\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சித்திரை வருடப் பிறப்பு

சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக, சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 

மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாகப் பண்டையத் தமிழர்கள் கருதினர் என்பதற்குச் சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென் மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் (160–161) இதற்குச் சான்று. 

 

“திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து…”

 

இதற்கு நச்சினார்க்கினியரின் உரை பின்வருமாறு அமைகின்றது. “திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…” இதிலிருந்து மேஷ ராசியே முதல் ராசியாகப் பண்டையத் தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். 

இலங்கை, தென்னிந்தியா மற்றும் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட சில கிழக்காசிய நாடுகளில் சித்திரை முதல் நாள் வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடப் படுகின்றது. 

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான கொண்டாட்ட முறைகளில் சில வேறுபாடுகள் இருப்பினும் பரந்துபட்ட அளவில் உற்று நோக்குகின்ற போது பல ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. அதனாலேயே அங்கு தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு என்று அழைக்கப்படுகின்றது. இலங்கையில் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களில் பிரதான கொண்டாட்டமாகத் தமிழ் – சிங்களப் புத்தாண்டு விளங்குவதால் இலங்கை அரசு உத்தியோகப் பூர்வமாக இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்குகின்றது. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாகச் சித்திரை வருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இலங்கையில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் அல்லாத பிற மதத்தினர் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. அவர்கள் ஜனவரி முதல் நாளையே (ஆங்கிலப் புத்தாண்டையே) தமது புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். 

புத்தரின் தோன்றிய பின்னர், புத்த ஆண்டுப் பிறப்பு மே மாதம் பௌர்ணமி இரவில் ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது. அந் நாளை இலங்கை பௌத்தர்கள் ‘மென்கடதாசி கூடுகள்’ அமைத்து அதற்குள் மெழுகுவர்த்தி அல்லது மின் விளக்குகள் ஒளிரச் செய்து தோரணங்கள் கட்டி “வெசாக் பண்டிகை” என இரவில் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனை புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் சிங்களவர்களிடம் இல்லை. 

முற்காலத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல், வீட்டை சுத்தம் செய்தல், மண்தரையாயின் சாணம் இட்டு மெழுகுதல், சிமெந்து தரையாயின் கழுவுதல் போன்ற முன்னேற்பாடுகளைத் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்தனர். தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல் இல்லாமல் போய் அது வர்ணம் பூசுதலாக மாற்றம் பெற்றுள்ளது. 

புதுவருட தினத்தில் “மருத்து நீர் வைத்தல்” என்பது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இம்மருத்து நீர்; தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி,  சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி  எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை  கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். 

புத்தாண்டு பிறப்பன்று மருந்து எண்ணை (மருத்து நீர்) வைத்து குளிக்கும் வழக்கம் தமிழர் மற்றும் சிங்களவர் மத்தியில் இன்றும் உள்ள மிக முக்கியமான பழக்கமாகும். அதிகாலையில் மருந்து எண்ணெய் வைத்து நீராடி புத்தாடை அல்லது தூய ஆடை அணிந்து கோயிலுக்கு அல்லது விகாரைக்குச் சென்று வழிப்பட்டு வருவர்.  

புத்தாடை உடுத்தி தமிழர்கள் சக்கரைப் (கருப்பு வெல்லம்) பொங்கலிட்டும் சிங்களவர்கள் பால் பொங்கல் அல்லது பால்சோறு (கிரிபத்) மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இட்டு கடவுளை வணங்குவர். 

இறைவணக்கம் முடிந்த பின்னர் பிற மதத்தவர்கள் மற்றும் தவிர்க்க முடியாத  காரணங்களால் வருடப் பிறப்பைக் கொண்டாட முடியாமல் போன அயலவர்களிடம் உணவைப் பரிமாறிக்கொள்வர். பெரியோரை மதித்து வணங்குவர். 

மிகவும் முக்கியமான நிகழ்வாக “கைவிசேடம் பெறுதல்” அமைகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை “கைவிசேடம்” பெறுவார்கள். பெரியவர் அல்லது குடும்பத் தலைவர் வெற்றிலையில் காசு வைத்து, அதன் மேல் நெல் அல்லது அரிசி, பாக்கு அல்லது நவ தானியம் வைத்துக் கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள் குறிப்பிடட நேரம் வரும் வரை காத்திருந்து தமது வருடத்தின் முதல் கொடுக்கல் வாங்கலைத் தொடங்குவார்கள். ஒரு சம்பிரதாயத்திற்காக, தத்தமது வேலையைச் (தொழில்) செய்வார்கள். சில மணித்தியாலங்களிற்கு மட்டும் வர்த்தக நிலையங்களைத் திறந்து ஓரிரு  வியாபாரங்கள் செய்துவிட்டு மீண்டும் மூடி விடுவர். 

இப் புண்ணியக் காலம் முடிந்த பிறகு, புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேசக் கலாச்சார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த் தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும். 

அத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை, வழுக்கு மரம் (கழு மரம்) ஏறுதல்  போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம். சிங்களப் பெண்கள் “றபான்” அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். 

தித்திக்கும் இனிப்பைப் போல, எல்லோர் வாழ்க்கையிலும் என்றும் இனிமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை தங்கு தடை ஏதுமில்லாமல் நடைப்பெற வேண்டி, உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்  கொள்கின்றேன்.

  • தியா காண்டீபன்  –

 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad