\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இளமையில் கொல்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments

 

வாரன் லைப்ரரி’யைக் கடந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ‘எலிசபெத் எஸ்டேட்ஸ்’க்கான என்ட்ரன்ஸ் வந்துவிட்டது. ‘பாம் பீச்’ பகுதி, ஃப்ளாரிடாவிலேயே மிக மிக வசதி படைத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று தெரிந்திருந்தாலும், ‘எலிசபெத் எஸ்டேட்ஸின்’ கூடுதலான ஆடம்பரப் பகட்டு, மேசனுக்குப் பிரமிப்பு தந்தது.  குறைந்தது மூன்று ஏக்கரில் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பங்களாவும், மற்றதை விட பிரம்மாண்டமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றும் எப்படியும் குறைந்தபட்சம் 20 மில்லியன் போகுமென மேசனின் மூளை கணக்கிட்டது. இரு புறங்களிலும் பெரிய மரங்களாக வளர்ந்து, அடர்த்தியான நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பிய போது, தோள்பட்டையில் பொருத்தியிருந்த இருவழி ரேடியோ, கரகரத்து உயிர் பெற்றது. “உங்களுக்காகக் காத்திருக்கோம் சீஃப்” என்றான் பீட். திரையிலிருந்த மேப்பை மேலோட்டமாக பார்த்த மேசன்,  “மூனு நிமிஷத்தில அங்க இருப்பேன்.. அனிடாவுக்குத் தகவல் சொல்லியாச்சா?” எனக் கேட்டான். “இன்சிடெண்ட்னு மட்டும் தான் சொல்லியிருக்கோம்.. டெத் பத்தி எதுவும் சொல்லல”. “குட்.. அதெல்லாம் நேர்ல சொல்லிக்கலாம்.. நான் வந்துடறேன் அதுக்குள்ள..” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

மேசன் நினைத்ததைக் காட்டிலும் அந்த வீடு பெரியதாயிருந்தது. ஆம்புலன்ஸ் வந்துவிட்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் ‘கிரைம் சீன் டூ நாட் கிராஸ்’ எனும் மஞ்சள் வார்ப்பட்டை கட்டப்பட்டிருந்தது. பரபரப்புடன் காணப்பட்ட பீட், மேசனைப் பார்த்ததும், வேகமாக அவனிடம் வந்தான். நடந்தது அனைத்தையும் அவன் விவரித்துக் கொண்டிருக்கும் போதே கருப்பு ‘மாசரட்டி’ ஒன்று வேகமாக வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய பெண், கதவைக் கூட மூடாமல், அவசர அவசரமாக ஓடி வந்தாள்.. முப்பது வயதுக்குள் தான் இருக்கும்.. அதீதமாகப் பதட்டப்பட்டதினால், ஏராளமாக மூச்சிரைத்தது. முகத்தில் துளித்துளியாய் வியர்வை.. “என்ன ஆச்சு? என்ன நடக்குது இங்க? ரிஷி? இஸ் ரிஷி ஆல்ரைட்?” தொடர்பில்லாத வாக்கியங்களாக பீட்டைப் பார்த்து கேட்டாள். பீட் அமைதியாக மேசனைப் பார்த்ததும் அவனை நோக்கி ஓடி வந்தாள் அவள். ‘பாடி கேமரா’வை உயிர்ப்பித்துக் கொண்டு, அவளிடம் பேசத் துவங்கினான் மேசன்.

“நீங்க.. நீங்க ரிஷியோட மனைவியா?”

“ஆங்.. ஆமாம்.. ரிஷி ஓகே தானே? சொல்லுங்க?”

“வீ ஆர் சாரி.. ரிஷி இஸ் டெட்… அவரை யாரோ கொலை பண்ணிருக்காங்க”

“நோ.. நெவர் .. ஓ மை காட்.. இருக்காது.. அது உண்மையா இருக்காது.. நீங்க பொய் சொல்றீங்க .,. ரிஷி..” எனக் கத்திவாறு, மேசனைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓட முயன்றாள்.

அவளின் தோளைப் பிடித்து நிறுத்திய பீட், “சாரி .. இப்ப வேணாம் ப்ளீஸ்.. ” என்றான்.

அருகில் நடந்து வந்த மேசன், “ஆமாம் மிஸஸ். ரிஷி.. க்ரைம் சீன்.. ஃபாரன்சிக் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிகிட்டிருக்காங்க.. அதுவுமில்லாம, ரிஷியோட முகமெல்லாம் புல்லட் காயங்களால ரத்தம் பரவி.. பாக்க கஷ்டப்படுவீங்க .. ‘பாராமெடிக்ஸ்’ அட்டெண்ட் பண்றாங்க.. ”

“ஆனா, நான் ரிஷியோட மனைவி.. நான் கண்டிப்பா பாத்தே ஆகணும்..”

“புரியுது.. நிச்சயமா பாக்கலாம்.. உங்க பேர்? அனிடா தானே”

“அனிதா..”

“அனிடா.. நான் உங்க பேரை சரியா சொல்லலைன்னா மன்னிச்சிக்குங்க.. நாங்க உங்களை ரிஷியோட பாடியைப் பாக்கவே கூடாதுன்னு சொல்லல, ஆனா கொஞ்ச நேரமாகும்.. ப்ளீஸ்.. ப்ராபப்ளி, நீங்க நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு வந்து பாக்கலாம்..தயவு செஞ்சுப் புரிஞ்சுக்குங்க..உங்களோட ஒத்துழைப்பு ரொம்ப அவசியம்..”

அனிதாவின் முகத்தில் பரிதவிப்பை மீறிய குழப்பம் தெரிந்தது.. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மேசன், அவளது தோளை இதமாக அழுத்தி, “எங்களை நம்புங்க.. ‘பாத்தாலஜி இன்வெஸ்டிகேஷன்’ முடிஞ்சதும் நானே சொல்றேன்.. இப்போ எங்களுக்கு உங்ககிட்டருந்து சில தகவல் வேணும்.. க்ரைம் நடந்த முதல் ரெண்டு மணி நேரம் ரொம்ப முக்கியமானது.. நீங்க கொடுக்கப்போற ஒவ்வொரு தகவலும் கல்பிரிட்டை சீக்கிரமா புடிக்க உதவும்.. ப்ளீஸ்.. நீங்க இப்ப என் கூட வாங்க… பீட், இங்கருந்து மத்த விஷயங்களைப் பாத்துக்குவார்.. என்னோட வண்டிலேயே போய்டலாம்.. இந்த நேரத்தில நீங்க தனியா டிரைவ் பண்ண வேண்டாம்.. வாங்க ப்ளீஸ்..” என்று சொல்லி, தனது வண்டிக்கு அவளை அழைத்துச் சென்றான்.   அழுது கொண்டே, நடப்பது எதுவும் புரியாமல், குழப்பத்துடன் நடந்தாள் அனிதா.

அனிதா வண்டியில் ஏற வசதியாக முன் கதவைத் திறந்த மேசன், “உங்க வண்டி சாவியை பீட் கிட்ட குடுத்துடுங்க… அவர் பார்க் பண்ணிடுவார்” என்று பின்னாடி திரும்பிப் பார்த்து “பீட்… நீ இவங்க வண்டி சாவியை வாங்கிக்கோ.. அப்புறமா உள்ள பார்க் பண்ணிடு, சரியா?” என்றான்.

மேசனின் கண்கள் சொல்லிய உட்தகவலைப் புரிந்துகொண்ட பீட், “ஷ்யூர்..” என்றவாறு அனிதாவிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டான்.

*******

ரண்டாவது மாடியில், நீளமான சில வராந்தாக்களைத் தாண்டிச் சென்ற பின், வலதுபுறத்திலிருந்த அறையின் கதவைத் திறந்தான் மேசன். அறையின் ஏசி காற்று, வராந்தா அனல் காற்றின் சூட்டை போக்கும் வகையில் உடலெங்கும் பரவியது. மிகப் பெரிய அலுவலக அறையாகயிருந்தாலும், ஆங்காங்கே சில மேஜை நாற்காலிகள் மட்டுமேயிருந்தன.  அவற்றில் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தவரை அனுகிய மேசன், “ஹே டேவ், நாங்க வந்தாச்சு.. இது அனிடா.. அனிடா இது டேவ்.. ‘இண்டராகேட்டர்’..” என அனிடாவை அறிமுகப்படுத்தி வைத்தான். தனது நாற்காலியைச் சுழற்றித் திரும்பிய டேவ், “ஹாய் .. ” என்றான் அனிடாவைப் பார்த்து.

“உங்க கணவர் உயிரிழந்தது ரொம்ப வருத்தமளிக்கிறது.. வெரி சாரி.. நீங்க இப்ப இருக்க நிலைமை புரியுது.. இருந்தாலும் சில உடனடி தகவல்கள், கொலைகாரர்களைச் சீக்கிரமா பிடிக்க உதவும்.. உங்களுக்கு ஆட்சேபனை எதுவுமிருக்காதுன்னு நம்பறேன்” என்றான் டேவ்.

“எனக்குப் புரியுது.. இருந்தாலும்” இழுத்தாள் அனிதா.

“அரை மணி நேரம் .. மிஞ்சினால் முக்கால் மணி நேரம்.. நான் உறுதியளிக்கிறேன்.” என்ற டேவ், மேசனைப் பார்த்து “நீயும் இண்டராகேஷன்ல இருக்க முடியுமா? அவங்களுக்குக் கொஞ்சம் ஈஸியா இருக்கலாம்.. ”

“கண்டிப்பா, ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவன் தனது இடுப்பிலிருந்த ‘கன் ஹோல்டரை’ யும், ‘வாக்கி-டாக்கியையும்’ கழற்றினான்.

“இங்க கொடு.. இந்த டிராயர்ல வெக்கிறேன்.. மிஸ். நீங்க உங்க பெர்சனல் ஐடம்ஸ் எல்லாத்தையும் அந்த லாக்கர்ல வெச்சிடுங்க.. பாதுகாப்பா இருக்கும்..” என்ற டேவ், இன்னொரு டிராயரைத் திறந்து ஒரு பெரிய ஜிப்-லாக் கவரை எடுத்து விரித்து “உங்க செல்ஃபோனை இதுல போட்டுடுங்க..” என்று அனிதாவிடம் நீட்டினான்.

சில நொடிகள் யோசித்த அனிதா, தயக்கத்துடன் கைப்பையிலிருந்து செல்ஃபோனை எடுத்து டேவ் கொடுத்த ஜிப்-லாக்கில் போட்டாள். அவளது கைப்பையையும், செல்ஃபோன் வைத்திருந்த கவரையும், காலியாகயிருந்த ஒரு லாக்கர் டிராயரில் பத்திரமாக வைத்துப் பூட்டிய டேவ், சாவியை அனிதாவிடம் நீட்டி, “போகும் போது ஞாபகமாக எடுத்துக்கங்க” என்றான்.

இரண்டு மேஜைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒருவனை அனுகிய மேசன் “மைக்.. என் ரேடியோல எதாவது மெசேஜ் வந்தா பாத்துக்க.. எதாவது அவசியம்னா கூப்பிடு .. நாங்க டி3 ரூம்ல இருப்போம்.. புரியுதா?” என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

“நீங்க வாங்க அனிடா..” என்றவாறு டேவ் முன்னாடி நடந்தான்.

*******

டி3 இண்டராகேஷன்’ அறைக் கதவைத் திறந்து பிடித்துக்கொண்ட டேவ், அனிதாவை உள்ளே போகுமாறு சைகை காண்பித்தான். அனிதா உள்ளே நுழைந்ததும், லைட் தானாக எரிந்தது. மிகச் சிறிய அறை. நான்கு நாற்காலிகள், ஒரு குட்டி மேஜை. அதில் ஒரு நாற்காலியைக் காட்டி “உக்காருங்க அனிடா” என்ற மேசன்,ஒரு நாற்காலியை அறைக்கு வெளியே தள்ளிவிட்டு, மற்ற இரு நாற்காலிகளை அவளுக்கு எதிர்ப்புறத்தில் இழுத்துப் போட்டான்.

 

நான்கைந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்துவந்து மேஜை மீது வைத்த டேவ், அவற்றில் ஒன்றை அவளிடம் தள்ளி, “ரிலாக்ஸ் அனிடா.. அகெய்ன், இது ‘ஃபார்மல் இண்டராகேஷன்’லாம் கிடையாது.. நாளைக்கு ‘ஃபார்மல் செஷன்’ வெச்சுக்கலாம்.. இன்னைக்கு சில அடிப்படையான விஷயங்கள், ரிஷியோட முழுப் பெயர், வயசு, தொழில் இந்த மாதிரியான விஷயங்கள்.. ரிஷியோட முழுப் பெயர் சொல்றீங்களா?”

“ரிஷி சந்தன்..41 வயசாகுது..”

“சாரி.. எப்படி ஸ்பெல் பண்ணுவீங்க?” என்று கேட்டு எழுதிக் கொண்ட டேவ், “எவ்வளவு வருஷங்களா உங்களுக்கு ரிஷியைத் தெரியும்?” எனத் தொடர்ந்தான்.

“இரண்டரை வருஷமா தெரியும்”

“என்ன வொர்க் பண்றார்?”

“பிசினஸ்.. ‘இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் – பைனான்ஷியல் சர்வீசஸ்’..”

“ஓ அப்படியா? என்ன நெட்  வொர்த் இருக்கும்?”

“எக்ஸாக்டா தெரியல.. ”

“நாங்க இன்கம் டாக்ஸ் பசங்க இல்லை.. அப்ராக்ஸிமேட்டா சொல்லுங்க போதும் .. ”

“ஒரு மூனரை பில்லியன் இருக்கலாம்..”

“வாவ் .. பில்லியன்ஸ்.. அவருக்குத் தொழில் ரீதியா யாராவது எதிரிங்க இருந்திருப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா? வெளிப்படையா எதிரியா இல்லைனாலும் போட்டியாளர்கள்? ரிஷியைப் பிடிக்காதவர்கள்?”

“சட்டுனு கேட்டா, சரியா சொல்லத் தெரியலை..ரிஷி பிஸினஸ் பத்தி பெருசா என்கிட்ட பகிர்ந்துகிட்டது கிடையாது.. ஆனா .. ” என்றவள் நிறுத்தினாள்..

குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டு, மேசன் அவளது கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஏழெட்டு நொடிகள் காத்திருந்த டேவ் அங்கு நிலவிய நிசப்தத்தை முறித்தான்.. “எதோ சொல்ல நெனைக்கறீங்க.. அதைச் சொல்றது சரியா, தப்பானு நீங்க கவலைப்படவேண்டாம்.. அதைக் கண்டுபிடிக்கிறது எங்களோட வேலை.. உங்களுக்கு யாருடைய பெயராவது மனசில லேசான உறுத்தலா இருந்துதுனா கூட சொல்லுங்க.. போதும்.. அப்படி யாராவது..”

“மாயா” என்று ஒரே வார்த்தையைப் பதிலாகச் சொன்னாள்.

மறுபடியும் மெளனமானது அறை. இந்த முறை இருவரும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களது பார்வையைத் தவிர்க்க முயன்ற அனிதா, இமைகளைக் கீழிறக்கி, லேசாக விசும்பத் தொடங்கினாள்.

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த டேவ், நீண்ட பெருமூச்சுவிட்டுக் கொண்டே மேஜையில் கைகளை ஊன்றி, முன்னுக்குச் சரிந்து, “யாரு, மாயா?” என்று கேட்டு பார்வையை மேலும் கூர்மையாக்கினான்.

“அவள்.. அவள்.. ரிஷியின் .. முன்னாள் மனைவி..” என்ற அனிதாவின் பார்வை நிமிர்ந்தது.. இப்போது அவளது கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

***********

றுநாள் காலை பதினொரு மணியளவில், தானே ‘பீரோ ஆஃப் கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அண்ட் இண்டலிஜென்ஸ்’ அலுவலகத்துக்கு வந்தாள் அனிதா. லாபியிலிருந்த புத்தகத்தில் பெயரைப் பதிந்துவிட்டு காத்திருந்த போது, டேவ், மேசன் இருவரிடமும் என்ன சொல்ல வேண்டும் என்பதை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். முழுவதுமாக ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன்னர், “ஹாய் அனிடா.. எப்படியிருக்கீங்க இன்னைக்கு” என்று கேட்டவாறு வந்து நின்றான் டேவ். செக்யூரிட்டி ஸ்கிரீனிங் முடித்த பின்னர் முந்தைய தினம்  மேசன் அழைத்துச் சென்ற அதே வெராந்தாவைக் கடந்து, பெரிய அறைக்குள் நுழைந்தார்கள். லேப்டாப்பில் எதோ தட்டிக் கொண்டிருந்த மேசன், அவளைப் பார்த்ததும், “ஹாய்.. இன்னைக்கு கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றீங்களா? அநேகமா, இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள ஃபாரன்சிக் வொர்க் முடிஞ்சிடும்.. அதுக்கப்புறம் க்ரைம் சீன் கிளீனிங் .. நாளைக்கு காலைல வீடு முழுக்க உங்க கண்ட்ரோலுக்கு வந்துடும்.”

“தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்ன அனிதா, வெறுமையாகப் புன்முறுவல் காட்டினாள். மீண்டும் அதே டி3 இண்டராகேஷன் அறைக்கு நடந்தார்கள்.. இம்முறை கைப்பையை லாக்கரில் வைக்கச் சொல்ல மறந்துவிட்டார்களோ என்று எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தாள் அனிதா. நாற்காலியில் அமர்ந்ததுமே, “வெளியில் இன்னைக்கு கொஞ்சம் சூடாகத் தானிருக்கு.. இங்க வெளிச்சம் ஓகேவாயிருக்கும்னு நெனைக்கிறேன்.. உங்க சன் கிளாசஸ்ஸை கழட்டிடறீங்களா ப்ளீஸ்” என்றான் மேசன்.

தனது கண்ணாடியைக் கழற்றி மேஜை ஓரத்தில் வைத்தாள் அனிதா.

கையிலெடுக்காமல், விரல்களால் லேசாக மேஜையின் உள்பக்கமாக நகர்த்திய டேவ், “‘மே பாக்’.. எப்டியும் நாப்பாதாயிரம், ஐம்பதாயிரம்னு இருக்கும்… பத்திரமா பையில வெச்சிடுங்க.. நேத்து நீங்க சொன்ன தகவலை வெச்சு சில  விசாரணைகள் பண்ணோம்.. அதுல முக்கியமானவை சிசிடிவி பதிவுகள்.. சில லீட்ஸ் கெடச்சிருக்கு.. அதெல்லாம் பாக்கறதுக்கு முன்னாடி உங்களைப் பற்றிய சில தகவல்களும் வேணும்.. ரிஷியை மீட் பண்றதுக்கு முன்னாடி நீங்க எங்கயிருந்தீங்க? எங்க படிச்சீங்க.. அந்த மாதிரியான தகவல் சொல்ல முடியுமா?”

“நான் வளர்ந்ததெல்லாம் சான் டியாகோல.. சராசரி நடுத்தரக் குடும்பம்.. ‘சான் டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டி’ல படிச்சேன்.. ரிஷியோட அறிமுகம் கிடைச்சப்புறம் தான் ஃப்ளாரிடாவுக்கு வந்தேன்”

“ரிஷியோட அறிமுகம் எப்படி கிடைச்சுது?”

“ஆங்.. என்னோட ப்ரெண்ட் வீட்டில நடந்த ஒரு பார்டில .. ரிஷி அந்தப் பார்ட்டில ‘சீஃப் கஸ்ட்’ .. யதேச்சையா ஹாய் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கெடச்சுது.. அப்புறம் குட்டி குட்டியாய் சில சம்பாஷணைகள்.. ஒரு கட்டத்தில அவருக்கும் என் மேல ஒரு நாட்டம் இருப்பது தெரிய வந்தது..”

“சாரி பெர்சனாலா கேக்கறதா நெனைக்காதீங்க.. ‘அவருக்கும் என் மேல நாட்டமிருந்துதுன்னு’ சொன்னீங்க.. உங்களுக்கு அவர் மேல ஈர்ப்பிருந்ததா?”

“ஆமாம்.. சின்னதா இருந்தது, ஆனா அவர் கல்யாணமானவர்ங்கிறதால ஒரு தயக்கம் இருந்தது”

“குட்.. அவ்வளவுதான் எனக்குத் தேவை .. வெளிப்புற அழுத்தங்கள் எதாவது இருந்ததான்னு தெளிவுபடுத்திக்கத் தான் கேட்டேன்.. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவரோட ‘எக்ஸ் வொய்ப்’.. மாயா.. அவங்ககிட்டருந்து எதாவது பிரச்சனை இருந்துதா?”

“எனக்கு நேரிடையா பிரச்சனை எதுவுமில்ல, ஆனா ரிஷிகிட்ட எதாவது இருந்திருக்கலாம்..”

“எந்த மாதிரி பிரச்சனை இருந்திருக்கலாம்.. ரிஷி உங்ககிட்ட அதைப் பத்தி பகிர்ந்துகிட்டதில்லையா?”

