\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யாரவள்?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments

தீ ஜுவாலை போல் அதிகாலை சூரிய வெளிச்சம் தொலைவிலிருந்த நீர்த்தேக்கத்தில் பட்டு அந்தப் பகுதியையே ஜொலிக்கச் செய்துகொண்டிருந்தது. மஞ்சளையும், குங்குமச் சிவப்பையும் கலந்து, குழைத்தெடுத்துத் திட்டுத் திட்டாய்ப் பூசியது போன்ற வர்ண ஜாலம். குளப் பகுதியின் அருகில், சிறிய நாரைக் குடும்பம் ஒன்று, சுறுசுறுப்புடன் இரை தேடி இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தது. அதிலும் அந்த குட்டி நாரைக்கு அதிகப் பசி போல. பெரிய நாரைகளுக்கு முன்னால் நடந்தவாறு, அலகினால் நிலத்தில் குத்திக் குத்தி பசியாற்றிக் கொண்டது. பின்புல சூரிய ஒளி, அந்த நாரைகளை ‘சில்லவுட்’ நிழற்சாயல் ஓவியமாய் மாற்றிக் காட்டியது.

வீட்டின் பின்பக்க ‘டெக்’கில் அமர்ந்து காபி உறிஞ்சிக் கொண்டிருந்த சக்தி, இயற்கையின் அசாத்தியமான கலைத்திறனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே சூரிய ஒளியின் அற்புத ஜாலங்களினால் ஈர்க்கப்பட்டவன் சக்தி. அந்தக் காரணத்துக்காகவே ‘லாக்ஹீட் மார்டின்’ நிறுவனத்திலிருந்து வந்த வேலைவாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டு, ஏழு மாதங்களுக்கு முன் ஃப்ளாரிடாவிற்கு மாற்றலாகி வந்திருந்தான். முப்பத்தியிரண்டு வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வழக்கமாக வீடு வாங்குவோர் பார்க்கும் தரமான பள்ளி, மருத்துவ மற்றும் அடிப்படைத் தேவைக்கான வணிக வசதி என்ற எந்த நிர்பந்தமும் இல்லாமல், அடர்ந்த காடு போல், சற்று மேடான நிலப்பகுதியில் அமைந்திருந்த இந்த வீட்டைத் தேடித் தேடி வாங்கினான். நகரப் பகுதிகள் போல், இங்கு நெருக்கமான வீடுகள் இல்லை; அக்கம் பக்கத்திலிருந்த பெரும்பாலானோர் பணிஓய்வு பெற்ற முதியவர்கள். வேலைக்குச் செல்லும் முன், ‘டெக்’கில் அமர்ந்து காபி குடிக்க சக்தி செலவிடும் இந்த அரை மணி நேரம் அன்றைய பணிச் சுமையைச் சமாளிக்க போதுமான மனவுறுதியைக் கொடுத்துவிடும். இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், சூரிய தரிசனம் நேரக் கட்டுபாடின்றி நீடித்துக் கொண்டிருந்தது. மனம் லயிக்க, இயற்கையின் அற்புதவுலகில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தவனை, அடுத்தடுத்து சிணுங்கிய செல்ஃபோன் ஒலி பூமிக்கு அழைத்துவந்தது. ஒரு கையில் காபி கோப்பையைப் பிடித்து தளர்வாக அமர்ந்திருந்தவன், சற்று நிமிர்ந்து செல்போனை எடுத்தான். லிசா, வெள்ளிக்கிழமை பார்ட்டியில் எடுத்த சில புகைப்படங்களை அனுப்பியிருந்தாள்.

காபியின் சூடு ஆவியாக மாறி கண்ணாடியை மங்கலாக்கியிருந்தது. கண்ணாடியைத் துடைத்துவிட்டு போட்டதும் படங்கள் துல்லியமாகத் தெரிந்தன.  லிசா, மோனா, ஸ்டீவ், சுந்தர், ஜேசன், கெவின், ஜிம், நிதின், ராஜ், ஃபைசல், ஆஷ்லி, லியா, சாரா என இன்னும் பலர். சக்தியால் அனைவரையும் அடையாளம் காண முடிந்தது. அந்த ஒருத்தியைத் தவிர. இரண்டு நாட்களாக அவன் மண்டையைக் குடாய்ந்து கொண்டிருக்கும் ஒற்றைக் கேள்வி – யாரவள்?

சென்ற வெள்ளிக்கிழமை – மதியத்துக்கு மேல் கெவின் கொடுத்துவிட்டு சென்ற பணிகளை முடித்துவிட்டு சக்தி கிளம்பிய போது ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. அவனைத் தவிர அனைவரும் சென்றுவிட்டிருக்க, அவனது கார் மட்டும் பார்க்கிங்கில் தனியாக நின்றிருந்தது. சக்தி, தோள் பட்டையில் ஒரு பக்கமாக மாட்டியிருந்த ‘பேக் பேக்கை’ காரின் பின் சீட்டில் வைக்க கதவைத் திறந்த போது மல்லிகை வாசம் அவனது முகத்தைத் தழுவியது. பின் சீட்டில் ஏராளமான மல்லிகை உதிர்ந்திருந்தன. பூட்டி வைத்திருந்த காரில் பூக்கள் எப்படி என்று  எத்தனித்தவனுக்கு காலையில் ‘சன் ரூஃபை’ மூடாமல் விட்டுச்சென்றிருக்கிறோம் என்பது புரிந்தது. கட்டிட முகப்பில் இராட்சசத்தனமாய் படர்ந்திருந்த மல்லிக்கொடியிலிருந்து அவை உதிர்ந்திருக்க வேண்டும்.  நாம் எப்போதும் இப்படி கவனக்குறைவாக இருந்ததில்லையே என்று நினைத்தபடி, பூக்களைப் பொறுக்கியபோது ‘நாங்கள் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறோமே’ என்று அவை கெஞ்சுவது போலத் தோன்றியது. தனது எண்ணவோட்டத்தை நினைத்துச் சிரித்தவாறு, முன் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.  ஏர்கண்டிஷனர் காற்று பரவியதும், மல்லிகை மணம் இனம்புரியாத கிளர்ச்சியை உண்டாக்கியது. மனம் ‘ஜாஸ்’ இசையை நாட,  ‘ஆல்ஃபா மிஸ்ட்’ இன் ‘வேரியபல்ஸ்’ ஆல்பத்தை ஒலிக்கச் செய்து காரை நகர்த்தினான் சக்தி.

சில நிமிடங்களில் நகரச் சாலைகளைக் கடந்து, அதிகச் சத்தமில்லாத புறநகர் பகுதிக்குள் நுழைந்தபோது, இருட்டின் அடர்த்தித் தெரிந்தது. ‘அடிஷன் அரேனா’ இவெண்ட் செண்டரைக் கடந்த பின் சாலை விளக்குகள் ஏதுமின்றி, கார் ஹெட்லைட் விளக்குகள் இருளுக்குள் துளையிட்டு, குகைக்குள் கார் செல்வது போன்றதொரு உணர்வை உண்டாக்கியது. ‘ப்ராஸ்’ இசை, மல்லி வாசம், கும்மிருட்டு –  சக்தி வாழ்க்கையில் இதுபோன்ற ‘காம்போ’வை அனுபவித்ததில்லை. அந்த ரம்மியச் சூழல் மனதை பஞ்சுபோலாக்கி மேலே மேலே பறப்பது போன்ற போதையைத் தந்தது. ஏசி குளிர்ச்சியில் கண்ணயர்ந்து விடுவோமோ என்ற அச்சத்தில் , ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கிவிட்டபோது, மெலிதாக தென்பட்ட மண்வாசம், எங்கோ தூரத்தில் மழைபெய்து கொண்டிருப்பதைச் சொல்லியது. வெகுசீக்கிரம் தானும் மழையில் பயணிக்க நேரிடலாமென்பதை உணர்ந்து, ‘சன்ரூஃப்’ சரியாக மூடியிருக்கிறதா என்று தலையை நிமிர்த்தி ஊர்ஜிதப்படுத்திக்கொண்டான். காலையில் நேர்ந்த ஒரு சிறு கவனப் பிசகு தன் வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டு, சாலைக்குப் பார்வையைத் திருப்பிய அந்தத் தருணம், சரேலென ஏதோவொரு உருவம் குறுக்கே ஓடியது போலிருந்தது…’தட்’ என்ற பலமான சத்தம். அதிர்ந்து போய் சடாரென பிரேக்கை அழுத்தியதில், டயர்களின் கிறிச்சென்ற சத்தத்துடன்  வண்டி குலுங்கி நின்றது. யாரையோ அடித்துத் தள்ளிவிட்டோமோ என்ற பயம் அவனைக் கவ்விக்கொண்டது. அடிவயிற்றில் சில்லிப்பு பரவ கதவைத் திறந்துகொண்டு இறங்கிச் சென்று காரின் முன்பக்கத்தைப் பார்த்தான் சக்தி. ஹெட்லைட் ஒளி கண்ணைப் பறித்ததால் முன்பக்கத்தில் எதுவும் தெரியவில்லை. பின்புறம் திரும்பி ரோட்டைப் பார்த்தான்.. யாருமில்லை.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலையில் வேறெந்த வண்டி வெளிச்சமுமில்லை. செய்வதறியாது ஒரிரு நொடிகளில் நின்றவன், காரின் ஹெட்லைட்டை ஆஃப் செய்துவிட்டு, செல்ஃபோனை எடுத்துக் கொண்டுவந்து ‘ப்ளாஷ்லைட்’ வெளிச்சத்தில் பம்ப்பரில் ஏதும் ரத்தக்கறை அல்லது சேதாரம் தென்படுகிறதா என்று பார்த்தான். ஏதுமில்லை. காருக்கு பின்புறத்திலும் விபத்து நடந்ததிற்கான எந்த அறிகுறியுமில்லை. வண்டிக்குப் பின்னால் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று ‘பிளாஷ்லைட்’டை அடித்துப் பார்த்தான். ஒருவருமில்லை. ஒரு சிறிய பாறாங்கல் உடைந்து கிடந்தது. ஆனால் அவனது உள்ளுணர்வு ஏதோவொரு காருக்கு சில அடிகள் முன்னால் ஒரு உருவம் பாய்ந்ததை அழுத்தமாகச் சொல்லியது. பயம், குழப்பம் என பல எண்ணங்கள் சுழல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘ஹலோ.. எனிபடி தேர்?’ என்று கத்திப் பார்த்தான். கதவு திறந்தேயிருந்ததால், காரில் ஒலித்துக் கொண்டிருந்த ‘ஜாஸ்’ இசையைத் தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. சாலையின் இருமருங்கிலும் ‘லைட்’ அடித்துப் பார்க்க, ஓளி பாய்ந்த வரையில், ஆங்காங்கே உயரமாக வளர்ந்திருந்த புற்தரை தான் தெரிந்தது. மீண்டும் சில முறை உரக்க, ‘ஹலோ’, ‘எனி ஒன் தேர்?’ என்று கத்தி பார்த்துவிட்டான். ‘ஜாஸ்’ பாடலொன்று முடிந்து அடுத்தப் பாடல் தொடங்கயிருந்த இடைவெளியில் மொத்தச் சூழலும் நிசப்தமாகிப் போனது. எந்த விபத்தும் நடக்கவில்லை போலும்; எதோ அயர்ச்சியில் தனக்குள் எதேச்சையாக ஏற்பட்ட பிரமையாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் தோன்ற சற்றே நிம்மதி படர்ந்தது. காரை நோக்கி நடந்தான். உள்ளே அமர்ந்து, கதவை மூடிவிட்டு, பெல்ட்டைப் போடும் பொழுது சடாரென ஒலித்த ‘பிராஸ்’  இசை அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மெலிதான் ‘ஜாஸ்’ கூட நிசப்தத்தைக் கிழிக்கும் போது எவ்வளவு அதிர்வுகளைத் தருகிறது? ‘கப் ஹோல்டரி’லிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து இரண்டு மடக்குகள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ‘நத்திங் ஹேப்பண்ட் சக்தி.. யூ ஆர் ஆல்ரைட்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு காரை நகர்த்தினான்.

இப்பொழுது லேசாகத் தூறத் துவங்கிவிட்டிருந்தது. ‘வைப்பரை’ ஆன் செய்து விட்டு வேகத்தைக் கூட்டினான். அதுவரையில் ஒலித்துக் கொண்டிருந்த ‘ஆல்ஃபா மிஸ்ட்’ நின்றுவிட்டது.. முழு ஆல்பமும் அதற்குள் முடிந்துவிட்டதா என்ற சந்தேகம் வந்தாலும், ‘டேஷ் போர்ட்டை’ பார்க்க பார்வையை நகற்றக் கூட அச்சப்பட்டு சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ‘ஹெட்லைட்’ வெளிச்சத்தில், மழைத் துளிகள் ஏவுகணைகள் போல் பாய்ந்துவந்து, கண்ணாடியில் மோதி நீராய் வழிந்துகொண்டிருந்தன. திடிரென ‘ஸ்கைலர் க்ரே’யின் ‘ஐ ஆம் கமிங் ஹோம், டெல் த வோர்ல்ட் ஐ ஆம் கமிங் ஹோம் – லெட் த ரெய்ன் வாஷ் அவே – ஆல் த பெயின் ஆஃப் எஸ்டர்டே’ என்ற பாடல் ஒலித்தது. ‘ப்ளே லிஸ்டி’ல் இல்லாமல், எப்படி இந்தப் பாடல் ஒலிக்கிறது என்று குழம்பினான் சக்தி. ஒரு வேளை ரேடியோவிலிருந்து ஒலிக்கிறதோ? ஆனால் தான் மாற்றாமல் எப்படி ரேடியோவுக்கு மாறும்? ஓரிரு வினாடிகள் ‘டேஷ் போர்டில்’ பார்வையை ஓடவிட்ட போது, ‘டிராக் அன்-அவெய்லபில்’ என்று காட்டியது.  பதட்டத்தில் ‘ஸ்டீரிங் வீல் கண்ட்ரோலில்’ கைபட்டிருக்குமோ? பல கேள்விகள் வந்து மோதின. வீட்டுக்கு செல்லும் மழை நாளில், தனக்காகவே யாரோ ஒலிக்கவிட்ட பாடலாகத் தோன்றியது சக்திக்கு.  சாலையை விட்டு கண்களை அகற்றாமல் துழாவித் துழாவி மீண்டும் ‘ஜாஸ்’ இசைக்கு மாற்றினான்.

வீட்டை அடைந்தபோதும் மழை விட்டபாடில்லை. மணி எட்டரையை நெருங்கிவிட்டிருந்தது. வழக்கமாக ‘டைமரில்’ இயங்கும் விளக்குகள் எதுவும் எரியவில்லை. மழையினால் மின்சாரம்  போயிருக்குமோ என்ற நினைத்தபடி கராஜைத் திறந்தான். வீட்டுக்குள்ளும் டைமர் விளக்குகள் எதுவும் எரியவில்லை. ஸ்விட்சைப் போட்டாலும் ‘ஹால்வே’ விளக்குகள் எரியவில்லை. ‘ஃப்ளாஷ் லைட்டை’ அடித்து அனைத்து ஸ்விட்சுகளையும் போட்டான். எதுவும் எரியவில்லை. இன்று ஏன் எல்லாம் இப்படி நடக்கிறது? வரும் வழியில் நடந்த கார் சம்பவம் இன்னும் அகன்ற பாடில்லை; கூடவே இவை வேறு. முதுகில் மாட்டியிருந்த பையை வைத்துவிட்டு ‘பவர் சர்க்யூட்டை’ பார்க்கலாம் என்று நினைத்தவாறே ப்ளாஷ்லைட் ஓளியின் துணையோடு லிவிங் ரூமுக்குள், நுழைந்தான். ஏதோ ஞாபகத்தில், தினமும் செய்வது போல, லிவிங் ரூம் சாண்ட்லியர் ஸ்விட்சைப் போட்டான்.

விளக்குகள் எரிய, சடாரென்று கோரஸாக ஒலித்த “ஹேப்பி பர்த்டே” என்ற பிளிறல், சக்தியைத் திடுக்கிட்டு, நிலைகுலையச் செய்தது. “ஹோலி ஷி..” எனச் சொல்லப் போனவன், சுதாரித்து பையைத் தரையில் வைத்துவிட்டு, இரு கைகளையும் முழங்காலில் வைத்துக் குனிந்து, தலைக் கவிழ்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதற்குள், லிசா, ராஜ், நிதின், மோனா, ஜேசன் இன்னும் பலர் வந்து அவனது தோளைத் தட்டி ‘ஹேப்பி பர்த்டே மேன்’ என்று வாழ்த்தினார்கள். சக்தி, பயத்தில் வெளிறிய முகத்தைக் காட்ட வெட்கப்பட்டு இன்னும் தலை கவிழ்த்தபடி குனிந்திருந்தான். ஒரு சில வினாடிகளுக்குப் பின்னர், உள்ளங்கைகளால் முகத்தை அழுந்தத் தேய்த்துவிட்டு நிமிர்ந்தவன், முகத்தை ஆச்சரிய உணர்வுக்கு மாற்றிக் கொண்டு, “தேங்க்ஸ் கைஸ்..  ஐ டோண்ட் நோ .. எனக்கு.. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..  இதை எதிர்பார்க்கவேயில்லை.. மை குட்னஸ்..”

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் சகி..” என்ற ஆஷ்லி “நீ ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து ‘ரெஸ்ட்’ எடு.. ‘ஹார்ட் அட்டாக்’ எதாவது வந்துட போகுது.. தண்ணி குடி” என்றவள் மேஜையிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து நீட்டினாள்.

அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத சக்தி, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்து, எழுந்து நின்று அனைவரையும் ஒரு நோட்டம் விட்டான்.. வெட்கப்பட்டுச் சிரித்தவாறே அனைவர்க்கும் நன்றி சொன்னதும், ஒவ்வொருவராய் அவனை நெருங்கி, தோழமையோடு அணைத்து, கைகுலுக்கி வாழ்த்தினார்கள். கூடவே சிலர் அவனது  முகத்தில் இன்னுமும் ஒட்டியிருந்த பயத்தைக் கிண்டலடித்தார்கள்.

கெவின் “இந்த வருஷமாவது ‘ஹார்ட்லி’ வாங்கிடு.. ஜாலியா டூரடிக்கலாம்” என்று வாழ்த்தினான். பக்கத்தில் நின்றிருந்த ஸ்டீவ், சிரித்துக்கொண்டே “ஆமாமாம்.. பணம் பத்தலைன்னா கெவின் கிட்ட கேளு.. தருவான்” என்றவாறே கட்டியணைத்தான். “ஹேப்பி பர்த்டே விஷஸ்.. சகி” என்று கன்னத்தில் லேசாக முத்தமிட்ட லியா, பக்கத்திலிருந்தவனைக் காட்டி, “இது நேதன்.. என் பாய்ஃப்ரண்ட்” என அறிமுகம் செய்துவைத்தாள். “நைஸ் டு மீட் யூ ஆன் யுவர் பர்த்டே மேன்” என்றவன் அழுத்தமாகக் கை குலுக்கினான். சுந்தர், “32 ஆயிடுச்சி… இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணிடு பாஸ்” என்று கண்ணடித்தான். ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லி கைகுலுக்கியதற்கு எந்த யோசனையுமில்லாமல் புன்னகையுடன் பதிலளித்துக் கொண்டிருந்தான் சக்தி.

கிட்டத்தட்ட அனைவரும் வாழ்த்துச் சொல்லி முடித்தபிறகு, கடைசியாய் அவள் வந்தாள். “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று மென்மையாகச் சொல்லி அதை விட மென்மையான கரங்களால், அவனுடைய கையைப் பிடித்துக் குலுக்கினாள். ‘ஜாஸ்மின்’ ஃப்ரேக்ரன்ஸ் போட்டிருப்பாள் போலும்; அல்லது ‘ஜாஸ்மின்’ ஷாம்புவா? எதோவொன்று,  நெருக்கத்தில் அந்த வாசம் அவனை ஒரு நொடி கிறங்கடித்தது. சுதாரித்துக் கொண்டு “நன்றி.. ரொம்பத் தெளிவான தமிழ் கேட்டு நிறைய நாளாச்சு..” என்பதற்குள், முதுகில் கைவைத்து, தனது முகத்தை அவனது தோள் மீது வைத்து லேசாக அணைத்தவள் அவனது காதோரம் “நான் ரேணு” என்று சொல்லி, விலகி, அவனை நேராகப் பார்த்து சன்னமாகச் சிரித்தாள். வழவழவென மெழுகாய் மின்னிய முகத்தில் அளவாய் ‘ரூஜ்’ பூசியிருந்தாள்; நேர்த்தியாய் வளைந்திருந்த புருவம்; அவற்றின் நடுவே இருந்தும் இல்லையெனும் மிகச் சிறிய, மெலிதான பொட்டு; செயற்கையில்லாத இமை ரோமங்கள். அவளது கரங்களை விடவே மனமில்லை சக்திக்கு.. “என்னுடைய உடைந்த தமிழை முதல் முதலாய் பாராட்டியதே நீங்கள் தான்” என்றவள், கைகளை விடுவித்துக் கொண்டு பின்னால் நகர்ந்தாள். அந்த நொடியில் “ஹேய் பட்டி.. நான் பிளான் பண்ணிதான் உனக்கு வேலை கொடுத்துட்டு வந்தேன்.. இங்க வந்து எல்லாம் ‘செட்டப்’ பண்ண அவகாசம் வேணும்னு சாரா தான் சொன்னா.. என்னைத் திட்டாத .. ஹேப்பி பர்த்டே”  என்று இடைமறித்தான் கெவின். வரிசையாய் ஒவ்வொருவராய் வந்து வாழ்த்திய பின், வெட்கப்பட்டவாறே, “உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை… இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. “ என்று ஏதேதோ பேசினான்..

“சரி..சரி.. சீக்கிரம் முடிச்சின்னா, கேக் கட் பண்ணிட்டு ‘ஷேம்பய்ன்’ ஓப்பன் பண்ணலாம்.. ரொம்பத் தாகமாகயிருக்கு” என்று யாரோ சொல்ல, லிசா வட்ட வடிவமான ‘கேக்’ ஒன்றை மேஜையின் மேல் திறந்து வைத்து, ஒரே ஒரு மெழுகுவர்த்தியை பக்கத்தில் வைத்தாள். “உனக்கு எத்தனை வயசாச்சுன்னு எனக்குத் தெரியாது.. அந்தக் கேள்வியைக் கேட்டு உன்னை சங்கடப்படுத்த விரும்பல.. அதான் ஒரே ஒரு ‘கேண்டில்’” என்று காரணம் கற்பித்தாள்.

“அவன் பாதி கிழவனாயிட்டான்” என்ற குரல் எங்கிருந்தோ வந்ததில், சக்தி மேலும் வெட்கப்பட்டான். கேக் வெட்டியதும் ‘ஷாம்பெய்ன்’ பாட்டிலைக் கொண்டுவந்து நீட்டினான் ஜிம். பாட்டிலைத் திறந்ததும் யாரோ ஒருவர் அவன் கையைப் பிடித்துக் குலுக்க, ‘ஷாம்பெய்ன்’ பொங்கி வழிந்தது. எதிரே நின்றிருந்த சிலர் மீது தெளித்த நுரை, ரேணு மீதும் விழ, இடது கை சுட்டு விரலால் மெதுவாகத் துடைத்துவிட்டுக் கொண்டு அவனைப் பார்த்து மெலிதாய்ப் புன்னகைத்தாள். அங்கிருந்த கொண்டாட்ட மனநிலை எழுப்பிய சத்தம் எதுவும் காதில் போட்டுக் கொள்ளாமல், கண்களைச் சுருக்கி அவளிடம் மன்னிப்புக் கேட்டான். அவளும் இதமாய் இமைகளை மூடித் திறந்து அதனை ஏற்றுக்கொண்டு சிரித்தாள். உடனே அவளை அழைத்து பேசவேண்டுமெனத் தோன்றியது சக்திக்கு.

கால்வாசி நிரப்பபட்ட ‘ஷாம்பெய்ன்’ கிளாஸை அவன் முகத்துக்கு முன்னர் நீட்டிய சுந்தர்.. “என்ன பாஸு.. நான் சொன்னதைக் கேட்டு, சுறுசுறுப்பா காரியத்தில இறங்கிட்ட போலிருக்கு.. இன்னைக்கே ப்ரோபஸ் பண்ணிடுவ போலிருக்கே” என்று நக்கலடித்தான்.

“நீ வேற.. யாருடா அது? சூப்பரா இருக்கா..”

“ஏய் .. என்ன எங்கிட்ட யாருன்னு கேக்கற? நீ தான் கூட்டிட்டு வந்திருக்கன்னு நான் நெனச்சேன்..”

“நான் கூட்டிட்டு வந்தேனா.. ஒதைபடுவே .. நானே அல்லோகலப்பட்டு வந்து சேந்தேன்.. கடுப்பைக் கிளப்பாத.. அவ யாருன்னே தெரியாது…”

“அப்படியா? நெஜமாவா சொல்ற? ஒரு வேளை கம்பெனில புதுசா சேர்ந்திருக்குமோ? விசாரிக்கலாம்னா பேரு கூட தெரியாதே..”

“‘ரேணு’ன்னு சொன்னா”

“அப்டி போடு .. ராசி, நட்சத்திரமெல்லாம் கேட்டு வெச்சிட்டியா?”

சுந்தரின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள், லிசா கரோகி மைக்ரோஃபோனில் பேசத் துவங்கினாள்..

“ஹே சகி.. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், உன் ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சிக்காக வாழ்த்துகிறேன். ‘மே வி ஆல் ட்ரிங்க் டு இட்.. சியர்ஸ்’” என்று உச்சஸ்தாயி குரலில் வாழ்த்த, எல்லோரும் “சியர்ஸ்” என்று எதிரொலித்தனர். ஒரிரு நிமிடங்களில், கையில் கிளாஸுடன் அவரவர் குழுக்களாய் சடசடவென்று பேசத் துவங்கிவிட்டிருந்தனர். லிசா, சக்தி அருகில் வந்து, “சாரா, ஸ்டிவ், ஜிம், ராஜ், நிதின் எல்லாம் சேர்ந்து தான் இந்த ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’க்கு பிளான் பண்ணாங்க.. சுந்தர் தான் உன் வீட்டு ‘செக்யூரிட்டி கோட்’ கொடுத்தான்.. ஜிம் நாலு மணிக்கே வந்து இண்டர்நெட் கட் பண்ணிட்டான்.. ‘ஸ்விட்ச் ஒயர்ஸ்’ எல்லாம் ‘டிஸ்கனெக்ட்’ பண்ணதும் அவந்தான்.. ‘ஹாலோவீனை’ ஒட்டி உன் பர்த்டே வர்றதால, அதையே ‘தீமா’ வெக்க மோனா தான் ‘சஜெஸ்ட்’ செஞ்சா..”

“மை குட்னஸ்.. ஒரு பெரிய டீமே வேலை செஞ்சிருக்கு போல… இந்த டீமோட அன்புக்கு நான் எப்பவும் நன்றியுள்ளவனா இருப்பேன்… வாழ்க்கையிலே ‘சர்ப்ரைஸ் பர்த்டே’ எல்லாம் இருந்ததேயில்ல… ‘இன்ஃபாக்ட்’ நேத்து என் பிறந்த நாளுக்கு, என் சிஸ்டர் விஷ் பண்ணப்ப தான் எனக்கு ஞாபகமே வந்தது… நீங்க என் பர்த்டேவை டிரேஸ் பண்ணி இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சதுக்கு தேங்க்ஸ்” என்றவன் ஒரு சிறிய இடைவெளி விட்டு  “பை த வே… நீங்க தான் அந்த கார் இன்சிடெண்ட்க்கு எதாவது ஏற்பாடு பண்ணியிருந்தீங்களா?” என்று லிசாவைப் பார்த்து கேட்டுவிட்டான். என்ன கேட்கிறான் இவன் என்று புரியாமல் அவள் பக்கத்திலிருந்த மோனாவை பார்க்க, இவனும் மோனாவின் பக்கம் பார்வையைத் திருப்பினான். உதட்டைப் பிதுக்கிய மோனா, பக்கத்திலிருந்தவர்களைப் பார்க்க அவர்களும் எதும் புரியாமல் சக்தியைப் பார்த்தார்கள். ஒரு கணம் எல்லோரது பாவங்களையும் பார்த்த சக்தி இவர்களுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்ற உறுதியோடு, “இல்ல, சும்மா தான் கேட்டேன்.. வர்ற வழியில கார்ல ஒரு சின்ன பிராப்ளம்.. அதான் அதுவும் உங்க ‘ப்ளானோ’ ன்னு நெனச்சேன்… ‘எனிவே… லெட்ஸ் எஞ்சாய் த டிரிங்க்ஸ்…’ என்று சமாளித்தான்.

அங்கங்கே குழுக்களாய்க் கூடியிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தவாறே அவளைத் தேடிக் கண்களைச் சுழலவிட்டான்… லியாவிடம் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தாள் அவள். ஒருவேளை லியாவுடன் வந்தவளாக இருக்குமோ? அல்லது லியாவின் பாய் ப்ரெண்டுடன் வந்திருப்பாளோ? யாரவள்? என்ற கேள்வி மண்டைக்குள் ஓடியவாறிருந்தது. அவளிடம் மறுபடியும் பேசிவிட மனது துடித்தது. ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை… மது, சாப்பாடு, விளையாட்டு, கேலி, கிண்டல் என்றவாறு நேரம் ஓடிக் கொண்டிருந்தது… ஓரிரு முறை எதேச்சையாக இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. சன்னமான குறுநகைகளைத் தவிர அவளுடைய கண்களில் வேறெந்த  அழைப்பும் இல்லாதது சக்திக்கு ஏமாற்றமாகவே இருந்தது. தனியாக அவளைப் பிடிக்க முடியவேயில்லை. எப்பொழுதும் யாருடனாவது, ஏறக்குறைய அனைவரிடமும், பேசிக் கொண்டேயிருந்தாள். எப்படியும் யாராவது அவளுடைய ‘காண்டாக்ட்’ எண்ணை வைத்திருப்பார்கள். ‘லாக்ஹீட்’ மெயில் சிஸ்டத்தில் ‘ரேணு’ என்று  தேடினால் கிடைக்கலாம்… திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டுமே என்று மனம் வருந்தியது. இன்று எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டுமென்ற அவனது எண்ணம் நிறைவேறவேயில்லை.

இரவு மணி ஒன்றை நெருங்க, ஒவ்வொருவராய் கிளம்பத் துவங்கினார்கள். சிலர் கிளம்பும் முன்னர் அவனுடன் நின்று படமெடுத்துக் கொண்டனர்… ஜிம் பின்னாடி நின்று கொண்டு, சக்தியின் தலைக்கு மேல் கொம்பு முளைத்தது போன்று விதவிதமாய் கைகளை விரிக்க சிரிப்பலை மோதியது… சக்திக்கு அதெல்லாம் பிடிபடவேயில்லை… அவன் மனம் ‘அவள் வருவாளா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தது… அவளது முறையும் வந்தது. அருகில் மேஜை மேலிருந்த கேக்கில் சுட்டு விரலால் சிறிதளவு ‘ஐசிங்’கை எடுத்து சக்தியின் மூக்கில் பொட்டு போல் வைத்துவிட்டு அவனை லேசாக அணைத்துக் கொண்டு “‘ஹேப்பி பர்த்டே ஒன்ஸ் அகெய்ன்… தேங்க்ஸ் ஃபார் ஹேவிங் மீ” என்றவள் ஓவென்று எழுந்த சிரிப்புச் சத்தம் அடங்கும் முன், “நீங்க வந்தது என் மகிழ்ச்சியை இரடிப்பாக்கிவிட்டது… மீண்டும் விரைவில் சந்திப்போம்” என்று அவள் காதுக்கு மட்டுமே கேட்கும்படி சொன்னான் சக்தி… “கண்டிப்பா..” என்றவாறு அவள் விலகியத் தருணம் அவளது கன்னம் சக்தியின் கன்னத்தில் உரசியது. ஜாஸ்மின் மனம் அவனைக் கிறங்கடித்தது… அந்த சில நொடிகள் அவன் அதுவரையில் அனுபவித்திராத புதுவித உணர்வை அவனுள் பரவச் செய்தது… ஆகாயத்தில் மிதப்பது போலிருந்தது. அதன்பின் ஒவ்வொருவராய் விடை பெற்றதும், பேசியதும் அவன் மூளையில் பதிவாகவேயில்லை. அவன் மூளையெங்கும் பரவி வியாபித்திருந்த,  ஒரே கேள்வி, ‘யாரவள்?’

ன்று இதோ, லிசாவின் புகைப்படங்களைப் பார்க்கும் வரையில், விடை தெரியாமல், அந்தக் கேள்வி தீயாய்ப் பரவி, மனதில் கனன்று கொண்டிருந்தது. நேற்று முழுதும் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டான். அனைவரும் ஏறத்தாழ ஒரே விதமாய், எதிர்மறையாகவே பதிலளித்தனர்… ‘எனக்குத் தெரியாது… அவளா வந்து பேசினா… நான் படிச்ச அதே ஸ்கூல்ல படிச்சதா சொன்னா… அதைப் பத்தி பேசினோம்… அதைத் தவிர வேறெதுவும் தெரியாது’ என்றாள் லியா. ‘என்னோட டிரெஸ் பத்தி பேசினா… சில நிமிடங்கள் மட்டுமே பேசினாலும், ரொம்ப ‘ப்ரெண்டிலியா’ இருந்தா…’ என்றாள் மோனா. ‘நீ உன் வீட்டை அழகா வெச்சிருக்கிறதா சொன்னா’ என்றான் ஜிம். ‘உனக்கு எத்தனையாவது பிறந்தநாள் என்று என்னிடம் கேட்டாள்’, ‘ஃப்ளாரிடா வெதர்’ பத்தி பேசினா  என்று ஆளாளுக்கு ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி சொன்னார்களே தவிர, அவள் யாரிடமும் தன்னைப் பற்றி தெரிவிக்கவில்லை என்று புரிந்தது. நாளை எப்படியும் அலுவலக ‘மெயில் சிஸ்டத்தில்’ தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும். எப்படித் தேடுவது? அவளது முழுப் பெயர் என்னவாகயிருக்கும்? ‘ரேணுகா’, ‘ரேணுகாதேவி’..? ஒரு வேளை அவளுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தால்? சடாரென தன் மனவோட்டத்தை எண்ணி வெட்கப்பட்டான் சக்தி… நான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன்… அவள் அழகானவள்… அதைத் தவிர நாம் எதையும் நினைக்கக்கூடாது… குறைந்தபட்சம் இப்போது வேறெந்த எண்ணமும் எனக்கு வரக் கூடாது, என்று தன் மனதுக்குக் கடிவாளம் போட்டான்… ‘இருந்தாலும்…’ என்று அவன் மூளை வேறொரு கோணத்தைத் திறக்க முற்பட, இப்படியே உட்கார்ந்திருந்தால் அவளது நினைவு தன்னை விழுங்கிவிடுமென நினைத்த சக்தி, காஃபி கோப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

தியம் 3 மணியளவில், பின்கட்டில், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த புற்களை, ட்ரிம் செய்து, சீரமைப்பதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான் சக்தி. வாசலில் யாரோ வந்திருப்பதை உணர்த்தும் வகையில் ‘செக்யூரிட்டி கேமரா’, செல்ஃபோனில் ஒலியெழுப்பியது. ‘ஸ்வெட் பேண்டி’ லிருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். வாசலில் ஒரு வயதான தம்பதி சந்தேகம் கலந்த முகத்துடன் நிற்பது தெரிந்தது. யாராக இருக்கக்கூடும் என்று நினைத்தவாறே, வாசலை நோக்கி நடந்தான் சக்தி. கதவைத் திறந்து வெளியில் இறங்கியதும், அவர்கள் லேசான நிம்மதியுடன் லேசாகப் புன்னகைத்தனர்.

“சாரி.. உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்.. நீங்கதான் இந்த ஹவுஸ் ஓனரா?” என்றார் வந்திருந்தவர். அவர் முடிப்பதற்குள் “சக்தி பிரசாத்..?” என்று கேள்வியெழுப்பினார் அந்தப் பெண்மணி.

யாரோ நம்மைத் தெரிந்தவர்கள் என்று நினைத்த சக்தி, “ஆமாம்… நான் தான் சக்தி…” என்றவாறு அவர்களை நெருங்கினான்.

“அப்பாடி… “ இப்போது அவர்களது நம்பிக்கையும், சிரிப்பும் அதிகரித்தது. “நான் நந்தகிஷோர்… இது என் ஒய்ஃப் சந்திரா… இந்த வீட்டு ‘பிரீவியஸ் ஓனர்ஸ்’…” என்று சிரித்தார்.

சட்டென அவர்கள் பெயர் நினைவுக்கு வந்தவுடன், “ஓ… வாங்க… உள்ள வாங்க… ‘ஆன்லைன்’ல க்ளோஸிங் நடந்ததால நான் உங்களை சந்திக்க முடியலை…” என்றவாறு அவர்கள் உள்ளே வர ஏதுவாக கதவை நன்றாகத் திறந்தான்.

“நான் உங்களைத் தொந்தரவு படுத்த நினைக்கல… திடிர்னு ஒரு வேலைக்காக ப்ளாரிடா வர வேண்டியிருந்தது.. அப்படியே இங்க வந்து பாக்கணும்னு தோணுச்சு… ‘கராஜ்’ கதவு திறந்திருந்ததால நீங்க வீட்டில இருப்பீங்கன்னு கதவைத் தட்டிட்டோம்” என்றார் நந்தகிஷோர்.

“ஒன்னும் பிரச்சனையில்ல… உங்களை நேர்ல பாத்தது ரொம்ப சந்தோஷம்… உக்காருங்க…” என்றான் சக்தி. அங்கங்கே பியர் பாட்டில், வைன் கப்ஸ், என அலங்கோலமாக இருந்தது லிவிங் ரூம்.

சந்திரா, வீட்டை நோட்டமிடுவதைப் பார்த்துவிட்டு, “ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சின்ன பார்ட்டி இருந்தது… ஆக்சுவலா போன வாரம் புதன்கிழமை என் பிறந்தநாள் வந்தது… ஆபிஸ் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வெள்ளிக்கிழமை ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி வெச்சிருந்தாங்க… சோம்பேறித்தனப்பட்டுகிட்டு இன்னும் க்ளீன் பண்ணல… சாரி” என்று வழிந்தவாறே எதிரேயிருந்த ரிக்ளைனரில் அமர்ந்தான் சக்தி.

“நோ, நோ.. இதெல்லாம் ரொம்ப சகஜந்தானே… உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்து உங்களோட செலிபிரேட் பண்ணது ரொம்ப நல்ல விஷயம்… ‘பிலேட்டட் பர்த்டே விஷஸ்’” என்ற சந்திரா, “ஆக்ச்சுவலி, போன வெள்ளிக்கிழமை நந்துவோட பிறந்தநாள்… ஹி டர்ண்ட் சிக்ஸ்டி… இங்க ஃப்ளாரிடால இருக்க ஒரு ‘ஃபேமிலி’ அதுக்காகவே எங்களை இன்வைட் பண்ணியிருந்தாங்க…“ என்று சொல்லிச் சிரித்தார்.

“ஓ… வாவ்… என்ன ஒரு ‘கோ-இன்சிடென்ஸ்’, ‘பிலேட்டட் பர்த்டே’” என்று அவருடன் கைகுலுக்கினான்.

“தேங்க்யூ… நான் அதிக நேரம் எடுத்தக்க விரும்பலை, நாங்க காலி பண்ணிட்டுப் போகும் போது, பழைய டாகுமெண்ட்ஸ், சில ஃபோட்டோஸ் எல்லாம் போட்டிருந்த பெட்டி ஒன்னை ஞாபகமறதியா ‘கராஜ் ஆட்டிக்’ ல விட்டுட்டுப் போயிட்டோம்… அதான் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா எடுத்துட்டுப் போலாம்னு நெனச்சேன்” என்றார் நந்து.

“கண்டிப்பா… நான் ஆட்டிக் செக் பண்ணவேயில்லை… இன்ஃபாக்ட், என்கிட்ட இருக்க குறைவான பொருட்களுக்கு ‘ஆட்டிக்’ இல்ல பரண் எதுவும் தேவைப்படலை… நீங்க தாராளமா எடுத்துக்குங்க… கராஜ்லேயே ஒரு லேடர் இருக்கு… அதுக்கு முன்னால, நீங்க என்ன குடிக்கறீங்க… சோடா, டீ, காஃபி..” என்று இழுத்தான்.

“இல்லல்ல சக்தி, நாங்க லேட்டா தான் லஞ்ச் சாப்பிட்டோம்… ஐ ஆம் ஃபைன்… உங்களுக்கு எதாவது வேணுமா?” என்று நந்துவைக் கேட்டார் சந்திரா.

“உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா, நான் கொஞ்சம் காஃபி எடுத்துக்கறேன்” என்றார் சக்தியைப் பார்த்து.

“எந்தப் பிரச்சனையும் இல்ல… எனக்கு ‘இந்தியன் காஃபி’ ரொம்ப பிடிக்கும்… உங்களுக்கும் கொஞ்சம் காஃபி போடறேன்” என்று சந்திராவிடம் சொல்லிய சக்தி எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தான்.

காஃபி போட முன்னேற்பாடுகளை செய்துவாறே பேச்சைத் தொடர்ந்தான் சக்தி… “இப்ப எங்க இருக்கீங்க… அடிக்கடி இங்க வந்துட்டு போலாமே…”

“நாங்க இப்ப ‘சான் டியாகோ’ல இருக்கோம்…“

“வாவ்… ‘சான் டியாகோ… நைஸ்… பிள்ளைங்க அங்க இருக்காங்களா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல… இன்ஃபாக்ட் நாங்க ரெண்டு பேரு தான்… உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன… எங்களோட பொண்ணு சில மாசங்களுக்கு முன்ன தவறிட்டா… அதான் இங்க இருக்க மனசில்லாம மாத்திக்கிட்டு போயிட்டோம்…”

“ஓ சாரி… வெரி சாரி…” என்றான் சக்தி.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த சந்திரா… “அவ இருந்திருந்தா இவரோட பிறந்த நாளை விமரிசையா கொண்டாடியிருப்போம்… போன பிறந்த நாளப்ப கூட சொல்லிகிட்டிருந்தா, ‘பா… உங்களோட சிக்ஸ்டியத் பர்த்டே இங்க தான் செலிபிரேட் பண்ணனும்… எல்லாரையும் இன்வைட் பண்ணனும்னு’ சொல்லிக்கிட்டே இருந்தா… எங்களுக்குக் கொடுத்து வைக்கல” என்றவர் நந்துவைத் திரும்பிப் பார்த்தாள்.

“தட்ஸ் டெரிபிள்… ” என்று காஃபி போடும் வேலையை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி நந்துவின் முதுகைத் தடவிக் கொடுத்தவன் “கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க… உடம்பு முடியாம இருந்தாங்களா, ‘எனி சிக்னஸ்’?” என்று இழுத்தான்…

“இல்லப்பா… நல்லாத் தான் இருந்தா… காலையில கிளம்பிப் போனவள்… சாயந்திரம் திரும்ப வரும்போது… இங்கதான் ‘அடிஷன் அரேனா’ கிட்ட… ஒரு ஆக்ஸிடெண்ட்… எவ்வளவோ டிரை பண்ணோம்… பயனில்ல… போய் சேந்துட்டா…” சந்திராவின் குரல் உடைந்து தழுதழுத்தது.

‘அடிஷன் அரேனா’… சக்திக்குத் தூக்கிவாரிப்போட்டது…

“அவங்க பேரு?..” என்று பயத்துடன் இழுத்தான்..

“ரேணு.. ரேணுச்சந்திரா'”

  • மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad