\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக மக்களின் பார்வையை, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் நோக்கித் திருப்பியது. அது வரையிலும், மணிப்பூர்  பிரச்சனை குறித்து ஆங்காங்கே சின்னச் சின்னதாய் வந்த செய்திகள் ஈர்க்காத கவனத்தை, 26 நொடிகள் ஓடிய அந்தக் காணொளி ஈர்த்தது மட்டுமல்லாமல், மனித நாகரிகம், பரிணாமம், கலாச்சாரம் போன்ற சொற்கள் உண்மையில் அர்த்தமற்ற, அலங்காரச் சொற்கள் தானா என்ற பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பல காலங்களாகவே, மணிப்பூரில், பெண்கள் பொது வாழ்க்கையிலும் போராட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில், ஆண்கள் போர்க்களங்களுக்குச் சென்றுவிட, சமூக இயக்கத்துக்காக, விவசாயத்தில் இறங்கிய பெண்கள், விளைப்பொருட்களை விற்க, ‘இமா கெய்தல்’ என்று, பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் சந்தையை உருவாக்கி இன்று வரை அப்படியே நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷார் ஆண்ட சமயத்தில் கூட ‘நூபி லால்’ எனும் பெண்கள் போர்ப்படை களம் கண்டதுண்டு. இருப்பினும், சமூகத்தாரால் மணிப்பூர் பெண்கள், மாநிலத்தின் ஒரு சொத்தாகவே பார்க்கப்படுகிறார்கள். ‘மணிப்பூரின் எந்த மூலையில், எந்தப் பிரச்சனை தோன்றினாலும், முதலாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படுவது, பெண்கள் தான்’ என்கிறார் ஐரோம் சர்மிளா. (மணிப்பூரில் 1958ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை’ (Armed Forces Special Powers Act) விலக்கக் கோரி 16 ஆண்டுகள் (நவம்பர் 2000 முதல் ஆகஸ்ட் 2016 வரை) உண்ணாவிரதமிருந்து சாதித்த இரும்புப் பெண்மணி இவர்).

மற்ற போராட்டங்களைப் போலவே, பழங்குடியினர் (குக்கி / நாகா சமூகத்தினர்) மற்றும் மேத்தி சமூகத்தினரிடையே எழுந்த மோதலில், போராட்டக்காரர்கள்  முதலில் தாக்கத் தொடங்கியது பெண்களைத்தான். ‘ஒரு ஆண் படித்தால் குடும்பம் வளரும்; ஒரு பெண் படித்தால் சமுதாயம் வளரும்’ எனச் சொல்வதைப் போல ‘ஒரு பெண்ணை அழித்தால் சமுதாயத்தை அழித்து விடலாம்’ என்று மணிப்பூர் ஆண்கள் நம்புவதாகக் தோன்றுகிறது.

மே மாதம் தொடங்கிய இப்போராட்டதில், இனப் பகைமையைத் தாண்டிய குரூரம் வெளிப்பட்டிருக்கிறது. போராட்டம் துவங்கிய நாளில் (மே 3ஆம் நாள்) இரு தரப்பிலும் இடப்பெயர்வு நிகழ்ந்திருக்கிறது. அச்சமயத்தில் சமவெளிப் பகுதிகளிலிருந்த பழங்குடிப் பெண்களை மேத்தியினப் பெண்கள் பாதுகாத்து அனுப்பிவைத்துள்ளனர். அதுபோலவே பழங்குடியினர் பகுதியிலிருந்த மேத்தியினப் பெண்களை, குக்கி / நாகாப் பெண்கள் பாதுகாத்துள்ளனர். அதே மே 3ஆம் நாள், மத, இனவெறி கொண்ட நபரால் சமூக ஊடகங்களில் புகைப்படத்தோடு பகிரப்பட்ட ஒரேயொரு பொய்ச் செய்தி, தீயாய் பரவி, சகோதரத்துவத்தை, சிநேகத்தை, ஒட்டுமொத்த மனித இயல்பை உடைத்தெறிந்து, பெரிய பிரளயத்தை உண்டாக்கிவிட்டது என்பதை நம்பமுடிகிறதா? அச்செய்தியில், முகம் சிதைந்த நிலையில், பிணப்பையில் அடைக்கப்பட்ட  ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘பார்த்தீர்களா? மருத்துவம் படித்து வரும் ஒரு மேத்தியனப் பெண்ணை, பழங்குடியினர் எப்படி வண்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்ற வாசகம் பகிரப்பட்டிருந்தது.  உண்மையில் இப்புகைப்படம், டெல்லியில் 2022 ஆம் ஆண்டு, கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் படம். இந்தச் சிறிய பொய்த் தகவல், மொத்த மாநிலத்தையே புரட்டிப் போட்ட வன்முறைக்குத் தீப்பொறியாக அமைந்தது.