“பெருசா விவரங்கள் எதுவும் சொன்னதில்லை .. தற்செயலா எதாவது பேசுற சமயங்கள்ல,  மாயா பணம் கேக்கறதா ஒன்னு ரெண்டு தடவை சொல்லியிருக்காரு..”

“ம்ம்..” என்று தலையாட்டிக் கொண்ட மேசன், “அப்படின்னா, உங்களுக்கு மாயா மேல பலத்த சந்தேகமிருக்குன்னு எடுத்துக்கலாமா?”. தன் மனதைத் துளையிடுவதைப் போல் பார்த்த மேசனின் பார்வையைத் தாள முடியாத அனிதாவின் மனம், ஒரு கணம் தள்ளாடியது.

“யெஸ்.. நோ..” என்று சொன்னவள், இரு கைகளையும் மேஜையில் ஊன்றி அவற்றினிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அனிதா. விரல்களுக்கிடையே தெரிந்த மேஜையில், மரத்தோற்றத்தை ஒத்திருந்த லேமினஷன் கோடுகள் உயிர்பெற்று புழுக்களாய் நெளிவது போல் தோன்றியது. ஒரு சில நொடிகளில் சுதாரித்தவள், ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“நோ, நோ .. நான் அப்படி எதுவும் சொல்ல நினைக்கலை.. நான் அவங்க கூட பழகியதில்லை.. ரெண்டு தடவை பார்த்திருக்கேன்..”

“ஒகே.. ஒகே… தேவைப்பட்டா  நாங்க அவங்களை இன்வெஸ்டிகேட் பண்ணுவோம்… ஆனா அவங்க உங்களத் தொடர்பு கொண்டா உடனே எங்களுக்குச் சொல்லுங்க.”

“ம்ம்.. ”

பக்கத்திலிருந்த ஃபோல்டரிலிருந்து சில பக்கங்களை வெளியிலெடுத்த டேவ், “உங்க வீட்டு சிசி டிவில பாத்த போது, சில தெளிவற்ற முகங்கள் பதிவாகியிருப்பது தெரிஞ்சுது.. முகம் அவ்வளவா கிளியரா இல்லை.. கொலையாளி .. ஒருத்தனா பல பேரான்னு கூட தெரியல, பட் அவங்க கேமராவை டேமேஜ் பண்ணிருக்காங்க.. உங்களுக்கு யாரையாவது அடையாளம் தெரியுதான்னு பாருங்க” என்று காகிதத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த படங்களை அவள் பார்க்கும் வகையில் மேஜையில் பரப்பி வைத்தான்.

அனிதாவின் முகத்தில் சிறு கலவரம் தெரிந்ததை, இருவரும் கவனித்தனர்.

மேசன் பேசினான்.. “இது உங்க பக்கத்து வீட்டுக்காரரோட கேமரால பதிவானது… தூரம் அதிகமிருந்ததால கொஞ்சம் மங்கலாகத்தான் இருக்கு.. இருந்தாலும் எதாவது க்ளூ கெடைக்குதான்னு பாருங்க..”

லேசாக காகிதங்களை நகர்த்திய அனிதா, “இல்ல்ல .. எனக்கு எதுவும் புலப்படலை..”

“நாங்களும் அப்படித்தான் நெனச்சோம்.. அனிடா, ரிஷியோட ஆஃபிஸ் இல்லைனா ரீடிங் ரூம்கள்ல எதாவது செக்யூரிட்டி கேமரா இருந்துதா”

“இல்ல .. எனக்குத் தெரிஞ்சு எதுவுமில்ல..”

“அவ்வளவு பெரிய வீடு, ஆனா செக்யூரிட்டி டிவைசஸ் பலதும் வேலை செய்யலை…கொலையாளிகள் எதாவது சேதம் பண்ணியிருப்பாங்களா? இல்லை ஒருவேளை சரிவர பராமரிப்பில்லாம அவை வேலை செய்யாம போயிருக்குமா?”

“.. இல்ல, எனக்குத் தெரியல.. ரிஷி தான் அதையெல்லாம் பாத்துப்பாரு..”

“ம்ம்.. புரியுது.. வீட்ல வேலையாட்கள் யாரும் இருப்பதில்லையா?”

“இல்லை, இருக்காங்க.. 2 பேர் இருக்காங்க.. காலையில வந்துட்டுப் போயிடுவாங்க..”

தலையைச் பென்சிலால் சொரிந்து கொண்ட மேசன் “அப்படின்னா.. அவங்க வந்துட்டுப் போற விஷயம் தெரிஞ்ச யாரோ தான் இதைப் பண்ணியிருப்பாங்கன்னு தோனுது.. உங்க வேலையாட்கள் பேரை இதில எழுதறீங்களா ப்ளீஸ்? எதும் காண்டக்ட் நம்பர் இருந்தாக்க அதையும் எழுதிடுங்க..” என்று சொல்லி அவளிடம் நோட்டுப் புத்தகத்தைத் தள்ளினான். தனது ஃபோனை எடுத்துப் பார்த்து, இரண்டு நம்பர்களை எழுதினாள் அனிதா.. அவள் குழப்பத்தில் நம்பரை எழுதுவதில் தடுமாறியதைக் கவனித்த டேவ், “ரிலாக்ஸ் அனிடா.. தண்ணி எதாவது வேணுமா? இல்ல காஃபி?”

“இல்ல.. பரவால்ல.. ஆங்.. மே பீ, கொஞ்சம் தண்ணி இருந்தா எடுத்துக்கறேன்..”

தண்ணீர் பாட்டில் ஒன்றைத் திறந்து பக்கத்திலிருந்த பேப்பர் கப்பை நிரப்பி அவளிடம் கொடுத்தான் டேவ்.. “உங்களுக்கு ஹை பீபி, டிரெமர்ஸ் மாதிரி எதாவது இருக்கா.. சாரி, கை லேசா ஷிவர் ஆகுதுல்ல .. அதான் கேட்டேன்”

“கிவ் ஹர் எ பிரேக் டேவ்.. அவங்களே பாவம் வருத்தமாயிருப்பாங்க.. ” என்ற மேசன், “அனிடா.. நாங்க ரெண்டு பேரை டிரேஸ் செய்திருக்கோம்.. அவங்களுக்கு இந்தச் சம்பவத்தோட தொடர்பிருக்கான்னு தெரியல.. ஒருத்தரை இங்க வரச் சொல்றோம்.. இன்னொருத்தர் இந்த ரூமுக்கு வர மாட்டேன்னு சொல்றாரு.. பக்கத்து ரூம்ல உக்கார்ந்திருக்கார், அவரை டிவில காட்டறோம்.. அவரை ‘ஃபோர்ஸ்’ பண்ணி இந்த ரூமுக்கு வரவெச்சு உங்களுக்கு எந்த எம்பிராஸ்மெண்டும் கொடுக்க விரும்பல .. முதல் ஆளை இப்போ இங்க வரச் சொல்றேன்.. அவரை நல்லா பாத்துடுங்க.. அவர் முன்னாடி பேச வேண்டாம்னு நெனச்சா நீங்க அமைதியா இருக்கலாம்.. அவர் போனதுக்கப்புறம் சொன்னீங்கன்னா கூட போதும்.. ஓகேவா ?” என்றான்.

“..நான் .. நான் அதுக்கெல்லாம் இப்போ தயாரா இல்ல.. நீங்க சொன்ன மாதிரி ரொம்ப ‘கன்ஃப்யூஸ்டா’ இருக்கு.. எதிலயும் ‘ஃபோகஸ்’ பண்ண முடியல.. நாளைக்கு வேணா பாக்கலாமா.. என் லாயரும் வந்துடுவாரு…” – அனிதாவின் கண்களில் தயக்கம் தெரிந்தது.

“கண்டிப்ப்பா .. நீங்க உங்க லாயரை எப்ப வேணா கூட்டிட்டு வரலாம்.. அதுக்கு அவசியமிருக்காதுன்னு நெனக்கிறேன்.. ஆனா நீங்க விருப்பப்பட்டா, ஷ்யூர் அவரும் கூட இருக்கலாம்.. சின்ன பிரச்சனை என்னன்னா, நாங்க இந்த சஸ்பெக்டை மறுபடியும் வரவெக்கணும்.. அதான்..” என்றிழுத்தான் மேசன்.

“ஒன்னு பண்ணுங்க, நீங்க அந்தாளைப் பாத்துடுங்க.. மத்ததெல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்.. சரியா? ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்.. ஓகே” என்று இடைமறித்த டேவ், அவளது பதிலுக்குக் காத்திராமல், கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.

ஓரிரு நிமிடங்களில், கதவு மீண்டும் திறக்கும் சத்தம் கேட்டது. “உள்ளே போ..” என்று கதவைப் பிடித்துக் கொண்டு, உடன் வந்தவனை உள்ளே அனுப்பினான்.

உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் முகம் சட்டென வெளிறிப் போனது அனிதாவுக்கு.

“உனக்கு இவங்களைத் தெரியுமா?” என்று உடன் வந்தவனிடம் அனிதாவைக் காட்டி கேட்டான் டேவ்.

அவளை நிமிர்ந்து பார்த்த அவனின் பார்வையைத் தவிர்க்க முயன்றாள் அனிதா.

ஒரிரு நொடிகள் அமைதிக்குப் பிறகு, வந்தவன் சொன்னான்..”இல்ல.. தெரியாது..”

“முன்னாடி இவங்களை எங்கயாவது, எப்பவாது பார்த்த ஞாபகம் எதாவது?” டேவ் தொடர்ந்தான்.

வந்தவன் அழுத்திச் சொன்னான், “இல்ல .. பாத்ததில்லைன்னு தோனுது..”

“ஓகே.. அனிடா இந்தாளை நீங்க பாத்திருக்கீங்களா? அகெய்ன் நீங்க இவன் முன்ன சொல்ல விருப்பப்படலைன்னா அப்புறம் கூட சொல்லலாம்..”

டேவ் முடிக்கும் முன்பாக முந்திக் கொண்ட அனிதா, “இல்ல நான் பார்த்ததில்லை .. ” என்று முகத்தைக் கவிழ்த்தாள்.

அவள் முகத்தைப் பார்த்த டேவ், திரும்பி மேசனைப் பார்த்தான்.. லேசாக உதட்டைப் பிதுக்கிய மேசன், அவனை வெளியில் அனுப்புமாறு கண்ணைக் காட்டினான்.

“ஓகே மேன்.. ” என்று வந்தவனுக்கு கதவைத் திறந்து வெளியிலனுப்பினான் டேவ்.

அவன் போன பிறகு, நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்த டேவ், “அனிடா, உங்களுக்கு அவனைப் பத்தின விஷயம் எதோ தெரியும்னு நெனக்கிறேன்.. பயப்பட வேண்டாம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்க..” என்று அனிதாவுக்குத் தைரியமூட்டினான்..

“நோ ஆஃபிசர்.. எனக்கு .. நான்.. அவனை நான் பார்த்ததில்லை.. எனக்குத் தெரியாது..கண்டிப்பா இல்லை” என்று வேகமாகத் தலையாட்டினாள்.

மீண்டும் ஒருமுறை மேசனைப் பார்த்த டேவ் எதோ சமிக்ஞை செய்தான்.

“வெல்.. மிஸ். அனிடா, அவனை நீங்க பாத்ததில்லைன்னு சொல்றீங்க.. ஆனா அவனோட நம்பர், உங்க ஃபோன்ல இருந்தது..  ஒரு வேளை, வீட்டு மெயிண்டனன்ஸ் வேலைக்கு எதாவது பேசியிருப்பீங்களா?” என்றான் மேசன்.

அனிதாவின் முகத்தில் சின்னதாய் அதிர்வலைகள் .. அடி வயிற்றில் எதோ சில்லிட்டது.. “என் .. என் ஃபோனிலா .. இருக்காது.. இருக்கவே இருக்காது..”

தனது லேப்டாப்பை அவள் பக்கம் திருப்பிய மேசன், “நேத்து நீங்க லாக்கர்ல ஃபோனை வெச்சப்போ, மைக் உங்க ஃபோனிலிருந்து சிம்கார்டை எடுத்து ஹேக் பண்ணியிருக்கான்.. ஆர்வக் கோளாறு அவனுக்கு.. அதில இப்ப வந்தானே ஒருத்தன்.. ஹோசே, அவனுடைய நம்பருக்கு சில மெசேஜ் நீங்க அனுப்பியிருக்கிறதா சொல்றான்.. அஃப்கோர்ஸ், நீங்க அதையெல்லாம் உடனே உடனே டெலிட் பண்ணியிருக்கீங்க.. பட் மைக் வித்தைக்காரன்..”

லேப்டாப்பில், அனிதா, ஹோசேவுக்கு அனுப்பியிருந்த தகவல்கள் வரிசையாக ஓடின..

“இல்ல.. நீங்க எதோ ‘ஸ்கேம்’ பண்றீங்க.. அது என்னோட ஃபோன்ல இருந்திருக்காது… அப்படின்னா, நான் ரிஷியை.. நான் தான் காரணம்னு நெனக்கிறீங்களா.. என்னை கன்ஃப்யூஸ் பண்றீங்க.. எனக்கு லாயர் வேணும் .. நான் எதுவும் பேசமாட்டேன்.. ஐ நீட் மை லாயர்.. நவ்.. ப்ளீஸ் லெட் மீ கோ..  ” கோபத்தில் வெடித்தாள் அனிதா. அவளது கண்கள் சிவக்கச் தொடங்கி, நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சிடுச்சி.. நீங்க உண்மையைச் சொல்லிட்டீங்கன்னா, சீக்கிரமே முடிச்சிடலாம்..” மேசன் கணினியை மூடினான்..

“என்ன பேசறீங்க? நான் என்ன சொல்லணும்.. என் கணவரை இழந்துட்டு, அவரோட முகத்தைக் கூட பாக்க முடியாம நிக்கிறேன்.. என்ன சொல்லணும் … எனக்கு லாயர் வேணும்..” நாற்காலியிலிருந்து எழ முயற்சித்தாள்.

“லாயரோட நம்பர் கொடுங்க, நான் அவரை வரச் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் சொன்னேன்ல இரண்டாவது ஆள், அவரையும் பாத்துடுங்க.. லாயருக்கும் அவரோட வேலை சுளுவாயிருக்கும்..” என்ற மேசன், ரிமோட்டை எடுத்து, டிவியை இயக்கினான். கோடுகளாய்த் தெரிந்த டிவியில் சேனல்களை மாற்றியதும் தெரிந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள் அனிதா.

சட்டென சுதாரித்துக் கொண்டு, “ரிஷீ… ஓ மை காட்.. ரிஷி, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே .. சொல்லுங்க .. சொல்லுங்க ரிஷி .. இவங்கெல்லாம் பொய்யா சொன்னாங்களே.. எங்க இருக்கீங்க ரிஷி, நான் பாக்கணும்..உங்களை ஒடனே பாக்கணும்.. ” என்று உணர்ச்சி மிகுதியால் அழத் தொடங்கினாள்.

பக்கத்து அறையிலிருந்த ரிஷி, அவளின் குரல் கேட்டு, கேமராவுக்கு அருகே வந்தவன், முகத்தைத் திருப்பிக் கொண்டு, முதுகை காட்டியபடி நின்றான். “ஆஃபிசர்ஸ், இதக்கு மேலயும் என்னால இங்க இருக்க முடியாது.. நான் போகலாமா?” என்று அவன் பேசியதைக் கேட்ட அனிதா நிலைகுலைந்து போனாள்.

“ரிஷி.. ரிஷீ… என்னைக் கூட்டிட்டு போ ரிஷி.. கடவுளே.. என்ன நடக்குது இங்கே? எனக்குத் தலை சுத்துது.. நீ உயிரோட இருக்கல்ல? என்னை வெளிய விடுங்க.. நான் என் புருஷனைப் பாக்கணும்.. விடுங்க.. ” என்று அலறினாள்..

கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத டேவ், “போதும் மிஸ். அனிடா, எல்லாமே முடிஞ்சுப் போச்சு.. இப்பவாது உண்மையைச் சொல்லுங்க..”

“என்ன உண்மை.. என்ன வேணும் உங்களுக்கு? அதான் ரிஷி பக்கத்து ரூம்ல இருக்காருல்ல.. நீங்க தான் சொல்லணும் .. என்ன வேணும்? நீங்கல்லாம் உண்மையான போலிஸ் தானா?” என்று கத்தத் துவங்கினாள்.

“நீங்க இப்படி கத்தறதெல்லாம் பிரயோஜனமில்ல அனிடா.. நடந்ததெல்லாம் எங்களுக்குத் தெரியும்.. மூனு நாளுக்கு முன் ஹோசேவைப் பிடிக்க நேர்ந்தது.. ஒரு சின்ன டிராஃபிக் வயலேஷன்ல தான் .. அந்தச் சமயத்தில அவன் ‘டிரக்’ கன்ஸ்யூம் பண்ணியிருக்கிறதைப் பாத்துட்டு, வெஹிகிள் செக் அப் பண்ணியிருக்கார் அந்த ஆஃபிசர்.. அப்பதான் நீங்க அவனுக்குக் கொடுத்த கேஷ் அட்வான்ஸ், பன்னிரெண்டாயிரம் டாலர் கெடச்சிருக்கு.. மொதல்ல அவன் எங்கயாவது திருடியிருப்பான்னு நெனச்சு விசாரிச்சப்போ தான் உங்களோட திட்டம் தெரிய வந்தது.. ” என்று சொல்லி நிறுத்திய டேவ்,அங்கிருந்த பாட்டில் ஒன்றைத் திறந்து தண்ணீர் குடித்தான்.

அனிதா அனைத்தையும் மறுப்பது போல் தலையாட்டிக் கொண்டேயிருந்தாள். அவள் கண்களில் மருட்சி தெரிந்தது.

டேவ் இளைப்பாற அவகாசம் கொடுக்க நினைத்த மேசன், “ஹோசே சொல்றதை ஊர்ஜிதப்படுத்திக்கதான், நேத்து சாயந்திரம் பிளானை எக்ஸிக்யூட் பண்றதா, அவனோட ஃபோன்லருந்து உங்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு, ரிஷியையும் எச்சரிக்கைப் படுத்தினோம்.. நீங்க புத்திசாலித் தனமா, உங்க வீட்டு செக்யூரிட்டி கம்பெனியைக் கூப்பிட்டு வேறொரு கம்பெனிக்கு  மாற போறதா சொல்லி, அந்த நொடியிலேயே தற்போதைய செக்யூரிட்டி சர்வீசை கேன்சல் பண்ணிட்டீங்க..  இதெல்லாம் ஏறத்தாழ உங்களோட இன்வால்வ்மெண்டை கன்பர்ம் பண்ணிடுச்சு.. இருந்தாலும் ஒரு சாலிட் எவிடென்ஸ் வேணுமில்லையா.. அதனால தான் ரிஷி இறந்து போனதா ஒரு டிராமா பண்ண வேண்டியதாயிடுச்சு.. ஆனா, அந்த வாய்ப்பு தான் உங்க வீட்டை, குறிப்பா உங்களோட மாஸ்டர் பெட்ரூம், டிரஸ்ஸர், டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் ஆய்வு பண்ண போதுமான அவகாசம் கொடுத்துச்சு.. நீங்க உங்களோட ஸ்கூல் பாய் ஃப்ரெண்ட் அலெக்ஸோட அஃபயர்ஸ்ல இருந்தது..  நாலஞ்சு மாசத்துக்கு முன் ரிஷியும், நீங்களும் எடுத்த மிகப் பெரிய தொகைக்கான லைஃப் இன்ஸ்யூரன்ஸை  உங்க தூண்டுதலால தான் எடுத்ததா ரிஷி சொன்னதெல்லாம் எங்களுக்குத் தேவையான எவிடென்ஸை ஸ்டிராங்காக்கிடுச்சு.. அப்புறம் உங்க கார்லருந்து ஹோசேவோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கலெக்ட் ஆச்சு.. உங்க கார்ல வெச்சு அவனோட டீல் பேசியிருக்கீங்க போல.. அட்வான்ஸும் கொடுத்திருக்கீங்க..  கட்டக் கடைசியா, நேத்து என் கூட இங்க வர்ற வழியிலே,  ஹோசேவுக்கு நன்றி சொல்லி நீங்க அனுப்பின மெசேஜ். அவனுடைய ஃபோன் எங்ககிட்ட இருந்ததால நேரிடை சாட்சியமா கிடைச்சுது.. போதாக்குறைக்கு மைக் வேற உங்க ஃபோனைக் குடைஞ்செடுத்துட்டான்.. எங்களுக்குத் தேவையான அத்தனை ஆதாரங்களையும், நீங்களாவே மறைமுகமா கொடுத்து உதவிட்டீங்க.. .. ஆங்.. முக்கியமானதைச் சொல்ல மறந்துட்டனே, நீங்க கேட்டிருந்தீங்களே லாயர்.. ரிஷி அனுப்பி வெக்கறதா சொல்லிட்டாரு.. டைவர்ஸுக்காக.. எப்ப வேணாலும் அவரு இங்க வருவாரு.. அதுக்கு முன்னாடி நாங்க உங்களை அரெஸ்ட் பண்ணியாகணும்.. கோ-ஆப்பரேட் பண்ணுங்க.. பிளீஸ்..”

  • மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad