மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா 2023
மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியின் 15வது ஆண்டு விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் நகரில் இருக்கும் ஈசன்ஹவர் சமூக அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடனம், நாடகம், இசை, பட்டிமன்றம், சிலம்பம் எனப் பல்வேறு தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் மாலை 7 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், சிறுவர்-சிறுமிகளின் நடனங்கள், பாடல்கள், விடுகதை கூறுதல், நாடகங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றப் பேச்சு, சிலம்பம் சுற்றுதல், பறை இசைத்தல் எனப் பல்வேறு திறன்களைக் காண முடிந்தது. தமிழ்ப்பள்ளியில் இணையம் மூலம் பயிலும் மாணவர்களும், தங்கள் நிகழ்ச்சிகளைக் காணொலி வடிவில் வழங்கியிருந்தனர். இந்த நிகழ்ச்சிகளைத் தமிழ்ப்பள்ளியின் உயர்நிலை மாணவர்கள் மேடையில் தொகுத்து அளித்தனர்.
கிட்டத்தட்ட 300 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மேடையேறி பங்களித்த இந்த விழாவில், மினசோட்டா கல்வித் துறையில் (Minnesota Department of Education) உலக மொழி கல்வி நிபுணராகப் பணியாற்றும் திருமிகு. அயூமி ஸ்டாக்மென் (Ayumi Stockman) அவர்கள் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார். முன்னதாக மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சதுரங்கப் போட்டி, ஓவியப் போட்டி, தமிழ்த் தேனீ உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் அயூமி அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி தனது வாழ்த்துகளைக் கூறினார். கடந்தாண்டு இருமொழி முத்திரை (Bilingual Seal) பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கும் அவர்களது சேவையைப் பாராட்டி சான்றிதழ்களும், பரிசு பொருட்களும் வழங்கினார். ஜனாதிபதியின் தன்னார்வலர் சேவை விருது (President’s Volunteer Service Award) பெற்றவர்களுக்கு அதற்கான பதக்கத்தை அணிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்ப்பள்ளியின் நிதிநிலை அறிக்கை, பொதுவான அறிவிப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் தகவல்கள் இவ்விழாவில் பகிரப்பட்டன. மூன்றாண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் பள்ளி ஆண்டு விழா என்பதால், மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் ஆர்வத்துடன், மகிழ்வுடன் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.
- சரவணகுமரன் –