\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னைஎன்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். காதல் ஏற்பட குறிப்பிட்ட காரணமில்லையென்றாலும், முதல் ஈர்ப்பை ஏற்படுத்துவது அழகு. இந்த அழகுக்கான வரைவிலக்கணத்தை (definition) விளக்குவது கடினம். அழகு என்பது பார்ப்பவர் பார்வையில் உள்ளது’ (beauty is in the eyes of the beholder) என்பது ஆங்கிலத்திலுள்ள மிகப் பிரபலமான சொலவடை. அப்படிப்பட்ட அழகின் இலக்கணத்தைத் தமிழ்த் திரைக் கவிஞர்கள் பல விதங்களில் சிறப்புறக் கையாண்டுள்ளனர். 

கண்ணதாசன்: 

தமிழ்த் திரையுலகில், புராண, இதிகாசப் படங்களிலிருந்து இயல்பான சமூகப் படங்கள் என்று நகரத் துவங்கியபோது, பாமரனும் அனுபவித்து ரசிக்கும்படி இலக்கிய ரசங்களைப் பிழிந்தெடுத்துத் தந்ததில் கவிஞர் கண்ணதாசனின் பங்கு தலையானது. தத்துவம், விரக்தி, நையாண்டித்தனம் என எண்ணற்ற உணர்ச்சிகளை எளிமையான வரிகளில் உணர்ச்சி பொங்க வடிப்பதில் மன்னராக விளங்கினாலும், கண்ணியமான வரிகளில், காமத்தை ஒளித்து காதல் நயம்படச் சொல்வதில் கவியரசுக்கு ஈடில்லை. எந்த வகையான கதைச் சூழலிலும், காதல் வயப்பட்ட இருவரின் உள்ளத்தையும், உணர்வையும் மிகத் தெளிவாக, எளிமையான சொற்களில் வெளிப்படுத்துவது அவரது அசாத்தியத் திறன். அக்காலத் திரைப்படங்களில், சவால் மிகுந்த கதாபாத்திரங்கள், கதையமைப்புகள் இருந்தன. உடல், மனக் குறைபாடுகள் உள்ளவர்க்கும் காதல் ஏற்படுவதை காவியங்களாகப் படைத்த திரைப்படங்கள் ஏராளம். அவர்களின் குறைபாடுகளைக் கடந்து பீரிடும் காதல் உணர்வை, குறைந்த நேரத்தில் காட்சிகளால் வெளிப்படுத்த இயலாத போது, இயக்குநர்கள் கவியரசரிடம் அந்தப் பொறுப்பைத் தள்ளிவிட்டு விடுவதுண்டு. அதிகபட்சம் இரண்டு மூன்று வரிகளில் இந்தச் சவால்களுக்கு விடை சொல்லியவர் கண்ணதாசன்.

வாய்பேச முடியாத நாயகியைத் தேற்ற முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்; முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் – பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் (மெளனமே பார்வையாய் – கொடிமலர்)”, “தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே, தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே” (வீணை பேசும் – வாழ்வு என் பக்கம்) எனும் பாடல் வரிகள், காதலுடன் சேர்த்து நம்பிக்கையை ஊட்டிய மகோன்னத வரிகள்.

கால் ஊனமுற்றவர் மீதான காதலைச் சொல்லிட சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், சீற்றம் குறைவதுண்டோ” (தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் – பாகப்பிரிவினை) என்பதிலாகட்டும், “புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே” (பொன்னை விரும்பும் பூமியிலே – ஆலயமணி) என்பதிலாகட்டும் உவமைகள் மூலமாக காதலை, அன்பை அடிக்கோடிட்டுக் காட்டியது கவியரசின் தனித் திறமை. பார்வையில்லாத ஒருவர், தன் மனதில் பதிந்திருக்கும் காதலியின் உருவத்தை வருணிப்பது போன்றதொரு சூழல் அமைந்தால் விடுவாரா? நாயகியின் உருவத்தைக் கைகளால் தொட்டு உணர்ந்து, தான் அறிந்த அல்லது தனக்குப் பழக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளோடு ஒப்பிட்டு ஜால வார்த்தைகளால் பாடலைச் செதுக்கியிருப்பது கவிஞரது கற்பனையின் உச்சம். 

ராஜபார்வை திரைப்படத்தில், ‘அழகே அழகு! தேவதை! ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்எனும் பாடலில் தன்னை அந்தக் கதாபாத்திரத்தில் நிறுத்தி, தனக்கெதிரில் இருக்கும் பெண்ணை சிற்பமாய் மனதில் பாவித்து, அதில் சுகித்ததால் அவருக்குள்ளிருந்து தெறித்த பாடல், அவர் மட்டுமே படைக்கக்கூடிய காவியம். 

 

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வியானது

பொன்முகம் தாமரை! பூக்களே கண்களோ!

மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்

 

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றதுஇதில் வண்ணம் என்ற சொல், நிறம் என்பதைக் கடந்த பண்பைக் குறிப்பது. இந்தச் சொல் மீது கவிஞருக்குத் தனிப் பற்றிருந்துள்ளது எனலாம். பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டுஎன்று வண்ணத்திலே ஜாலம் செய்தவர் அவர். 

கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது”, “பொன்முகம் தாமரைஇந்த இரண்டு வரிகளிலும் மற்றுமொரு ஜாலம். தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளை விளக்குவது உவமை எனப்படும். இதில் போல’, ‘ஆகியபோன்ற உவமை உருபுகள் வெளிப்படையாகவோ, தொக்கியோ நிற்கக்கூடும். உருவகத்தில் இருபொருளுக்கும் எந்த வேறுபாடுமின்றி, உவமையைக் கருப்பொருள் மீது ஏற்றுவதால் உவமை உருபுகள் வருவதில்லை. 

மேகம் போல் கூந்தல்என்ற உவமைப்படுத்தியவர், ‘செவிகளை கேள்வியாகவும், ‘முகத்தை தாமரையாகவும் மாற்றிவிடுகிறார். காதுகள் கேள்விக்குறி போல் இருந்தது என்றால் அது உவமை. செவிகள் இரண்டும் கேள்வி(க்குறி)யானதுஎன்றால் உருவகம். அதிலும் சாதாரணச் செவிகள் இல்லை – கொஞ்சுகின்ற செவிகள்‘, சாதாரண முகமில்லை – பொன்முகம்‘. ‘பூக்களே கண்களோஎன்ற உருவகத்தில் தொனிக்கும் வியப்பு – இத்தனை விஷயங்களை, அதுவும் தனிக்கவிதையாக இல்லாமல், மெட்டுக்குள் சம்மணம் போட்டு அமரும் அசாத்திய வரிகள் கவியரசர்க்கு மட்டுமே சாத்தியப்படும். இதையெல்லாம் சொல்லிவிட்டு , ‘மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்என்பதையும், அதாவது இதெல்லாம் என் மனதில் நான் நினைத்தது, நீ அதற்கு மேலும் அழகாக இருக்கக்கூடும் என்ற சமாளிப்பையும் சேர்த்துவிடுவது அவரது சாமர்த்தியம். 

அடுத்த சரணத்தை சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன’, ‘சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றனஎன்ற உவமை வரிகளில் தொடங்கி மூங்கிலே தோள்களோ’, ‘தேன்குழல் விரல்களோஎன்று மூங்கிலைத் தோளாகவும், விரல்களை எளிதில் உடையக் கூடிய, மென்மையான, சுவையான பலகாரமாகவும் உருவகப்படுத்தி, ‘ஒரு அங்கம் கைகள் அறியாததுஎன்ற ஏமாற்றத்துடன், விரசமின்றி முடித்ததற்கு செண்பகப் பாண்டியன் உயிரோடு இருந்திருந்தால் ஆயிரம் பொற்காசுகள் என்ன அறுபதாயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுத்திருப்பார்.

 

சிப்பி போல இதழ்கள் இரண்டும் மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ! தேன்குழல் விரல்களோ!

ஒரு அங்கம் கைகள் அறியாதது

 

இந்த உவமை, உருவகம், வியப்பு என்ற இலக்கண நடையைச் சிறிதும் சிதைக்காத மூன்றாவது சரணம். இலக்கியங்களில் பூங்கொடி இடையாள்என்ற வருணனை இடம்பெற்றிருக்கின்றன. அதை மேலும் விரிவுப்படுத்தி, ‘பூ உலாவும் கொடியைப் போல இடையைக் காண்கிறேன்என்பதில் தான் எத்தனை அழகு. பெண்களின் இடையை வர்ணிப்பதில் கண்ணதாசனுக்கு ஒரு அலாதி சுகம் இருப்பதை, ‘முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் (மெல்ல நட மெல்ல நட – புதிய பறவை), ‘இளைய கன்னியின் இடை மெலிந்ததோ, வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ (அன்புள்ள மான்விழியே – குழந்தையும் தெய்வமும்) போன்ற பல பாடல்களில் காணலாம். (இதில் அனைத்து கவிஞர்களும் வித்தகர்கள் தான். ஒடிவது போல் இடையிருக்கும்என்ற வாலியின் வர்ணிப்பை பிறிதொரு பதிவில் காணலாம்). கால்களின் அழகை எடுத்துச் சொல்ல உடல் பகுதியைக் குறிப்பிடாமல் போகப் போக வாழை போல அழகைக் காண்கிறேன்என்று ரசிகர்களுக்கு அவர் எழுப்பிய விடுகதையாகவே கொள்ளலாம். மாவிலையை பாதத்துடன் ஒப்பிடுவது வடிவத்திற்காக மட்டுமல்ல; மாவிலைச் சாறு பித்த வெடிப்புகளை குணப்படுத்தும் பண்புகள் மிகுந்தது. மென்மையான, வழுவழுப்பானப் பாதங்களை, கவிஞர் மாவிலைப் பாதமாகப் பார்த்ததில் வியப்பேதுமில்லை.

வேதம் என்பது இயற்கையிலிருந்து பிறந்த விஞ்ஞானம் எனலாம்; எளிதில் புலப்படாமல் இயற்கையில் மறைந்து இருப்பதால், தமிழில் அதனை மறைஎன்றும் சொல்வதுண்டு. எவ்வளவு வருணித்தாலும், எவர்க்கும் புலப்படாத ஏதோவொன்று அந்தப் பெண்ணில் ஒளிந்துள்ளது என்பதைத் தான் மங்கை நீ வேதமோஎன்று வியக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. அத்தனையையும் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாய் இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையேஎன்று சரணடைகிறார் கண்ணதாசன். 

 

பூ உலாவும் கொடியைப் போல இடையைக் காண்கிறேன்
                  போகப் போக வாழை போல அழகைக் காண்கிறேன்
                  மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
                  இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே

 

பார்வையற்ற காதலனுக்கு, மேகம், கேள்விக்குறி, தாமரை, மாவிலைவாழை போன்ற பொருட்களின் குணநலன்கள் எப்படி தெரியும் என்ற பாமரக் கேள்வி எழக்கூடும். கேள்வி, அனுபவ ஞானங்களால் அவர்கள் பெறும் அறிவு, விழிகளால் ஏனையோர் உணர்வதைக் காட்டிலும் மிக அதிகம். காலடியை வைத்து யார் வருகிறார்கள் என்பதை அறியக்கூடிய அசாத்தியத் திறமை அவர்களுக்குள் ஒளிந்திருக்கிறது. கண்ணதாசன் இதைப் புரிந்திருக்கிறார் என்பதைத் தான் நாம் பதிலாகச் சொல்லமுடியும். இந்த ஒரு பாடலை மட்டுமே எடுத்துக்காட்டாக வைத்து தமிழ் இலக்கணத்தை விளக்கமுடியும். பாடல் கட்டமைப்பில் அவ்வளவு நேர்த்தி; இசைக் கோர்வையில் இழைந்து குழைந்து அமரும் சொற்கள்; நளினம் மிகுந்த நவீனம்; செழுமை கலந்த எளிமை. இது போல் எண்ணற்ற பாடல்களில், வரிந்துக் கட்டி கவிதைச் சுகம் சேர்க்காமல், கண்ணதாசன் செய்த நகாசுகளின் நயம் போற்றாமல், காதுக்கு இதமளிக்கும் திரைப்பாடல்களாகவே கருதி நாம் இழந்தவை அதிகம்.

இதோ அந்த முழுப்பாடல்:

அழகே அழகு.. தேவதை

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

 

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வியானது

பொன்முகம் தாமரை! பூக்களே கண்களோ!

மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்

 

சிப்பிப் போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ! தேன்குழல் விரல்களோ!

ஒரு அங்கம் கைகள் அறியாதது!

 

பூவுலாவும் கொடியைப் போல இடையைக் காண்கிறேன்

போகப் போக வாழை போல அழகைக் காண்கிறேன்

மாவிலை பாதமோ! மங்கை நீ வேதமோ!

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே!

 

அழகுக்கு வரையறை, இலக்கணம் என்று ஏதுமில்லை. இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகு. இதில் ஆண்பால், பெண்பால், அஃறிணை, உயர்திணை என்ற பேதமில்லை. நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகுஎன்று கதாநாயகனின் அழகை வருணித்த வைரமுத்து, இயற்கையில் ஒளிந்திருக்கும் அழகுகளைப் பட்டியலிடும் பாடலை அடுத்த பதிவில் காணலாம்.

  • ரவிக்குமார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad