சங்கமம் 2024
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவான ‘சங்கமம்’, இந்தாண்டு ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று நடைபெற்றது. மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், திரைப்பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கேற்ற மலரும் மொட்டும், தன்னார்வலர்களுக்கான விருது, போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என இடைவிடாமல் ஆட்டம், பாட்டம், பாராட்டு, அங்கீகாரம் என நிறைவாக இவ்விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு, இங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் மரபு கலைகளைக் கற்று கொடுப்பதற்காக, தமிழ்நாட்டில் இருந்து திரு. வேலு ஆசான் அவர்களும், திரு. பாவேந்தன் அவர்களும் வந்திருந்தனர். மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து பறை நிகழ்ச்சியில் வேலு ஆசான் அவர்களும், கரகம் நிகழ்ச்சியில் பாவேந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகச் செனட்டர் திரு. ஜான் ஹாப்மென், புகைப்படக் கலைஞர் திரு. ஆர்.ஜே. கெர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு திங்களாக மினசோட்டா ஆளுனர் பிரகடனம் செய்து வருகிறார். இது தற்சமயம் மினசோட்டா மேல்சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனி ஒவ்வொரு ஆண்டும் தனியாக ஆளுனர் பிரகடனம் அறிவிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானத்தை இந்த விழாவில் செனட்டர் ஜான் ஹாப்மென் அவர்கள் வாசித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மினசோட்டா தமிழ் கலைஞர்கள் இடம் பெற்ற புகைப்படம், மினசோட்டா நகரின் மையப் பகுதியில் உள்ள ஹென்னபின் தியேட்டர் ட்ரஸ்ட் கட்டிடச் சுவற்றில் பிரமாண்ட பதாகையில் அச்சிடப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்புகைப்படத்தை எடுத்த மினசோட்டாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் திரு. ஆர்.ஜே.கெர்ன் அவர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல வயதினரும் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளை வந்திருந்தோர் அனைவரும் ரசித்து கண்டுகளித்தனர்.
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.
–ராஜேஷ் கோவிந்தராஜன்.
Tags: sangamam