\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?

வராலாற்று ரீதியில் தொழிநுட்பத்தை எடுத்துப் பார்த்தால், எந்த தொழில்நுட்பமும் ஓரளவுக்குப் படித்த தொழிலாளர்களிடையே பெருமளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியும். ஆயினும் ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்பதே எமது கேள்வி.

சாட்ஜிபிடி(ChatGPT) என்றால் தமிழில் நாம் ‘பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி செயலாக்கக் கருவி’ என்று கூறிக்கொள்ளலாம்.

இந்த செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஒன்றான ‘ஓப்பன் ஏ.ஐ. (OpenAI) ஆல் வெளியிடப்பட்டது. இந்த சாதனத்தின் தொழில்நுட்பம், புதுப் புது சவால்களைத் தேடும் தொழில்நுட்பம் புரிந்த நுகர்வோர், சாமான்ய நுகர்வோர் என்ற பேதமின்றி அனைவரையும்  ஆச்சரியப்படுத்தியுள்ளது இருக்கிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் பல பத்தாண்டுகளாக எதிர் பார்த்து வந்த கருவி தான்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பல மனதைக் கவரும் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) கருவிகளில் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) ஒன்றாகும். இதில் ‘செயற்கை நுண்ணறிவு பட உருவாக்கிகள்’ (Midjourney, DALL-E) மற்றும் ‘வீடியோ உருவாக்கிகள்’ (Synthesia) போன்றவை அடங்கும். இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்களை அறிந்து கொள்வது நடைமுறையில் இலகுவானது. இவை மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல்/இலத்திரனியல் நுகர்வோர் விரும்பும் படத்தயாரிப்புக்களை விரைவாகவும் அதே சமயம் மலிவாகவும் உருவாக்க உதவப் போகின்றன. இக்கருவி வெளிவந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், கட்டுரைகளை எழுதுவதற்கு மாணவர்கள் ஏற்கனவே ChatGPTஐப் பயன்படுத்துகின்றனர். வர்த்தக தாபனங்கள் தங்கள் இணையதளங்கள் மற்றும் விளம்பரப் பொருட்களுக்கான ஆவணங்களை உருவாக்கவும், வாடிக்கையாளர் சேவை விசாரணைகளுக்குப் பதிலளிக்கவும் ChatGPT ஐப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களும் குறிப்பெடுக்கவும், சட்டச் சுருக்கங்களைத் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். மேலும் சமீபத்தில் ChatGPT ஆனது ‘பன் மாநில சட்டத் தேர்வின்’ சோதனைக் கேள்விகள் மற்றும் சான்றுப் பிரிவையும் எளிமைப்படுத்தியுள்ளது. ChatGPT கருவி, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் கற்பித்தலுக்கான அடிக்குறிப்புகளைத் தயாரிக்கவும் உதவுகிறது.

அதே சமயம், இந்த செயற்கை நுண்ணறிவு இயந்திர குறைபாட்டைக் காண்பதும் இலகுவானது. ChatGPT போன்ற சேவைகள் கவனம் ஈர்க்கும் விளம்பர எழுத்தாளர்கள் (copywriters), பத்திரிகையாளர்கள், வாடிக்கையாளர்-சேவை முகவர்கள், சட்ட உதவியாளர்கள், குறியீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களை (digital marketers) வேலையை விட்டு நீக்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப சிந்தனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் படைப்பாற்றல் மிக்க ‘செயற்கை நுண்ணறிவு’ அலுவலகப் பணியாளர்களின் வேலைகளை அச்சுறுத்தும் என்று எச்சரித்துள்ளனர். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் திறமையான அலுவலக ஊழியர்களை மாற்றும் வழிகளில் வளர்ந்து அவற்றின் ஆளுமை அதிகரித்து வருகின்றன. அவர்களின் பணி ஒரு காலத்தில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாததாக கருதப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியுடன் கூட, AI வேலைவாய்ப்பு நிலப்பரப்பை என்றென்றும் மாற்றும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு ரிசர்ச் நடத்திய ஆய்வில், செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தால் 47 சதவீத அமெரிக்கர்களின் வேலை அகற்றப்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

நாம் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பார்த்தால், அவை முன்னர் நேர்கோட்டு வளர்ச்சிகளாகக் காணப்பட்டன, அவை உகந்ததாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக, கணினிகள் பின்பற்றும் நடைமுறைகளை, செயலிகளை நாம் எழுதுகிறோம். ஒரு கணினி இதற்கு முன் தானாகவே செயல்முறைகளைக் கற்றுக் கொள்ளவோ அல்லது தானாகவே மேம்படுத்தவோ முயலவில்லை. ஆனால் அந்த நிலை இப்போது வெகுவாக மாறிவிட்டது. முன் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர் மற்றும் சிந்தனையாளர்களின் பணிகளை முற்றிலுமாக அகற்றாவிட்டாலும், தற்போதைய நிலைமையை நிச்சயமாக சீர்குலைக்கும்.

நமது சமீபகால நினைவகத்தில் எந்தத் தொழில்நுட்பமும் உயர் படித்த தொழிலாளர்களிடையே பாரிய வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் முன் பயிற்சி பெற்ற, செயற்கை நுண்ணறிவு AI இயந்திரம் இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்ற கேள்விக்கு யாராலும் தெளிவாகப் பதில் சொல்ல முடியாது. இந்த தொழில்நுட்பம் மிகவும் புதியது. பணியிடத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பு இதுவரை மெதுவாக மாறி வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு AI பல வழிகளில் வேறுபட்டது. இதுவரை தானியங்கி செய்ய முடியாத பல பணிகள் செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியப்படுகின்றன.

வளர்ந்து வரும் AI தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்துவது, புதிய தயாரிப்புகளை உருவாக்குவது, தங்கள் வணிகச் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது மற்றும் பணியாளர்களை மேலும் திறமையாக்குவது எப்படி என்பது ஒருபுறமிருக்க, நுகர்வோர்களும் வர்த்தக தாபனங்களும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் துரிதமாக ஆராய்ந்து, அதன் மூலம் இலாபம் உண்டு பண்ண முயல்கின்றனர்.

ஆயினும் நாம் வரலாற்றை வழிகாட்டியாக அவதானித்தால், இந்த செயல்முறை நாம் நினைப்பதை விட அதிக நேரம் எடுக்கும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக மின்சார உபயோகத்தை எடுத்துப் பார்க்கலாம். மின் விளக்குகள் மற்றும் அடிப்படை மின்சார மோட்டார்கள் 1800 களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டன. ஆனால் அமெரிக்காவில் மின்சாரம் பரவலான தத்தெடுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தத் தொடங்குவதற்கு மேலுமொரு நூற்றாண்டு தேவைப்பட்டது. மேலும் கணினிகளை எடுத்துப் பார்த்தாலும் இது தெளிவுபடும். 1950 களின் முற்பகுதியில் கணனிகள் வர்த்தக ரீதியாகக் கிடைத்தன, ஆனால் 1990 களின் பிற்பகுதி வரை அவற்றில் வர்த்தக உற்பத்தித்திறன் புள்ளிவிவரங்கள் எதுவுமில்லை.

சில தொழில்நுட்பங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தி உழைப்பின் தேவையைக் குறைக்கின்றன என்பதை நாம் ஒத்துக் கொள்ளலாம். இதற்கு உதாரணம், கடின உடல் உழைப்பு தொழில்களில் தானியங்கு இயந்திரக் கருவிகள், உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்தியதால் அப்பணிகளுக்கான வேலைவாய்ப்பை குறைத்துள்ளன. தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் பல வடிவங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன. ஆனால் மற்ற சில தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க வகையில் முடக்கப்பட்ட விளைவுகளைக் காட்டுகின்றன.

கடந்த நான்கு தசாப்தங்களில் தகவல்தொடர்புகளின் ஒவ்வொரு அம்சத்திலும் புரட்சியை ஏற்படுத்திய இணையத்தைப் பற்றி எடுத்துப் பார்த்தால் சில சமயம் தலையைச் சொறிய வேண்டியும் இருக்கலாம். தற்போது உலகளாவிய இணையங்கலால் ஆக்கிரமிக்கப்பட்ட எமது வாழ்வு முறையும் மாறியவாறுள்ளது. உதாரணமாக நவீன இணையம் மூலம் எப்படி நட்பைத் தேடுகிறோம், எவ்வாறு ஒருவருடன் ஒருவர் பேசுகிறோம், படிக்கிறோம், பார்க்கிறோம், வாக்களிக்கிறோம், எமது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோம், எவ்வாறு நமது நடவடிக்கைகளை பதிவு செய்கிறோம், எப்படி இவற்றின் மூலம் கோடிக்கணக்கான வர்த்தகங்களை ஆரம்பிக்கிறோம், எத்தனையோ பணம் அல்லது சொத்துக்களை உருவாக்குகிறோம் என்பவை நிரந்திரமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. 

எனினும் இணையம் கடந்த கால் நூற்றாண்டில் அடிப்படை வாழ்வின் தடைகளை நிவர்த்தி செய்தனவா என்று பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் கூறலாம். எனவே இணையம் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாகத் தோல்வியடைகிறது என்கிறார் பொருளாதார நிபுணர் ராபர்ட் கார்டன். இது தொடர்பான கருத்துகள் 2000 ஆம் ஆண்டிலும் விவதிக்கப்பட்டது. இணையமானது முன்பை விட மலிவாகவும் வசதியாகவும் தகவல் மற்றும் பொழுதுபோக்குகளை வழங்குகிறது, ஆனால் அதன் பயன்பாட்டில் பெரும்பாலானவை ஏற்கனவே உள்ள செயல்பாடுகளை ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு மாற்றுவதை உள்ளடக்கியது. எனவே இணையம் உண்மையான சமூக, பொருளாதார உற்பத்தித்திறன் புரட்சியை உருவாக்கவில்லை. இதே போன்றது தான் கணனிக் கைத்தொலைபேசிகளும். இவை கண்ணுக்கும்,பலர் கருத்துக்கும் பொலிவான கண்டுபிடிப்புத் தோல்விகள்.

செயற்கை நுண்ணறிவு என்பது நமது தற்போதைய திறன் பேசி (smartphone) போன்றதா அல்லது தானியங்கி இயந்திர கருவி போன்றதா என்று நாம் எடுத்துப் பார்த்து அலசலாம். மொத்தத்தில் பல வேலைகளை நீக்காமல் வேலை செய்யும் முறையை மாற்றப் போகிறதா அல்லது தொழிநுட்ப மையமான சான் பிரான்சிஸ்கோவைத் துருப்பிடித்த பகுதியாக மாற்றப் போகிறதா என்பதே எமக்கு எழும் கேள்வி. இதுவரை பாரிய தொழிநுட்ப வர்த்தகங்கள் சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் சனவரி மாதத்திலும் பல தொழிநுட்பவியலாளர்கள் வேலைகளைக் கழைந்துள்ளன.

புதிய தொழில்நுட்பம் எந்தத் துறைகளில் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்று கணிப்பது கடினம். சென்ற பல வருடங்களாக பாரவண்டி (Truck) சாரதிகள் சுயமாக ஓட்டும் வாகனங்கள் மூலம் வேலைகளை நீக்கும் என்று குழப்பம் வந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் நம்மில் பலர் கணனிகளில் உபயொகிக்கும் விரிதாளிலும் (Excel) மிகவும் இலகுவானது,அதே சமயம் கூகுள் ஆவணத்தை (Google Doc) விட ஆக்கப்பூர்வமானது. எனவே செயற்கை நுண்ணறவு இயந்திர பயன்பாடு உயரும், மேலும் இவை அதிக தரவை உள்வாங்குவதால் அவை சிறப்பாகவும்,சிறந்ததாகவும் இருக்கும். அதே சமயம் சராசரி தொழிநுட்ப பொறியிலாளர்கள் தற்போது அன்றாடம் பாவிக்கும் பெரும்பாலான மென்பொருட்களை நேரமெடுத்து புதுப்பிக்க வேண்டியும் வரலாம். இதைப் பற்றி மைக்ரோசாஃப்ட் தாபனம் ஏற்கனவே தமது திட்டதை எடுத்துரைத்துள்ளது.

அனேகமாக வர்த்தக நிறுவனங்கள் ஆதாய நோக்குடன் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைக் குறித்த தொகை வேலையாளர்களுக்குப் பதிலாக மாற்றுவார்கள். AI ஆனது சட்டப்பூர்வ அதிகாரிகள், விளம்பர ஆவணங்கள் எழுதுபவர்கள், டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்பாளர்கள், நிர்வாக உதவியாளர்கள், நுழைவு நிலை கணினி நிரலாளர்கள் மற்றும் ஆம், சில பத்திரிகையாளர்களால் செய்யக்கூடிய பணிகளைச் செய்யத் துவங்கலாம். இவை போன்ற வேலைகள் விரைவில் மாறலாம். ஆனால் ChatGPT ஆல் செயற்கை நுண்ணறிவு மூலம் நல்ல கட்டுரைகள்,கணிப்புக்கள்,தந்தாலும் அவை முற்று முழுதாக அத்தைகைய நிபுணர்களுக்கு தற்போது சமமாகாது. 

செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தால் தற்போதைக்கு முற்றாக வரலாற்று ஆவணங்களைக் கண்டறிய முடியாது. எனவே தொழில்நுட்ப மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வுகளின் தரத்தை மதிப்பிட முடியாது. ChatGPT ஏற்கனவே உள்ளவற்றிலிருந்து தனது உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. எனினும் இதன் கேள்வி பதில் முடிவுகள் அனைத்தும் ஆதாரம் உள்ளவையாக  இல்லை. தற்போது தன்னைத் திருத்திக்கொள்ளும் திறன் இல்லை, உண்மையான புதிய அல்லது சுவாரஸ்யமான யோசனைகளை அடையாளம் காண வழி இல்லை. செயற்கை நுண்ணறிவு பொது ஆவணங்கள், பட்டியல்கள் மற்றும் சுருக்கங்களைத் தரலாம்.  ஆனால் மனிதர்களே இன்றும் ஆழமான கதைகளை, கட்டுரைகளை, கவிதைகளை எழுதுவார்கள். எனவே செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனித நிபுணத்துவத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த உதவலாம்.

செயற்கை நுண்ணறிவு இயந்திரமானது வேலைலாப்பு முடக்கங்கள் மத்தியில் பல்வேறு வகையான தொழில்களை மிகவும் திறமையானதாக மாற்ற உதவும். அது முற்று முழுதாக பொருளாதாரத்தை உயர்த்தாவிட்டாலும் கூட, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் நம் வாழ்வின் அமைப்பை மாற்றும். சமூக ஊடகங்கள் முன்பு செய்ததைப் போல மாற்றலாம்; எமது நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை மாற்றும்; வீடியோ/கணனி விளையாட்டுக்கள் இன்னும் ஆழமாக, விளையாடுபவர்களை தொடர்ந்து விளையாட ஈர்க்கலாம்; வர்த்த தாபனங்கள், கடைகளில் சிறந்த கவர்ச்சிகரமான விளம்பர உத்திகள் மற்றும் விற்பனை காட்சிகள் அமைக்கலாம் திரைப்படங்கள் குளிர்ச்சியாகத் தோன்றலாம்; YouTube வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் மாறக்கூடும்; நாங்கள் ஏற்கனவே பார்த்ததை விட அதிகமான சூத்திர உள்ளடக்கத்தையும் பார்க்கலாம். அதே சமயம் மிகவும் அச்சுறுத்தலாக, மின் இணையங்களில் நம்பத்தகுந்ததாகத் தோன்றும் தவறான தகவல்கள் பெரிய அளவில் பரிமாறப்படலாம்.

உயர் படித்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பெரிய தலையிடி என்னவென்றால், AI தொழில்நுட்பங்கள் எந்த வகையான தொழிலாளர் முதலாளிகள் விரும்புகிறார்கள் என்பதில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில நிபுணத்துவங்கள் அழிக்கப்படலாம், ஆயிரக்கணக்கான தொலைதொடர்பு விற்பனை, நுகர்வோர் கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்கள் அல்லது பண்டம்,பொருள்,சேவை சந்தைப்படுத்தும் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நம் கைகளில் வைத்திருப்பதன் நன்மைகளை, வரவிருக்கும் வருமானம் கருதி வர்த்தகர்கள், சில பொருளியலாளர்கள் வலியுறுத்துவர். ஏற்கனவே பல தசாப்தங்களாக ஊழியர் சம்பளம் அதிரிக்காவிடினும் வர்த்தக உற்பத்தித் திறன் அதிகரித்தவாறேயுள்ளது. எனவே சமூகவியல் ரீதியில் நாம் எவ்வாறு, அலுவலகப் பணியாளர்கள் வாழ்வுக்கு வழியமைக்கலாம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். 

எமது கணிப்பு ChatGPT செயற்கை நுண்ணறிவு, குறுகிய உழைப்பு ஆகியவை வணிகங்கள் உழைப்பை, உற்பத்தித் திறனை அதிகரிப்பதம் மூலம் லாபத்தை அதிகரிக்க உதவுகையில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே. ஆனால் அது எப்போது எப்படி நடக்குமென்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

    யோகி

உச்சாந்துணைகள் :

  1.  Open AI https://openai.com/
  2.  Will Robots and AI Revolutionize Productivity Growth? Robert J. Gordon, March 01, 2021 https://gordon.economics.northwestern.edu/files/2021/05/HND-AI-Robots_210216.pptx
  3.  Artificial Intelligence and Jobs: Evidence from Online Vacancies,  Daron Acemoglu, David Autor,Jonathon Hazell, and Pascual Restrepo, https://economics.mit.edu/sites/default/files/publications/AI%20and%20Jobs%20-%20Evidence%20from%20Online%20Vacancies.pdf
  4.  The Future of Employment: How susceptible are jobs to computerisation?  Carl Benedikt Frey & Michael Osborne, 01 September 2013,  https://www.oxfordmartin.ox.ac.uk/publications/the-future-of-employment/
  5. Automation, skills use and training  https://www.oecd-ilibrary.org/employment/automation-skills-use-and-training_2e2f4eea-en

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad