வீழும் வங்கிகள்
அண்மையில் பெரு வங்கிகள் சில நொடித்து, திவால் நிலைக்குத் தள்ளப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாகப் பங்கு வர்த்தகம், பத்திரங்கள், வீடு / மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்குப் பொருள், அனுபவமில்லாத இல்லாத மக்கள் இருப்பதைப் பாதுகாப்பாக வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும், வங்கிகளில் சேமிப்பதுண்டு. அத்தகையோரது நம்பிக்கைகளை அசைத்துள்ளது தொடர்ந்து நிகழும் வங்கிகளின் வீழ்ச்சி. அமெரிக்காவில் இதற்கு முன்பும் சில தனியார் வங்கிகள் திவாலானதுண்டு. ஆனால் ஏற்கனவே மந்தநிலை நோக்கி நகர்ந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு, தொடர் வங்கித் தோல்விகள் புதியதொரு சவாலை உண்டாக்கியுள்ளதென்பது திண்ணம்.
1800களின் தொடக்கத்தில் ரஷ்ய-ஃபிரெஞ்சு, இங்கிலாந்து-ஃப்ரெஞ்சு போர்கள், உலகளாவிய அளவில் சந்தை மாற்றங்களை உருவாக்கியது. போர் நடைபெற்ற சமயங்களில், அமெரிக்கா இரு நாடுகளுக்கும் விவசாயப் பொருட்களை வழங்கி, பலன்களைப் பெற்று வந்தது. போர் முடிந்தபிறகு அமெரிக்கத் தயாரிப்புக்களுக்கான தேவை சரிந்து, பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதனைச் சமாளிக்க, அமெரிக்க அரசாங்கம், அதிக பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டது. இது பணவீக்கத்தை அதிகரித்து, வாடிக்கையாளர்கள் வங்கிக் கடன்கள் பெறுவதைக் குறைத்தது. இதன் தொடர்ச்சியாக ‘செகண்ட் பாங்க் ஆஃப் யு.எஸ்’, மற்றைய வங்கிகளுக்குக் கொடுத்துவந்த கடனைக் குறைக்க, அனைத்து வங்கிகளும் பண சுழற்சி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டன. வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பைத் திரும்ப எடுக்க வந்தபோது, வங்கிகளால் அதனை செலுத்த முடியாமல் போக, ஏராளமான வங்கிகள் சரிந்தன. அக்காலங்களில் ‘வைப்புத் தொகை காப்பீட்டு கூட்டமைப்பு’ (Federal Deposit Insurance Corporation-FDIC) போன்ற நிறுவனங்கள் இல்லாததால், வாடிக்கையாளர்கள், தங்களது சேமிப்பை முழுதுமாக இழந்தனர். அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற முதல் தொடர் வங்கி தோல்வி இதுவே. அதன் பின்னர், ஒவ்வொரு பத்தாண்டிலும் சிற்சில வங்கிகள் சரிந்ததுண்டு. அவற்றில் பல, தனிப்பட்ட வங்கி நிர்வாகக் கோளாறால் ஏற்பட்டவை.
2008இல், ‘வாஷிங்டன் மியூச்சுவல் வங்கியின்’ (Washington Mutual Bank) தோல்வி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வங்கி எளிய மக்களுக்கு, அவர்களால் வாங்கும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்ற பின்புல ஆய்வைச் சரிவர செய்யாமல் கடன்களை அள்ளி வழங்கியது. ஏராளமான நடுத்தர மக்கள், சொந்த வீடு வாங்க கடன் பெற்றனர். 2003இல் இந்நிறுவன தலைமை செயற்பாட்டு அதிகாரி, ‘இன்னும் ஐந்தாண்டுகளில், வாஷிங்டன் மியூச்சுவல் வங்கித் தொழிலைக் கடந்து செய்த சமுதாய மேம்பாட்டை மக்கள் உணர்வர்’ என்று பேசியிருந்தார். அவர் சொன்னதற்கு நேர்மாறான பாதிப்பை, சரியாக ஐந்தாண்டில் உணர்ந்தனர். கடன் வாங்கியவர்கள், முறையாக தவணையைச் செலுத்த முடியாமல் போனதால், வாஷிங்டன் மியூச்சுவல் பெரும் பண நெருக்கடிக்கு உள்ளானது. சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்கள் பணம் கேட்டு வங்கியை நெருக்க, வங்கி மூழ்கிப்போனது. அன்றைய தேதியில் அவ்வங்கியின் சொத்து மதிப்பு $307 பில்லியன் (இன்றைய பண மதிப்பீட்டின் அளவில் $386 பில்லியன்). இதனைத் தொடர்ந்து ‘லே மேன் பிரதர்ஸ்’ (Lehman Brothers Holdings, Inc – வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் வீட்டுக் கடன் தொடர்பான பரிமாற்றங்களை ஏற்படுத்தித் தரும் மூல நிதி நிறுவனம்) நிறுவனத்தின் கணக்கு மோசடிகள் வெளிவந்து சரிந்தது. சற்றொப்ப இதே சமயத்தில், வீட்டு கடன்களை ஒழுங்கமைத்து தந்துவந்த இன்னொரு பெரு நிறுவனமான ‘பேர் ஸ்டென்ஸ்’ (Bear Stearns) நிறுவனமும் வீழ்ந்தது. இம்மூன்று பெரு நிதிநிறுவனங்கள் சரிந்ததே 2008 பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக அமைந்தன என்று ஒரு சாராரும், பொருளாதார மந்தத்தின் காரணமாகவே இந்நிறுவனங்கள் சரிந்தன என்று மற்றொரு சாராரும் சொல்லுமளவுக்கு இது கெடு சுழலாக (vicious circle) அமைந்தது. சமீபத்திய ‘சிலிகான் வேலி பேங்க்’ (Silicon Valley Bank – SVB), ‘சில்வர்கேட் பேங்க்’ (Silvergate Bank), ‘சிக்நேச்சர் பேங்க்’ (Signature Bank) ஆகிய வங்கிகளின் வீழ்ச்சி அதுபோன்றதொரு கெடு சுழல் உருவாக காரணமாகிவிடுமா என்பது இன்று எழுந்துள்ள பொருளாதாரப் பேரச்சம். இவ்வங்கிகளின் வீழ்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சிலிகான் வேலி வங்கியின் வரலாறு
சிலிக்கான் வேலி வங்கியானது 1983 ஆம் ஆண்டு, பாங்க் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் மேலாளர்களான பில் பிகர்ஸ்டாஃப் மற்றும் ராபர்ட் மெடியாரிஸ் ஆகியோரால் தொடக்க நிறுவனங்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக நிறுவப்பட்டது. அக்காலங்களில், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புதிய, சிறிய தொடக்க நிறுவனங்களுக்கான பொருளாதாரத் தேவையை பூர்த்திசெய்ய முன்வந்ததில்லை. இவ்வகைத் தொடக்க நிறுவனங்களின் வருவாய் ஈட்டும் பலம், ரிஸ்க் மேனேஜ்மண்ட் எனப்படும் ஆபத்துக்கால நிர்வாகம் ஆகியவை குறித்த தெளிவிண்மை போன்ற காரணங்களால் சராசரி வங்கிகள் அவர்களுக்குக் கடன் தர முன்வந்ததில்லை. அந்தச் சமயத்தில் SVB துணிச்சலுடன், அந்நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளைப் பொறுத்து கடன் வழங்க முன்வந்தது. அவ்வகை நிறுவனங்களிடமிருந்து வைப்புத் தொகை பெறுவது SVBயின் முக்கிய உத்தியாக இருந்தது.
‘டாட்.காம்’ தொழில்நுட்பமும், நிறுவனங்களும் அசுர வேகத்தில் வளர்ந்த காலமது. இதன் காரணமாக SVB வங்கியும் வளர்ந்து, தொடர்ந்து 21 காலாண்டுகள் பெரும் லாபத்தைச் சம்பாதித்துக் காட்டியது. பின்னர் மெதுவாக ‘ரியல் எஸ்டேட்’ துறையில் அடியெடுத்து வைத்து லேசாகக் கையைச் சுட்டுக் கொண்டது SVB. ‘டாட்.காம்’ நிறுவனங்கள் நீர்க்குமிழிகள் போல் வெடிக்கத் துவங்கிய போதும் வங்கி ஆட்டம் கண்டது. ஆனால் அதற்கு முன்னர் இந்தியா, சீனா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளில் இயங்கத் தொடங்கியிருந்ததால் 2008இல் நடந்த பொருளாதாரத் தாக்கம் SVBயை பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்த நேரத்தில் எழுந்த சிறிய தேக்கத்தை அமெரிக்க அரசாங்கம் Troubled Asset Relief Program-TARP அடிப்படையில் வழங்கிய உதவியின் மூலமாகத் தீர்த்து, நிமிர்ந்தது. (TARP திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசாங்கம், வங்கிகளின் சிக்கலுக்கு உண்டான நிலைச் சொத்துகளை(Troubled Asset) சுவிகரித்துக் கொண்டு, வங்கி செயல்பாட்டுக்கு உடனடியாகத் தேவைப்பட்ட பண உதவி அளித்தது. சில காலங்களுக்குப் பிறகு அச்சொத்துகளின் மதிப்பு உயர்ந்து, வங்கிகளின் நிதி நிலைமை மேம்படும் பட்சத்தில், வங்கிகள் அச்சொத்துகளை மீட்டுக் கொள்ளலாம்). அந்தச் சமயத்தில் SVBயின் வாடிக்கையாளராகயிருந்த சிஸ்கோ சிஸ்டம்ஸ், பே நெட்வொர்க் பிரபலமடைந்து வலுவாக வளர்ந்து வந்ததாலும், வங்கியின் வெளிநாட்டு முதலீடுகளாலும், சிஸ்கோ அரசாங்கத்தின் TARP சொத்துகளை மீட்டது. 2022 வாக்கில், $212 பில்லியன் அசையாச் சொத்து மதிப்பீட்டுடன், நாட்டின் 16ஆவது பெரு வங்கியாகத் திகழ்ந்தது SVB.
சிலிகான் வேலி வங்கியின் விழ்ச்சி
SVBயின் வீழ்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தைச் சுட்டுவது கடினம். 2018இல் தளர்த்தப்பட்ட ‘டாட்-ஃபிராங்க்’ வங்கிக் கடன் கட்டுப்பாடுகள், வங்கியின் அவசரக்கால இடர் மேலாண்மை குறைபாடுகள், ஃபெடரல் வட்டி விகித அதிகரிப்பு ஆகியவற்றின் கூட்டுக் கலவையே SVBயின் தோல்விக்கு காரணமெனலாம்.
‘டாட் பிராங்க்’ விதிமுறைகள், $50 பில்லியனுக்கும் அதிகமாக சொத்துகளைக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் / வங்கிகள் ஆகியவை ஆண்டுதோறும் ஃபெடரல் அரசால் ‘பொருளாதார அழுத்தப் பரிசோதனை’க்கு (Federal Reserve stress test) உட்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தின. 2018ஆம் ஆண்டு, இரண்டு அவைகளின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. புதிதாகத் தொழில் முனைவோருக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர, இந்த விலக்கு துணை நிற்குமென நம்பினார் அன்றைய அதிபர் டானல்ட் டிரம்ப். இதனால் பல பெரும் நிதி நிறுவனங்கள் பொருளாதார அழுத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 2018இல் $40 பில்லியனைத் தொட்டிருந்த SVBயின் தலைவர், தங்கள் நிதி மேலாண்மை குழு மிகத் துல்லியமாக செயல்பட்டு, மிக வலுவான நிதி நிலையைக் கொண்டுள்ளதால், இவ்வகைப் பரிசோதனை தங்கள் நிறுவனத்துக்குத் தேவையில்லை என்று சொல்லியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது SVBயின் மீதான மற்றொரு குற்றச்சாட்டு, தலைமை இடர்பாட்டு மேலாண்மை அதிகாரி ஒருவர் இல்லாமல் வங்கி சில மாதங்கள் இயங்கி வந்துள்ளது என்பது. ஒவ்வொரு நிதி மேலாண்மை நிறுவனங்கள் / வங்கிகளில், ‘இடர்பாடுகள் மேலாண்மை’ (Risk Management) என்றொரு துறை இயங்கிவரும். இத்துறை, வங்கி / நிதி நிறுவனங்களைக் கடந்து நிகழும் பொருளாதார மாற்றங்களை ஆய்வு செய்து, அவை எப்படி தங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக மாறக் கூடும் என்பதை நிர்ணயிக்கும் துறை. SVBயில் இந்தப் பொறுப்பிலிருந்தவர் 2022 ஏப்ரல் மாதமே விலகிவிட்டார். இந்தப் பொறுப்பில், புதிய அதிகாரி 2022 டிசம்பரில் தான் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறத்தாழ எட்டு மாதங்கள், ‘இடர்பாடுகள் மேலாண்மை துறை’ தலைவர் இல்லாமல் இயங்கி வந்ததும், SVB தகுந்த நேரத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போனது.
தொடக்கம் முதலே, தொழில்நுட்ப மூலதனம் மூலம் (Tech Venture Capital) பெரும் முதலீடுகளை ஈர்த்தது SVB. 2020இல் கோவிட் பெருந்தொற்று சமயத்தில், புதிய தொடக்க நிறுவனங்கள் கடன் நாடி வருவது மந்தமடைந்தது. ‘அறிமுக பூஜ்ஜிய வட்டி’ அடிப்படையில் (Zero percent introductory offer) கடன்களை வழங்கி வந்த SVBக்கு இந்தத் தேக்கம் புதிய சவாலாக அமைந்தது. கோவிட் காலத்தில் கடன் வாங்குவோர் குறைந்தாலும், மற்ற துறைகள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் அபாயமிருப்பதாகத் தெரிந்ததாலும், தங்கள் இருப்பிலிருந்த பணத்தை, SVB மிகவும் பாதுகாப்பான, நிலையானஆனால் குறைவான லாபம் தரும், நீண்ட காலப் பத்திரங்களில் (US Bonds) முதலீடு செய்தது.
பொதுவாகப் பத்திரங்களுக்கு ‘கூப்பான் வேல்யூ’ என்ற நிலையான வட்டி வழங்கப்படுவதுண்டு. உதாரணமாக ‘கூப்பான் வேல்யூ’ 4% என்று வைத்துக்கொண்டால், $1000 மதிப்புள்ள பத்திரத்துக்கு ஆண்டுதோறும் $40 ஊக்கத்தொகையாகக் கிடைக்கும். ‘ஃபெட் ரேட்’ எனப்படும் வட்டி விகிதம் 4% கீழே இருக்கும் வரையில் இந்தப் பத்திரத்துக்கு நல்ல வரவேற்பிருக்கும். பத்திரத்தை சந்தையில் விற்றால், $1040 வரை கிடைக்கும். அரசாங்கம் ‘ஃபெட் ரேட்’ வட்டி விகிதத்தை 4% விட அதிகமாக்கும் பட்சத்தில், பத்திரத்தின் முகப்பை விட மதிப்பு குறையும். அதாவது வங்கியில் தரப்படும் சேமிப்பு வட்டியை விட, குறைவான ஊக்கத்தொகை தரும் பத்திரத்தை வாங்க யாரும் முன் வரமாட்டார்கள் என்பதால், பத்திரத்தின் விலை குறையும்.
கோவிட்டைத் தொடர்ந்து, பணவீக்கம் பெருகியதைத் தடுக்க அரசாங்கம் மெதுமெதுவே வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டு மட்டும் 7 முறை வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் வங்கியில் கடன் பெறுவதைக் காட்டிலும், தங்களது சேமிப்பு பணத்தைச் சிறு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முனைந்தன. அவை சேமிப்பு கணக்கிலிருந்த தங்களது பணத்தை எடுக்க, எடுக்க SVBயின் கையிருப்பு வேகமாகக் கரைந்தது. இந்த நெருக்கடியே bank run எனப்படுகிறது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பெட்டகங்களில் எவ்வளவு சேமித்து வைக்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. தங்களிடம் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே ரொக்கமாக வைத்திருக்கமுடியும். அத்தியாவசியத் தேவை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், வங்கி நெருக்கடி தொடர்பான அபாயங்களைக் குறைக்க, வங்கி பெட்டகத்திலோ அல்லது மத்திய வங்கியின் கணக்கிலோ குறைந்த பட்ச பண இருப்பை (cash reserve) வங்கிகள் வைத்திருக்க வேண்டும்.
இக்கட்டான சூழல்களில், வாடிக்கையாளர்களின் பணத்தைத் திரும்பப் பெறும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, வங்கிகள் அதன் சொத்துக்களை விற்பதுண்டு. எந்தவித சொத்தாகயிருந்தாலும், அவசரமாக விற்க முயலும் போது, வழக்கத்தை விட, விலை கணிசமாகக் குறையும். இதனால் ஏற்படும் இழப்பு வாடிக்கையாளர்களுக்குத் தெரிய நேர்ந்தால், அவர்களிடையே பதட்டம், அச்சமேற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்தப் பொருளாதாரக் கோட்பாடு, அச்சுப் பிசகாமல் SVB விஷயத்தில் நடந்தது. 2022இல் வட்டி விகிதம் அதிகரிக்கத் துவங்கியதும், அதுவரை கிடைத்து வந்த தொழில்நுட்ப மூலதனம் குறையத் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து கடன் பெறுவதும் குறைந்தது. உள்வரும் பணத்தை விட வெளியேறும் பண அளவு அதிகரித்ததால் SVB தன்னிடமிருந்த சொத்துகளை, நீண்டகாலப் பத்திரங்களை, நஷ்டத்தில் விற்கத் தொடங்கியது. இந்த விஷயம் பங்குச் சந்தை நிறுவனங்களுக்குத் தெரியவர, காட்டுத் தீ போல செய்தி பரவியது. மில்லியன் கணக்கில் வங்கியில் முதலீடு செய்திருந்தவர்கள் பதட்டத்துடன், தங்கள் பணத்தை மீட்கத் துவங்கினர். வங்கியின் பணப்புழக்கம் குறைந்துவிட, வேறுவழியின்றி, பணமெடுக்க வந்தவர்களிடம் அவகாசம் கேட்டது SVB. இது நிலையை மேலும் மோசமாக்க, SVBக்கு ‘ஃபெடரல் ரிசர்வ் வங்கி’யிடம் சரணடைவதைத் தவிர வழியில்லாமல் போனது.
SVBயின் முதன்மை கட்டுப்பாளராகயிருந்த (primary regulator) சான் ஃபிரான்சிஸ்கோவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கிளை தலைவரான மைக்கேல் பார், SVBயின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை மதிப்பாய்வுக்கு தலைமையேற்றுக் கொண்டார். மார்ச் 10ஆம் தேதியன்று ‘சிலிக்கான் வேலி வங்கி’, ‘ஃபெடரல் டெபாசிட் இன்ஸுரன்ஸ்’ (Federal Deposit Insurance Corporation-FDIC) எனப்படும், நிதி காப்பீட்டு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. SVBயின் அனைத்து கணக்குகளும், சொத்துகளும் ‘சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கி (Silicon Valley Bridge Bank NA) எனும் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. SVBயின் அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய வங்கியிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டனர். FDIC இதுவரையில் வழங்கிவந்த $250,000 (கூட்டுக் கணக்குகளுக்கு $500,000) வரையிலான காப்பீட்டு வரம்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. அதாவது $250,000 என்ற அளவில் மட்டுமல்லாமல், ஒருவர் எத்தனை மில்லியன் டாலர் வங்கி கணக்கில் வைத்திருந்தாலும் அவரது முழுப் பணத்துக்கும், FDIC காப்பீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. எனவே வங்கியின் வாடிக்கையாளர்கள், பதட்டமடையாமல் இருக்கலாம். ஆனாலும், ஒரே சமயத்தில் வங்கியிலிருந்து மிகப்பெரிய தொகையை எடுப்பது, தாமதமாகலாம். உதாரணமாக, SVBயின் முன்னாள் தாய் நிறுவனமொன்று, இவ்வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த $2 பில்லியனை எடுக்க முயன்றது, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைக் குறிகள்:
கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த அதகளத்தில், நிதி நிறுவனக் கட்டுப்பாட்டாளர்களின் மெத்தனம் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு முடிவு வரை, SVB ‘ஃபெடரல் ஹோம் லோன் வங்கி’ யிடமிருந்து (Federal Home Loan Banks-FHLB) கடன் எதுவும் வாங்கவில்லை. ஆனால் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் $15 பில்லியன் அளவுக்கு FHLB கடன்களை வாங்கியிருந்தது SVB. இது நிதி கட்டுப்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணியை அடித்திருக்க வேண்டும். இது வெளிவந்த உடனே ‘ஷார்ட் செல்லர்ஸ்’ எனப்படும் குறுகிய கால முதலீட்டாளர்கள், வாய்ப்பைப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்தனர். SVBயின் 93% கணக்குகள், வழக்கமாக FDIC காப்புறுதி உத்தரவாதமளித்து வந்த $250,000க்கும் அதிகமான நிலுவை வைத்திருந்தவை. இந்த விஷயமும் கட்டுப்பாட்டாளர்களின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்க வேண்டும். மாதந்தோறும் வங்கி வெளியிடும் ‘இடர் மேலாண்மை’ அறிக்கைகளைத் தீவிரமாக ஆய்வு செய்திருந்தால், கட்டுப்பாட்டாளர்களால் வங்கியின் தோல்வி நெருங்குவதை உணர்ந்திருக்க முடியும். இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் SVB நிர்வாகத்தினர் மீதும், கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிலர், வங்கிக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட வேண்டுமெனவும் சொல்லி வருகின்றனர். ஆனால் எவ்வளவு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவை சரிவர கண்காணிக்கப்படாவிட்டால், பின்பற்றப்படாவிட்டால் எந்தவித பிரயோஜனமேதுமில்லை.
தொடர் வங்கி சரிவுகள்
சிலிக்கான் வேலி வங்கியின் சரிவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 12, 2023 அன்று, நியூயார்க்கைச் சேர்ந்த சிக்னேச்சர் வங்கியும் முடங்கியது. SVBயின் தோல்வி எழுப்பிய பதட்டத்தால், சிக்னேச்சர் வங்கி வாடிக்கையாளர்கள் இரண்டே நாட்களில் $10 பில்லியன் அளவுக்கு திரும்பப் பெற்றனர். பணப்புழக்க நெருக்கடியால் தவித்த வங்கியை FDIC மீட்டது.
சிக்னேச்சர் வங்கி
2001 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் தொடங்கப்பட்ட சிக்னேச்சர் வங்கி, அந்நகரின் ரியல் எஸ்டேட் அதிபர்கள் விரும்பி நாடும் வங்கியாக உருவானது. அடுக்குமாடி கட்டட கட்டுமான நிறுவனங்கள், நில உரிகையாளர்களுக்குத் தேவைப்படும் நிதியைக் கடனாக வழங்குவதில் நிபுணத்துவம் பெற்று விளங்கியது சிக்னேச்சர் வங்கி. இவ்வங்கியின் மொத்தக் கடனில் மூன்றில் ஒரு பங்கு ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகும். பொதுவாகப் பெரு நிதி நிறுவனங்களும், வங்கிகளும் ஒரே துறையினருக்கு இத்தகைய கடன் வெளிப்பாட்டை வைப்பதில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப், அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் போன்றோரும் சிக்னேச்சர் வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் பட்டியலில் அடங்குவர். டிரம்பின் மகள், இவாங்கா டிரம்ப், சிக்னேச்சர் வங்கியின் இயக்குநர் குழுமத்தில் ஒருவராகயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியில் கடன் வாங்கியிருந்த கட்டுமான நிறுவனங்கள் பல கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்தாமல் போக, சிக்னேச்சர் பெரும் நஷ்டத்தைக் கண்டது. ‘ஊபர்’ போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு வாடகை கார்களுக்கான வருமானம் குறைய, சிக்னேச்சர் வங்கி டாக்சி நிறுவனங்களுக்கு அளித்தக் கடன்களும், (சுமார் $120 மில்லியன் அளவுக்கு) வாராக்கடன்களாக மாறின.
2019ஆம் ஆண்டு, கிரிப்டோகரன்சி பிரபலமடைய துவங்கிய சமயத்தில் ‘சிக்னெட்’ (Signet) என்ற துணை நிறுவனத்தை தொடங்கி, ‘கிரிப்டோ’ பரிமாற்றங்களில் ஈடுபட்டது சிக்னேச்சர் வங்கி. சிக்னெட், FTX எனும் ‘கிரிப்டோ’ நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பரிமாற்றங்களை நிறைவேற்றி அதன்மூலம் மாற்றப்படும் பணத்தை சிக்னேச்சர் வங்கி கணக்கில் சேர்த்தது. இதனால் 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் வங்கியின் சொத்திருப்பு $110 பில்லியன் அளவுக்கு உயர்ந்தது. FTX ஸின் நட்பு நிறுவனமான ‘அலமடா ரிசர்ச்’ (Alameda Research) சில தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு சிக்கியவுடன், நவம்பர் 2022இல், FTX திவாலானது. அதன் தொடர் வினையாக, ‘சிக்னெட்’, ‘சிக்னேச்சர் வங்கி’ இரண்டுமே பெரும் பொருளிழப்புடன் தள்ளாடத் துவங்கின. SVBயின் தோல்வியால் பதட்டமடைந்த வாடிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பணத்தை எடுக்க முட்டி மோதிய சமயத்தில், ‘சிக்னேச்சர் வங்கி’யால், அதை நிறைவேற்ற முடியாமல் போக மத்திய ரிசர்வ் வங்கியிடம் சரணடைந்தது.
சில்வர்கேட் வங்கி
FTX திவாலானவுடன், சிக்னேச்சர் வங்கியைப் போலவே சிக்கலுக்குள்ளான இன்னொரு வங்கி, சில்வர்கேட்(Silvergate Bank). சிக்னேச்சர் வங்கியைப் போலவே ‘கிரிப்டோ’ பரிமாற்றங்களை ஜெனிசஸ் (Genesis), FTXஸின் துணையுடன் நடத்தி வந்த சில்வர்கேட் ‘கிரிப்டோ’ வர்த்தகம் சரிந்தபோது பெரும் பொருளிழப்பைச் சந்தித்தது. வங்கியிலிருந்து பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டபோது, தத்தளித்த சில்வர்கேட் வங்கி நிர்வாகத்தை FDIC தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது.
சிக்னேச்சர் வங்கி, சில்வர்கேட் வங்கிகளின் வர்த்தக நிலைப்பாடு பற்றி வங்கிகளைக் கண்காணிக்கும் FDIC க்கு, 2022ஆம் மத்தியிலேயே தனது சந்தேகங்களையும், கவலைகளையும் தெரிவித்திருந்தார் மார்க் கோஹோட்ஸ் (Marc Cohodes). ‘ஷார்ட் செல்லர்’ எனப்படும் குறுகிய முதலீடுகளில் வல்லவரான கோஹோட்ஸ், இரண்டு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதம் கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்த FDIC உடனடி நடவடிக்கையேதும் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. இப்படி ஒரு தனிப்பட்ட முதலீட்டாளருக்கு ஏற்பட்ட சந்தேகம், FDIC போன்ற கண்காணிப்பு நிறுவனத்துக்குத் தெரியாமல் போனது, அல்லது கோஹோட்ஸின் எச்சரிக்கையைப் புறந்தள்ளியது போன்றவை இன்று பெரும் கண்டனத் தாக்குதலைத் துவக்கியுள்ளது.
ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி
வங்கிகளின் வீழ்ச்சிப் பட்டியலில் சேரவிருந்த இன்னொரு வங்கி ‘ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி’ (First Republic Bank FRB). சான்ஸ்பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த FRB, SVBயை போலவே $250,000 காப்பீட்டைக் கடந்த கணக்குகளை 64 சதவிகிதமளவுக்கு வைத்திருந்தது. அதாவது வங்கியிலிருந்த 64 சதவிகித சேமிப்புக் கணக்குகள் இந்தக் காப்பீட்டு எல்லையைக் கடந்தவை. SVB வீழ்ந்தவுடன், அடுத்த நாளே வாடிக்கையாளர்கள் FRB கணக்குகளிலிருந்த தங்கள் பணத்தை எடுக்க முயன்றனர். போதுமான பணப்புழக்கம் இல்லாமல் தள்ளாடிய FRBயை வீழ்ந்துவிடாமல் தடுக்க நாட்டிலுள்ள பல வங்கிகள் பணவுதவி செய்து, FRBயைக் காப்பாற்றி வருகின்றன.
கிரெடிட் சூவீஸ் வங்கி
வங்கிகள் குறித்த பதட்டம், அமெரிக்காவுடன் நின்று விடாமல் ஐரோப்பிய நாடுகளிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மிகப் புகழ் பெற்ற, சுவிட்சர்லாந்தைச் சார்ந்த நிதிநிறுவன வங்கியான ‘கிரெடிட் சூவீஸ் ’ (Credit Suisse) பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள கிரெடிட் சூவீஸ் வங்கி வர்த்தகத்தைக் கடந்து, உலகின் பல வங்கிகளுக்கு நிதி பரிமாற்றம், நிதி மேலாண்மை சேவைகளை அளித்து வருகிறது. சில வருடங்களாக பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்குள் உழன்று வந்த இவ்வங்கி வீழ்ந்தால், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்வங்கியைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சுவிட்சர்லாந்தின் UBS உள்ளிட்ட பல பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ‘கிரெடிட் சூவீஸு’ க்கு நிதியுதவி வழங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையளித்து வருகின்றன.
வங்கி ஒழுங்கமைப்பு
மார்ச் 10 ஆம் தேதி SVBயின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆறே நாட்களில் நான்கு பெரிய வங்கிகள் சடசடவென சரிந்தது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களிடமும் பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நியாயமான, உளவியல் ரீதியிலான இந்த அச்சம் தொடர்ந்து வங்கிகள் சரிவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. பணச்சுழற்சி நெருக்கடிக்குள் சிக்கும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் அழுத்தத்துக்குத் தாளமுடியாமல் நொடித்து போகின்றன. அதிலும் FDICயின் காப்பீட்டு வரம்பைக் கடந்து, பெரும் நிலுவைகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை மீட்க ஒட்டுமொத்தமாக வங்கியை அணுகும் போது அவை நிலைதடுமாறுவதுண்டு. வாடிக்கையாளர்களின் பயத்தை விலக்க, வீழும் வங்கிகளுக்குக் காப்பீட்டு வரம்பைக் கடந்து பாதுகாப்பளிக்கும் FDIC அனைத்து வங்கிகளுக்கும், காப்பீட்டு வரம்பை உயர்த்தவேண்டுமெனும் கோரிக்கை வலுத்து வருகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் மத்திய அரசின் வட்டி விகிதமும் வங்கி வர்த்தகம் பாதிப்புக்குள்ளாவதற்கு இன்னொரு காரணமாகும். இருபுறமும் கூரான வாள் போன்றது வட்டிவிகிதம் – குறைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும்; அதிகமானால் வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். மிகக் கவனத்துடன் வட்டிவிகிதத்தைக் கையாளவேண்டிய சவால் அரசுக்கு எழுந்துள்ளது. SVB வீழ்ந்தவுடன், துரித கதியில் வட்டி விகிதத்தைக் குறைத்தது, ஃபெடரல் ரிசர்வ வங்கி. கிட்டத்தட்ட ஒரு வாரம், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையளிக்க குறைக்கப்பட்ட வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுவிட்டது.
அடுத்து என்ன?
அடுத்தடுத்து நடைபெறும் வங்கிகளின் சரிவு, ஏற்கனவே பயமுறுத்தி வந்த ‘ பொருளாதார மந்தநிலையை’ (economic recession) உறுதிபடுத்துமா என்ற கேள்விக்கு, வல்லுனர்கள், ‘ஆம்’ என்ற பதிலைத் தான் சொல்கின்றனர். ஆனாலும் இது 2008ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்றளவுக்கு இருக்குமா என்ற கேள்விக்கு ‘இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்’ எனும் பதில் தான் கிடைக்கிறது.
புகழ்பெற்ற வங்கி, நிதி மேலாண்மை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸின் (Goldman Sachs), அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் மந்தநிலைக்குள் நுழைவதற்கு 35% வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது, இது வங்கிகளின் வீழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு 25% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது FDIC எடுத்துவரும் மாற்றங்கள், மேலும் பல வங்கிகளின் செயற்பாட்டைப் பாதிக்கலாம். “இந்தக் கட்டத்தில் மக்கள் பதட்டப்பட்டு எடுக்கும் முடிவுகள் வங்கி அமைப்புகளுக்கு மேலும் அழுத்தத்தை உருவாக்கும்; இது ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உதவுவதாக அமையாது” என்கிறார்கள் நிதி வல்லுனர்கள். பாஸ்டன் பல்கலையின் அறிவியல் கலைப் பிரிவு துணை பேராசிரியர் ஆடம் குரேன், “இப்போதைய உடனடி தேவை தீயை அணைப்பது. அதற்குப் பின் இந்த வீழ்ச்சிகளுக்கான காரணம் அலசப்படவேண்டும். அரசு பெரு வங்கிகளை எப்படியும் காப்பாற்றிவிடும். ஆனால் இந்தப் பதட்டத்துக்கு இரையாகும் சிறிய வங்கிகளின் நிலையில் கவனம் தேவை. FDIC, உச்சவரம்பின்றி காப்பீடு உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டும்” என்கிறார்.
‘மாதத்தின் முதல் செலவு, சேமிப்பு’ என்ற கொள்கையுடன் குடும்ப நலனுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் சேமிக்கும், ஏனைய முதலீடுகள் குறித்து அனுபவமின்றி, வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த சாமான்ய மனிதர்கள் இன்று மிகவும் அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதிபர் ஜோ பைடன், ‘தொடர் வங்கிகளின் வீழ்ச்சி குறித்து மக்கள் பதட்டமடையத் தேவையில்லை. வங்கிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் அதே நேரத்தில் எந்த ஒரு மனிதரும், வேண்டிய நேரத்தில் வழக்கமான வங்கிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். அவர்களது கணக்கிலிருக்கும் கடைசி செண்டுக்குக் கூட ரிசர்வ் வங்கி பொறுப்பேற்கும்’ என்று உறுதியளித்தார்.
‘டான் குயிஹோட்டே’ (Don Quixote) நாவலில் வரும் புகழ்பெற்ற வாக்கியமான ‘அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்’ என்ற சொற்றொடரை, முதலீட்டுப் பாடங்களின் அரிச்சுவடியாகச் சொல்வார்கள். இந்த அறிவுரையைத் தனி முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல்,, வங்கி நிர்வாகத்தினரும் அவற்றைக் கண்காணிக்கும் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு நிறுவனத்தினரும் உணரவேண்டிய தருணம் இது.
-ரவிக்குமார்-