சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்
அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர், தமிழர் கலைகளான, பறை, பரதம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தவில், நாயனம், துடும்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தமிழிசை நடனநிகழ்ச்சியை வழங்கினர். சிறுவர் முதல் பெரியோர் வரை கலந்து கொண்டு அளித்த இந்த நிகழ்ச்சியைத் தமிழகமுதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டு ரசித்தார்.
முதல்வருடன் இந்த நிகழ்ச்சியில் அவருடைய மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்திரு. டி.ஆர்.பி. ராஜா, அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி, சிகாகோ இந்தியத்தூதரக ஆணையர் திரு. சோம்நாத் கோஷ் மற்றும் அரசு அதிகாரிகள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திரு. கருணாநிதி அவர்களின்அமெரிக்கப் பயணத்தை நினைவு கூர்ந்தார். அயலகத் தமிழர்களுக்காக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றிக் கூறிய முதல்வர், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் தங்களுக்குள் எவ்விதபிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ அறிவுறுத்தினார். இங்குள்ள தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையேனும்தங்கள் குழந்தைகளுடன் தமிழ்நாடு வருமாறும், தமிழ் வரலாற்றின் அடையாளமாக விளங்கும் திருவள்ளுவர் சிலை, கீழடி அருங்காட்சியகம், சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறும்வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் இந்த அமெரிக்கப் பயண நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் மற்றும்அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின.
- சரவணகுமரன்
Tags: Chicago, CM, M K Stalin, Stalin