தலையங்கம்
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று, வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்மா நீ வாழ்க வாழ்கவே!!!
– மகாகவி சுப்பிரமணிய பாரதி
சரியாக நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலகின் மொத்த நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் வழி நடத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளி ஒன்று பிறந்தது. அதன் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அஹிம்சையின் பலம் என்னவென்பதை உலகம் முழுதும் உணர்த்திய மகா சக்தி அது.
ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தான் என்றால் மறு கன்னத்தையும் காட்டு என்று ஏசு நாதர் போதித்ததாய்ப் படிக்கிறோம். அவர் இறை தூதர், அவரால் செய்திருக்க முடியும். நம்மைப் போல் சாதாரண மனிதராய்ப் பிறந்து, பலகீனமானவனாய் வளர்ந்த ஒரு மனிதனால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இன்னொரு கன்னத்தைக் காட்ட இயலுமா? இயலும் என்று நம்ப முடிந்ததில்லை, ஆயிரத்தித் எண்ணூற்றி அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இரண்டாம் நாள் இந்த பூமியில் வந்துதித்த உத்தம புத்திரன் திரு. மோகன் தாஸ் காந்தியின் வாழ்வியலைப் படிக்கும் வரை. அவர் பிறந்த இந்த நாளில் இந்தத் தலையங்கம் எழுதப்படுகிறது என்பது எங்களின் சஞ்சிகைக்கு பெருமை தரும் விஷயமாக நாங்கள் கருதுகிறோம்.
பாய்ந்து வரும் பத்துப் பேரை அரிவாளினால் அரிந்து கொல்வதுதான் வீரமெனக் காலங்காலமாய்த் திரைப்படங்கள் கற்றுக் கொடுத்த சமுதாயத்தில்,
”தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய், நன்னஞ்சே”
என்ற மகாகவியின் பாடலுக்கொப்ப அன்பு எனும் பண்பினைப் போதித்த மகாத்மா வாழ்ந்த உலகமிது.
கத்தியின்றி, ரத்தமின்றி உலகின் சரித்திரத்திலேயே முதலாவதும், முடிவானதுமான யுத்தத்தைக் கொணர்ந்து அதன் இறுதியில் வெற்றியையும் தழுவிய மாவீரன் மகாத்மா காந்தி வாழ்ந்த பூமியில் வாழ்வதற்காகப் பெருமைப் பட வேண்டிய நாம், இன்றைய அரசியலின் இழிநிலையில் உலக மேடையில் கூனிக் குறுகி வாழ்கிறோம் என்பது துரதிர்ஷ்ட வசமானது.
அவர் போதித்த அன்பையும், சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் மனித இனத்தின்
பெருமையையும், புகழையும் கீர்த்தியையும் நினைவூட்டும் சிறு தீப்பொறியாக இருப்பதே இந்தத் தமிழேட்டின் தாழ்மையான நோக்கம்.
மூன்றுக்கு மேற்பட்ட காலங்களைச் சந்தித்துள்ள இந்த இணையதளத் தமிழேடு, மினசோட்டா மாநிலத்தின் இலையுதிர் காலத்தில் அடியெடுத்து வைக்கிறது. மரத்தின் இலைகளின் வண்ணங்கள் மாறி அழகுப் பொலிவுடன் காணும் பருவமிது, இந்தப் பருவத்தின் இறுதியில் அனைத்து இலைகளும் உதிர்ந்து நடந்து செல்லும் பாதைகளில் தொடங்கி வீட்டின் புல்வெளிகள் முழுவதும் விழுந்து வியாபிக்கும் வழக்கமுடையது என்பது இங்கு வாழ்பவர்களுக்கு மிகவும் வழக்கமாகத் தெரிந்த ஒன்று. இந்த இயற்கையின் நியதிக்கு ஒப்ப பல மரங்கள் நிறம் மாறிய போதும், தங்களின் நிலை மாறாதது போன்றுத் தமிழ்ச் சமுதாயத்தின் பொழுது போக்கிற்குத் தரமான தயாரிப்போடு தமிழர்களைச் சந்திப்போம் என்ற கொள்கையில் சற்றும் மாற்றமின்றி உங்களைச் சந்திக்க வருகிறது இலையுதிர் காலப் பனிப்பூக்கள்.
பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப் பட்டாலும், கொண்ட கொள்கைகளில் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளாமல் நேர்மையின் நிழலில் இளைப்பாறும் இந்த இணைய தள இதழ், நேர்மையின் பலத்தை மட்டுமே நம்பி வெளிவந்துள்ளது என்பதையும், அந்த நேர்மை இந்த இதழைப் பல காலங்கள் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இதனை வெளியிடுகிறோம் .
உங்களின் ஆதரவை வெளிப்படையான கருத்துப் பறிமாற்றத்திலும், எங்களின் படைப்புகளைத் தரம்பார்த்து வாக்களிப்பதிலும் நாங்கள் அறிந்து கொள்கிறோம் . இதனைத் தொடர்ந்து தங்களின் எதிர்பார்ப்புக்களைக் கடந்து அதிகமாகச் செயல்படுவதே எங்களின் நோக்கம் எனத் தெளிவுபடுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
அதே எண்ணங்களுடன் எங்களின் மேல் தாங்கள் நம்பிக்கை வைக்கலாமென்று உறுதியளித்து எங்களின் இச்சிறிய தமிழ் பரப்பும் முயற்சியைத் தொடர்கிறோம்.
நன்றி
ஆசிரியர் குழு.