\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புத்தாண்டு சங்கற்பங்கள்

Filed in தலையங்கம் by on January 21, 2023 0 Comments

புது ஆண்டு பிறந்துவிட்டது. தனிமனித அபிலாஷைகள், கனவுகள் நிறைவேறக் காத்திராமல் காலம் நகர்ந்து செல்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு புத்தாண்டு துவக்கத்திலும் அறியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம்.  புதிய ஆண்டு எல்லா வளங்களையும், நலத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம். 

முந்தைய இரண்டாண்டுகளை விட 2022 மேலானதாகயிருந்தது என கருதினாலும், உலக அமைதி, பொருளாதாரம், சூழலியல் கோணங்களில், கடந்தாண்டு சிக்கலானதாகவேயிருந்தது. புத்தாண்டில், பெருந்தொற்றின் பதட்டம் சற்றே தனிந்துள்ள நிலையில், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. சுகாதார, பொருளாதார நெருக்கடிகள் சற்று தளரக் கூடும். ஒரு புறம் உலக நாடுகள் பலவும் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தாலும்,  கிழக்கு ஐரோப்பாவில் நிலவி வரும் போர்ச்சூழல் தணிவதாகத் தெரியவில்லை.  

போலந்து முன்னெப்போதையும் விட, அதிகப் பொருளுதவி வழங்கி உக்ரைனுக்கு தோள் கொடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான உக்ரைன் நாட்டவரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதுடன், நிலப்பாதை வழியே போர்த்தளவாடங்கள், உணவுப் பண்டங்களை வழங்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய போர் மண்டலம் விரிவடையக் கூடும் என்பதை உணர்ந்த போலந்து, தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து போர்த் தளவாடங்களை இறக்கி தனது ராணுவத்தை வலுவாக்கி வருகிறது. ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய ராணுவத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது போலந்து. கூடவே ருமேனியா, பால்டிக் நாடுகளான லடிவியா, லிதுவேனியா ஆகியவையும் தங்கள் இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகின்றன. மறுபுறம் ஹங்கேரி, பெலாருஸ் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் கரம் கோர்த்து வருவது இந்தப் போர் விரைவில் முடிவடையும் வாய்ப்பினைத் தடுத்துள்ளது. இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவின் பங்கு நிறையவேயுள்ளது. அமெரிக்காவும், நேடோ நாடுகளும் ரஷ்ய நாட்டுக்கெதிராகக் கொணர்ந்த கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்துவது, பேச்சு வார்த்தைகளுக்கு வழி வகுக்கலாம். இது நடக்காத பட்சத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடும். இப்போர் தொடர்ந்து நீடிக்குமானால் அணு ஆயுதப் பயன்பாட்டு அச்சுறுத்தல்களையும் தவிர்ப்பதற்கில்லை.

பொருளாதாரக் கோணத்தில் உலக வர்த்தகச் சந்தையின் நிலை உற்சாகமளிப்பதாகவில்லை. பணவீக்கம், நிதி சுழற்சி, புவிசார் அரசியலில் நிச்சயமற்ற தன்மைகள் சிக்கல்களை உலகப் பொருளாதாரம் தொடர்ந்து எதிர்கொள்ளும் என்பதே வல்லுனர்களின் கணிப்பு. விநியோகச் சங்கிலி சீரவடைவதால் விலைவாசி ஏற்றம் சற்றே கட்டுக்குள் வரும் எனக் கருதினாலும் வேலைவாய்ப்பின்மை, நுகர்வோர் செலவீடு, தொழில் வளர்ச்சி, பணவீக்கம் ஆகியவை பெரும் சவாலாகவே அமையும். முந்தைய ஆண்டுகளில் நிலவிய தொற்றுநோய் தொடர்பான காரணிகளின் தாக்கம் குறைந்தாலும், பொருளாதார மந்தம், வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதாக அமையாது என்கிறார்கள் வல்லுனர்கள். அத்தியாவசியத் தேவைகளான, உணவு, இருப்பிடம் என்ற அளவில் நுகர்வோர் செலவு சுருங்கி, சுற்றுலா, கேளிக்கைச் செலவுகள் கணிசமாகக் குறையும். இப்படி பல காரணிகள் எளிதில் புலப்படாதக் கெடு சுழலை (vicious circle) உருவாக்கி வேலைவாய்பின்மை, பணச் சுழற்சி சிக்கல்களை ஏற்படுத்தலாம். 

மாறாக, ஆசிய நாடுகளின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி பொருளாதார மந்தத்தை ஈடுசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ‘0 கோவிட்’ கொள்கைகள் தளர்த்தப்பட்டிருப்பது, உற்பத்தித் துறையை வேகப்படுத்தும். விநியோகச் சங்கிலி சீரடைந்து உலகமயமாக்கச் சந்தையை மீட்கும் என்றும் நம்பப்படுகிறது. எரிபொருள் சந்தை ஐரோப்பியாவில் நிலவும் போர்ச்சூழலைப் பொறுத்து ஏற்றத் தாழ்வு பெறும். பங்குச் சந்தையைப் பொறுத்தளவில், உலகளவில் 50 சதவித மக்கள், முக்கியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் எனக் கருதுகிறார்கள். இது கடந்தாண்டைக் காட்டிலும் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கலாம்.  

கடந்தாண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதைக் கண்டோம். இந்தாண்டு இன்னும் சில நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படலாம். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஹைடி, சோமாலியா, இன்னபிற ஆப்பிரிக்க நாடுகள் இந்தச் சூழலில் சிக்கக்கூடும். ஏற்கனவே இந்நாடுகள் சிலவற்றில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு புறம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற  நாடுகளில் உணவுக் கழிவுகள் (food waste) அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது. அமெரிக்க வேளாண் துறையின் கணக்குப்படி, ஆண்டுக்கு 38% தயாரிக்கப்பட்ட உணவுகள் வீணடிக்கப்பட்டு குப்பையில் சேர்கிறது.

அறிவியல் முன்னேற்றங்களைப் பொறுத்த வரையில், தானியங்கி மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். டெலிபதி, ஹாலோகிராம் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிப் பெறும். செவ்வாய்க் கிரக காலணிகள் குறித்த ஆய்வுகள் வேகமெடுக்குமென பல முன்னெடுப்புகள் இருந்தாலும், இவற்றின் பயன்கள் சராசரி மனிதனைச் சென்றடைய பல தசாப்தங்கள் எடுக்கலாம்.

புவிவெப்பமடைதல் கடந்தாண்டு நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகளுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தாண்டும் இயற்கைச் சூழலின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏற்கனவே காற்று, தண்ணீர் மாசுபாடுகளால் சூழ்ந்திருக்கும் பல பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் நிலவும் நீர் வறட்சி கொலராடோ, தெற்கு, வடக்கு டகோடா, நெப்ராஸ்கா உட்பட பிற மாநிலங்களுக்கும் பரவும் என்று எச்சரிக்கப்படுகிறது.  இது வேளாண்மையைப் பெரிதாகப் பாதிக்கலாம். 

இவ்வாறு அடுக்கடுக்கான சவால்கள் இருந்தாலும், நம் வாழ்க்கையை நகர்த்தி செல்வது நம்பிக்கை எனும் உந்துசக்தி. அந்த நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்கிறது; செல்லும். புத்தாண்டில் பலரும் பல்வேறு விதமான சங்கற்பங்களை மேற்கொள்வதுண்டு. பெரும்பாலும் அவை தனிப்பட்ட அல்லது குடும்பம் சம்பந்தப்பட்டதாக அமையும். அத்துடன் சமூகநலனும் சேர்ந்திருந்தால் மேற்சொன்ன சவால்களைக் கடந்துசெல்வது எளிதாகும். மின்சாரச் சேமிப்பு, தண்ணீர் சேமிப்பு, உணவு சேமிப்பு, சுற்றுச் சூழல் பராமரிப்பு, எல்லைகளைக் கடந்த மனிதநேயம் ஆகியவை இன்றைய உலகின் மிக அவசரமான தேவைகள். தேவைகளுக்கும், விருப்பத்திற்குமான (Needs and Wants) வேறுபாடுகளை  அத்தியாவசியமானவை – இவையின்றி வாழ முடியாது, விருப்பமானவை – இவையிருந்தால் வாழ்வு மேம்படும் எனப் பிரிக்கலாம். தேவைகள் (உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம்) மாறுவதில்லை. விருப்பங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். 

ஆண்டின் முதல் நாளன்று மட்டுமே சங்கற்பங்கள் மேற்கொள்ள வேண்டுமென கட்டாயமில்லை. நல்ல சங்கற்பங்களை மேற்கொள்ளும் எந்நாளும் புதிய தொடக்கத்தின் நன்னாளே. விருப்பங்களைச் சுருக்கி, அனைத்துலக மக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்வோமாக.

  • ஆசிரியர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad