தமிழ்த் திருவிழா 2023
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். அவற்றைக் காண வந்தோரிடம் அது குறித்துத் தமிழில் விளக்கவும் செய்தனர்.
இதையடுத்து அங்குள்ள வகுப்பறைகளில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முகத்தில் வண்ண ஓவியம் வரைதல், டாட்டூ ஒட்டுதல், மருதாணி இடுதல் எனக் குழந்தைகளைக் கவர்ந்த பல அம்சங்கள் அங்கு இருந்தன. அதன் பின்னர், வெவ்வேறு நிலைக்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இறுதியாக, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் மினசோட்டாவில் இருந்தவாறே தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தமிழியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காணொலி வாயிலாகத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் திரு. காந்தி அவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
இந்தத் தமிழ்த் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்குக் காணலாம்.
Tamil_Carnival_2023
- சரவணகுமரன