இப்பொய்ச் செய்தியால் வலுப்பெற்ற போராட்டத்தில் ஆண்களின் வக்கிரம் தலைவிரித்தாட துவங்கியது. அதுகாலம் வரை சகோதரனாய் வலம் வந்த எதிர்தரப்பு ஆண்கள், பெண்களை நிர்வாணப்படுத்தி, வண்புணர்வு செய்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. மே 4 ஆம் தேதி, மூன்று பெண்களை ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சீரழித்த சம்பவம் அதில் ஒரு சின்ன மாதிரித் துளி மட்டுமே. இன, மதவெறி மனிதர்களை எப்படி வன்மம் கொண்ட மிருகமாக மாற்றி விடுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  பெண்களின் உடல், போர்க்களப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுவது போராட்டக்காரர்களின் கோழைத்தனத்தைப் பிரதிபலிப்பதாக மட்டுமேயுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இச்சம்பவம் குறித்த அரசின் மெத்தனம் இவ்வகைப் போராட்டக்காரர்களை ஊக்குவித்ததாகவே தெரிகிறது. குறிப்பாக இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபின்பு கூட, மார்ச் 18ஆம் நாள் ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ என்ற அடிப்படையில் முதல் தகவலறிக்கை (Zero First Investigation Report-FIR)  பதியப்பட்டுள்ளது. இக்காணொளி வெளியான ஜூலை 19 வரை, புகார் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர், நாங்கள் போராட்டக்காரர்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது, காவலர்கள் எங்களை மீட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் சூழ்ந்தபோது, போலிசார் எங்களை அங்கேயே விட்டுவிட்டு  சென்றுவிட்டனர் என்று கூறியது அதிகாரிகளும் கொடுஞ்செயலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனும் பேரிடியை இறக்கியது . பாதிக்கப்பட்ட 21 வயதுப் பெண், தன் தந்தை, சகோதரன் கண் முன்னரே தான் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானதாகவும், தடுக்க முயன்ற அவர்களை, போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அவர்களது உடலைப் பிணவறைக்கு அனுப்பிய போலிசார், பாலியல் வன்முறை நடந்தது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்வது அப்பட்டமான பொய் என்றும் பதிந்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே கார் செர்விஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றிய மேலும் இரு குக்கிப் பெண்கள், ஒரு அறையில் அடைக்கப்பட்டு, குறைந்தது ஆறு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எஃப்.ஐ.ஆர் பதியப்பட்ட தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.  இவர்களது சடலங்கள் அருகிலிருந்த இடத்தில் மீட்கப்பட்டாலும், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களில், 6000க்கும் அதிகமான முதல் தகவலறிக்கை பதியப்பட்டுள்ளன; பலர் கொல்லப்பட்டுள்ளனர்; சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்; ஏராளமான பொருட் சேதம் உண்டாகியுள்ளது; இதில் எவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று மணிப்பூர் மாநில முதல்வர் பேசியுள்ளது அவரது கையாலாகாதனத்தின் வெளிப்பாடாகும். ‘நான் இவற்றிற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவெடுத்தபோது, உங்களைத் தவிர வேறு யாரும் எங்களைக் காப்பாற்ற முடியாதென, அங்கிருந்த மக்கள் ராஜினாமா கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டார்கள்’ என்று அரசியல் நாடகம் நடத்திவருகிறார் இவர்.

கொலை, தீ வைப்பு, பாலியல் வன்கொடுமை, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தெரியவந்த பின்னரும், இந்தியப் பிரதமர் இதைப் பற்றி பேசாதது உலகெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. “மனிப்பூர் வன்முறையில் 100க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்; பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் யாரும் கலவர இடங்களுக்குச் செல்லாதவாறு துன்புறுத்தப்படுகின்றனர்; சிறுபான்மையினரை ஒடுக்கும், பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கை பரவிவருகிறது. இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் செய்யவேண்டும்” என்ற கண்டனத் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பதிலடியாக “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை ஏற்க முடியாது” என்று சொல்லியிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.

இந்தக் கானொளி சமூக ஊடகங்களில் வெளிவராத வரையில், மணிப்பூர் பற்றி பேசாத இந்தியப் பிரதமர், நாடாளுமன்றத்துக்கு வெளியே, பத்திரிக்கையாளர் சந்திப்பில், இதர விடயங்களைப் பற்றி பேசும் போது, மணிப்பூர் விவகாரம் குறித்து 30 வினாடிகள் உரையாற்றியுள்ளார். “இப்போது வெளியாகியிருக்கும் மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரிக சமூகத்துக்கும் அவமானகரமானது. என் இதயம் வேதனையாலும், கோபத்தாலும் நிரம்பியுள்ளது.  மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. சட்டம் அதன் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கும். சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அது ராஜஸ்தான், சண்டிகர் எதுவாகயிருந்தாலும் சரி. எந்தவொரு குற்றவாளியும் தப்பிக்க முடியாதென என் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்கப்படாது” என்று பேசினார் பிரதமர்.

எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற அவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பேசவேண்டும் என வற்புறுத்தி வருகிறார்கள். ஆளும் கட்சியினர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர், குறுகிய கால அமர்வில் மட்டுமே பேசுவார் என்று வாதிட, பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கிப் போனது. மே மாதயிறுதியில், 3 நாள் பயணமாக மணிப்பூர் சென்றிருந்த உள்துறை அமைச்சருக்கு, அங்கு நடந்த பாலியல் சம்பவங்கள், உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் பற்றிய தகவல் தரப்படவில்லையா; அல்லது அவர் மறைத்து விட்டாரா என்று கொதிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

மாநில முதல்வர், பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதால், பிரதமர் தங்களுக்கு நியாயமானதொரு முடிவை அல்லது குறைந்தபட்சம் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்வார் என்று எதிர்பார்த்திருந்த மணிப்பூர் மக்களுக்கு பிரதமரின் 30 நொடி உரை ஏமாற்றமே தந்தது. மணிப்பூர் பிரச்சனை, அந்த பெண்களின் நிர்வாண ஊர்வலம், பாலியல் வண்கொடுமை மட்டுமல்ல; நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்; அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது; மறுநாள் உயிருடன் இருப்போமா, குடும்பத்தினரைப் பார்ப்போமா என்று ஆயிரக்கணக்கானோர் அச்சத்துடன் தவித்து வருகின்றனர். இவை பற்றி பிரதமர் எந்த வாக்குறுதியும் தராமல், எந்தப் பாதுகாப்பு  நடவடிக்கையையும் அறிவிக்காமல் தவிர்த்தது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

மேத்தி சமூகத்தைச் சேர்ந்த, ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில், “மேத்தி மக்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்களே இறங்குவோம். குக்கி/நாகா மக்கள் மணிப்பூரில் வாடகைதாரர்கள் மட்டுமே; அவர்கள் நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது; திரும்பிப் போகச் சொல்லுங்கள். மணிப்பூரில் குக்கி இனத்தை வேறோடு அழிப்போம். உள்நாட்டுப் போர் வெடிக்கும். நாடு இதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்” என்ற வெளிப்படையான அச்சுறுத்தல் கொடுத்துள்ளார். இவரை ஆளும்கட்சி கண்டிக்கவோ, தண்டிக்கவோயில்லை என்பது, எரிந்துகொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறது.

பணம், புகழ், பதவி ஆசைக்காக அரசியல்வாதிகள், தலைவர்கள் இனவெறி, மதவெறியைத் தூண்டிவிடும் வகையில், ஒருதலைப் பட்ச நடவடிக்கைகள் எடுப்பதும், அல்லது இவ்வெறிச் செயல்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும், சிறு உயிர்ப்புடன், பொது மக்களுக்குத் துணை நிற்கும் நீதித்துறையைச் சீண்டியுள்ளது. இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தக் காணொளி வெளியான மறுநாள் (ஜூலை 20), “மணிப்பூர் சம்பவம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான தோல்வி; எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடுகிறேன். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கத் தள்ளப்படும்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நடந்த வழக்கில், அரசு வக்கீல் ஒருவர், இது போன்ற பாலியல் சம்பவங்கள், ராஜஸ்தான், சண்டிகர், மேற்கு வங்க மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது என்று வாதிட்டபோது, சீற்றமடைந்த தலைமை நீதிபதி “ராஜஸ்தான், சண்டிகரில் நடந்தவை மற்றும் நிர்பயா பாலியல் கொடுமை ஆகியவை தனிச் சம்பவங்கள்; மணிப்பூரில் நடந்துள்ளது அமைப்பு ரீதியான வன்முறை; நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அனைத்துப் பெண்களையும் காப்பாற்று அல்லது எந்தப் பெண்ணையும் காப்பாற்றாதே என்று சொல்கிறீர்களா? மே மாதம் தொடங்கி அங்கு சட்டத்தின் ஆட்சியே இல்லை; காவல்துறை திறனற்று போயுள்ளது; முதல் தகவலறிக்கைக் கூட முறையாகப் பதிவு செய்யமுடியாத அளவுக்கு நிர்வாகம் சீரழிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், போலிசார்தான் தங்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போலிசார் கைது செய்யப்பட்டார்களா? அங்கிருக்கும் டி.ஜி.பி என்ன செய்துக் கொண்டிருந்தார்? அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மக்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் அமைதியை வெறுக்கிறார்கள். இருதரப்பினரும் அடித்துக் கொண்டு அழியட்டும் என்று அதிகார மையம் கைவிரித்துவிட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள். இரு தரப்பினரிடமும் நவீன ஆயுதத் தளவாடங்கள் உள்ளன; இரு தரப்பிலும் ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன. உள்துறை அமைச்சர் அங்கு விஜயம் செய்த சமயங்களில் கூட வன்முறை போராட்டங்கள் தடுக்கப்படவில்லை. வெறுப்பு அரசியல் தலைவிரித்தாடுகிறது.

இவை எல்லாவற்றையும் விட, சமூக ஊடகங்களில் மற்றும் தொலைகாட்சி விவாதங்களில், தங்களுக்குப் பிடித்தமான அரசியல் கட்சி ஆள்வதாலயே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் துணை நிற்கும் மக்களின் கருத்துகளைப் பார்க்கும் பொழுது இந்தியா எவ்வாறெல்லாம் பிளவுபட்டுள்ளது என்பது விளங்குகிறது. ‘மணிப்பூரில் நடப்பது இன்று நேற்று நடப்பதல்ல; பல நூறாண்டுகளாக நடைபெறும் விஷயம்’, ‘அங்கு நடப்பதைத் தவிர்க்க முடியாது.’; ‘மலைப் பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படும் தான்’; ‘இவையெல்லாவற்றுக்கும் நேரு தான் காரணம்’; ‘உச்ச நீதிமன்றம் தலையிடும் என்றால் தலைமை நீதிபதியிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்பிவிடலாமா’; ‘இன்று அரசை குறை சொல்பவர்கள், நிர்பயா சம்பவம் சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்’; ‘ஈழப் பெண்கள், எனது உறவுகள் பாதிக்கப்பட்ட போது இங்கு எவரும் பேசவில்லையே ஏன்?’; ‘ராஜஸ்தானில், மேற்கு வங்கத்தில் பாலியல் கொடுமைகள் நடைபெறுவதேயில்லையா?’; ‘வேங்கைவயல் நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டபோது முதலமைச்சர் அங்கு சென்றாரா?’ என்று சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இவர்கள் மெத்தப் படித்த மேதாவிகள், அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், தமிழ்த் தேசியத் தலைவர்கள், பெண்கள் பாதுகாப்புப்படை உறுப்பினர்  என்று பறைசாற்றிக் கொள்ளும் நபர்கள். இன்னொரு புறம், ‘1901 மணிப்பூரில் 1% இருந்த கிறுத்துவம் இன்று ஹிந்து மக்கட் தொகையைத் தாண்டிவிட்டது’; ‘மெத்தய்லன் (மணிப்புரி) மொழி பேசாத மக்கள் மணிப்பூரில் இருக்கத் தகுதியற்றவர்கள்’ என்கிற ரீதியில் மொழி, மத, இனவெறி கும்பல்களும் வாள் சுழற்றுகின்றன.

எதிர்புறத்தில் ‘முந்தைய பிரதமரை ‘மெள(ம)ன் மோகன்சிங் என்றீர்களே, இப்போது நீங்கள் ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்?’; ‘தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின்போது, லியோனி பெண்கள் குறித்து பகிடியாகப் பேசியதைக் குறிப்பிட்டு, இவர்களையா தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்றீர்களே, இப்போது ஏன் அந்தக் கேள்வியை மணிப்பூர் மக்களிடம்  கேட்கவில்லை?’, ‘நிர்பயா சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு உதவிய இன்றைய எதிர்க்கட்சித் தலைவரை, முதலைக் கண்ணீர் வடிக்கிறார், நாடகமாடுகிறார் என்றீர்கள; இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என முன்னர் நடந்தவற்றை, நினைவுப்படுத்தி ஏடாகூடமான கேள்விகள் கேட்டுவருகிறார்கள்.

அரசியல் பம்மாத்துகளுக்கும், பழிவாங்கலுக்கும் இது நேரமல்ல. மணிப்பூர் விவகாரத்தில் கண்டிப்பாக அரசியல் நடவடிக்கை தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான, சிக்கலுக்குத் தீர்வுக் காணும் வகையில் அமைவது அவசியம். மணிப்பூர் மக்களின் வாழ்வாதாரமும், எதிர்காலச் சந்ததியினரின் அடிப்படைத் தேவைகளும் சின்னாபின்னமாகி வருகிறது. மண்ணின் மைந்தர், வந்தேறி என்ற பாகுபாடு, மத, இன, பாலின அடையாளங்களைப்  பார்க்கவேண்டிய தருணமல்ல இது. வல்லவன் வாழட்டும் என்று வாளாவிருப்பது அதிகாரத்தின் அழகல்ல. 2024 ‘க்ளேடியேட்டர்’ (Gladiator) காலமல்ல. ‘இந்தக் காணொளி நாடாளுமன்றம் கூடும் தினத்தன்று வெளிவர காரணம் என்ன?’ என்று கேட்குமளவிற்கு சிலர் இரக்கமற்று, மதியிழந்து விட்டார்கள். மணிப்பூரில் மடிவதும்,  மாள்வதும் மனிதர்கள் மட்டுமல்ல; மனிதமும் சேர்ந்து மடிந்துகொண்டிருக்கிறது. மனிதம் மீண்டும் துளிர்த்தால் மட்டுமே வன்மம் மறையும்.

எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, 2022 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பேசும்போது வடகிழக்கு மாநிலங்களில் அரசின் நிலைப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். “ஆளும் ஒன்றிய, மாநில கட்சியினர் அபாயகரமான சில முடிவுகளை எடுக்கின்றனர்; அவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை காந்திஜிக்கும், நேருஜிக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது; அவர்களை நீங்கள் ‘முடிவெடுக்கத் தெரியாதவர்கள், பலவீனமானவர்கள்’ என்று கிண்டல் செய்கிறீர்கள்; இல்லை – அவர்களுக்கு மாநிலங்களின் தனித்தன்மை தெரிந்திருந்தது; அவர்கள் மக்களின் உரிமைகளை  மதித்தார்கள். நீங்கள் அதை சிதைக்க நினைக்கிறீர்கள்.காஷ்மீரில் செய்தது போல, மணிப்பூரை பிளவுப்படுத்துகிறீர்கள். உடனடியாக அதை நிறுத்தவேண்டும்” என பேசினார். பல சம்பவங்களில், ஏளனமாகப் பார்க்கப்பட்ட அவரது கருத்துக்கள்/எச்சரிக்கைகள்  பின்னாட்களில் நிதர்சனமானதுண்டு. அண்மைக் காலங்களாக வள்ளுவரது திருக்குறளில் ஆர்வம் காட்டிவரும் ஆளும்கட்சியினர், பின்வரும் குறளைப் படித்து, புரிந்து, பின்பற்றுவது பயன் தரக்கூடும்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.”

  • ரவிக்குமார்

 

 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad