\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சுறை வேறு!

Filed in கதை, வார வெளியீடு by on February 13, 2024 0 Comments

ன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி.

டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ். 

“அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ ஒருத்தர் தொண தொணன்னு பேசுறதக் கேட்டுண்டு இருக்க வேண்டியது… அப்டி என்னதான் இருக்கோ அந்த அரசியல் நியூஸ்ல…” என்று கரித்துக் கொண்டே, “அதான்னா, அவ க்ளாஸ்மேட் அவன் தான்னா, பேருகூட அபிராமோ, அர்விந்தோ… அவன் கூட சினிமாவுக்கு அனுப்பாதேள்னு சொன்னேனே கேட்டேளா?” என்றவளை இடைமறித்து, “அதுக்கென்னடி இப்போ… அவளுக்குப் பதினெட்டு வயசாயுடுத்து.. இதுவே அமெரிக்காவா இருந்திருந்தா…” என்று முடிப்பதற்குள், “போதும், போதும், பொண்ணப் பெத்த அப்பா மாதிரி பேசுங்கோ… என்னவோ பெரிய புரட்சித் திலகம்னு மனசுல நெனப்பு…” பொரிந்து தள்ளிவிட்டாள்.

அப்பா அம்மாவின் சம்பாஷணைகளைத் தன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பாரதி. அமெரிக்காவிலேயே பிறந்து, அங்கே பலவருடங்கள் வாழ்ந்து சமீபத்தில் இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தவள். தமிழ் நன்றாகப் புரியும், பேசவும் முடியும் ஆனால் பேச மாட்டாள். அப்பாவும் அம்மாவும் தனக்குக் காது கேட்காது என்று நினைக்கின்றனரா, இல்லை தமிழ்ப் புரியாது என்று கருதுகின்றனரா? எதுவாக இருந்தாலும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளதாக நினைத்தாள் அவள். 

அவர்களின் தன்னைக் குறித்த பேச்சுக்கள் ஹாலில் தொடர, பொறுக்க இயலாமல் கோபமாய் விறுவிறுவென வெளியே வந்து, “அப்பா, அம்மா, கேன் யூ கய்ஸ் ஸ்டாப் திஸ்? ஸ்டாப் திங்கிங்க் ஐ ஸ்ட்டில் காண்ட் அண்டர்ஸ்ட்டேண்ட் டமில் ..” பொரிந்து தள்ளினாள். 

“இல்லடி இவளே, நான் தான் நீ பட்ர கஷ்டம் பொறுக்காம அப்பாகிட்ட சொன்னேண்டி… அவர் எதாவது ஹெல்ப் பண்ணுவாரேன்னுட்டு…” 

“ஐ’ம் நாட் ஸ்ட்ரக்ளிங்க் வித் எனிதிங்க்… தேங்க்ஸ் எனிவேஸ்..” படக்கென அறைக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றாள் பாரதி.

“ம்ம்ம்…. இந்தக் காலத்துக் கொழந்தேள் எது நாம சொல்றதக் கேட்டுது..” சலித்துக் கொண்டே சென்றவளை நிறுத்தி, “வெத ஒண்ணு போட்டா, சுற ஒண்ணா மொளைக்கும்… உம் பொண்ணு சொல்ற மாதிரி, ஆப்பிள் டஸிண்ட் ஃபால் டூ ஃபார் ஃப்ரம் த ட்ரீ” என்று அவர்களின் ஃப்ளாஷ் பேக்கை நினைக்கத் தொடங்கினான் கணேஷ்.

காதலை அவளிடம் பகிர்ந்துவிட்டு அமெரிக்கா சென்றான் கணேஷ். அவனிடம் தினமும் அமெரிக்காவிற்கு ஃபோன் செய்து பேசுவதற்கு பாட்டியின் பணத்தைப் பல வகையில் ‘கொள்ளை’ அடித்தாள் லக்‌ஷ்மி. இத்தனைக்கும், ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடத்திற்கு மேல் பேசியதில்லை. ஃபோன் செய்து, அவள்தான் என்று தெரிந்தவுடன் கட் செய்துவிட்டு, அங்கிருந்து அவன் ஃபோன் செய்வான். லாங்க் டிஸ்ட்டன்ஸ் ரிலேஷன்ஷிப் உடனடியாகத் துண்டாகிவிடும் எனத் திடமாக நம்பும் அமெரிக்காவில், இவர்கள் இருவரும் ஒன்பதினாயிரம் மைல்கள் இடைவெளியிலும் காதலிக்க முடியுமென்று காட்டிக் கொண்டிருந்தனர். 

அப்பொழுதெல்லாம் இந்தியாவிலிருந்து அமெரிக்கா ஃபோன் செய்ய வேண்டுமென்றால், கிட்டத்தட்ட முழு மாத சம்பளத்தையும் செலவிட வேண்டும். அமெரிக்காவிலிருந்து அழைப்பதும் கணிசமான தொகையாகுமெனிலும், இந்தியாவிலிருந்து ஆகும் செலவில் பாதிகூட இருக்காது. 

ஒவ்வொரு மாதமும் அவனது ஃபோன் பில் பல பக்கங்களைத் தொடும்; அந்தப் பல பக்கங்களில் தொண்ணூறு சதவிகிதத்தை அழகாக அலங்கரிப்பது அவளது நம்பர்தான். பில் வந்தவுடனே, அதனைப் பிரித்து, அழகான பேட்டர்ன் போல அவளின் தொலைபேசி எண் வரிசையாகக் காணப்படுவதைப் பலநாள் பார்த்து ரசித்திருக்கிறான். காதல் வயப்பட்டவன் கிறுக்கனாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதற்கு அதுவும் ஒரு சாட்சி. 

இப்பொழுதெல்லாம் உலகின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கு வேண்டுமானாலும் ஐந்து பைசா செலவில்லாமல் பேசமுடிகிறது. இன்றைய தலைமுறை, ஒரு மாதத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் அமெரிக்க டாலர்வரை தொலைபேசிக் கட்டணம் கட்டிய அவனைக் கற்பனையில்கூட கண்டிராது. ஒவ்வொரு மாதமும் அந்தத் தொகையைப் பார்த்துவிட்டு, ‘இனிமேல் இவ்வளவு நேரம் பேசக்கூடாது’ என்று வைராக்கியம் கொள்வான். அந்த வைராக்கியமும் பிரசவ வைராக்யம் போலத்தான், மறுமுனையில் அவளின் குரல் கேட்டவுடன் அந்த வைராக்யம் போன இடம் தெரியாது. 

முதன்முறையாக இந்தியா திரும்பியபோது, அவனைப் பார்ப்பதற்காக லக்‌ஷ்மி செய்த சாகசங்கள் கொஞ்ச நஞ்சமன்று. எங்கே போகிறாய் என்ற அம்மாவுக்கு, கல்லூரி நண்பர்களுடன் டூர் செல்கிறேன் என்று பொய் சொன்னாள். 

தன் கிராமத்திலிருந்து இரண்டு பேருந்து ஏறி அவனிருக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டும். அவன் வீட்டிற்கு நேரிடையாகச் செல்ல இயலாது; ஏதேனும் ஒரு ஓட்டல் எடுத்துத் தங்க வேண்டும். அந்த ஊர் முன்பின் தெரியாத ஊர்; தெரியாத மொழி; பல தினங்களாகத் திட்டமிடத் தொடங்கினாள். 

இவளின் ரகசியம் முழுவதும் அறிந்த தோழி உமாவை அழைக்க, அவளும் இவளுக்கு உதவ முன்வந்தாள். ஆனால், அவளுக்கும் ஊர் தெரியாது, மொழி புரியாது. அவளின் நண்பன் ஒருவனை உடனழைத்துக் கொண்டு மூன்று பேரும் ஊர் வந்து சேர்ந்தனர். 

கணேஷுக்கு இந்த விபரமெதுவும் தெரியாது. அன்று காலை எழுந்து, தான் இந்தியாவில் வேலை செய்த நிறுவனத்திற்குச் சென்று, தனக்கு வரவேண்டிய பி.எஃப் ட்ரான்ஸ்ஃபர் பற்றிப் பேசுவதாகத் திட்டம். காலையில் தொலைபேசி, மறுமுனையில் எப்பொழுதும் கேட்கும் அதே குரல். “நான் இப்பொழுது உன் ஊரில் இருக்கிறேன். அந்த ‘சங்கர் லாட்ஜ்’ஜில் தங்கி இருக்கிறேன்.

கணேஷிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. ‘என்ன லாட்ஜோ, எப்படிப்பட்டவங்களோ… ஊரும் தெரியாம, பாஷையும் புரியாம வந்துட்டா பாரு..’ அவள்மீது இருந்த அக்கறையும், கரிசனமும் அடங்காக் கோபமாய் மாறிவிட்டிருந்தது. தான் ஒரு வருடமாக ப்ளான் போட்டு வைத்திருந்த அலுவலக வேலைக்கும் செல்ல முடியாத நிலை.‘சங்கர் லாட்ஜ்’ நோக்கிச் செல்லலானான். 

நேரில் பார்த்தவுடன் நன்றாகத் திட்டவேண்டும், என்ன காரியம் செய்திருக்கிறாய் இதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கக்கூடும் எனப் பல நினைவுகளை மனதில் போட்டு அரைத்துக் கொண்டே ஆட்டோவில் லாட்ஜைச் சென்றடைந்தான். 

அதன் வெளிப்புறத்தைப் பார்த்த அவனுக்கு, இன்னும் கோபமும் பயமும் அதிகரித்தது. ‘இதைப் பாத்தாலே நல்ல இடம் மாதிரி தெரியலயே; இந்தப் பைத்தியக்காரி இங்க வந்து தங்கியிருக்காளே” மனதில் நினைத்துக் கொண்டே அவள்கொடுத்த ரூம் நம்பர் கதவைக் கோபமாகத் தட்டினான்.

“எப்டி இருக்கேள்” – அன்றலர்ந்த தாமரையான அந்த முகம். இலேசாக அரும்பிய சிறு ரோமங்கள் மேலுதட்டின் மேற்புறம்; அழகான வரிசையாய் அமைந்து பளீரெனச் சிரிக்கும் வெண் பற்கள்; சற்றே எடுப்பான மூக்கு; காதினை ஒட்டி தடம் பதிக்கும் கருநிறக் கூந்தல்; லேசாக விழும் கன்னக்குழி; திடமான, வட்டமான தாடை; நீண்ட நெற்றி அதன்மீது தவழும் சில கூந்தற்கால்கள்; சங்குபோல் வரிவரியாய் விரியும் கழுத்துப் பகுதி; இவள் சிறுமியன்று முழுமையான பெண்ணென்று காட்டும் முன்புற அழகுகள்… பார்த்த மாத்திரத்தில் கரைந்தே விட்டான். 

கொண்டிருந்த அத்தனை கோபமும் காணாமல் போயிருந்தது. அவனையறியாமல் கண்களில் காதல் கசிய, அதனை உணர்ந்தவளாயினும் உடல் ஸ்பரிஸத்திற்கு இடம் கொடுக்காமல் தள்ளியே நின்றாள் அவள். ஒரே வருடத்தில் அமெரிக்க வாழ்க்கை அவனுக்குச் சில தைரியங்களைக் கொடுத்திருந்தது. அந்தத் தைரியத்துடன் அவளருகே சென்று, அவள் எதிர்பாரா அந்த வினாடியில் இறுக அணைத்தான்.

“நோ, நோ… இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்” என்று விலக்க முயன்றவளின் விளக்கம் எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. அவன் கைகள் சற்றுச் சுதந்திரமாக அலைய, உதடுகளும் உறைவிடம் நோக்கிச் செல்லத் துவங்கியது. புலியின் பிடியிலிருந்த தப்ப முயற்சித்த பெண்மானின் நல்ல நேரம், டீ குடிக்கப் போயிருந்த உமாவும் அவளின் நண்பனும் ரூம் திரும்பினர். அவர்களைப் பார்த்தவுடன் கணேஷ் தனது குதிரைக்கான கடிவாளத்தை இழுத்துப் போடலானான்.

ந்த ஃப்ளாஷ் பேக் அவனைச் சற்று உலுக்கியது. விதை, ஆப்பிள் என்றெல்லாம் தத்துவம் பேசியவன் அந்த நிகழ்வை நினைத்ததும் சற்றே ஆடிப்போனான் என்றுதான் சொல்ல வேண்டும். பாரதியும் நம் போல் ஏதாவது செய்திருப்பாளோ? செய்ய அனுமதித்திருப்பாளோ? பதினெட்டு வயது நிரம்பினால் முழுப் பருவம் அடைந்த பெண்ணென்று கொள்ள வேண்டுமா? இதை நினைத்துத்தான் லக்‌ஷ்மி அவ்வளவு வருந்தினாளா? அன்று நாம் செய்யும் பொழுது அவ்வளவு இனித்தது இன்று அடிவயிற்றில் நெருப்பாய் ஜொலிக்கிறதே? இதனை என்னவென்று சொல்வது, கணேஷின் எண்ண ஓட்டங்கள் நின்றபாடில்லை. அவனுக்குச் சற்றே வியர்க்கத் தொடங்குகையில், அறைக் கதவைத் திறந்து கொண்டு பாரதி வெளியே வந்தாள்.

“அப்பா… அம்மா… டோண்ட் ஸ்ட்டார்ட் டு இமாஜின் திங்க்ஸ்… வி வெண்ட் ஃபார் அ மூவி… அண்ட் டின்னர்… பெர்ஹாப்ஸ் ஹி நெவர் ஹேட் தட் எக்ஸ்பீரியன்ஸ் பிஃபோர்… ஹி… ஹீ… ஹீ… ட்ரைட் கிஸ்ஸிங்க் மீ… அண்ட், ஐ கேவ் ஹிம் அ ஸ்ட்ராங்க் ஸ்லாப்… அண்ட் கேம் ஹோம்” படபடவென நடந்தது என்னவென்று சொல்லி முடித்தாள் மகள்.

“இந்தச் சுறை நன்றாகவே வளர்ந்துள்ளது, விதை அவ்வளவு சரியில்லையெனினும்” – பழமொழிக்குப் புதுப் பொருளை உணரத் தொடங்கினான் கணேஷ்.

  வெ. மதுசூதனன்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad