\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நானே சிந்திச்சேன்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments

போன வாரத்துல ஒரு நாள் சாயங்காலம்.. வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்ச நேரம் விஸ்ராந்தியா உட்காரலாம்னு நெனச்ச நேரத்துல கரெக்டா, ஜனா ஃபோன் பண்ணினான்.. “ஏ மச்சி .. இந்த வீக் எண்ட் என்ன பண்ணப் போற?” ன்னு கேட்டான்.. இவன் எதுக்கோ தூண்டில் போடப்போறான்னு நெனச்சி “இந்த வாரமா? என் வொய்ஃப் ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தா.. இந்தத் தோட்டத்துக்குச் செடியெல்லாம் வாங்கணும்.. ‘டாம்பா’ல ஒரு பெரிய ஆர்பரிட்டம் இருக்காம்.. போயிட்டு வந்துடலாம்னு.. அதான் ‘டாம்பா’ போலாம்னு ஒரு ஐடியா.. எப்டியும் ரெண்டு நாளாயிடும்..” ன்னு சொல்லி முடிக்கல..

“அந்த ஐடியாவை அப்டியே ஓரமா வையு.. சனிக்கிழமை வரது வர்றதா சொல்லிருக்கான்.. அதான்டா அட்லாண்டால இருக்கானே.. வரதராஜன் .. செம இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான் வெச்சிருக்கான்.. நாம மூணு பேரும் இந்த ‘சிவசக்தி’ நகருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்..”

“‘சிவசக்தி’ நகரா.. அமெரிக்கால அப்டியெல்லாம் பேரு வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா.. டெவலப்மெண்ட் ஆப்பர்டுனிட்டிஸ்லாம் எப்டியாம்?”

“அமெரிக்காவுலயா? மவனே.. நீ நியூஸெல்லாம் பாக்கறதே இல்லையா? ‘மூன்’ல டா மச்சி.. நிலாவுல.. ‘சிவசக்தி நகர்’னு பேரு வெச்சாங்களே.. டிவில கூட காமிச்சாங்க.. பாக்கவேயில்லையா நீ?”

“என்னடா சொல்ற?”

“நீயொருத்தன் எல்லாத்துக்கும் அதிர்ச்சியாவ .. இப்டி அறியாமைல இருந்துகிட்டு தான் ‘கைலாசா’வை கோட்டை விட்டுட்டோம் மச்சி.. அப்பவே ரெண்டு ஏக்கர் வாங்கிப் போட்டுருந்தா இந்நேரம் சூப்பரா செட்டிலாயிருக்கலாம்.. கேள்வி மேல கேள்வி கேட்டு, இந்த வாய்ப்பையும் விட்டுடாதே .. போறோம், முடிக்கிறோம். இந்த வாரம் மட்டும் நாலு ரியல் எஸ்டேட் டூர் இருக்காம்.. ‘கேப் கேனவரல்’லருந்து கெளம்பணும்..  காலைலே பத்து பத்துக்கு ஆர்லாண்டோலருந்து, ‘கேப் கேனவரல்’க்கு ஒரு பஸ் பொறப்படுது.. அதைப் பிடிச்சிட்டா ஞாயித்துக்கிழம நைட்டு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடலாம்.. மறக்காம செக் புக்க மட்டும் எடுத்து வெச்சுக்கோ.. அட்வான்ஸ் எதுவும் கொடுக்கணும்னா தேவைப்படும் ..  வழிக்கு, வெல்கம் டிரிங்கோட ஃபுல் மீல்ஸ் தராங்களாம்.. ஆனா வெஜ் மட்டும் தான்.. ஒரு நாள் தானேடா மச்சி.. அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.. நைட்டு வரது கூட ஒரு கான்ஃப்ரென்ஸ் போடறன்.. எதுனா டவ்ட் இருந்தா கிளியர் பண்ணிக்கலாம்”.

சொல்லி வெச்ச மாதிரியே, வரதுவும், ஜனாவும் மாலை ஆறரை மணியளவில் வீடியோ காலில் கூப்பிட்டார்கள்.

“மாப்ளே.. ஜனா வெவரமெல்லாம் சொல்லியிருப்பானே.. லைஃப் டைம் ஆப்பர்ச்சூனிட்டி மாப்ளே..கவனிச்சல்ல? ‘இந்து ராஷ்டிரம்’ன்னு ரெஜிஸ்டர் பண்ண ஐ.நா.ல அப்ளை பண்ணிட்டாங்க.. ‘சிவசக்தி தாம்’னு கேப்பிடல் சிட்டி ஃபார்ம் ஆகப் போகுது.. ‘விக்ரம்’ லேண்ட் ஆன எடத்துலர்ந்து ரெண்டு மைல் கூட இல்ல சிவசக்தி நகர் .. ஃப்யூச்சர்ல ‘மதியோகி’ ன்னு ஹுயூஜ் ஸ்டேட்ச்சு, டிரெடிஷனல் மந்திர்ஸ், கோ சாலாஸ் எல்லாம் வரப்போகுதாம்.. இப்பவே லேயவுட் போட்டு கலர் கலரா கொடில்லாம் நட்டுட்டாங்க.. சீக்கிரமே ‘சிவசக்தி நகர்’ தூள் கெளப்பப்போகுது..

“2014லேயே இதைக் கணிச்ச  தளபதி அப்பவே ஜில்லா படத்துல ‘சிவனும் சக்தியும் சேந்தா மாஸுடா’ னு ஒரு சாங் வெச்சாரு .. ஞாபகமிருக்கா?” – ஜனா விஜய்க்கு சந்திர மண்டலத்தில் கட்-அவுட் வெக்க அடிக்கல் நாட்டினான்.

“எல்லாம் சரிதான்.. ஆனா.. கொஞ்ச நாள் வெயிட் பண்லாமேடா.. ரொம்ப அவசரப்படறோமோன்னு தோனுது” என்று நான் முடிப்பதற்குள், வரது டென்ஷனானான்..

“இந்த ‘ஹேரு’க்குத் தான் நான் சொன்னேன்.. இவுரு சாக்ரடீஸ் மாதிரி சிந்திச்சி முடிவெடுக்கறதுக்குள்ள விடிஞ்சிடும்.. டேய் ஜனா, நீயாவது வருவியா இல்லியா? நான் போறதா முடிவு பண்டேன்.. காலைலே எட்டு மணிக்குள்ள ஆர்லாண்டோல இருப்பேன்.. வர்றதாருந்தா அங்க மீட் பண்றேன்.. இல்லைனா நான் போய்கிட்டே இருப்பேன்.. என்னா சொல்ற?”

“இல்ல மச்சி .. நான் வரேன்.. இவனும் வருவான்..” என்று வரதுவைச் சமாதானப்படுத்திவிட்டு, “உனுக்கு என்னதாண்டா பிரச்சனை? டாலர் டாலரா மூட்ட கட்டி பெட்டுக்கு அடில எவ்ளோ நாள் தான் வெச்சிருப்பே? அதான் வரது சொல்றான்ல.. க்ரோத் செமயா இருக்குண்டா .. இப்பவே அடுத்ததா ‘பஜ்ரங் பலி நகர்’ ஸோனிங் ஆரம்பிச்சிட்டாங்களாம்.. அப்பறம் ‘பாகுபலி நகர்’, ‘பிரம்மாஸ்திரா நகர்’, ‘ஆதிபுருஷ் ராஸ்தா’ ன்னு ஏகப்பட்டது வரப் போகுது.. நீயா தேடினா கூட அரை கிரவுண்டு கெடைக்காது.. சொல்றத கேள்டா மச்சி” என்று என்னைத் தேத்தினான் ஜனா.

“எக்ஸாக்ட்லி.. ரெண்டு நாளுக்கு முன்ன ‘ஷுகர் ஸ்டைல்’ சாமியார் சொன்னத கேட்டயில்ல? நிலாவுல ‘ஜிகாதி’ ஆளுங்க பூந்துட்டானுங்கன்னா அவனுங்க ராஜ்ஜியமாயிடும்.. அவுனுங்க பாட்டுக்கு ‘மாஸ்க்’ அது இதுன்னு கட்டிட்டு தீவிரவாதம், பயங்கரவாதம்னு எல்லா வாதத்தையும் எறக்கிடுவானுங்க.. அதுக்குள்ள சிவனுக்கும் சக்திக்கும் பிரம்மாண்டமா கோயில் கட்டிடனும்னு சொல்லிருக்காரு .. உனுக்கு தெரியாததுல்ல.. இப்போ, இங்கயே சோம் மந்திர் கட்ட எவ்ளோ போராட்டமா இருக்குது.. ‘மூன்’லயும் அந்த மாதிரி பஞ்சாயத்து ஆயிடக் கூடாதுன்னு வார்னிங் குடுத்துருக்கிறாரு..  இன்வெஸ்ட்மெண்டுக்கு ‘டைமிங் இஸ் வெரி கிரிட்டிகல்’ மாப்ள.. 70 வர்ஷத்துக்கப்றம் இப்பதான் காஷ்மீர்ல எல்லாரும் நெலம் வாங்கலாம்னு ஓபன் பண்ணி விட்டாங்க.. அந்த மாதிரி இதுல அசால்ட்டா இருந்திர கூடாது” என்று வரது ப்ரஷர் ஏற்றினான்.

“நீங்க ரெண்டு பேர் சொல்றதும் வாஸ்தவந்தாண்டா .. ஐ அக்ரி.. இருந்தாலும் ‘விக்ரம்’ நேத்து அனுப்புன மெசேஜ்ல எதோ ‘எர்த் குவேக்’ மாதிரி அதிர்வெல்லாம் இருக்குன்னு ரெஜிஸ்டர் பண்ணியிருந்துது… நோட் பண்ணீங்களா? எனுக்கு என்னன்னா, ‘மூன் குவேக்’னு எதுனா வந்து மொத்தத்துக்கும் மோசமாயிடுச்சின்னா? அதான் கொஞ்சம் வெயிட் பண்லாமான்னு கேக்குறேன்”

“ஆங்.. அப்டி பர்ட்டிகுலரா பாயிண்ட் பண்ணி கேட்டின்னா வெளங்கும்… நான் அந்த தகவல் வந்தவுடனே விசாரிச்சிட்டேன்.. இப்போ இங்க, ஐ மீன் – பாரத்ல, ‘வருதே பாரத்’னு லாஞ்ச் பண்ணாங்கல்ல .. வெள்ளக்காரன் நம்ம நாட்ட சீரழிக்க போட்ட ‘மீட்டர் கேஜ்’ டிராக்ல ‘வருதே பாரத்’ வண்டிங்க கொஞ்சம் தடுமாறுது பாத்தல்ல.. அதான் நிலாவுல அட்வான்ஸா ‘புல்லட் டிரெய்ன்’ ஓடறளவுக்கு டிராக் போடறதுக்கு வேலையை ஆரம்பிச்சிருக்கு சர்க்கார்.. அதுக்கு பில்லர் போடறதுக்குத் தான் யூ.பி.லருந்து புல்டோசர் அனுப்பி பள்ளந்தோண்டறாங்க.. ‘’ப்ரக்யான்’ ரோவர்க்கு அந்த தகவலை அனுப்பல போல..  யூ.பி. புல்டோசர்ங்க  இல்லையா? செம பவர்ஃபுல்லா இருந்திருக்கும்.. அதத்தான் ‘ப்ரக்யான்’ நிலவு நடுக்கம்னு தப்பா சென்ஸ் பண்ணிடுச்சின்னு மகாசபைகாரங்க கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க.. நம்ம அங்க ரெஜிஸ்டிரேஷன்லாம் முடிக்கிறதுக்குள்ள ‘வருதே ஆதிரா’ டிரெய்ன் ஓட ஆரம்பிச்சிடுமாம்..” என்றான் வரது.

என் முகத்தில் லேசாகத் தெரிந்த சந்தேக நிவர்த்தியைச் சரியாகக் கண்டுபிடித்த ஜனா, “அப்டி போடு.. ஆல் கிளியர் மச்சி.. பையன் சிந்திச்சுத் தெளிவாயிட்டான்.. நாளைக்குப் போறோம், கையெழுத்துப் போட்றோம், வாங்கறோம் .. நாலு.. இல்லல்ல..  நாப்பது ஏக்கர் வாங்கறோம் .. ” என்று என் சார்பாக வாக்களித்து உணர்ச்சிவசப்பட்டான்.

– வோல்டெய்ர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad