\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.

2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற  45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். 

நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் முகமது ரபீக் மானசீகன் அவர்களின் அணிந்துரை மேலும் அழகு செய்கின்றது. அழகிய அட்டைப் படத்துடன் கூடிய இந்த நூலின் பின்புற அட்டையில் கவிஞர் பழனி பாரதி அவர்களின் வைர வரிகள் வாழ்த்தாகப் பூத்துக் குலுங்குகின்றன. 

இருபது வருடங்களுக்கு முன்னர் எனது தமிழ் சிறப்புப் படிப்பின் ஒரு பகுதியாகச் சங்க இலக்கியங்களைப் படித்திருந்தேன். அதில் வரும் கலித்தொகைப் பாடல்களைப் பெரும்பாலான கவிதைகள் நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக முல்லைத் திணைக்குரிய இருத்தல், நெய்தலுக்குரிய பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் இக் கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. 

கடலில் ஆரவாரிக்கும் அலைகள் போலப் புத்தகத்தின் பக்கங்கள் தோறும் காதல் சிற்றலையாக, பேரலையாக, ஆர்ப்பரித்தெழுகின்றது. உண்மையைச் சொன்னால் இந்தப் புத்தகத்தில் வரும் அனைத்து கவிதைகளின் தலைப்புகளும் ஒரு வரிக் கவிதை போல மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக, “மௌனம் பேசிடுமா, நேசிப்பின் நீட்சி, ஆதிச் சொல், என் கார்காலப் பொழுதுகள், அன்பின் பாரம் கனப்பதில்லை” ஆகிய தலைப்புகளைச் சுட்டிக் காட்டலாம். 

‘நான் தீயாகப் போகிறேன்’ என்ற இந்தக் கவிதை என்ன மிகவும் கவர்ந்திருந்தது. மேலே உள்ள கவிதை வரிகளில் ஒருவகையான முரண் தெரிகிறது. 

“…நான் தீயாகிப் போன 

இந்தக் காதலின் ரகசியத்தை 

பெய்து முடித்த மழையின் 

கடைசித் துளிக்குள் 

ஒளித்து வைத்துக்கொள்கிறேன்…” 

சங்கரி அவர்கள் பயன்படுத்தும் மொழிநடை சிறப்பு வாய்ந்தது, தான் சொல்ல வந்ததை சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கையாளும் சிக்கனமான சொற்கள் அவரின் கவிதைகளின் தனிச் சிறப்பு. இவரின் சில சொற்கள் மிகவும் கனதியானவை, அதிகமானவர்களின் கவிதைகளில் காணமுடியாதவை, குறிப்பாக, இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்.

 “…மரணத்தை விடுத்து 

காதலின் அதிலாவகத்தில் 

புதைந்து போகின்றேன்…

“…காதலை உணர்த்தி விடும் 

இச்சிறு கணங்கள் 

வாழ்தலில் தவமென்றும் 

காதலொரு வரமென்றும் கொள்க…” 

தாய்நிலம் பிரிந்த ஒரு ஊர்க் குருவியாகி இன்று சுவிஸர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞரான சங்கரி சிவகணேசன் அவர்கள் தனது முதலாவது கவிதைத் தொகுப்பின் மூலமே தனக்கான இடத்தை தக்க வைத்து விட்டார் என்பதை இக் கவிதைகள் அனைத்தையும் படித்து முடித்தபோது தெரிந்து கொன்டேன். காதல் கடலில் மூழ்க விரும்பின் நீங்களும் இப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள். 

-தியா காண்டீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad