சங்கமம் 2023
பொங்கல் திருநாளையொட்டி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சங்கமம் கலை விழா, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Osseo Senior High School அரங்கத்தில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மினசோட்டா மாநில மேலவை உறுப்பினர் திரு. ஜான் ஹாப்மேன் (John Hoffman) அவர்கள் கலந்து கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் தமிழிசை, பரதம், பறை, மக்களிசை, துள்ளலிசை ஆட்டம் என நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்ணைக் கவர்ந்தன. கடந்த 3 ஆண்டுகளாக, மினசோட்டாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மரபு திங்கள்”ஆக மினசோட்டா ஆளுனர் பிரகடனம் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து இந்தாண்டும் ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மரபு திங்கள்”ஆகப் பிரகடனம் செய்யப்பட்டது. அந்தப் பிரகடனத்தை, இந்த விழாவில் செனட்டர் ஜான் ஹாப்மென் அவர்கள் வாசித்தார். அதைத் தொடர்ந்து, மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தில் தன்னார்வலர்களாகச் சேவை புரிந்தவர்களுக்கு, “அமெரிக்க ஜனாதிபதி தன்னார்வலர் சேவை விருது” பதக்கத்தை அவர் அணிவித்துப் பாராட்டினார்.
கடந்த 15 ஆண்டுகளாக, மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும், தமிழ்ப் பள்ளியும் மினசோட்டாவில் செய்து வரும் பணிகளைப் பதிவு செய்து ஒரு ஆவணமாக ஆண்டு மலர் தயாரிக்கப்பட்டு இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மலரை செனட்டர் ஜான் ஹாப்மென் வெளியிட, மலர் ஆசிரியர் குமார் மல்லிகார்ஜுனன் பெற்றுக் கொண்டார். திருக்குறளைப் பாடல்களாக இசையமைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பாடிய நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் இருந்தது.
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு,
- சரவணகுமரன்