எண்பதிலும் ஆசை வரும்
என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம்.
அமெரிக்கா
அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அவர் பேசும் பொழுது சற்று வார்த்தை மாற்றி பேசுவது தெரிகிறது. அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்தால், அது தான் இல்லை. பதவி ஆசை யாரை விடுகிறது. 2024 தேர்தலில் அவர் ‘டெமோகிராட்’ கட்சியில் அதிபர் பதவிக்கு மறுபடியும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நிற்பவர் இளையவரா ? அதுதான் இல்லை. இந்த ஜூன் மாதம் வந்தால் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் வயது எழுபத்தெட்டை எட்டுகிறது.
‘செனட்’ தலைவரின் வயது எழுபத்தி மூன்று; எதிர்கட்சி தலைவர் எண்பத்திரெண்டு வயதை எட்டுவார். உலகிலேயே சூப்பர் பவர் என்று கூறப்படும் அமெரிக்கா இப்படி வயதானவர்களால் நடத்தப்படுகிறது. ஏன்? பதவி ஆசை, அதிகார மோகம் என பல காரணங்களைச் சொல்லலாம்.
ரஷ்யா
இந்த ஆசை எல்லாம் ‘கேபிடலிசம்’ இருக்கும் அமெரிக்காவில் தான் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்து ‘கம்யூனிசம்’ பின்பற்றும் ரஷ்யாவிற்குப் போவோம். அதிபர் விளாடிமிர் புட்டினின் வயது எழுபத்தி ஒன்று. அவர் USSR (ஆம், எவ்வளவு பேருக்கு அது நினைவிருக்கிறது ?) நாட்டின் KGBயில் வேலை செய்து பின் படிப்படியாக மேலே வந்தார். அவர் உடல் நிலையில் பல பிரச்சனைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பத்திரிக்கை சுதந்திரம் இல்லாததால் உண்மை நிலையை அறிவது கடினம். ஆனால் ஆசையும் அதிகார மோகமும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
சீனா
அட நம்ம பக்கத்து நாடு சீனா அப்படி அல்ல என்று நீங்கள் நினைக்கலாம். அங்கு அதிபர் பதவி ஐந்து ஆண்டு வரை தான்; மற்றும் ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதாகச் சட்டம் இருந்தது. தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங்கின் வயது எழுபது. அவர் வாழ்நாள் முழுவதும் பதவியில் தொடரச் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. உலக அதிபர்கள் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். பதவி ஆசை தானுங்க.
இந்தியா / தமிழ்நாடு
உலகம் எப்படியோ போகட்டும். நம்ம ஊருக்கு வாங்கய்யா. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வயது எழுபத்திமூன்று. அவர் மறுபடியும் தேர்தலில் நிற்கிறார். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வயது எழுபத்தியொன்று. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வென்று பதவியேற்றார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர் மறுபடியும் தேர்தலில் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்த உலகத்தில் இளைய தலைவர்களுக்கா பஞ்சம்? வயதானவர் ஆசைக்கு அளவில்லை என்றாலும் மக்கள் அதை அங்கீகரிப்பது கவலைக்கிடமாக உள்ளது. கவிஞர் வாலி அய்யாவின் பொன்னான வரிகள் நினைவுக்கு வருகிறது.
தங்கங்களே
நாளைத் தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே
வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்
இந்தப் பாட்டை நினைவு கூர்ந்து இளைய சமுதாயத்திற்குக் கூக்குரலிட்டு இந்த உலகை நடத்த வேண்டுகோள் விடுவோம்.
-பிரபு