அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மின்னியாபொலிஸ் – செயிண்ட் பால் விமான நிலையத்தின்(MSP Airport) டெர்மினல் 2 இல் ஆகஸ்ட் மாத இறுதியில் வந்திறங்கிய பயணிகளும், ஏற்றிவிட வந்தவர்களும்அங்குள்ள பிரமாண்டச் சுவற்றில் அமைக்கப்பட்ட படங்களைப் பார்த்து அசந்து இருப்பார்கள். விமான நிலையத்தின்டெர்மினல் 2 கட்டிடத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்திலிருந்து பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில்இருக்கும் சுவற்றில் 120 அடி அகலம் மற்றும் 24 அடி உயரத்திற்குத் தமிழர் கலைகளை அழகான முறையில் ஆடி, இசைத்து, நடித்துக் காட்டும் நமது தமிழ் கலைஞர்களது புகைப்படங்களை நிறுவியுள்ளனர்.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியின் பலனாக, அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்தப் புகைப்படங்கள்எடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று பயணிகளின் பார்வைக்கு விமான நிலைய நிர்வாகத்தால் வைக்கப்பட்டன. பிரபல புகைப்படக் கலைஞர் ஆர்.ஜே. கேர்ன் (RJ Kern) அவர்களால் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் மிகவும்நேர்த்தியாக அமைந்திருந்தன. முன்னதாக, இவர் எடுத்த மற்றொரு இத்தகைய தமிழ்க் கலைஞர்களின் புகைப்படம்,பிரமாண்ட பதாகையாக மின்னியாபொலிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஹென்னபின் கலை அமைப்பின்கட்டிடத்தில் ஒரு வருட காலத்திற்கு நிறுவப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் கலைகளான ஒயிலாட்டம், தவில், நாயனம், பம்பை, கரகாட்டம், தெருக்கூத்து, பரதம், பறை, சிலம்பம்ஆகியவை இப்புகைப்படங்களில் மினசோட்டாத் தமிழ்க் கலைஞர்கள் மூலம் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. இப்புகைப்படங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலம் பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது மகிழ்வைத்தரும் செய்தியாகும். இது போல, தமிழர் கலை சார்ந்த புகைப்படங்கள் உலகில் வேறு எந்த விமான நிலையத்திலும்இதுவரை வைக்கப்பட்டதில்லை என்பது மினசோட்டாத் தமிழர்கள் பெருமை கொள்ளும் தகவல் ஆகும்.
- சரவணகுமரன்
Tags: minneapolis, MSP Airport, ST. PAUL, Tamil arts, Twin cities airport