அமெரிக்காவில் ஒரு ஆம்ஸ்டர்டாம்
பெல்லா, ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இங்குச் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள். மூர்த்திச் சிறிதென்றாலும் கீர்த்திப் பெரிது என்பார்களே, அது போல் இது சிறு ஊர் என்றாலும் இந்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு வரலாறு உள்ளது.
1840களில் நெதர்லாந்தில் மத வழிபாடு சார்ந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு இனக்குழுவிற்குத் தேவாலயங்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் காரணமாக, அந்த டச்சு மக்கள் அங்கிருந்து கப்பலில் கிளம்பி அமெரிக்காவிற்கு வந்தனர். பால்டிமோர், செயிண்ட் லூயிஸ் என ஒவ்வொரு அமெரிக்க நகரங்களாக அலைந்து, தங்களுக்கான ஒரு புது இருப்பிடத்தைத் தேடினார்கள். இறுதியில் 1847 இல் அவர்கள் 800 பேர் ஐயோவா மாநிலத்தில் இப்போது பெல்லா என்றழைக்கப்படும் இந்த ஊரில் வந்து குடியமர்ந்தனர்.
இடம் புதிது என்றாலும் தங்களது டச்சுப் பாரம்பரியத்தை அவர்கள் கைவிடவில்லை. கடும் உழைப்பாளிகளான இவர்களது உழைப்பில் இந்த நகரம் வளர்ந்தது. டச்சுக் கட்டிடக்கலையில் வீடுகளைக் கட்டினர். டுலிப் / துலிசல் என்னும் அழகிய பூக்களை நகரெங்கும் வளர்த்தனர். ஒவ்வொரு மே மாதமும் முதல் வாரத்தில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் டுலிப் டைம் (Tulip Time) என்னும் விழா எடுத்து தங்களது பாரம்பரியத்தை மீட்டெடுத்து கொள்கிறார்கள்.
மின்னியாபோலிஸில் இருந்து 4 மணி நேர பயணத் தொலைவில் இந்தப் பெல்லா நகரம் உள்ளது. தலைப்பில் குறிப்பிட்டதைப் போல ஆம்ஸ்டர்டாம் என்று நினைத்து பெரும் நகரத்தை எதிர்பார்த்து செல்கிறீர்கள் என்றால் ஏமாற்றம் அடைவீர்கள். ஆம்ஸ்டர்டாமின் அழகிய சிறு மினியேச்சர் எனலாம். இந்த விழாவைப் பார்க்க, ஐயோவா மட்டுமில்லாமல் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குவிவதைக் காண முடிகிறது. ஊரெங்கும் பல வகைகளில், பல வண்ணங்களில் அழகழகான துலிசல் பூக்கள் மலர்ந்து குலுங்குகின்றன.
மூன்று நாட்களுக்கு அட்டவணை போட்டு ஆட்டம், பாட்டம், ஊர்வலம் என்று நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். டச்சு வகை உணவுகள், கைவினைப் பொருட்கள், பூச்செடிகள் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கின்றன். அக்கம்பக்கம் ஊர்களில் இருக்கும் தங்குமிடங்கள் எல்லாம் இந்த விழா நடக்கும் வாரத்தில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுவிடுகின்றன. போவது என்று முடிவு செய்துவிட்டால், முன்பே திட்டமிட்டுவிடுங்கள். கண்டிப்பாக ஒருமுறை குடும்பத்துடன் சென்று வரலாம். டச்சு மக்கள் பழகுவதற்கு இனிமையாக இருக்கிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு,
https://en.wikipedia.org/wiki/Pella,_Iowa
https://www.pellahistorical.org/historyofpella
- சரவணகுமரன் –