‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டுக்கான விழா, நான் வசிக்கும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகரில், மின்னசோட்டா தமிழ்ச் சங்கமும், தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து மிகவும் சிறப்பாக நடத்தியிருந்தன.
கோவிட் பெருந் தொற்றுக்குப் பின் கடந்த வருடம் நியூ யார்க் நகரில் நடந்த நிகழ்வில் பங்கெடுக்காத நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன். பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலால அமெரிக்காவில் வாழ்கின்றபோதும் கலிபோர்னியா செல்வது இதுவே முதல் முறை என்பதால் விழா நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகள், மற்றும் சில பல விசாரணைகளுக்காக விழாக் குழுவினருடன் முகநூல் ஊடாகவும் மின்னஞ்சல் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன், விழா முடிந்து நாங்கள் மின்னசோட்டா திரும்பிவிட்டோம் ஆனால், இன்றுவரை அவர்களிடம் இருந்து பதிலேதுமில்லை என்ற மனவருத்தம் இருந்தாலும் எங்கள் குழந்தைகள் உட்பட நாங்கள் விழாவில் பங்கெடுத்தமை மனதுக்கு மகிழ்வாக அமைந்தது.
விழாவுக்கு முன்னதாக இரண்டு நாட்கள் பசிபிக் குடா பகுதியான சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் மகிந்திருந்தோம். மிகவும் இதமான 65°F க்கு குறைவான வெப்பநிலை, கடல் காற்று, கோல்டன் கேட் மேம்பாலம் என்று எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து சுமார் 95 மைல் தொலைவில், 1.5 மணிநேர மகிழுந்து பயண தூரத்தில் இருக்கும் சாக்ரமெண்டோ நகருக்குச் சென்ற எமக்கு 107°F வெப்பநிலை பெரும் சவாலாக அமைந்தது.
ஜூன் 30ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலையில் சில தொடக்க நிகழ்வுகள் கூட்டங்கள் நடந்தாலும் மாலை 5 மணிக்குப் பின்னர் நடந்த நட்சத்திர இரவுணவுக்குப் பின்னார்தான் நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின. நட்சத்திர இரவு மங்கள இசை, வரவேற்புரை, பேரவைத் தலைவர் உரை, சேர்ந்திசை, நட்சத்திர இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அன்றைய இரவு சாக்ரமெண்டோ மாநாட்டு மண்டபம் மற்றும் சாக்ரமெண்டோ மாநாட்டு கலையரங்கம் விழாக்கோலம் கண்டது. அதன் பின்னர் வந்த இரண்டு நாட்களும் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஜூலை 1 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8:30 க்கு தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்கா நாட்டுப்பண்ணுடன் தொடங்கி, அதன் பின் இசை வடிவில் திருக்குறள், குத்து விளக்கேற்றல், வரவேற்பு நிகழ்ச்சி, தமிழ் இசை, சிறப்பு விருந்தினர் நேரம், மரபுக் கலை நிகழ்ச்சி, என்று எண்ணற்ற பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒரே நேரத்தில் பலவாகவும் நடந்தேறின.
ஜூலை 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் நாள் நிகழ்வுகள், முன்னைய நாளைப் போலவே காலை 8:30 க்கு தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்கா நாட்டுப்பண் ணுடன் தொடங்கி, தமிழ் ஆய்வரங்கம், சிறப்பு பட்டிமன்றம், இலக்கிய வினா விடை, உலகத் தமிழ் நேரம், பாட்டுக்குப் பாட்டு, மெல்லிசை, நன்றியுரை என்று மேலும் பல நிகழ்வுகளைத் தாங்கி நிறைவுக்கு வந்தது.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் என விழாவில் பங்கெடுத்திருந்தமை மனதுக்கு மகிழ்வாக இருந்தது. அத்தனை குழந்தைகளும் அழகிய தமிழில் ஆங்கிலம் கலக்காமல் அசத்தலாக பேசி, கவிதை படித்து, பாடி, ஆடி மகிந்த தருணம் பார்க்க ஆயிரம் கண் வேண்டும். இந்த விழாவில் எங்கள் மகன் உட்பட பல குழந்தைகள் பரிசில்களை பெற்று மகிந்தனர். பரிசில்களைத் தாண்டி, குழந்தைகள் மனம் மகிழ்ந்து தமிழை தம் வாயில் உச்சரிக்கும் அழகே தனி! தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொன்னோர் எல்லோரும் வரிசையில் வாருங்கள், வந்து பாருங்கள் என்பது போல அவர்களின் தமிழ் தேனீ, குறள் தேனீ, தமிழ் கூறும் தலைமுறை உட்பட அத்தனை நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன.
இந்த இடத்தில், தன்னார்வ தொண்டர்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது. வெயில் உக்கிரமாக இருந்தாலும் 107°F வெயிலில் கூட மக்கள் வெள்ளம் அலைமோதி அறுசுவை உணவை உண்டு மகிழ தன்னார்வ தொண்டர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும் மிகவும் சிறப்பாகத் தம் பணியைச் செய்தனர்.
இதற்கிடையில். நாங்கள் தங்கியிருந்த அதே விடுதியில்தான் தமிழகத்தில் இருந்து வந்த பிரபலங்கள் பலரும் தங்கியிருந்தனர், அதில் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஒருவரும் உள்ளடக்கம். நாங்கள் விடுதிக்கு வெளியில் செல்லும் போது, விடுதிக்கு உள்ளே வர வெயிலில் தவித்துக் கொண்டிருந்த அவருக்கு, பாவம் பார்த்து கதவைத் திறந்து விட்டேன், அவர் என்ன நினைத்தாரோ உள்ளே வந்ததும் வேகமாகச் சென்று மறைந்து விட்டார். எனக்கோ, பாவம் பார்த்து கதவைத் திறந்தது ஒரு குற்றமா என்பதுபோல ஆகிவிட்டது.
தமிழகம், ஈழம், மலேசியா, கனடா, மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இருந்து விழாவுக்கு வந்திருந்த பல இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியப் பேச்சாளர்களுடன் உரையாடும் வரம் பெற்றேன். இன்னும் பலரை தொலைவில் கண்டும், அருகில் சென்று உரையாட முடியாமல் மனவருத்தத்துடன் திரும்பினேன். உலகின் பல பகுதிகளில் இருந்து எண்ணற்ற இலக்கியவாதிகள் கலந்து கொண்ட போதும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட “உலகத் தமிழ் நேரம்” ஒரு மணித்தியாலத்துக்கும் குறைவாக இருந்தமை வருத்தம் தருகிறது. இனி வரும் காலங்களில், விழா ஒருங்கமைப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விழாக் குழுவினரால் அழைக்கப்பட்டு, ஈழத்தில் இருந்து விழாவுக்கு வர முனைந்து இரண்டு தடவைகள் விசா மறுப்புக்கு உள்ளான ஈழ எழுத்தாளர் உட்பட, பல எழுத்தாளர்களுக்கான தடைக் கற்களாக எவை இருந்தன?, அவற்றை வரும் காலங்களில் எவ்வாறு சீர் செய்யலாம்? என்பது தொடர்பாகவும் ஆராய வேண்டும்.
நிறைவாக, மனதுக்கு மகிழ்வு தந்த சாக்ரமெண்டோ ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழாவின் மூன்று நாட்கள், மிகவும் சிறந்த தமிழர் திருவிழாவாக அமைந்தது என்று கூறி, அடுத்த ஆண்டு டெக்சாஸ் சென்ட் அந்தோனியோ நகரில் நடைபெற உள்ள ‘ஃபெட்னா 2024’ – தமிழர் திருவிழா இதைவிடவும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விடைபெறுகிறேன்.
-தியா காண்டீபன்-
அருமையான கட்டுரை, காண்டீபன். வாழ்த்துகள்.