\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புலரும் புதிய ஆண்டு

Filed in தலையங்கம் by on January 16, 2024 0 Comments

மீண்டுமொரு ஆண்டு உருண்டோடிவிட்டது. வேகமாகப் பறந்து, கடந்து போகும் காலத்தின் நிழல் நம் மீது படர்ந்து, மனதில் பல நினைவுகளை விட்டுச் செல்கிறது. பெரும்பாலானவை மெதுவே கலைந்துவிட சில அழுத்தமாகப் பதிந்து வாழ்வின் சுவடுகளாக, அனுபவங்களாக மாறிவிடுகின்றன. கடந்த ஆண்டில் நாம் எல்லோரும் இனிப்பும், கசப்பும் கலந்த பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். இந்தாண்டும் பலவித சந்தோஷங்களையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இயற்கையின் நியதி.  

2023 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் கணிசமாகக் குறைந்தது. இப்பெருந்தொற்றுத் தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பு (WHO), ஜனவரி 30, 2020ஆம் ஆண்டு அறிவித்திருந்த உலகளாவிய சுகாதார அவசர நிலையை மே 5, 2023 அன்று விலக்கிக் கொண்டது. 2021ஆம் ஆண்டு துவக்கத்தில், உலகளவில், வாரத்துக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நிலை, 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஏறக்குறைய 3500 எனக் குறைந்தது. அவசர நிலை முடிவை அறிவித்துப் பேசிய உலகச் சுகாதார அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ரயன், “தொற்றுக்கு எதிரான போர் முற்றிலுமாக வெல்லப்படவில்லை. இதன் (நோய்க் கிருமிகள்) முன் நாம் இன்றும் பலவீனமாகவே இருக்கிறோம். பலவிதமாகத் திரிபடைந்து வரும் வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு நாடும் கவனமாகச் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். “பொதுவாக ஒரு பெருந்தொற்றின் (pandemic) முடிவு, மற்றொரு பெருந்தொற்றுக்கான துவக்கமாக இருக்கக் கூடும்” என்று அவர் கோடிட்டுச் சொல்லியது, ஒவ்வொரு நாட்டின் பொதுச் சுகாதார அமைப்புக்கும், விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.

உலகச் சுகாதார நெருக்கடிகளின் முடிவு சற்றே நிம்மதியளித்த போதும், மறுபுறம், புவிசார் அரசியல் நிலைப்பாடுகள் போர்ப் பதட்டங்களை அதிகரித்துள்ளன. ஏற்கனவே, ஃபிப்ரவரி 2022 இல் தொடங்கிய  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான படையெடுப்புக்கான தீர்வுகள் எதுவும் புலப்படாத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வெடித்த இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மூன்றாம் உலகப்போராக மாறிவிடுமோ என்ற அச்சம் விரவி வருகிறது. 2023ஆம் ஆண்டில், ஊடகத்தின் கவனத்தை இந்த இரண்டு போர்களும் ஆக்கிரமித்துக் கொள்ள, சூடான் மற்றும் மியான்மரில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் வெளிச்சத்துக்கு வராமலே போயின. அதே போல் கணினி சில்லுகள் உற்பத்தியில் முன்னணியிலிருக்கும் தைவானைக் கைப்பற்ற சீனா  மேற்கொள்ளும் முயற்சிகள், போர்ச் சூழலை மூட்டி வருகின்றன.

இதற்கிடையில், தட்பவெப்ப அமைப்பு வகை மாற்றங்கள் ஒருபுறம் புதிய சவாலாக உருவெடுத்து வருகிறது. புவி வெப்பமடைதல் நினைத்ததை விட மோசமடைந்து வருவதைக் குறிக்கும் வகையில், உலகின் பெரும் பகுதிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கும் கோடை வெப்பத்தைச் சந்தித்து வருகின்றன. 2023 இயற்கைப் பேரழிவுகள் பன்மடங்கு அதிகரித்து, உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலான துயரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி, சிரியா, மொராக்கோ, சீனா, ஃபிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration) கணக்குப்படி, அமெரிக்காவில், 2023 மார்ச் முதல் செப்டம்பர் வரை மட்டும் 73 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. வறட்சி, பெரும்புயல், தொடர் மழை, வெள்ளம், பூகம்பம் எனப் பல வடிவங்களில் நிகழ்ந்த பேரழிவுகளை மறுசீரமைக்க சுமார் $400 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவாகும் என்று கணித்துள்ளது NOAA. எளிதில் கணிக்க முடியாத பேரழிவுகள், வருமாண்டுகளில் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கக் கூடுமென்பதால், அனைத்துலக நாடுகளும் இவற்றைச் சந்திக்கத் தயாராக வேண்டியது மிக, மிக அவசியம். 

ஜனநாயகச் சித்தாந்தம், உலகம் முழுவதும் பல அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் எதிர் கொண்டிருக்கிறது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் 2024ஆம் ஆண்டில் முக்கிய தேர்தல்களை எதிர்கொள்கின்றன. இவற்றின் முடிவுகள் உலகளாவிய பொருளாதாரம், எல்லைச் சிக்கல், பாதுகாப்பு, அயலுறவு போன்ற துறைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளிடையே நிலவும் வர்த்தகம், தேர்தல்களுக்குப் பிறகு புதிய கொள்கை வடிவம் பெறும். கூட்டு ஒப்பந்தங்கள், அந்நிய முதலீடுகள், தொழில்நுட்பப் பகிர்வுகள், ஆயுத வணிகம், தாராளமயமாக்கல், ஏற்றுமதி / இறக்குமதித் தளர்வுகள் போன்றவை தேர்தல்களுக்குப் பிறகு புதிய வடிவமெடுக்கும் வாய்ப்புள்ளது. 

உலகச் சந்தை எனும் கோட்பாடு உருவான பின்பு, எந்தவொரு நாட்டின் பொருளாதார மாற்றமும் தனித்தே நடைபெறுவதில்லை. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்பது போல ஒரு நாட்டின் பொருளாதார மாற்றம் வேறொரு நாட்டில், வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் பணவீக்கம், உலகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும். பணப் பரிமாற்ற விகிதங்கள், வட்டி விகிதங்கள், சொத்து விலைகள், வருமான விநியோகம் ஆகியவை கடன் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கும். பெருந்தொற்றுக் காலத்தில் பாதிப்படைந்த விநியோகச் சங்கிலி வருமாண்டில் சீரடைய வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளது. ஆனால் எங்கோ நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகள் சர்வதேச பொருளாதார நிலையை உடனடியாக மாற்றக்கூடும் என்பதைத் வர்த்தக / அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளில் நெகிழ்வுத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டிய தருணம் இது.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், 2024 ஆம் ஆண்டில், ‘ஆழ் கற்றல்’ (deep learning), ‘உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) போன்றவை மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் சமுதாயத் தாக்கத்துக்கு மனித குலம் தயாராக வேண்டிய கட்டம் இதுவென்பது மிகையில்லை. மில்லியேனியல்ஸ் (Millennials), ஜென்-ஸீ (Gen-Z) தலைமுறையினருக்கு இவை பெரும் சவாலாக, அதே சமயம் மாற்றம் தேடும் நல்வாய்ப்பாக அமையக்கூடும். பேபி பூமர்ஸ் (Baby boomers), ஜென்-எக்ஸ் (Gen-X) தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்களால் பணிநிலை மாற்றங்களுக்குக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதனால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து, பணவாட்டம் (Deflation) என்ற கெடுசுழற்சியை உருவாக்கும் அபாயமும் உள்ளது. கெடு நோக்குடைய போலித் தகவல்கள் (fake news), போலியுருவத் தொழில்நுட்பங்கள் (Deep fake) புதிய தலைவலியாக மாறி வருகின்றன. (இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் உச்சமடைவதற்கு இவ்வகையான போலிச் செய்திகள் காரணமாக அமைந்ததை மறுக்கவியலாது). எண்ணியல்  பொருளாதாரத்துக்கு (digital economy) மாறத் துடிக்கும் உலகநாடுகள் அனைத்தும் தங்களது இணையப் பாதுகாப்பு (cyber security) மற்றும் இலக்கத் தடயவியல் (digital forensics) துறைகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஆளும் அரசுகள் பலவும் போலிச் செய்திகள், போலியுருவத் தொழில்நுட்பங்களைப் பாவித்து, லாபமடையவும்  ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் முனைவது வருத்தத்துக்குரியது. 

சாமானியர் அச்சப்பட உடனடித் தொந்தரவுகள் இல்லையென்றாலும், அண்மையில் விண்வெளி ஆதிக்கத்துக்குப் பல நாடுகள் முனைவது கவனத்துக்குரியது. விண்வெளி ஆர்வத்தின் எழுச்சி, விண்வெளி செயல்பாடுகளை நிர்வகிக்கும் விதிகளின் பற்றாக்குறையையும் எடுத்துக்காட்டுகிறது. ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘ப்ளூ ஆரிஜின்’ மற்றும் ‘விர்ஜின் கேலக்டிக்’ போன்ற தனியார் நிறுவனங்கள் விண்வெளி நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகிப்பதால் விண்வெளிக்கான விதிகளை உருவாக்குவது சிக்கல்கள் நிரம்பியது.  எல்லைகள் வகுக்கப்படவில்லை என்றாலும், பூமியைக் கடந்து, வான்வெளிப் பாதுகாப்பு (Space security) என்ற புதியதொரு சகாப்தம் துவங்குவது அவசியமெனவே தோன்றுகிறது. விண்வெளி ஆக்கிரமிப்புப் போட்டி வலுப்பெறும் வேளையில், எதிரி நாட்டுச்  செயற்கைக் கோள்களைச் (satellite) செயலிழக்கச் செய்யும் உத்தி பரவி வருவது மிகவும் ஆபத்தான விஷயம். சில மாதங்களுக்கு முன்பு, உக்ரைன் மீதான போரின் போது, ஐரோப்பிய ‘வையாசாட்’ நிறுவனத்தின் செயற்கைக் கோள்கள் மீது லேசர் கதிர்களைச் செலுத்தி அவற்றின் நிழற்பட மற்றும் தகவல் பரிமாற்றத் தொடர்புகளைத் துண்டித்தது, ரஷ்யா. எண்ணியல் யுகத்தை (digital era) நோக்கி உலகம் பீடு நடை போடும் வேளையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள், பலத்த பின்னடைவை உண்டாக்கும்.

சுகாதாரத் துறையில் (Healthcare) ‘வருமுன் காப்போம்’ என்ற கொள்கை பலப்பட்டு வருவதைக் காண முடிகிறது. அமெரிக்காவில், மருத்துவமும், தகவல் தொழில்நுட்பமும் கைகோர்த்து, செயற்கை நுண்ணறிவுத் துணையுடன் ஏகப்பட்ட முன்னெடுப்புகள் துளிர்த்து வருகின்றன. சமூகப் பராமரிப்புத் தொடர்பாகப் புதிய துறைகளும், பணி வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. இதனால், சமூகத்தில் மருத்துவச் செலவு குறைவதுடன், எளிதில் மருத்துவ வசதிபெறும் வாய்ப்பும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சில வகையான புற்றுநோய்களைப் பூரணமாக குணப்படுத்தும் மருத்துவம் வசப்படும் தூரம் அதிகமில்லை என்றும் மருத்துவ உலகம் நம்புகிறது.

சென்ற ஆண்டில், எந்த நேரத்திலும் வருவேன் என்று மிரட்டி வந்த பொருளாதார மந்த அச்சுறுத்தலை எப்படியோ சமாளித்து விட்டோம். இந்தாண்டும் அது மிரட்டலாக மட்டும் கடந்து விட்டால் மகிழ்ச்சி தான். மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு, முந்தைய ஆண்டுகளைப் போலவே சவால்களும், சந்தோஷங்களும் கலந்ததாயிருக்கும். ஒரு வகையில் 2019-20 களில் மனித குலத்தை ஆட்டிப் படைத்த பெருந்தொற்று, நமக்கு எந்தச் சவாலையும் சந்திக்கக் கூடிய திடத்தையும், வலிமையையும் அளித்துள்ளது. கரு மேகங்களிடையே தோன்றும் ஒளிக் கதிர்களை நோக்கி, நம்பிக்கையுடன் பயணிப்போம்.

பனிப்பூக்கள் சஞ்சிகை சார்பில், அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad