நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்
மினசோட்டாவைச் சார்ந்த மாணவரான ஜெர்விஸ் ரூவின் பெஞ்சமின், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா (NASA) தொகுத்தளிக்கும் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்யும் கோடைக்கால பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நாசா, டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் (ஆஸ்டின்) இணைந்து நடத்தும் ‘புவி மற்றும் விண்ணியல் துறையில் மாணவர் மேம்பாடு’ (Student Enhancement in Earth and Space Science (SEES)) நடத்தும் விசேடப் பயிற்சியாகும்.
இப்பயிற்சியில், செயற்கைகோள் / சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா பெறும் தரவுகளை, மாணவர்கள் நாசாவின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து ஆய்வு செய்வார்கள். செவ்வாய் கிரகம், சந்திர மண்டலம், புவியியல் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படும். நாசா நிதியுதவியுடன், தேசிய அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி திட்டத்துக்கு மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் திறன்களை ஊக்குவிக்கும் இந்தப் பயிற்சி ஆஸ்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியாகும். 95 பயிற்சியர் இடங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
பயிற்சிக்குத் தேர்வு பெற்றோர் முதல் சில வாரங்களுக்கு, தங்களின் பயிற்றுநரோடு இணைய வகுப்புகளில் இடம்பெறுவார்கள். பின்னர் அவர்கள் ஜூலை 8ஆம் தேதி முதல், ஆஸ்டினில், டெக்சாஸ் பல்கலையில் நேரடிப் பயிற்சியில் இடம்பெறுவர்.
மனித உடலமைப்பு போலவே, பூமியின் பல்வேறு கூறுகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதன் வளிமண்டலம், லித்தோஸ்பியர், ஹைட்ரோஸ்பியர், கிரையோஸ்பியர் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவை சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சியின் நோக்கம், மனித இனத்தால் தூண்டப்படும் நிகழ்வுகள் எவ்வாறு காலநிலை, வானிலை மாற்றங்களை, குறிப்பாக புவி வெப்ப பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும், அவற்றுக்கான முன்னறிவிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த புரிதலை வளர்ப்பதாகும்.
இந்த தேசிய அளவிலான போட்டி மற்றும் மாணவர்களுக்கான கல்விப் பயிற்சியானது டெக்சாஸ் பல்கலைக்கழகத்தால் நாசாவின் உதவியுடன் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி குறித்த மேலதிக விவரம் வேண்டுவோர் baguio@csr.utexas.edu எனும் இணைய முகவரி அல்லது 512-471-6922 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தாண்டின் பயிற்சிக்குத் தேர்வு பெற்றுள்ள ஜெர்வின் ரூவின் பெஞ்சமினுக்கு, பனிப்பூக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.