களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்
அமெரிக்க நாட்டின் 60ஆவது அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில் யார் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. குடியரசுக் கட்சி தனது வேட்பாளர்களை, ஜூலை மாதமே இறுதி செய்துவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் சில குழப்பங்கள் நிலவியது.
தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவர்கள் இன்னொரு தவணை அதிபராகத் தொடர வாய்ப்பிருந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் மார்ச் மாத மத்தியில் முன்னாள் அதிபர் டானல்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் மாத நிலவரப்படி, இருவருக்குமே சற்றேறக்குறைய சமமான அல்லது மிகக் குறைவான வித்தியாசத்தில் ஆதரவு இருந்து வந்தது. ஜனநாயகவுரிமை அடிப்படையில் பைடன் சில சமயங்களில் முன்னிலை பெற்றாலும் அவரது மூப்பு அக்கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. பொருளாதார அடிப்படையில் டிரம்ப் சில கூடுதல் புள்ளிகளை பெற்று வந்தார். ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில், ஜோ பைடன் பரிமளிக்கவில்லை. வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரது உற்சாகமின்மை, தளர்வு, தடுமாற்றம் போன்ற விஷயங்கள் மிக வெளிப்படையாகத் தெரிந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட டானல்ட் டிரம்ப் தவறான புள்ளி விவரங்களை ஆணித்தரமாக அடுக்கிய போதும் அதற்குண்டான எதிர்வினைகள், பதில்களை பைடன் எடுத்துவைக்கத் தவறினார். டிரம்பின் முந்தைய ஆட்சியின் கடைசி நாட்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்ட போது கூட அவற்றை சாதுர்யமாக அதே நேரத்தில் இறுமாப்புடன் திசைமாற்றினார் டிரம்ப். அந்தச் சந்தர்ப்பங்களை மிக எளிதாக நழுவவிட்டார் பைடன். விவாதம் முடிந்த அடுத்த சில நாட்களில் பைடனின் ஆதரவு மிக வேகமாகச் சரியத் துவங்கியது. அன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றிருந்தால் டிரம்ப் மிக எளிதில் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.
அடுத்த சில நாட்களில் பைடன் மீதான நம்பிக்கை குறைந்து வரவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு பொதுவாக வரக் கூடிய தேர்தல் நிதி மந்தமடைந்தது. இதே நிலைமை தொடருமானால் தோல்வியைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் அக்கட்சிப் பிரமுகர்கள் பைடனைத் தேர்தலிலிருந்து விலகுமாறு கேட்டு வந்தனர். இருப்பினும், பைடன் தன்னால் டிரம்பை வென்றுவிட முடியுமென்றும் போட்டியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் உறுதியாகச் சொல்லிவந்தார்.
ஜூலை மாதம் நடைபெற்ற சம்பவங்கள் அதிபர் தேர்தலின் போக்கையே மாற்றியது என்று சொல்லலாம். ஜூலை 13ஆம் நாள், பென்சில்வேனியா மாநிலம், பட்லர் நகரத் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுடப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் டிரம்ப். கூட்டம் நடந்த மேடையின் பக்கத்திலிருந்த உயர்ந்த கட்டடம் ஒன்றிலிருந்து 20 வயது நபரொருவர் சுட்டதில், குண்டு அவரது காதைக் கிழித்துச் சென்றது. உடனடியாகச் சுதாரித்து, குனிந்து கொண்ட டிரம்ப், பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்துகொண்டு அவரை மேடையிலிருந்து அழைத்துச் சென்ற போது, காதிலிருந்து ரத்தம் வழிய, என்ன நடக்கிறது என்ற புரியாத நிலையிலும் கூட்டத்தினரை நோக்கி கையை உயர்த்தி, ‘ஃபைட்… ஃபைட்’ என்று கூவியது, அவரது உறுதியை, நிலைகுலையாமையை எடுத்துக் காட்டியது. அந்த நொடியில் அவரது கண்களில் தெரிந்த அச்சமற்ற ஒளியும், எதிர்ப்புக்குணமும் ‘இவரே என் தலைவர்’ என்று எழுச்சியூட்டும் வண்ணம் அமைந்தது.
அதே காலக்கட்டதில், அதிபர் பைடன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றார். கொலை முயற்சியிலிருந்து தப்பித்த டிரம்பின் உடல்மொழியால் உந்தப்பட்டு, அவருக்கு ஆதரவு பெருகியது. அது மட்டுமின்றி, குடியரசுக் கட்சிக்கான தேர்தல் நிதி பன்மடங்கு அதிகரித்து, அக்கட்சியின் வெற்றி உறுதியென்ற நிலை உருவாகிவர, உடல் நலிவுற்ற பைடனால் டிரம்பை எதிர்கொள்ள முடியாது என்று கட்சிக்குள் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பல முனைகளிலிருந்தும் பைடனுக்கு போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் தரப்பட்டது. இறுதியில் ஜூலை 21ஆம் நாள், அதிபர் ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி சார்பிலான தனது வேட்புமனுவை, வாபஸ் பெற்றுக் கொண்டு அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். கூடவே தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸின் பெயரை அதிபர் போட்டிக்குப் பரிந்துரைத்தார். புதிதாக ஒருவரை போட்டியாளராக நியமிப்பதற்கு பதில், கமலா ஹாரிஸ் சிறந்தத் தேர்வு என்று நினைக்கத் துவங்கிய கட்சி அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், டிரம்புக்கு எதிராக வலிமையான போர்க்குணம் கொண்டவர் தேவை என்று கட்சிக்குள் சில மாற்றுக் குரல்களும் எழுந்தது. ஆனால், ஏறக்குறைய நின்று போயிருந்த ஜனநாயகக் கட்சியின் தேர்தல் நிதி, இந்த அறிவிப்புக்குப் பின் ஒரே நாளில் பல மில்லியன் டாலர் அதிகரித்தது பொதுமக்கள், பெருநிறுவனங்கள், குறிப்பாக ஹாலிவுட் திரைப்படத்துறையினரிடையே ஹாரிஸுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதை உறுதிப்படுத்தியது. தொடக்கத்தில் ஹாரிஸின் தெரிவுக்கு நேரிடையாக ஆதரவைத் தெரிவிக்காத முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் தேர்தல் மாநாட்டுக்கு முன், தனது அதரவைத் தெரிவித்தார். இப்படியாக அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற கமலா ஹாரிஸ், கட்சி மாநாட்டில் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரலாற்றில் இல்லாதபடி, தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக, ஜனநாயகக் கட்சியின் போட்டியாளர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்காத எதிர்த்தரப்புக்கு இந்த மாற்றம் சில அதிர்வுகளை உண்டாக்கியது. எளிதான வெற்றி உறுதி என்ற மனப்பான்மையிலிருந்த டிரம்ப் குழுவினர், வெற்றிக்குப் போராடியாகவேண்டுமென்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் இரு தரப்பிலிருந்தும் துணை அதிபர் வேட்பாளர் யாரென்ற கேள்வி எழத் துவங்கியது.
குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சில தலைவர்களின் பெயர்கள் அடிபடத் தொடங்கியது. வட டகோடாவின் ஆளுநர் டக் பர்கம், ப்ளாரிடா பேரவை உறுப்பினர் மார்க் ரூபியோ, ஒஹையோ பேரவை உறுப்பினர் ஜேடி வான்ஸ், தென் கரோலினா பேரவை உறுப்பினர் டிம் ஸ்காட், டிரம்பின் முந்தைய ஆட்சியில் அவரது நம்பிக்கையைப் பெற்ற அதிகாரியான பென் கார்சன் ஆகிய பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இறுதியில், டிரம்ப் ஒஹையோ பேரவை உறுப்பினரான ஜேடி வான்ஸை, துணை அதிபராக முன்னிறுத்த முடிவெடுத்தார்.
ஜேடி வான்ஸ், 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், டிரம்பின் கொள்கை நிலைப்பாட்டைக் கண்டித்து விமர்சனம் செய்து வந்தவர். அவரது மிகப் பிரபலமடைந்த புத்தக வெளியீட்டின் பொழுது, டிரம்பை ‘அமெரிக்க ஹிட்லர்’ என்று விமர்சித்தவர் வான்ஸ். சிறு வயதில் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்த அவர், நடுத்தர வெள்ளையின மக்களின் வாழ்வியல் துன்பங்களை அறிந்தவர். குறிப்பாக அப்பலாச்சியன் பகுதியின் மலைவாழ் மக்களின் நிலையை நேரில் கண்டுணர்ந்தவர் அவர்களின் முன்னேற்றேத்துக்காக முனைந்தார். இராணுவத்தில் சில காலம் சேவை புரிந்த வான்ஸ், யேல் பல்கலையில் சட்டம் முடித்து, தொழில் முனைவோர் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். 2022 ஆம் ஆண்டு, ஒஹையோ மாநில பேரவை உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கிட்டிய போது, தொழில் முனைவராக பெரும் நிதி திரட்டிய போதிலும், டிரம்ப் மீதான அவரது காட்டமான விமர்சனங்கள், குடியரசுக் கட்சியின் அங்கீகாரம் கிடைப்பதில் தடையாகயிருந்தது. இதை உணர்ந்த வான்ஸ், டிரம்ப் மீதான தனது விமர்சனங்களைத் திரும்ப பெற்று, மன்னிப்பு கோரினார். அந்த நாள் முதல் டிரம்பின் பேராதவாளராக மாறிய வான்ஸ், சிறுகச் சிறுக டிரம்பின் நம்பிக்கையைப் பெறத் துவங்கினார். சீன முதலீடு, கருக்கலைப்பு எதிர்ப்பு, இஸ்ரேலுக்கு ஆதரவு, உக்ரைனுக்கான நிதி, தளவாட உதவிகள், ஜனரஞ்சகப் பொருளாதாரக் கொள்கை என அனைத்திலும் பழமைவாதிகளின் கருத்துகளை எதிரொலிப்பவராக மாறிவிட்ட வான்ஸ், டிரம்பின் வெற்றிக்குப் பெரிதும் உதவுவார் என்பதில் சந்தேகமில்லை.
ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபருக்கான தேர்வுப் பட்டியலில் பல்வேறு மாநில ஆளுநர்கள் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷபிரோ, அரிசோனா செனட்டர் மார்க் கெல்லி, கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர், மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன. இதில் ஹாரிஸ், மினசோட்டா ஆளுநரான டிம் வால்ஸை, தனது துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
நெப்ராஸ்காவில் பிறந்து வளர்ந்த டிம் வால்ஸ், இராணுவத்தில் நீண்ட காலம் சேவையாற்றியவர். அதற்கு முன்னர் தொலைகாட்சி விவாதங்களில், ஜனநாயகக் கட்சி கொள்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வைத்தவர். 24 ஆண்டுகால இராணுவச் சேவைக்குப் பிறகு, மினசோட்டாவுக்கு குடிபெயர்ந்த வால்ஸ், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும், கால்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். 2006ஆம் ஆண்டு மினசோட்டாவில், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியாகப் போட்டியிட்டு வென்றவர், நடுத்தர மக்கள், குறிப்பாக மாணவப் பருவத்தினரின் நலத்துக்காகப் பெரிதும் போராடி வந்தார். 6 முறை அமெரிக்க நாடாளுமன்றத்திக்கு தேர்வு செய்யப்பட்ட வால்ஸ், முன்னாள் அதிபர் டானால்ட் டிரம்பின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடி வந்தவர். இக்காலக் கட்டங்களில் பாரம்பரிய, நடுத்தர வர்க்கத்தினரின் நம்பிக்கையைப் பெற்றார். 2019 முதல் மினசோட்டா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றவர், பலதரப்பட்ட மக்களின் கலாச்சாரங்களை ஆதரித்து, மதிக்கத் தெரிந்தவர். இவரது ஆட்சிக்காலத்தில், மினசோட்டாவில், ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் மரபு மாதம்’ என பிரகடனம் செய்து, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பெருமைப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியப் பின்னணியிலிருந்த வந்ததால், மாணவர்களின் சிக்கல்களை நன்கறிந்த வால்ஸ், அவர்களது கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் ஆர்வம் காட்டினார். இலவச காலை, மதிய உணவு, இலவசக் கல்வியுதவி, மருத்துவ உதவி என பலவகைகளில் மாணவர் கல்வியை ஊக்கப்படுத்தினார். கருக்கலைப்பில் பெண்களின் உரிமை, துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு, நடுத்தர வர்க்கத்தினர்க்கு வரி குறைப்பு, சமூக நலன் என பல்வேறு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார். அம்மாநிலக் அகக்கட்டுமானங்களை மேம்படுத்தி, பல்வேறு நிறுவன முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். இப்படி பல வகைகளில் மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற்றவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததில் மற்றுமொரு முக்கிய காரணமும் உள்ளது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கப் போகும் ஐந்து ஊசல் மாநிலங்களில், மினசோட்டாவின் அண்டை மாநிலமான விஸ்கான்சினும் அடக்கம். சென்ற தேர்தலில், மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இம்மாநிலத்தில் வெற்றி பெற்றது ஜனநாயகக் கட்சி. இம்மாநிலத்தை வென்றிட டிரம்ப் மிகத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாரென்பதை அறிவோம். அதே போல் சென்ற முறை நெவேடாவிலும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டார் பைடன். இவ்விரண்டு மாநிலங்களின் வெற்றியை உறுதிசெய்வதில் டிம் வால்ஸ் பெரிதும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்த டிம் வால்ஸ், தனக்கென்று பெரியளவில் எதையும் சேர்த்துக் கொள்ளாதவர் என்பது இவரது தூய்மையான அரசியல் வாழ்வுக்குச் சான்றாகச் சொல்லப்படுகிறது. இன்றும் வாடகை வீட்டில் வசித்து வரும் வால்ஸ், இராணுவ ஓய்வூதியம், ஆளுநர் ஊதியம் தவிர, பங்குச் சந்தை முதலீடு, நிலைச்சொத்து எதுவுமில்லாமல், சுமார் $350,000 டாலர்கள் சொத்தை மட்டுமே கொண்டவராக, 2019இல் அறிவித்திருந்தார். இவ்வகையில் நடுத்தரக் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக இரு பெரும் கட்சிகளும் தங்களது பரிவாரங்களைத் தயார்படுத்தி, தேர்தலைச் சந்திக்க முனைப்போடு களமாடி வருகின்றனர். வாக்காளர்களைப் பொறுத்தவரையில் பணவீக்கம், விலைவாசி, பொருளாதாரம், குடியேற்றம், சுகாதாரம், வேலை வாய்ப்பு, கருக்கலைப்பு உரிமை, சமூக உரிமை, துப்பாக்கி உரிமை, தேசப் பாதுகாப்பு, வரி நிர்வாகம், காலநிலை மாற்றம் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு வகிக்கும். மக்களின் வாழ்வியல் மற்றும் வாழும் சூழலைப் பொறுத்து இதன் முன்னுரிமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். இவற்றையெல்லாம் கடந்து, அமெரிக்கத் தேர்தலில் முக்கியத்துவம் பெறப்போவது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள். குறிப்பாக இஸ்ரேல்-பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன், மத்திய கிழக்கு நாடுகள் குறித்த நிலைப்பாடு, சீன வர்த்தக உறவு, வட கொரியா குறித்த அரசியல் நிலைப்பாடுகள் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதன் காரணிகளாக அமையும்.
இதில் டானல்ட் டிரம்ப், ரஷ்ய-உக்ரைன் போரை ஒரே நாளில் தீர்த்து வைப்பேன் என்றும், இஸ்ரேல்-பாலஸ்தீன (காஸா) போர் இயல்பான முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார். மாறாக கமலா ஹாரிஸ் உக்ரைனுக்கு நிதி / தளவாட உதவிகள் தொடரும் என்றும், இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தி, பேச்சு வார்த்தைக்கு உடன்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். துப்பாக்கி கட்டுப்பாடுகள், கருக்கலைப்பு உரிமை, வரி மேலாண்மை, காலநிலை, சூழலியல் மாற்றங்கள், பெருநிறுவன உரிமைகளில் நேரெதிர் கருத்துகளை உடைய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகப் பெரும் சவாலாகவே கருதப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, மேற்சொன்ன கூறுகளில், இருவரும் மிக மிகக் குறைவான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றனர். ஊடக நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு கருத்துக் கணிப்புகளை நடத்தி, சாதக பாதகங்களை அலசி வருகின்றனர்.
இக்கட்டுரை எழுதப்பட்ட நாளின் தரவுகள்படி, கமலா ஹாரிஸ் மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மூன்று ஊசல் மாநிலங்களில், டானல்ட் டிரம்பை விட முன்னிலை வகிக்கிறார். ஆனால் இந்தநிலை தேர்தல் நெருங்க நெருங்க எப்படிவேண்டுமானாலும் மாறலாம். அடுத்த இரண்டு மாதங்கள் தொலைகாட்சி, மற்றும் சமூக ஊடங்கங்களில் தேர்தல் குறித்த கருத்துகளே அதிகம் பகிரப்படும். வாக்காளர்கள், மேற்சொன்ன கூறுகள் உட்பட தங்களது தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான காரணிகளை வரிசைப்படுத்தி மதிப்பெண் அளித்து இறுதி முடிவெடுப்பது பயனளிக்கும்.
- ரவிக்குமார்.