ஆட்டம் பாட்டம் அனிருத்
அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார்.
ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு இரைச்சலாக இருக்கிறது?” என்பது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து அதையே அவரது ஸ்டைல் ஆக்கி, இன்று அதையேஅனைவரும் பின்தொடரும் வகையில் ட்ரெண்ட் ஆக்கி விட்டார். முன்னணி நடிகர்களின் படங்களுக்குஏ.ஆர்.ரஹ்மான், யுவன் என்று யார் இசையமைத்தாலும் அனிருத் போல இல்லையே என்ற குரல் கேட்கத்தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு ரசிகர்களையே ட்யூன் செய்து விட்டார் அனிருத்.
அனிருத் பாடல்கள் சும்மா எல்லாம் ஹிட் ஆகிவிடுவதில்லை. ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமாக என்ன செய்யசெய்யலாம் என்று மெனக்கெடுகிறார். பீஸ்ட் படத்தில் அரபி இசையும், நம்மூர் குத்தையும் இணைத்து ’அரபிக் குத்து’ என்று இளசு முதல் பெருசு வரை இன்ஸ்டா ரீல் போட்டு ஆட்டம் போட வைத்தார். ஜெயிலர் படத்தில் ஆப்பிரிக்கஇசை பாணியில் “வா காவாலா வா” என்று இன்னொரு இசை வெடிகுண்டை இறக்கினார். விக்ரம் படத்தில் பின்னணிஇசைத் துணுக்குகளை எத்தனை முறை வேண்டுமானாலும் தனியிசையாகக் கேட்கலாம் என்பது போல் அவ்வளவுவித்தியாசம் காட்டி ரசிக்க வைத்திருந்தார்.
சமீபத்திய பல படங்களின் வெற்றிக்குப் பெரும் பங்காக இருப்பவர் அனிருத். அவருடைய படப்பாடல்களுக்குஇருக்கும் வரவேற்பைப் போல், அவருடைய இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கும் பலத்த வரவேற்பு இருக்கிறது. இளையராஜாவின் இசைக் கச்சேரிகள், ராணுவ ஒழுங்குடன் நடக்கும். அதிகபட்சம், பாடி முடிந்த பிறகு கைத்தட்டிக்கொள்ளலாம். வேறு எந்தவிதக் கூச்சலிட்டாலும் கடுப்பாகி விடுவார் இசைஞானி. ரஹ்மான் கச்சேரிகள்,ஹைடெக்காக இருக்கும். சமீபகாலங்களில், அவர் கொஞ்சமாகக் கூச்சம் களைந்து ஆட்டம் போடஆரம்பித்திருக்கிறார். ரசிகர்கள் உட்கார்ந்தவாறு அசைந்து, ஆடி, கைத்தட்டி ரசிப்பார்கள். அனிருத் கச்சேரிகள் வேறலெவல். அவருடைய குழுவின் ஒரே குறிக்கோள், யாரும் உட்கார்ந்து பாட்டு கேட்கக் கூடாது. எல்லோரும் அவரைப்போல குதித்துக் குதித்து ஆட்டம் போட வேண்டும் என்பது தான். சமீபத்தில் சிகாகோவில் நடத்த அனிருத்தின் இசைநிகழ்ச்சியில் இதைக் கண்கூடாக காண முடிந்தது.
”Hukum US Tour” என்ற பெயரில் அமெரிக்காவில் இசைச் சுற்றுப் பயணம் செய்து வந்த அனிருத், ஆகஸ்ட் 16ஆம்தேதி அன்று சிகாகோ Now Arena அரங்கில் கச்சேரி நடத்தினார். வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கியகச்சேரி, இரவு 11 மணி வரை ஆட்டம் பாட்டத்துடன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனிருத்துடன் பிரபல பின்னணிப்பாடகி ஜோனிதா காந்தி மற்றும் அனிருத்தின் இசை நண்பர் குழுவினர் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான தமிழ்ப் பாடல்கள் இருந்தாலும் தெலுங்கு ரசிகர்களையும் உற்சாகமூட்டும் விதமாகப் பல தெலுங்குப் பாடல்களையும் பாடினார். அவற்றைக் கேட்கும் போது இவ்வளவு தெலுங்குப் பாடல்களுக்கு இசையமைத்துஇருக்கிறாரா என்று ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரு ஹிந்திப் படத்திற்கு (ஜவான்) இசையமைத்து இருப்பதால், அந்தப்படத்தில் இருந்தும் ஒரு பாடலை இசைத்துப் பாடினார்கள்.
பின்னணியில் மற்றும் இருபக்கமும் பிரமாண்ட எல்.இ.டி. திரைகள், வண்ணமயமான ஆட்டம் போடும் ஒளி வெள்ளம்,பாடலுடன் சிங்க் ஆகும் லைட் ஹண்ட்பேண்ட் என இந்தக் கச்சேரி நிகழ்ச்சி, அனிருத் நடத்திய பார்ட்டி நைட் போலயுவ-யுவதிகளின் துள்ளாட்டத்துடன் இனிதே நடந்து முடிந்தது. மேடையின் அடியில் இருந்து வருவது, தொங்கிக்கொண்டு பாடுவது, ரசிகர் கூட்டத்திற்குள் சென்று பாடுவது என்று ரசிகர்களைத் தொடர்ந்து உற்சாகத்தில்வைத்திருந்தார். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் பிற கச்சேரிகளைக் கண்டு களித்தவர்களுக்கு இது நிச்சயம்புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
- சரவணகுமரன்