Ceylon – “இனம்” திரைப்படம் ஒரு முன்னோட்டம்
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் “இனம்” எனவும் இப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார்.
துப்பாக்கி, தளபதி, ரோஜா, உயிரே, இராவணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் அண்மையில் “இனம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ரத்தத்தில் தோய்த்த கைவிரல் ரேகையில் இலங்கை வரைபடம் தெரிவது போல் இந்தப் ‘பர்ஸ்ட் லுக்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் பதிக்கப்பட்ட 8 சிறுவர்களை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப் பட்டுள்ளது.
நடிகர் அரவிந்தசாமி அவர்களின் பின்னணிக் குரலுடன் இப் படத்துக்கான கதை விரிந்து செல்வது மேலும் சிறப்பான விடயமாகும். நடிகர் அரவிந்தசாமி அவர்களுடன் கருணாஸ், நடிகை சரிதா,ஹென் கருணாஸ் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் பிறந்த அஜிதா, பிஜுனன், பிருஜன் ஆகிய மூன்று குழந்தை நச்சத்திரங்கள் ஆகியோரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஷால் இசை அமைக்க சந்தோஷ் சிவன் அவர்கள் இயக்கம் – கதை – ஒளிப்பதிவு ஆகியவற்றைத் திறம்படச் செய்துள்ளார். படத்தின் அனைத்து வெளிப்புறப் படப் பிடிப்புகளும் முடிந்த நிலையில் குரல் பதிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இப் படக் குழுவினர் வரும் நவம்பரில் படத்தின் “ரெயிலரை”யும் அடுத்த வருட முற்பகுதியில் படத்தையும் உலகெங்கும் வெளியிடும் வகையில் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். “இனம்” எம்மை நிமிர வைக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
தியா