\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்

உலக நாடுகள் பலவும், தங்களது நில அமைப்பு, வளங்கள், மக்களமைப்பு போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையில் முதலாளித்துவம், சோஷியலிசம், கலப்பு பொருளாதாரம் என மூன்று முக்கிய கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் பல நாடுகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. 

உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்களை சுதந்திரத்துடன், எந்தப் பொருளையும், எந்த விலையிலும் விற்க அனுமதிப்பது என்பதாகும். ஆனால் இந்த கொள்கையின் படி செயல்படும் அமெரிக்கா, தனியார் நிறுவனங்களை டாலர் அச்சடிப்பதற்கோ அல்லது போதைச் செடிகள் வளர்ப்பதற்கோ அனுமதிப்பதில்லை. 

பொருளாதாரச் சமத்துவத்தைப் பேண, மக்கள் நலனை இலக்காகக் கொண்டு அரசு இயங்க வேண்டும் என்பது சோஷியலிசக் கோட்பாடு. இதன்படி, மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளில்  தனியார் நிறுவனங்கள் வசம் சென்றுவிடக்கூடாது என்பதாகும். ஆனால் சோஷியலிஸ்ட் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் சீனாவில் இன்று பல தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டன. 

அதே போல கலப்பு பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் இந்தியாவில் தற்போது ரயில்வே, விமான, கப்பற்தளம் உள்ளிட்ட பொதுத்துறை சேவை அமைப்புகள் கூட தனியார் வசமாகி வருகின்றன.  ஆக மொத்தத்தில் தேவைகள் அடிப்படையில் பல பொருளாதாரச் சித்தாந்தங்கள் மாறி வருகின்றன. வெவ்வேறு அரசியல் தலைமைகள், அதிகார மையங்கள் ஆட்சிக்கு வரும்பொழுதும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் சிற்சில வேறுபாடுகளுடன் மாற்றமடைவதுண்டு. அந்த வகையில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதில் வலதுசாரி சிந்தனையாளர்கள் முன்வைக்கும் ஒரு வழிமுறை ‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்.

‘டிரிக்கிள் டவுன் எகானமி’ (Trickle down economy)

ட்ரிக்கிள்-டவுன் எகனாமிக்ஸ் என்பது பொருளாதாரக் கொள்கைகளை விவரிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும், இது பொருளாதாரத் தளத்தில் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு (corporates) தேவைப்படும் சலுகைகளை அளித்தால், அது அவர்களுக்குப் பயனளிக்கும்;  நாளடைவில் அந்தப் பயன்கள் கீழ் நோக்கி வழிந்து, அனைத்துத் தரப்பினரும் வளமடைவர் எனும் தத்துவமாகும். அதாவது அரசாங்கம் ‘கார்ப்பரேட்’ எனப்படும் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிப்பதன் மூலமும், கட்டுப்பாடற்ற வியாபாரச் சூழலை உருவாக்கித் தருவதன் மூலமும் அவை விரிவடைந்து மென்மேலும் வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் என்பது எண்ணம். ‘டிரிக்கிள் டவுன் எகனாமி’ எனும் சொல்லாடல் அரசியல் தளங்களில், கொச்சையாகக் குறிப்பிடப்படும் சொல் மட்டுமே தவிர, பொருளாதாரக் கொள்கை வரைவிலக்கணத்தில் ‘டிரிக்கிள்-டவுன்’ எனும் கொள்கை குறிப்பிடப்படவில்லை. அந்த அடிப்படையில் ‘டிரிக்கிள்-டவுன் எகானமி’ என்பது நிருபிக்கப்படாத ஒரு பொருளாதாரத் தத்துவமாகும். மாறாக இது ‘சப்ளை சைட் எகனாமிக்ஸ்’ (Supply side economics) அதாவது வழங்கீட்டுப் பொருளாதாரம் எனும் தத்துவத்துக்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. 

‘சப்ளை சைட் எகனாமிக்ஸ்’ என்பது ஒரு முக்கியமான பொருளாதாரக் கோட்பாடு ஆகும். இந்தக் கோட்பாடு, குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிக்கப்பட்ட விநியோகத்தால் நுகர்வோர் பயனடைவார்கள், மேலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கிறது.

ஏறத்தாழ இதே கோட்பாட்டை வலியுறுத்தும் ‘டிரிகிள் டவுன்’ கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரிக் குறைப்பு, செல்வந்தர்களுக்கான வரிக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடு நீக்கம் ஆகியவற்றை ஆரம்பப்படிகளாகக் கொண்டது. வரிச்சலுகைகள் மூலம் கார்ப்பரேட் துறையில் அதிக பணம் இருந்தால், புதிய தொழிற்சாலைகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவற்றுடன் வணிக முதலீடுகள் தூண்டப்படலாம்; செல்வந்தர்கள் அதிகம் செலவு செய்யக் கூடும்; இவை சந்தையில் பொருட்களுக்கு அதிகத் தேவையை உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது, இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கலாம். சில்லறை வணிகம் உட்பட வீடு வாங்குதல், புதிய வாகனங்கள் வாங்குதல் என அனைத்து வணிகத் துறையும் வளரக்கூடும்.  இந்தப் பொருளாதார ஏற்றம், வரி வருவாயை அதிகரிக்கிறது. டிரிக்கிள்-டவுன் பொருளாதார கோட்பாட்டின் படி, இந்தக் கூடுதல் வரி வருவாய், துவக்கத்தில் செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான அளிக்கப்பட்ட வரி குறைப்பை ஈடு செய்து, அரசுக்கு அதிக வருவாயைத் தரும் என்றும் நம்பப்படுகிறது. பங்கு சந்தை, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் என அனைத்தும் வளர்வதால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP) அதிகரிக்கும், நாட்டின் பொருளாதாரச் சூழல் வலுவடையும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கோட்பாட்டின் வெற்றிக்கு ஆதாரங்களாக, 1929ஆம் ஆண்டு, பெரும் மந்தநிலையின் போது அதிபர் ஹெர்பர்ட் ஹூவரின் பொருளாதாரத் தூண்டுதல் முயற்சிகள் மற்றும் 1981 ஆம் ஆண்டில் அதிபர் ரொனால்ட் ரீகன் மேற்கொண்ட வருமான வரிக் குறைப்புகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. 

1929ஆம் ஆண்டு அதிபரான ஹெர்பர்ட் ஹூவர், மிகக் கடுமையான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பணப் புழக்கத்தை அதிகரிக்க, நேரடியாக மக்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது பலனளிக்கும் என்பதை அதிபர் ஹூவர் நம்பவில்லை. மாறாக அந்தப் பணத்தை பொருளாதார ‘பிரமிடின்’ (economic pyramid) உச்சியில் இருக்கும் கார்ப்பரேட் மற்றும் செல்வந்தர்களுக்குக் கொடுத்தால் அதன் பலன்கள் படிப்படியாகக் கீழிறங்கி அடிமட்டத்திலிருக்கும் சராசரி மனிதனுக்குச் சென்றடையும் என்பதை நம்பினார். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், முதல் உலகப்போருக்குப் பின்னர், ஆண்டுக்கு $100,000 சம்பாதிக்கும் பெருநிறுவனம் அல்லது செல்வந்தர் சுமார் 70% வருமான வரியைக் கட்ட வேண்டியிருந்தது. ஹூவர் இந்த வருமான வரி சதவிகிதத்தை 25% ஆகக் குறைத்தார். ஆரம்பக் காலகட்டத்தில், பொருளாதாரம் வலுவடைவதாகத் தோன்றினாலும், அரசுக்கு, தொடக்கத்தில் வரி குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை இந்த வளர்ச்சி ஈடுகட்டவில்லை. இதனால் தேசியக் கடன் அதிகரித்து, பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது. இரண்டாம் உலகப்போர்ச் சூழல் உருவாகி வந்ததால் தான் பொருளாதாரம் திட்டமிட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்று காரணம் சொல்லப்பட்டபோதும், மக்கள் அதிபர் ஹூவரை 1932ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோற்கச்செய்தனர்.

ரீகனாமிக்ஸ் (Reaganomics)

ஏறத்தாழ ‘சப்ளை சைட் எகனாமிக்ஸ்’ கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அதிபர் ரானால்ட் ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் ‘ரீகனாமிக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது.இந்தக் கொள்கைகளில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான வரிக் குறைப்புகளும், வணிகங்களுக்கான தேய்மானச் செலவுகளைக் குறைக்கும் ‘துரிதச் செலவு மீட்பு அமைப்பு’ (Accelerated Cost Recovery System – ACRS) ஆகியவை அடங்கும்.

வரி குறைப்பு (Reduced Corporate, Individual, and Investment Taxes)

முதல் ஆண்டில், ரீகன் கணிசமாக வரிகளைக் குறைத்தார். கார்ப்பரேட் மற்றும் எஸ்டேட் வரிகளில் கூர்மையான வெட்டுக்களுடன், 1982 இல், பெருநிறுவனம்/செல்வந்தர்களுக்கான வருமான வரி பிரிவு (marginal tax bracket) 70% இலிருந்து 50% ஆகக் குறைந்தது. 1986 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5% ஆக இருந்தது, ஆனால் வேலையின்மை விகிதம் 6.6% ஆக இருந்தது. 1987 ஆம் ஆண்டு, அதிபர் ரீகன்  மீண்டும் வரி விகிதத்தை 38.5% ஆகக் குறைத்த போது, வேலையின்மை 5.7% ஆகக் குறைந்தது. அதாவது வேலையின்மை (unemployment)  1% குறைந்தது, பொருளாதாரத்தை மேம்படுத்தியது. 

இந்தச் சீர்திருத்தங்களின் குறிக்கோள் வரிச் சுமைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், வரிக் குறியீட்டை (tax codes) எளிதாக்குவதும் ஆகும். வணிகங்களுக்கான தள்ளுபடிகள், விதிவிலக்குகள் மற்றும் பிற ஓட்டைகளை நீக்கியதுடன் நிலையான சாதனங்கள் (fixed assets), உட்கட்டமைப்புகளில் (infrastructure) முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் செலவினங்களைக் கணக்கிடும் முறையையும் மாற்றினார். 

பொதுநலத் திட்டங்களுக்கான செலவு குறைப்பு (Social welfare reduction)

அரசாங்கத் தலையீட்டைக் குறைக்க, சமூகப் பாதுகாப்பு(social security), மருத்துவ உதவி(medicaid), உணவு முத்திரை (food stamp), கல்வி மற்றும் வேலைப் பயிற்சித் திட்டங்கள்(education and job training programs) உட்பட பல உள்நாட்டு நலத் திட்டங்களுக்கு  நிதியைக் குறைத்தார். மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில் சமூகப் பாதுகாப்பு நலன்களை(social security benefits) பெறுவதை கடுமையாக்கியதன் மூலம், 10 லட்சத்துக்கும் அதிகமானோர்க்கு  அப்பயன்களை நிறுத்தினார். இது மிகுந்த சர்ச்சைக்குள்ளான போதும், அரசுக்குச் செலவுகளைக் குறைத்தது.

இவ்வாறு, உள்நாட்டு நலத்திட்டங்களைக் குறைத்தாலும், சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் “பலத்தின் மூலம் அமைதியை” (peace through strength) அடைய இராணுவப் பாதுகாப்பு செலவினங்களை 35% அதிகரித்தார்.

குறைக்கப்பட்ட அரசு ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் (Decreased Government Regulation)

எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அதிபர் ரீகன் அகற்றியதுடன்,  நிதிச் சேவைத் துறையில் கட்டுப்பாடுகளைக் குறைத்தார். மற்றும் சுத்தமான காற்றுச் சட்டத்தின் அமலாக்கத்தைத் (Clean Air Act) தளர்த்தினார். உள்துறை நிர்வாகம், எண்ணெய்க்  கிணறுகள் தோண்ட பொது நிலத்தின் பெரிய பகுதிகளையும் திறந்தது.

பணவீக்கக் குறைப்பு நடவடிக்கைகள்(Inflation reduction)

‘ரீகானாமிக்ஸ்’ கொள்கையானது, கடன் வாங்குதல் மற்றும் செலவினங்களைக் குறைப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தும் ‘ஃபெடரல் ரிசர்வ்’ திட்டங்களைக் கொணர்ந்தது. இதன்படி வங்கிகளிடையேயான பணப்பரிமாற்ற வட்டியான ‘ஃபெடரல் நிதி விகிதம்’ (federal funds rate) 20% ஆக உயர்ந்தது. இதனால் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடனுக்காக வட்டி விகிதம் 18% எனும், வரலாற்றில் இல்லாத உச்ச நிலையை அடைந்தது. அதாவது பொதுமக்கள், கடன் பெறுவதைத் தவிர்க்க இந்த வட்டி விகித உயர்வு வழிகோலியது.

