\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!

இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வேலை பார்த்துப் பின்னர் உலகத்தின் இரு வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வேரூன்றியவர்கள். பேச்சு அலுவலக வேலை, சினிமா, வீட்டுப் பராமரிப்பு முதலியவற்றைக் கடந்து குழந்தைகள், அவர்களுடைய படிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது.

“எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கு, ஆனா, பசங்க மெதுவாத் தமிழை மறந்திடுவாங்களோனு
தோணுது.”

“ஏன், உங்க ஊர்ல தமிழ்ப் பள்ளியோ இல்ல தமிழ்ச் சங்கம் மாதிரி அமைப்புகளோ இல்லியா?”

“தமிழ்ப் பள்ளி ஒண்ணு ரெண்டு இருக்கு, ஆனால் ரொம்பத் தொலைவு, சனி ஞாயிறுலதான் போக
முடியும். உங்க ஊர்ல எப்படி?”

“எங்களுக்கும் அதே பிரச்சனைதான் இருந்தது. சனி ஞாயிறு ஏற்கனவே பல வேலைகள் இருக்கும். அதுக்கு நடுவிலே தொலைவில இருக்கிற பள்ளிக்கும் போக நேரம் ஒதுக்குறது கடினம் தான். அப்போது தான் “லட்சுமி தமிழ் பள்ளி” பத்திக் கேள்விப்பட்டோம். அட்லாண்டா மாநகரத்தில் 37 ஆண்டுக்கு முன்னாடி திருமிகு. லக்ஷ்மி ஷங்கரால் தொடங்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளா முழுக்க முழுக்க இணைய வழியில் (ஆன்லைன்) செயல்படுது. வாரநாள்கள்ல கூட மாலை நேரத்துல வகுப்புகள் வச்சிருக்காங்க. பல நாடுகளிலேயிருந்து 300க்கும் மேற்பட்ட குழந்தைங்க படிக்கறாங்க. 23 தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்துறாங்க. எங்க பசங்க இங்க ரொம்ப ஆர்வத்துடன் படிக்கறாங்க. ஒரு வாரம் முன்னாடி தான் இணைய வழியில் பள்ளி ஆண்டு விழா கூட நடந்தது. இந்த யுடியூப் லிங்கில https://tinyurl.com/Youtube-LTS-AnnualDayProg2024 போய்ப் பாரு. பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லு.”

சில மணி நேரங்களிலேயே மீண்டும் தொடர்ந்தது அந்த உரையாடல்.

“ஆண்டு விழா அமர்க்களமா இருந்தது. மூணு மணி நேரம் போனதே தெரியலை. குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் அருமையோ அருமை. என் பசங்க, இருந்த இடத்தை விட்டு நகராம எல்லாக் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்தாங்க. பாட்டு, தனி நடனம், குழு நடனம், நாடகம், சிலம்பாட்டம், மழலைப்பாட்டு, மாறுவேடப் பேச்சு, செய்யுள் என்று குழந்தைகள் தங்களுடைய திறமைகளை அழகாக வெளிப்படுத்தினாங்க.”

“நடுவில் வந்த கலை நிகழ்ச்சிகள் மட்டுமில்லாம, ஆரம்ப இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவு செய்த இந்திய, அமெரிக்க தேசிய கீதங்கள், இதெல்லாம் கூடப் பள்ளி மாணவர்கள் பாடியது தான்.”

“ஒரு சில நிமிட நிகழ்ச்சிப் பங்கேற்புக்கு ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு மணி நேரங்கள் பயிற்சி செய்திருக்கணும், அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதற்கு எப்படி உதவியிருக்கணும்னு நினைச்சா ரொம்ப மலைப்பா இருக்கு.”

“இந்த ஆண்டுவிழாவுல மழலையர் வகுப்பிலேருந்து ஏழாவது வரைக்கும் முடிச்ச 60 மாணவர்களுக்கு அந்தந்த ஆசிரியர்கள் சான்றிதழை இணைய வழியிலேயே அறிவிச்சாங்க. அயல்நாடுகளிலேருந்து ஆர்வத்தோட குழந்தைங்க தமிழ் படிக்கறதைப் பார்க்க வியப்பா இருந்தது.”

“விழாவுக்கு அணி சேர்க்கும் விதமாச் சிறப்பு விருந்தினர் நல்லாசிரியர் அனுசுயாதேவியோட உரை இருந்தது. ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ங்கற தலைப்புல பேசினாங்க. ஆசிரியர் திருமிகு. ஹரி பாலகிருஷ்ணனின் வரவேற்புரையில் அவங்களைப் பத்தி ஒரு நல்ல அறிமுகம் கொடுத்திருந்தார். அவங்க பல ஆண்டுகளாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன ஆசிரியர் குழு உறுப்பினராகவும் வேலை செய்துகிட்டு இருக்காங்க. முப்பது ஆண்டுகளாக அறிவியல் இயக்க உறுப்பினராகவும் கிராமப்புறப் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் சமூகப் பணி ஆற்றியிருக்காங்க. பாட்டு, கதை, கவிதை, கட்டுரை, நடிப்பு, நடனம், வரைதல், அப்படின்னு பன்முகத் திறமையாளர். குழந்தைகளைப் போற்றுவது எப்படின்னு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டாங்க.”

“ஆமாமாம், அவங்களுடைய அறிவுரைகள், நம்ம மாதிரி இளம் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் இருக்கும் ஆசைகள், தேவைகள், ஆற்றல்கள், அச்சங்கள், இவைகளையெல்லாம் புரிஞ்சு நடந்து, அவங்களுக்கான மகிழ்ச்சிகரமான ஓர் உலகத்தை எப்படி உருவாக்கணும்னு ஒரு தெளிவு பிறந்ததுனு சொல்லலாம்.”

“ஓ, கண்டிப்பா!”

“நீ கண்டிப்புன்னு சொன்ன உடனே, கண்டிப்பைப் பத்தி அவங்க சொன்னது நினைவுக்கு வருது. ‘கண்டிப்பு தேவை, ஆனால் குரலை உயர்த்திப் பேசியோ, வன்முறை காட்டியோ கண்டிப்பைச் செயல் படுத்தாதீர்கள். குழந்தைகள் தங்கள் ஐயங்களையும் வருத்தங்களையும் அப்போதுதான் நம்மிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள்’, அப்படின்னு ரொம்ப அழகாச் சொன்னாங்க.”

“லட்சுமி தமிழ் பள்ளியைப் பத்தி எல்லா விவரமும் இப்போ உனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.”

“நிச்சயமா! முதல்வர் உரையில் திருமிகு. லக்ஷ்மி ஷங்கர் அவர்கள் பள்ளியுடைய தொடக்கம் மற்றும் வளர்ச்சியைப் பத்திச் சுருக்கமாகச் சொன்னாங்க. பன்னாட்டு மாணவர்களின் தொடரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் வியந்து பாராட்டினாங்க. அதே நேரத்துல, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை உயரலைனு ஆதங்கப்பட்டாங்க. இந்தப் பள்ளியில் வேலை செய்கிற ஆசிரியர்கள் எல்லாருமே தன்னார்வத் தொண்டாகத்தான் (volunteering) இதைச் செய்யறாங்க. இங்க படிச்ச மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் இங்கேயே ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தங்கள் நன்றிக்கடனைச் செலுத்துவது ஒரு நெகிழ்ச்சியான விஷயம்.”

“நிகழ்ச்சியின் நடுவில் அப்பப்போ பேசின சில ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியராக மாறிய
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மூலமா அவங்களுடைய பார்வையில் இந்தப் பள்ளி எப்படி இருக்கிறதுனு தெரிஞ்சுக்கலாம்.”

“திரைக்கு முன்னால் வந்தவங்களைத் தவிரத் திரைக்குப் பின்னால் எவ்வளவு பேர் திறமையா வேலை செஞ்சு இந்த விழாவை வெற்றிகரமா நடத்தியிருக்காங்கனு ஆசிரியர் திருமிகு. மீனாட்சி பாலசுப்பிரமணியன் தமது நன்றியுரையில் அழகாக வரிசைப்படுத்தினாங்க. பள்ளி நிர்வாகிகள்

மற்றும் ஆசிரியர்களான திருமிகு. இராஜி இராமச்சந்திரன், திருமிகு. அகிலா சுரேஷ், வலையில் சேமிப்பிடம் வழங்கும் ஆசிரியர் திருமிகு. ஜார்ஜ் மனோகரன், வலைப்பக்க உதவியாளர் திருமிகு. கீதா தில்லைநாயகம், ஆசிரியர்கள், காணொளி தயாரித்த திருமிகு. இரகுபதி, இப்படிப் பலரும் இந்த வெற்றிக்கு உழைச்சிருக்காங்க.”

“இறை வணக்கத்தில் ஆரம்பிச்சு, தேசிய கீதங்கள் வரைக்கும் நடைபெற்ற உரைகள், கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள், இவை ஒவ்வொண்ணும் முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம் போன்ற இரத்தினங்கள்னு சொன்னால், இவை எல்லாத்தையும் திறமையாக ஓர் அற்புதமான சரமாகத் தொடுத்த பெருமை, ஆசிரியர்
திருமிகு. ஜெயா வெங்கடேசனையே சாரும். மாலையில் கற்களுக்கு முன்னும் பின்னும் சேர்க்கப்படுகிற தங்க மணிகளைப் போல, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன் ஒரு சிறு அறிமுகம், முடிந்தவுடன் ஒரு பாராட்டு என்று புன்னகை மாறாமல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாங்க.”

“திறமையான ஆசிரியர்கள் வழி நடத்த, லட்சுமி பள்ளி மூலமா என் பசங்க தமிழைச் சிறப்பா கத்துப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. வர கல்வி ஆண்டுல அவங்களை அங்கதான் சேக்கப் போறேன். அது மட்டுமில்லாம, நானும் ஆசிரியராகச் சேரலாம்னு இருக்கேன்.”

“கேக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது ஓர் ஆண்டு விழா மட்டுமில்ல, தங்கள் திறமையினால் நிகழ்ச்சியில் பங்கேத்துக்கிட்ட எல்லாரும் நம் மனங்களை ஆண்ட விழா!”

–  ஹரி பாலகிருஷ்ணன், அட்லாண்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad