உலகை விட்டுப் பறந்த இசைக்குயில்
இந்தியத் திரையிசை உலகில், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த இசைக்குயிலொன்று வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து விண்ணுலகம் நோக்கிச் சென்றுவிட்டது. நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எல்லைகளைக் கடந்த இசைக் கலைஞர்களில் தனியிடம் பிடித்த ‘கலைவாணி’ எனும் வாணி ஜெயராம் மறைந்து விட்டார். 19 மொழிகளில், ஆயிரக்கணக்கான திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், தானொரு மாபெரும் பாடகியென்ற தற்பெருமை ஒருபோதுமில்லாமல், அமைதி, எளிமை என பல அருங்குணங்கள் நிரம்பியவர். எப்பேர்ப்பட்ட மேடையானாலும், ஸ்டுடியோவானாலும், பாடும் முன் காலணியை கழற்றி வைத்துவிடுமளவுக்கு இசை பக்தி மிக்கவர். புகழையும் புறக்கணிப்புகளையும், புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட அற்புதப் பெண்மணி.
தமிழ்நாட்டில், வேலூரில், 1945 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30ஆம் தேதி, துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதியருக்குப் பிறந்தவர் கலைவாணி. குடும்பத்தில் எட்டாவது குழந்தை. பெண்ணாகப் பிறந்ததினால் பெற்றோர் சின்ன ஏமாற்றத்தில், வழக்கமாக செய்யும் சடங்குகள், பெயர் சூட்டல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டாமலிருந்திருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வீட்டுக்கு எதேச்சையாக வந்த ஜோசியர் ஒருவர், பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் குறித்துவிட்டு, ‘இந்தப் பெண் சரஸ்வதி அம்சம் கொண்டவ. பிற்காலத்துல இவளோட பெருமை உங்களுக்குப் புரியும்’ என்று வாழ்த்தியிருக்கிறார். அதன் பின்னரே பத்மாவதி அம்மாள், குழந்தைக்கு கலைவாணி என்ற பெயரைச் சூட்டியுள்ளார். அவர் பெயர் சூட்டிய முகூர்த்தம், அந்தக் குழந்தை கலைகளுக்கு வாணியாக வளர்ந்தது.
இசை பாரம்பரியமும், பக்தியும் நிறைந்த குடும்பம் வாணியினுடையது. சிறு வயதில் பெற்றோரிடம் முத்துசாமி தீக்ஷிதர் பாடல்களைப் பாடக் கற்றுக்கொண்டவர், பின்னர் முறையாக கடலூர் ஶ்ரீநிவாச ஐயங்கார், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் முறையான சாஸ்திரீய சங்கீதம் பயின்றார். இலங்கை வானொலியில் முகமது ரஃபி, லதா மங்கேஷ்கர் ஆகியோரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு, தானும் அப்பாடல்களைப் பாடிக் கொண்டேயிருந்திருக்கிறார். சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் இசையில் பட்டப்படிப்பை முடித்தவர்க்கு, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. திருமணத்துக்கு பின்னர், கணவர் ஜெயராமுடன் மும்பைக்கு குடி பெயர்ந்த பின் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. கணவரது குடும்பமும் இசைப் பாரம்பரிய பின்னணி கொண்டிருந்ததால், அவரது ஊக்கத்துடன் ஹிந்துஸ்தானி இசை கற்றார் வாணி. உஸ்தாத் அப்துல் ரகுமான் கான் என்பவரிடம் கஸல், தும்ரி என இசையின் பல்வேறு வடிவங்களையும் கற்றுத் தேர்ந்தார். இந்தி திரையிசையமைப்பாளர் வசந்த் தேசாயின் அறிமுகம் கிடைத்தது வாணியின் திரையிசைப் பயணத்துக்குத் துவக்கமாக அமைந்தது. துவக்கத்தில் பக்திப் பாடல்கள் பாடிய வாணிக்கு, ‘குடி’ (Guddi) எனும் படத்தில் ‘ஹம்கோ மன் சக்தி தேனா’, ‘போலு ரே பாப்பி’ ஆகிய இரண்டு பாடல்கள். இதில் ‘போலு ரே பாப்பி’ வாணியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வாணியின் உச்சரிப்பும், சர்வ சாதாரணமாக வந்து விழுந்த சங்கதிகளும், இந்தி இசையுலகைக் கலங்கடித்தது. பாடலின் துவக்கத்தில் சந்தூர் இசைத்து ஓய்ந்ததும் வந்த குரல் உச்சத்ஸ்தாயிலும் பிசிறில்லாமல் வந்தது அவரை அறிமுகப் பாடகர் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத பிரமிப்பைத் தந்தது. அவரது குரல் வளத்தையும், ஹிந்துஸ்தானி திறமையையும் கண்டு அதிர்ந்த இந்தி திரையுலகம், அவரைப் புறந்தள்ளப் பார்த்துள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த வாணியும், ஜேசுதாசும் அவர்களுக்கு பெரும் போட்டியாக அமைவார்கள் என்று நினைத்த பல இந்திப் பாடகர்கள் (லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர்) வாணியின் வாய்ப்புகளைத் தடுத்தனர் என்றும் அந்தக்காலத்தில் சொல்லப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைகாட்சிப் பேட்டியில், இந்தக் கேள்வி வாணியின் முன்வைக்கப்பட்ட போது, எந்த பதிலும் சொல்லாமல் விரக்தியாகச் சிரித்தார். அதில் தொக்கியிருந்த சோகம் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லியது. ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ என்றொரு புத்தகம் எழுதிவருவதாக அந்த பேட்டியிலேயே குறிப்பிட்டிருந்தார் வாணி. ஒருவேளை அந்தப் புத்தகம் வெளிவந்தால் அவர் சந்தித்த சவால்கள் வெளிவரலாம்.
1971 இல் வெளிவந்த ‘குட்டி’ படத்துக்கு பின்னர், சில பக்திப் பாடல்கள், கஸல் பாடல்கள் கேசட்டுகளாக வந்தன. 1973 ஆம் ஆண்டு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘தாயும் சேயும்’ என்ற படத்துக்கு பாடினார் வாணி. ஏதோ காரணங்களால் அந்தப் படம் வெளிவரவில்லை. பின்னர் சங்கர்-கணேஷ் இசையில் டி.எம்.எஸ்ஸுடன் சேர்ந்து ‘ஓர் இடம், உன்னிடம்’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் படம் வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டது. அதே ஆண்டில் கே. பாலச்சந்திரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ‘மலர் போல் சிரிப்பது பதினாறு’ என்ற பாடலைப் பாடினார். அதே படத்தில் எம்.எஸ்.வி, ஜானகி பாடிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலும், எஸ்.பி.பி. குரலில் ‘கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்’ பாடலும் பிற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. அடுத்த ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் வந்த ‘மல்லிகை .. என் மன்னன் மயங்கும்’ என்ற தனிப்பாடல், வாணியை தமிழ்த் திரையிசையின் உச்சாணிக் கொம்பில் ஏற்றியது. அந்நாட்களில் புகழிலிருந்த பி.சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரிடமிருந்து தனித்துத் தெரிந்த வித்தியாசமான குரலாய் அமைந்தது வாணியின் குரல். எஸ். ஜானகிக்கு அவ்வளவாகத் தமிழ்ப் பாடல்கள் அமையாதிருந்த நேரம் அது. ‘தீர்க்க சுமங்கலி’ படம் வெளியாகும் முன்னரே பாடல் பிரபலமடைய ‘மல்லிகை என் மன்னன்’ பாடல் இடம்பெறும் படம் என்று சுவரொட்டிகள் முளைத்தன. வாணி ஜெயராம் எனும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கியது தமிழ் திரையிசையுலகம்.
அதே ஆண்டில் சில பாடல்களைப் பாடியவர்க்கு, 1975 ஆம் ஆண்டு, மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.வி, கண்ணதாசன் கூட்டணியில் ‘அபூர்வ ராகங்கள்’ பாட வாய்ப்புக் கிட்டியது. டைட்டில் இசைக்குப் பதிலாக நீண்ட ஆலாபனையுடன் தொடங்கும் கர்நாடகப் பாடல். பொதுவாக ராகங்கள் அடிப்படையில் மெட்டமைக்க விரும்பாதவர் எம்.எஸ்.வி. அவரைப் பொருத்தவரையில் பாடல் வரிகளின் அழகையும், பொருளையும் இராக இலக்கணங்கள் கட்டுப்படுத்திவிடக் கூடாதென்பவர். ‘அபூர்வ ராகங்கள்’ என்ற தலைப்புக்கேற்ப காம்போதி, பந்துவராளி, சிந்துபைரவியென பல ராகங்களின் கலவையில் மெட்டை உருவாக்கியிருந்தார். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ – பாடலினூடே ராக ஸ்வரவரிசை மாறும் இடங்களில், இசைப்பொழிவில் தடங்கல் ஏற்படாமல், குட்டிகுட்டியாய் ஆலாபனை. சாஸ்திரீய சங்கீதத்தில் ஊறித் திளைத்த வாணி ஜெயராமுக்கு வைக்கப்பட்ட சவால் எனலாம். ‘மனித இன்பத் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்’. இரண்டாவது முறை இதே வரி கமக்கங்களுடன் சேர்ந்து வரும் பொழுது அட்சர சுத்தம். ‘பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்; அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்’ என்ற வரிகளைப் பாடும் பொழுது, சொந்த பிரச்சனைகள் நினைவில் மூழ்கி விட்டதை உணர்ந்து, சபை உணர்வுக்கு மீள வரும்பொழுது, வந்து விழும் சங்கதிகள்… அபாரம். ‘அந்தம்மா பாடுறதுக்கு முன்னாடி சிச்சுவேஷன சொல்லிட்டா போறும்… அப்படியே புடிச்சுக்குவாங்க.. நான் சொல்லாத சங்கதிகளெல்லாம் தானா வரும்.. மீட்டருக்குள்ள வந்து, பொருத்தமா இருந்தா நான் அத மாத்த மாட்டேன்’ – ஒரு பேட்டியில் வாணி ஜெயராம் குறித்து எம்.எஸ்.வி. சிலாகித்து சொன்னது இது. அதே படத்தின் கிளைமாக்ஸ் பாடலும் அவருடையது தான், ‘கேள்வியின் நாயகனே’ (உடன் பி.எஸ். சசிரேகா). படத்தில் பின்னணி இசைக்குப் பதிலாகவும் வாணி ஜெயராமின் ஆலாபனை, மிருதங்கத்துடன் ஜுகல்பந்தி பாணி கோர்வை. நடிகர், நடிகைகளுக்கு ஈடாக பங்களித்திருக்கும் அவரது குரல். வாணி ஜெயராமுக்கு முதல் தேசிய விருதினைப் பெற்றுத் தந்தன இப்பாடல்கள்.
அந்த ஆண்டில் வெளியான பல படங்களில் வாணி ஜெயராம் பாடல் ஒன்றாவது இடம் பெற்று விடும். இதை ஒரு வைராக்கியமாகவே வைத்திருந்தார் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர். அவரது ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘இடம்பெற்ற ‘சுகம் ஆயிரம் என் நினைவிலே’ பாடல் இதற்கு பதம். கே.வி. மகாதேவன் இசையில் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தின் ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ பின்னாளில் அவர்களது கூட்டணி ஈட்டப்போகும் வெற்றிக்கு கட்டியங் கூறியது. ‘முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி வந்தேன்’ என்று ‘மேல் நாட்டு மருமகள்’ இல் குன்னக்குடி வைத்தியநாதனுடன்; ‘கஸ்தூரி விஜயம்’ படத்தில் ‘மழைக் கால மேகம் மகராஜன் வாழ்க’ என்று வி. குமாருடன்; ‘தென்னங்கீற்று’ படத்தில் ‘மாணிக்க மாமயில் மாலையில்’ என்று ஜி.கே. வெங்கடேஷுடன்; இப்படி ஒரே வருடத்தில் தமிழ் திரையுலகின் அன்றைய பிரபல இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து முத்துக்களை வழங்கினார் வாணி ஜெயராம். எம்.எஸ்.வி யுடன் சேர்ந்து அவர் வழங்கிய ‘மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே), ‘நீராட நேரம் நல்ல நேரம்’ (வைர நெஞ்சம்), ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ (அவன் தான் மனிதன்), ‘மழைக்காலம் வருகின்றது’ (பாட்டும் பரதமும்), ‘காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்’ (வாழ்ந்து காட்டுகிறேன்) என அத்தனை பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன.
1976 ஆம் ஆண்டு ‘கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்’ (லலிதா), ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’ (மூன்று முடிச்சு), ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டி’ (துணிவே துணை) என எம்.எஸ்.வி இசையில் வாணி ஜெயராமின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டன. ‘வைர நெஞ்சம்’ – நீராட நேரம் நல்ல நேரம் பாடலின் விரகம் சொட்ட பாடியவர், ‘நாதமெனும் கோவிலிலே’ (மன்மத லீலை) இல் அதே ஏக்கத்தை வேறுவிதமாக வெளிப்படுத்தியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் சரளிவரிசை ஸ்வரவெடிகாளாகச் சிதறும்; வாணி ஜெயராமின் துல்லியமான உச்சரிப்பு மிளிரும். இப்பாடலில் கண்ணதாசனின் வரிகள் அவருக்கு அப்படியே பொருந்தியிருப்பதைக் காணலாம் – ‘இசையும் எனக்கிசையும், தினம் என் மனம் தானதில் அசையும்’ .
முத்துலிங்கத்தின் வரிகளில் ‘தங்கத்தில் முகமெடுத்து’, வாலியின் வரிகளில் ‘பொங்கும் கடலோசை’ (மீனவ நண்பன்) பாடல்களில் வாணியின் குரலில் புதியதொரு அழகு வெளிப்பட்டது. உச்சஸ்தாயில் சர்வ சாதாரணமாக விளையாடியது அவர் குரல். உச்சதொனி ரீங்காரத்துடன் (humming) தொடங்கி, சைலாபோன் (xylophone) பின்னணியில் ‘பொங்கும் கடலோசை’ என்று உச்சத்துக்குச் சென்று, ‘தண்ணீரிலே ஓடங்களைத் தாலாட்டவே’ என்று இறங்கி ‘கொஞ்சும் தமிழோசை’ என்ற வார்த்தைகளை இரண்டுமுறை சொல்லும் பொழுதும் குரலால் கொஞ்சி இருப்பார் வாணி ஜெயராம். சைலோபோன் தாள நயத்தோடு, போட்டிப் போடும் குழைவு. இந்த அற்புதத்தை வேறு யாரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. உச்சஸ்தாயில், நாசி தொனி (nasal tone) எட்டிப் பார்த்துவிடும் சிலருக்கு. வாணி ஜெயராமுக்கு அந்த சிக்கல் இருந்ததேயில்லை. இதற்கு பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். அவரது சிறப்புகளைச் சுருக்கி பட்டியலிடுவது எனது அறிவிலித்தனமென்றாலும், அப்படி ஒருவேளை செய்ய நேர்ந்தால் இப்பாடல் கண்டிப்பாக அதில் இடம்பெறும். இவரது பன்முகத் திறமைக்கு அதே நாட்களில் வெளிவந்த ‘நாலு பக்கம் வேடருண்டு’ (அண்ணன் ஒரு கோயில்) ஓர் எடுத்துக்காட்டு. அதுவரையில் விரகத்துக்கு பெரும்பாலும் எல்.ஆர். ஈஸ்வரி குரல் மட்டுமே பொருந்துமென பலர் நினைத்திருந்த நிலையில் வாணிக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் எம்.எஸ்.வி. இப்பாடலில் ‘அம்மம்மா.. என்னம்மா’ என்ற இரு சொற்களில் விரகம் சொட்டும்.
தமிழ்த் திரையில் நுழைந்தவுடன் சங்கர் கணேஷின் இசையில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும், சினிமா பைத்தியம் படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித் திரை’, பாலாபிஷேகம் படத்தில் ‘ஆலமரத்து கிளி.. ஆளப் பாத்து பேசும் கிளி’ பாடல்கள் இந்தக் கூட்டணியின் வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தது. வாணி ஜெயராம் அதிகம் பாடியது சங்கர் கணேஷ் ஜோடிக்குத் தான் என்றால் அது மிகையில்லை. சங்கர்-கணேஷ் இரட்டையர்கள், வாணி ஜெயராம் இல்லாமல் படம் பண்ணியதாக எனக்குத் தோன்றவில்லை.
‘அந்தமானைப் பாருங்கள் அழகு’ (அந்தமான் காதலி), ‘இலக்கணம் மாறுதோ’ (நிழல் நிஜமாகிறது) என எம்.எஸ்.வி. கூட்டணியில் வெற்றிகளைக் குவித்துகொண்டிருந்தபோது, ‘ஒரே நாள் உனை நான்’ (இளமை ஊஞ்சலாடுகிறது) என இளையராஜாவின் அறிமுக வாய்ப்பு கிடைத்தது. ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’ என்று வாய்ப்பினைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார் வாணி ஜெயராம். இளையராஜாவின் இசையில் இன்னும் பல அலைவரிசைகளை அடுக்கினார். ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’ பாடலை அவ்வளவு நயத்தோடு யாரும் பாடியிருக்க முடியாது. ‘கண்டேன் எங்கும் பூமகள்’ (காற்றினிலே வரும் கீதம்) பாடலில் வாணி ஜெயராமின் குரல் வீச்சு விளையாடியது. (இதே பாடல் எஸ். ஜானகி குரலிலும் படத்தில் வரும்).
‘நானா பாடுவது நானா’ (நூல்வேலி) என எம்.எஸ்.வி. இசையிலும், ‘நானே நானா யாரோதானா’ (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) என இளையராஜா இசையிலும் இரட்டை வேகமெடுத்தது வாணி ஜெயராமின் கலைப்பயணம். ‘பாரதி கண்ணம்மா’ (நினைத்தாலே இனிக்கும்)-மெலடி, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)-கஜல் சாரல், ‘கெளரி மனோகரியைக் கண்டேன்’ (மழலைப் பட்டாளம்)-கெளரி மனோகரி ராகம் என ஒவ்வொன்றிலும் தனக்கே உரித்தான தனித்தனி முத்திரை; அழிக்க முடியா அடையாளங்கள்; அத்தனை வைரங்களையும் பட்டைத் தீட்டி அடுக்கினார் வாணி. நடுவில் அவ்வப்போது மரகத, வைடூரியங்கள் வேறு. ‘கரிசல் தரிசு கழனியாச்சு’ (அச்சமில்லை அச்சமில்லை) அவற்றில் ஒன்று. வி.எஸ்.நரசிம்மன் (அதிகம் கவனிக்கப்படாத இசைவித்தகர் இவர்) இசையில் இப்பாடலில் அதிசயங்கள் காட்டியிருப்பார் வாணி ஜெயராம். இப்பாடலில் ‘போதும் சாமி .. போதும் சாமி… போ…தும்’ என்ற ஜாலத்திலும், தொடர்ந்துவரும் விரச ரீங்காரத்திலும் சங்கதிகளைத் தூக்கலாகவே தூவியிருப்பார். பாடலைக் கேட்டால் மட்டுமே இந்த அதிசயம் புலப்படும்.
‘ப்ரோச்சேவார நினுவினா’, ‘ஓம்கார நாதானு’ என சுத்த கர்நாடக ராகம் சொட்டச் சொட்ட கே.வி. மகாதேவன் வடித்தெடுத்த ‘சங்கராபரணம்’ படத்தில் எஸ்.பி.பி யோடு போட்டிப் போட்டு இரண்டாம் முறை தேசிய விருதினை பெற்றார், வாணி ஜெயராம்.
இதற்கு நேர்மாறாகப் ‘மேகமே மேகமே’ (பாலைவனச் சோலை)பாடலில் சோகத்தை பிழிந்துத் தந்திருப்பார். ஏமாற்றம், தவிப்பு, பிரிவு அத்தனை ரசங்கள் சொட்டும் பாடல். கஜல் பாடகரான ஜக்ஜித் சிங்கின் ‘தும் நஹின் .. கம் நஹின்’ பாடலைத் தான் ‘மேகமே’ என தமிழில் வடிவெடுத்து தந்திருந்தனர் சங்கர்-கணேஷ் என்றாலும், வாணியின் குரல் அதனை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அவரது ஹிந்துஸ்தானி ஞானத்துக்கு இப்பாடல் ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.
‘கவிதை அரங்கேறும் நேரம்’ (அந்த 7 நாட்கள்), ‘உன்னைக் காணும் நேரம்’ (உன்னை நான் சந்தித்தேன்) என மெல்லிசைத் தேன் துளிகளைத் தெளித்துக் கொண்டிருந்தவர், சடாரென ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ’ (வைதேகி காத்திருந்தாள்) என துள்ளினார். இதில் ‘கண் திறந்தால், சுயம்வரமோ’ என்பதிலும் சரளி ஸ்வரங்களிலும் அசத்தியிருப்பார். அந்தக் குரல், பளிங்கில் பன்னீர் தெறிப்பது போல் அத்தனை இன்பம்.
ஏதோ சில காரணங்களால் இளையராஜா என்றால் ஜானகி, எம்.எஸ்.வி/சங்கர்-கணேஷ் என்றால் வாணி ஜெயராம் என்று எழுதப்படாத விதி திரையுலகில் வியாபித்திருந்தது. இளையராஜாவின் பாடல்கள் பிற மொழிகளுக்கு மாறிய போது வாணி தான் ஜானகி, சுசிலாவுக்காக அதிகமாகப் பாடியவர். கண்ணதாசனின் மறைவுக்குப் பின்னர் எம்.எஸ்.வி. சோர்ந்த போது வாணிக்கும் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அந்த நேரத்தில் சங்கர்-கணேஷ் இசையில் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ என்று நெஞ்சை உருக்கிப் பிழிந்தார் வாணி. பாடலின் வீச்சு மேலும் கீழும் ஊசலாடினாலும், அந்தக் குரலில் ஒட்டியிருந்த சோகம் மாறவே மாறாது. அவரது ஹிந்துஸ்தானி திறமைக்கு மற்றொரு அழுத்தமான முத்திரை இந்தப் பாடல்.
1986ஆம் ஆண்டு வெளியான ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில், வாணிக்கு மற்றொரு சவாலான பாடல். ஆவேசம் மிகுந்த ஆட்டத்துடன், கதாநாயகிக்கான பாட்டு. தொடக்கம் முதலே உச்சஸ்தாயில் மெட்டமைந்திருக்கும். மேற்கத்திய பாணியில், கர்நாடக ஸ்வரங்கள்; இந்தப் பாடலின் முத்தாய்ப்பே கடைசி சரணம் தான்‘ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு’ என உச்சத்தில் சென்று, அடுத்த கணம் ‘அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு’ என்று இறங்கி வரும்போது சொக்க வைத்துவிடுவார்-அந்தளவுக்கான வீச்சிலும் குரலில் எந்த மாற்றமும் காண்பிக்காமல், பாவத்தை வெளிக்கொணர்ந்திருப்பார். டிரம்ஸ், மிருதங்கம், தபேலா என அத்தனை தாள வாத்தியங்கள்; அருமையான தாளகதியில் அமைத்திருப்பார் இளையராஜா. கூடவே பி. ஜெயச்சந்திரனின் கணீர் குரலில் ஸ்வர சேர்க்கை கொன்னக்கோல் வேறு. இத்தனைக்கும் நடுவில் வாணியின் குரல், உணர்வு மிகுதியில் குழைந்து, வழிந்தோடும். அற்புதமாக அமைந்த மெட்டுக்கும், இசை கோர்ப்புக்கும் வாணியின் குரலும், லாவகமான உச்சரிப்பும் மெருகேற்றி வேறுலகுக்கு எடுத்துச் சென்று விடும்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏனோ வாணிக்குப் பாடல்கள் அதிகமாக அமையவில்லை. இரண்டே பாடல்கள் – அதுவும் இரண்டாவது பாடல் (திருப்புகழ் – காவியத் தலைவன்) ஏ.ஆர்.ஆர்.க்கு மேடையில் பலர் நினைவூட்டிய பின்னரே வாணியின் ஞாபகம் வந்திருக்கும் போல. முதல் பாடல் ‘வண்டிச் சோலை சின்னராசு’ படத்தில் ‘எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்’’ எனும் பாடல். ஒரே பாடல் என்றாலும், தன் தனித்தன்மையைப் பதித்திருப்பார் வாணி. ஏ.ஆர்.ஆருக்கு மட்டுமே வசப்படும் மிகத் துல்லியமான வாத்திய ஒலிகள் நடுவே, சன்னமான ‘எக்கோ’ வுடன், அமைந்த சல்லாபப் பாடல். உடன் எஸ்.பி.பி. வேறு காமரசம் சொட்டச் சொட்ட கொஞ்சியிருப்பார். அத்தனைக்கும் ஈடு கொடுத்து, ‘சுகம் சுகம்’ என்ற வார்த்தைகளிலேயே வித்தைகள் செய்திருப்பார் வாணி.
அசாத்திய இசைத்திறமை, பல வகை இசைப் புலமை, ராகங்களை ஆலிங்கனம் செய்வது போல இழையோடும் குரல், துல்லியமான தமிழ் உச்சரிப்பு, அனைத்துமிருந்தாலும், தமிழ்த் திரையிசையுலகம் அவருக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. (பண்பாட்டுக்கு முரனான பாடல் வரிகள் வந்தால், வாணி பாட மறுத்துவிடுவார் என்பதொரு சாக்கு சொல்லப்பட்டதும் உண்டு). ஒரு அற்புதக் பாடகரை தமிழ்த் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரும் வாய்ப்புக்காக யாரையும் தேடிச் சென்றது கிடையாது. எனினும், தன்னைத்தேடிவந்த பாடல்களை, வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்தி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு தவிர பெங்காலி, ஒரியா, மலையாளம், கன்னடப் பாடல்களுக்காகவும் ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
ஈழத்தில் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு மிகுந்திருந்த வேளையில், தாயக விடுதலைக்காகப் பல பாடல்களை உணர்வுப்பூர்வமாகப் பாடி, சுதந்திர உணர்வூட்டிய சிறப்பும் வாணி ஜெயராமுக்கு உண்டு. குறிப்பாக அஹிம்சைப் போராளி திலீபனைப் போற்றி ‘பாடும் பறவைகள் வாருங்கள்; புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்’ என இவர் பாடிய பாடல் ஒலிக்காத ஈழத்தமிழர் வீடு இருந்திருக்காது. ‘இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது; நீதிக்குச் சோதனை தந்தது’ போன்ற வரிகள் இருந்ததினால் இப்பாடல் பலநாடுகளில் தடைகளைச் சந்திக்க நேர்ந்தது. தேவேந்திரன் இசையில் வாணி பாடிய ‘வீசும் காற்றே தூது செல்லு; தமிழ்நாட்டிலெழுந்து ஒரு சேதி சொல்லு’ என்று ஆற்றாமை, ஆதங்கம் மிகுந்திருந்த பாட்டு ஈழ மண்ணில் பொதிந்திருந்த சோகத்தை வெளிக்கொணர்ந்தது. ‘ஊர் முழுதும் ஓலம்; நான் உறங்கி வெகு பல காலம்’ (தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்) எனும் பாடலில் காதல் ஏக்கத்தினிடையே, காதலி ஒருத்தி, தாங்கள் அனுபவிக்கும் வலிகளைச் சொல்வதாக, கண்ணீரினூடே வெளிப்படுத்தியிருப்பார். வாணி ஜெயராம், தாயக விடுதலைக்காக உணர்வுப் பொங்கிய இப்பாடல்கள் எத்தனை காலமானாலும் மறையாது.
இசை மட்டுமென்றில்லாமல், ஓவியம், கவிதை என பல துறைகளிலும் ஆர்வம் மிகுந்தவர் வாணி ஜெயராம். தன் வாழ்வில் கணவர் மட்டுமே துணையென்று வாழ்ந்தவர். கணவர் ஜெயராமும், வாணிக்கு உறுதுணையாக வாழ்ந்தார். குழந்தைகள் இல்லையென்றாலும், ஒருவருக்கொருவர் துணையுடன், நட்புடன் வாழ்ந்த ஆதர்ச தம்பதியர் அவர்கள். 2018இல் கணவர் இறந்தபிறகு தனிமரமாகிப் போனார் வாணி. தனது வாழ்வில், நெடுந்தூரம் உடன் பயணித்த, நண்பராக விளங்கிய கணவர் போன பிறகு, அவரது வேகம் குறைந்து போனது. சில பக்திப் பாடல்கள், மேடைக் கச்சேரிகள் என்று தன் இசைப் பயணத்தைச் சுருக்கிக் கொண்டார்.
எளிமையான, பொறாமையற்ற, ஆடம்பரமில்லாத குணம் – முகத்தில் தவழும் அமைதியான புன்னகை – சாந்தமே உருவான கண்கள் – இவையனைத்துக்கும் சொந்தமான பெண்மணியை நாம் இழந்துவிட்டோம். இனிமையான குரலுடன், பல வீச்சுகளில், பாடல் வரிகளின் உணர்ச்சிகளைப் பிசிறில்லாமல் தந்துவிடும் திறமையை இனி வேறொருவரிடம் காணவேமுடியாது. அவரது திறமைகளைத் தாமதமாகக் கண்டுணர்ந்தவர்கள், அண்மையில் வாணி ஜெயராமுக்கு ‘பத்மபூஷன்’ விருதினை அறிவித்திருந்தார்கள். அதைக் கையில் பெறும் முன், நமக்கு விடை கொடுத்து பறந்துவிட்டது அந்த இசைக்குயில். ‘மேகமே மேகமே’ பாடலில் ‘எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்; அது எதற்கோ?’ என்று அவர் பாடிய வரிகள் நெஞ்சில் கனத்துக் கொண்டேயிருக்கிறது.
- ரவிக்குமார் –
Tags: Vani Jayaram