ரீகனாமிக்ஸ் சாதக பாதக அம்சங்கள் (Pros and Cons of Reaganomics)

ரீகனின் பொருளாதாரத் திட்ட ஆதரவாளர்கள், 1982 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில், 21 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். இதற்கு ரீகனின் ‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரக் கொள்கை வழிவகுத்தது என்பது இவர்களின் நம்பிக்கை. இதே காலகட்டத்தில், இரட்டைஇலக்க சதவிகிதிலிருந்த பணவீக்கம், 4 சதவிகிதமாகக் குறைந்தது. வேலையிண்மையும் 6% ஆகக் குறைந்தது. பெருநிறுவனங்களுக்கான வருமான வரி 48 இலிருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்பட்டதும், செல்வந்தர்களுக்கான வருமான வரி வரம்பு 70 இலிருந்து 28 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதும் தான் இந்த பொருளாதார மாற்றங்களுக்கு காரணம் என நம்பப்பட்டது. 

இந்த மாற்றங்கள் மேலோட்டமாக நண்மை தருபவையாகப் பார்க்கப்பட்டாலும், உண்மையில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர் (rich became richer) ஆனது மட்டும் தான் மிச்சம் என்கிறார்கள் இக்கொள்கையை எதிர்ப்பவர்கள். பணப்புழக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நடுத்தர மற்றும் கீழ்மட்ட குடும்பத்தினரின் கடன் மற்றும் சேமிப்பில் எந்த பெரிய் மாற்றமும் நிகழவில்லை என்பது இவர்களது வாதம். மேலும் ரீகனின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் அவருக்கு முந்தைய அதிபரான ஜிம்மி கார்டர் முன்னெடுத்தவை என்றும், அவற்றை ரீகன் அவசரக் கோலத்தில், நீண்ட காலத் தாக்கங்களைப் பற்றி ஆராயாமல் நடைமுறைப் படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

சாதகங்கள் :

  • பணவீக்கம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.
  • தனியார் மற்றும் பெருநிறுவனங்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது.
  • வர்த்தகத் துறையில் அரசாங்கத் தலையீடுகள், கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதால், தடையிலாச் சந்தை (free market) சூழல் உருவானது.

பாதகங்கள் : 

  • பொதுநல மற்றும் சமூகத் திட்டங்கள் குறைக்கப்பட்டன
  • தேசியப் பற்றாக்குறை அதிகரித்ததால் தேசியக் கடன் எட்டாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்தது.
  • செல்வந்தர்கள் மற்றும் நடுத்தர மற்றும் கீழ் வர்க்கத்தினரிடையேயான இடைவெளி அதிகரித்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் (Economic inequality) பூதாகாராமானது.
  • இராணுவம் மற்றும் பாதுகாப்பு செலவு பல மடங்கு உயர்ந்தது.
  • ஆட்சிக் காலத் துவக்கத்தில் பணப்புழக்கம் அதிகரித்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சில ஆண்டுகளில் பணப் புழக்கம் சுருக்கப்பட்டது.

மொத்தத்தில் அதிபர் ரீகன் ஆட்சியில் பொருளாதாரம் சீரடைந்து, வேலை வாய்ப்பிண்மை குறைந்ததாகத் தெரிந்தாலும் அவை நீண்ட கால அல்லது நிரந்தரத் தீர்வளிக்கவில்லை என்ற கருத்தும் சொல்லப்பட்டது. 1982ஆம் ஆண்டு, அதாவது ரீகனின் ஆட்சிக் காலம் துவங்கியவுடனேயே, பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அதனை ஒருவாறாகத் தவிர்த்த ரீகனால் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் மற்றொரு பொருளாதார மந்தச் சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. 1986-89 காலக்கட்டத்தில் பொருளாதார மந்தம் உண்டானது. அதிரடியான மாற்றங்கள் இல்லாமலேயே இயல்பான கொளைகையின் வழியாகவே வலுவான, சீரான பொருளாதார நிலையை அடைந்திருக்க முடியும் என்பது எதிர்தரப்பினர்களது வாதம். கலவையான முடிவுகளைத் தந்திருந்தாலும், ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின என்பது ஒரு சாராரின் கணிப்பு.

டிரம்பனாமிக்ஸ் (Trumponomics)

டானல்ட் டிரம்பின் (முந்தைய) ஆட்சிப் பொருளாதார கொள்கைகள் ஏறத்தாழ ‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரக் கொள்கையை அடியொற்றியது தான். ரீகனின் பொருளாதாரக் கொள்கை போலவே, வரிச் சலுகைகள், தளர்வுகள், வர்த்தகப் போர் போன்றவற்றுடன், குடியேற்றத் தடை, இறக்குமதி கட்டுப்பாடுகள் என பல அம்சங்களும் கலந்திருந்தது. ‘வரி குறைப்பு மற்றும்  வேலை வாய்ப்பு திட்டம்’ என்ற சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு வரி விகிதத்தைக் குறைத்தார். 2025 ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டம் அமலில் இருக்கும். மேலும் சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு, கட்டுப்பாடுகள் என்று கிட்டத்தட்ட சர்வதேச வர்த்தகப் போருக்கு வழி வகுத்தது அவரது கொள்கைகள். தொழிற்சாலைகள், சுரங்ககள் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக சுற்றுச் சூழல், மாசுக் கட்டுப்பாடு, சுத்தமான நீர் போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. 

டிரம்பின் கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிரடியான மாற்றங்களைக் கொணர்ந்தது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன் பொருளாதாரம் பலமாகவே காணப்பட்டது. வேலைவாய்ப்புகள் அதிகரித்து, வேலையிண்மை விகிதம் குறைந்தது. குறிப்பாகப் பெருநிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு மட்டுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. டிரம்பின் ஆதரவாளர்கள், அவரது கொள்கைகள், பொருளாதாரப் புரட்சியை உண்டாக்கி, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்றார்கள். பணவீக்கம் குறைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது என்றார்கள். எனினும் சற்று கூர்ந்து நோக்கினால் ஒபாமா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக்கு அடிகோலின என்பது புரியும். ஒபாமா ஆட்சியின் கீழ் தொடர்ந்து 76 மாதங்கள் வேலை வாய்ப்பு உயர்ந்த வண்ணமிருந்தது. 2019 ஆம் ஆண்டில், வேலைவாய்ப்பின்மை 3.5% ஆகக் குறைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 2008 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் பங்குச் சந்தை சீராக வளர்ந்தது. கோவிட் பெருந்தொற்றுக்குச் சில மாதங்ஜளுக்கு முன்னர் நாட்டில் பொருளாதாரத் தொய்வு ஏற்படத் தொடங்கியது என்பதை மறுக்கவியலாது. பெருந்தொற்றுக் காலத்தில் அது மேலும் பாதிப்படைந்தது. பணப்புழக்கம் அதிகரித்து,  மக்களின் வாழ்க்கை சற்று மேம்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், டிரம்பின் ஆட்சிக் காலத்தில், வரி இழப்பினால் நாட்டின் கடன் தொகையில் $8.4 டிரில்லியன் கூடியது.

2024 தேர்தலில் முன் வைக்கப்படும் ‘டிரிக்கிள் டவுன்’ கோட்பாடுகள்

2024 தேர்தலில் டிரம்ப் முன்வைக்கும் திட்டங்களின்படி, பெருநிறுவனங்களுக்கான வரி தற்போதைய 21%இலிருந்து 20% ஆகக் குறைக்கப்படும். முழுக்க முழுக்க அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரி 15% ஆகக் குறைக்கப்படும். இது நடைமுறைப் படுத்தப்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் 0.4 சதவிகிதம் வளரக்கூடும். ஆனால், வரி இழப்பினால், சுமார் $670 மில்லியன் அளவுக்கு அரசுக்கு வருமானம் குறையும். இதை ஈடு செய்ய இறக்குமதி / ஏற்றுமதி கட்டணங்கள் (tariff) அதிகரிக்கப்படும் என்பதை தனது வாக்குறுதியாகச் சொல்லி வருகிறார் டிரம்ப். 

இவரது முந்தைய ஆட்சியில், குறிப்பாக 2018 ஆம் ஆண்டு, கொணரப்பட்ட ‘வரி குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தின்’ (Tax Cut and Jobs Act – TCJA) பல பிரிவுகள் வரும் 2025 இல் காலாவதியாகவுள்ளது. இத்திட்டத்தின் படி பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர் வருமான வரிகள் குறைக்கப்பட்டன. ‘டிரிக்கிள் டவுன்’ கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த இந்தச் சட்டம், அமலுக்கு வந்த பொழுது, $30,000 க்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள குடும்பங்கள் கூடுதலாக $9000 பெறுவர் எனச் சொல்லப்பட்டது. ஆறாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எதிர்பார்த்த பலன்களைக் கொண்டு வந்ததா என்று கேட்டால், பதில் சாதகமாக இல்லை. தனிநபர் வருமான வரிச் சலுகைகள் ஒரளவுக்கு நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு உதவினாலும், பெருநிறுவனங்கள் அல்லது உயர்வருமான குடும்பங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தன. எடுத்துக்காட்டாக, வருமானப் பங்கீட்டின் உயர்மட்ட வருமானமுள்ள 1 சதவீதக் குடும்பத்தினர் சராசரியாக $61,090 வரிக் குறைப்பைப் பெற்றனர். இதற்கு மாறாக, நடுத்தர குடும்பத்தினர் சராசரியாக $910 குறைப்பைப் பெற்றனர்; அதே சமயம் குறைந்த வருமானமுள்ள கீழ்நிலைப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு சராசரியாக $70 மட்டுமே வரி குறைந்தது.

மேலும் இத்திட்டத்தின்படி, வெளிநாட்டில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், சொந்த நாட்டுக்குத் திரும்பி, உள்நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்த்தது எடுபடவில்லை.  வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வருமானமீட்டிய நிறுவனங்கள், அமெரிக்க வருமான வரிச் சலுகைகளைப் பெற்றதில், அரசுக்கு பெருமளவு வரி இழப்பு ஏற்பட்டது. பெருநிறுவனங்கள், வரி குறைப்பினால் ஏற்பட்ட சேமிப்பைக் கொண்டு, பங்கு சந்தையில் பொதுமக்களிடையே இருந்த தங்களது சொந்தப் பங்குகளை திரும்ப வாங்கினர் (buybacks). பங்கு சந்தை உச்சத்தைத் தொட்டது போலத் தோன்றினாலும், இதனால் பலனடைந்தவர்கள் உயர் நடுத்தர மற்றும் உயர்மட்ட வருமானமுள்ளவர்கள் மட்டுமே. ஒரளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும், கீழ்மட்ட வருமான பிரிவினர்க்கு எதிர்பார்த்த எந்த பலன்களும் போய்ச் சேரவில்லை. மேலும் 2020 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று பரவிய போது பெரு நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் பணம் முடங்கியது. ‘டிரிக்கிள் டவுன்’ கோட்பாட்டின் படி பணம் கீழ்நோக்கி வழியவில்லை. 

TCJA சட்டம் 2025ஆம் ஆண்டைக் கடந்து நீட்டிக்கப்படும் பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளில் நாட்டுக்கு $4 டிரில்லியன் வரி இழப்பு ஏற்படும். இச்சட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள், இந்த $4 டிரில்லியனை ஈடுகட்டுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் ‘டிரிக்கிள் டவுன்’ (trickle down) பொருளாதாரம் அல்லது வழங்கீட்டுப் பொருளாதாரம் (Supply side economics), எதிர்பார்த்த பலன்களை கொண்டு வந்ததாக இதுவரை நிருபிக்கப்படவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முயற்சிக்கப்பட்ட இந்தப் பொருளாதாரக் கொள்கை, அனைத்து மட்டங்களிலும் நிலையான ஏற்றங்களைக் கொண்டுவரவில்லை. அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள், இந்த ‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரக் கோட்பாடு ஆதாரமற்றது அல்லது ஆதாயமற்றது என்பதை அறிந்திருந்தாலும், தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக இதற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது வருத்தமானது. 

ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad