைக் குமுட்டியில் காய்ச்சி, மணக்கும் நெய்யில் முருங்கை இலையைப் போட்டு வறுத்து, எதுவுமே நடக்காத மாதிரி அம்மாவிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டாள். 

எங்களுக்கு ‘சவாலே சமாளி’ வீட்டிலேயே பார்த்த அனுபவம். வாயடைத்துப் போய் உட்கார்ந்து விட்டோம். 

நான்கு வருடங்கள் ஓடின. எங்கள் வீட்டில் பிறந்த பேரக் குழந்தைகளைக் குளிப்பாட்டுதல், தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தல் எல்லாவற்றிலும் அம்மாவுக்கு ராமாயி நல்ல உதவி. பால் சொட்டும் சோளம், கேப்பை எல்லாம் நிலத்திலிருந்து பறித்து வந்து, கும்முட்டியில் சுட்டு, பதமாக உள்ளங்கையால் தேய்த்து, தோல் நீக்கிக் கொடுப்பாள் பாருங்கள். அமுதமாக இருக்கும். கேப்பையிலும் நெய் வடியும். 

ஒருநாள் காலை, திடீரென்று முருகேசன் சவுண்ட் சர்வீஸ் அறிவிப்பு. மிகவும் வருத்தமான குரலில், “இன்று அதிகாலை நான்கு மணியளவில், மானாமதுரை அமுதா டாக்கீஸ் உரிமையாளர் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். மாலை மூன்று மணிக்கு இறுதி ஊர்வலம். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்”.

சலனமே இல்லாமல் கொல்லைப்புறம் மாட்டுக்குத்தீனி போட்டுக் கொண்டிருந்தாள், ராமாயி. சாயங்காலம் தாரை தப்பட்டை முழங்க, நையாண்டி மேளம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வாண வேடிக்கைகளுடன் அவள் கணவரின் இறுதி ஊர்வலம் நம் தெரு வழியே. பூக்களும், அத்தரும், சவ்வாதும் மணத்து, ஊரையே திணறடித்துக் கொண்டிருந்தது. 

கூட்டம் சொல்லி மாளாது. நாங்கள் வாசல் திண்ணையிலிருந்து பார்த்தோம். ராமாயி சலனமே இல்லாமல் கொல்லை ரேழியில் அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். தோளை அலங்கரித்த அன்னப்பறவைகள், வழக்கம்போல் விழியுருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. 

ஒரு சில வருடங்களில் நம் குடும்பம் ஊரைவிட்டுக் கிளம்பி வெளியூர், வெளிநாட்டுவாழ்க்கை என்றாகிவிட்டது. அவளோடு தொடர்பு விட்டுப்போய் விட்டது. சமீபத்தில், அந்தக் கவரிமான், தன் 85 ஆவது வயதில் இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டோம். மகன் குடும்பத்துடன் வசதியாக வாழ்வதாகக் கேள்வி. 

ராமாயி ஓர் அமைதிப்புயல், கொதிக்கும் பனிக்கட்டி, குளிரும் நெருப்பு, கவரிமான். வேறு எப்படிச் சொல்ல??

பிரபா அனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad