வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். அந்தப் படங்கள் அனைவரையும் கவர்ந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மசாலா படங்களிலேயே அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்பது தான் தீவிர ரஜினி ரசிகர்களின் குரலாக ஒலிக்கிறது.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எண்பது, தொண்ணூறு, இரண்டாயிரம் ஆண்டுகளில் ரஜினி படங்களுக்குக் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்து, திரையரங்கில் ஆரவாரம் செய்து படங்களைப் பார்த்த அனுபவத்தை இன்றும் மீளுருவாக்கம் செய்ய நினைக்கிறோம். இன்றும் ரஜினி படத்திற்கு முதல் நாளில் ஆர்வத்துடன் செல்லும் போது நமக்கு அந்த பழைய உணர்வு வருகிறது. ஆனால், படம் பார்க்கும் போதும் வருகிறதா என்றால் இல்லை. ரஜினிக்கும் வயதாகும் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவர் வயதிற்கேற்ற படங்களில் நடிப்பதை ஏற்றுக் கொண்டால், அவருக்கென்று மாஸ் காட்சிகள் வைக்காமல், இயக்குனர்கள் கதைக்கு நேர்மையான காட்சிகளை வைத்து மட்டும் படத்தை எடுப்பார்கள்.
சரி, வேட்டையன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இயக்குனர் ஞானவேல் மீண்டும் ஒரு சமூகப் பிரச்சினை சார்ந்த கதையைப் படமாக எடுத்திருக்கிறார். ஒன்று அல்ல, பல பிரச்சினைகளை இப்படத்தில் அலசியிருக்கிறார். போலி என்கவுண்டர், கல்வியை முன் வைத்து தனியார் நிறுவனங்கள் நடத்தும் கொள்ளை மற்றும் சாதி, வர்க்கம், தோற்றம் ஆகியவற்றின் மீதான தவறான முன் மதிப்பீடு எனப் பல பேசப்படாத நல்ல கருத்துகளை இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் பேசியிருக்கிறார்.
அதிரடி போலீஸ்காரர் அதியனாக ரஜினி நடித்திருக்கிறார். நாகர்கோவிலில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாராவிற்கு உதவிகள் செய்கிறார். அந்தப் போலீஸிற்கு முன்னாள் திருடன் ஃபகத் உதவுகிறார். பிறகு, கதைக்களம் சென்னைக்கு இடம் பெயர்கிறது. அங்கு, மர்மமான முறையில் துஷாரா கொல்லப்படுகிறார். அதைச் செய்தது யார் என்ற துப்பறிவும் கதையாக முதல் பாதி செல்கிறது. அப்படி கண்டுப்பிடிக்கப்படுபவர் என்கவுண்டர் செய்யப்படுகிறார். நாயகன் செய்த அந்த என்கவுண்டர் தவறு என்று புரிந்து, உண்மையான குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து, சட்டப்பூர்வமாக சரியான தண்டனை வாங்கி கொடுப்பது இரண்டாம் பாதியின் கதை.
சமீபக்காலத்தில் வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்களில், இந்தப் படத்தில் வலுவான பெரிய கதை இருக்கிறது என்று சொல்லலாம். வெற்று காட்சிகளாக அடுக்காமல், ஒரு நல்ல நாவல் படித்த உணர்வு முதல் பாதியில் கிடைக்கிறது. நிறைய தவறான பொது கருத்துகளை, இப்படத்தில் அடித்து நொறுக்கியிருக்கிறார் இயக்குனர். என்கவுண்டரை ஆதரிக்கும் பெருவாரியான மக்களின் மனசாட்சியை நேர்மையுடன் அசைத்து பார்த்திருக்கிறார். ஒரு பகுதியில் வாழும் மக்களை வில்லனாகவே சித்தரிக்கும் தமிழ்ப்படங்களில் இந்தப் படம் தனித்து தெரிகிறது. தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பில், தான் பேச நினைக்கிற அரசியலை தயக்கமின்றி பேசியதற்கு இயக்குனருக்குப் பாராட்டுகள்.
அதே சமயம், நாயகனின் ரசிகர்களையும் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக, சுருட்டு வியூ அறிமுகக்காட்சி, பைட் முடிஞ்சு பாட்டு என்கிற பேட்டர்ன் சாங், நன்றாகவே தெரியும் டூப் சண்டைக்காட்சி, நாயகனுக்குப் பதிலாக கேமரா போடும் சண்டைக்காட்சி, ஹெலிகாப்டரில் தப்பிக்க நினைக்கும் வில்லனை உடனே ஹெலிகாப்டரில் சென்று பிடிக்கும் இறுதிக்காட்சி, வில்லன் ஆட்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு வில்லனை மட்டும் கதையின் நியாயத்திற்காக நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்கும் முடிவு ஆகியவை இந்தப் படத்திற்குள் இன்னொரு படமாக தெரிகிறது. இந்த நாயக பிம்பம் பற்றி தெரியாத ஒரு வெளிநாட்டவர் இந்தப் படத்தைப் பார்த்தால் குழம்பி போய் விட மாட்டாரா? இந்த விஷயத்தில் இயக்குனர் தன்னுடைய நேர்மையை இன்னும் உறுதியாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
நாகர்கோவில் பின்புலத்தில் தொடங்கும் கதையில் ரஜினியைப் பார்க்க நன்றாக இருக்கிறது. தென் தமிழ்நாட்டு கதைக்களத்தில் இதுவரை ரஜினி நடித்தது மிக குறைவே. ரஜினியை ரொம்ப கஷ்டப்படுத்தாமல் படத்தின் இசையமைப்பாளர் அறிமுகப்பாடலில் வந்து நடனமாடுகிறார். ஒரு சண்டைக்காட்சியில் ஒளிப்பதிவாளர் சண்டைப்போடுகிறார். ரஜினிக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரத்தில் அமிதாப், ரஜினி உடன் இருந்து உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ஃபகத், நல்ல ஆசிரியராக துஷாரா, கம்பீர பெண் காவலராக ரித்திகா என நடிகர் தேர்வுகள் அருமை. என்ன ரஜினி உயரத்திற்கு ஒரு வில்லனைப் பிடித்திருக்கலாம். ராணாவின் சட்டைக்காலரைப் பிடிக்க, ரஜினி எட்டி பிடிக்க வேண்டி இருக்கிறது. மஞ்சு வாரியருக்கான காட்சிகள் மிக குறைவு. அதற்காக அவருக்கு இன்னும் காட்சிகள் வைத்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே, படத்தை ரொம்ப நேரம் பார்த்த உணர்வு வருகிறது. மேலும் கிஷோர், ரோகிணி, அபிராமி, ரக்ஷன் என்று படத்தின் நடிகர் பட்டியல் நீளம். ரஜினியின் தோற்றம் காட்சிக்கு காட்சி மாறுபடுவதைக் கவனித்து சரி செய்திருக்கலாம்.
முதல் பாடல், சண்டைக்காட்சிகள் தவிர்த்து இசையில் அனிருத் அடக்கி வாசித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளுக்கு பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவில் படத்தின் மாஸ் காட்சிகளையும், பிரமாண்டமான மக்கள் போராட்டக் காட்சிகளையும், கதாபாத்திரங்கள் உரையாடும் உணர்வுபூர்வமான காட்சிகளையும் காட்டுவதில் வித்தியாசம் காட்டி ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர் அசத்தி இருக்கிறார். அதற்கு பக்கப்பலமாக படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் உதவியிருக்கிறார்.
நிச்சயமாக, ரஜினி நடித்து வெளிவரும் படங்களில் இது ஒரு வித்தியாசமான படம். முதல் பாதியின் சலிப்படைய வைக்காத திரைக்கதை, படம் நெடுக தொடர்ந்திருந்தால், நல்லதொரு படம் பார்த்த அனுபவத்தை படம் முடிந்து வெளியே வரும் போது கொடுத்திருக்கும். மற்றபடி, இயக்குனரின் கூர்மையான சமூக வசனங்கள், நட்சத்திர நடிகர்களின் கதைகேற்ற நடிப்பு, பொது புத்தி மீதான மனித உரிமை விமர்சனம் ஆகியவற்றுக்காக இப்படத்தைப் பாராட்டலாம்.
வேட்டை தவறு என்று சொல்லும் வேட்டையன் இவன்.
Tags: Rajinikanth, Super Star, Vettaiyan