\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாதத்தின் மாமனிதர் – பெரியார்

Periyar_620x882சமுதாயத் தொண்டு செய்பவருக்கு, கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மத பக்தி இருக்கக்கூடாது, தேசபக்தி இருக்கக்கூடாது, ஏன் மொழிபக்தி கூட இருக்கக்கூடாது, சமுதாய பக்தி ஒன்றுதான் இருக்க வேண்டும் அவனால் தான் ஏதாவது செய்ய முடியும். எவன் ஒருவன் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ, இலக்கியத்தையோ, மொழியையோ கைல வச்சுக்கிட்டு சமுதாயத் தொண்டுச் செய்யுரான்னா, அவன் சோறுண்பவன் அல்ல.

இதைப்போன்று தெளிவாகவும் தைரியமாகவும் ஒருவரால் பேச முடியும் என்றால் அது பெரியார் என்றழைக்கப் படுகிற ஈ.வே.இராமசாமியால் மட்டுமே முடியும். மேற்கூறிய பேச்சு 1971ஆம் ஆண்டு காரைக்குடி பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியது.

அலங்கார மேடைப்பேச்சு கிடையாது, ஆட்சி அதிகாரத்திற்குத் தன் வாழ்நாள் முழுவதும் முயற்சி கூடச் செய்யாத சமுதாயப் போராளி. மக்களின் அறியாமை இருளை அகற்றப் பாடுபட்ட அறிவாசான்.

சக மனிதனை மனிதனாக மதித்துச் சம உரிமை பெற்றுத்தரத் தன் 94ஆவது வயது வரையிலும் அரசியல்வாதி என்ற சாயம் இல்லாமல் சமுதாயத்தில் புரையோடிப்போன ஏற்றத்தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சரிசெய்ய உள்ளார்ந்த உணர்வுடன் பாடுபட்டவர்.

“ஒரு மனிதன் காலில் மற்றொருவன் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு” என்று தன்வாழ்நாள் முழுதும் பரப்புரை செய்தவர் பெரியார். அவரின் தொண்டர்கள் என்று கூறிப் பிதற்றும் கழகங்கள் இந்த முதல் சமதர்ம அடிப்படையையே காற்றில் பறக்க

விட்டிருக்கிறார்கள் என்பது தற்போதைய நடப்பு அத்துடன் கேவலம்.

1879 ஆம் ஆண்டு செபுதம்பர் 17ஆம் நாள் பிறந்தார், தன் 94 ஆவது வயது வரையில் உயிர்வாழ்ந்து 1973ஆம் ஆண்டு திசம்பர் 24ஆம் நாள் காலமானார்.

தான் இறப்பதற்கு 4 நாட்கள் முன்பு வரை, 94 வயதிலும் முழங்கிக் கொண்டிருந்தார் என்பது ஓர் பேராச்சர்யம். அவர் கடைசியாகப் பேசிய கூட்டம் திசம்பர் 19 ஆம் நாள் தியாகராயர் நகரில் சிந்தனையாளர் பேரவை ஏற்பாடு செய்தது.

இவருடைய இளமை காலங்களில் பண்டிதமணி அயோத்திதாசரின் சாதி,மத மறுப்புக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுமையான நாத்திகராகவும் சமுதாயத் தொண்டாற்றுவதைத் தன் வாழ்நாள் கடமையாகவும் மேற்கொண்டார்.

19ஆம் நூறாண்டில் வாழ்ந்த அறிஞர் டார்வினின் உலகத்தோன்றலின் பரிணாம வளர்ச்சியைப் பெரியார் அறிந்ததாகத் தெரியவில்லை. தன் வாழ்க்கை அனுபவம், எதையும் பகுத்தறிவோடு அணுகும் முறை, அய்யன் வள்ளுவர் வாக்கு போல

‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதையும் கடைபிடித்துச் சுயமான இந்தியச் சூழலுக்கேற்ற சமுதாயப் போராளியாக உருவெடுத்தார்.

பெரியாரின் கடவுள் மற்றும் மத எதிர்ப்பு உலகறிந்தது, அதனால் அவரை வெறுப்பவர்களும் நிறைய உண்டு. இதைத்தாண்டி பெண்களின் சம உரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள், சாதி ஒழிப்புப் போராட்டங்கள், தற்பொழுது நடைமுறையில் உள்ள பெரியார் எழுத்துகள் ஆகியவற்றைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

பெரியாரின் புகழ்பெற்ற வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்டோருக்கும் கோயிலுள் நுழையச் சம உரிமை கேட்டுப் போராடியது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களைத் தாண்டி தன் சமுதாயப் போராட்டத்தைக் கேரள மண்ணிற்கும் எடுத்துச்சென்ற ஆண்டு 1942.

பெண்களின் மறுமணம் என்பது இந்தியச் சுதந்திரம் அடைவதற்கு முன் ஒரு பாவமாகவும் விதவைகள் தன் வாழ்நாள் முழுவதும் கணவனை இழந்தபின் தனிமையிலேயே வாழும் அவலம் இருந்தது, ஏன் 2013ஆம் ஆண்டிலும் பல மாநிலங்களிலும் இது இன்னும் நிலவுகிறது என்பது வருத்ததுக்குரியது. பெரியார் 1909ஆம் ஆண்டிலேயே தன் உடன்பிறந்த சகோதரியின் மகள் 9 வயதில் விதவையான பின் அவருக்கு மறுமணம் செய்து வைத்துத் தன் மொத்தக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு புரட்சி செய்தார்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் முழுதும் ஈடுபட்ட பொழுது பெரியாருக்கு காந்தியுடன் நட்புத் தொடங்கியது. 1920ஆம் ஆண்டில் பெரியாரின் இல்லத்தில் தங்கிய காந்தியடிகள், பெரியாரின் மனைவி நாகம்மாள் மற்றும் அவரின் தமக்கை

கண்ணம்மாள் ஆகியோர் மதுவின் கொடுமைகளை உரைத்ததை மனதில் கொண்டே மதுவிலக்கு பிரசாரத்தைக் காந்தியடிகள் முன்நிறுத்தத் தொடங்கினார் என்றால் அது மிகையில்லை.

1927ஆம் ஆண்டில் பெங்களூரில் காந்தியடிகளைச் சந்தித்த பெரியார் தீண்டாமையின் கொடுமைகளையும், தீண்டாமையை நியாயப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்துப் போராடப் பெரிதும் வலியுறுத்திப் பேசினார். காந்தியடிகள் சுதந்திரம் அடைந்தபின் இவற்றை நாம் இந்தியருக்குள்ளே தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அன்னியரிடம் இருந்து சுதந்திரம் அடைவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியதால் பின்னாளில் காந்தியின் கொள்கைகள், ஏன் சுதந்திரத்தையே கூட குறை கூறினார் பெரியார்.

1940ஆம் ஆண்டு அண்ணாவுடன் மும்பைக்குச் சென்று அம்பேத்கரையும் ஜின்னாவையும் சந்தித்தார். அப்பொழுது இராசாசி தலைமையிலான சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியதும் நீதிக்கட்சி தலைவராய் இருந்த பெரியார் ஆட்சிப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டார். ஆனால் அதனை மறுத்துத் திராவிட இனத்தையும் தமிழ் மொழியையும் காக்கத் தனித் திராவிட நாடே அவசியம் என்று முழங்கத் தொடங்கினார்.

பெரியார் எழுத்துகள்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அழைத்ததில் பலருக்கு வருத்தம், அதைப் பற்றி அவர் மேலும் விளக்கும் பொழுது தொன்மையான மொழி என்பதில் சந்தேகமில்லை ஆனால் தமிழில் அனைத்துப் புதிய கண்டுபிடிப்புகளையும், அறிவியல் பயன்பாடுகளையும் விளக்கித் தமிழை முன்னேற்ற வேண்டும், வெறும் பழம்பெருமையை மட்டும் பேசக்கூடாது என்பதையே முன்னிறுத்துகிறார். மனிதன் முதலில் காட்டுமிராண்டியாகத்தானே இருந்தான், கல் தோன்றி மண் தோன்றிய காலத்தே முன் தோன்றிய மூத்த குடியல்லவா?

 இப்பொழுது நடைமுறையில் உள்ள பல தமிழ் எழுத்துகள் பெரியார் அறிமுகப்படுத்தியது என்பது பலருக்குத் தெரியாது. கீழ்க்கண்ட அட்டவணையைக் கண்டால் அது விளங்கும். எம்.சி.இராமச்சந்திரன் முதல்வராக இருந்த பொழுது பெரியார் எழுத்துகளைச் சட்டமாக்கினார்.

Periyar Ezhuthu big

பெரியாருடைய காலத்தில் கணினி புழக்கத்தில் இல்லை, இவை மின் எழுத்துகளாக விரிவடையும் என்றும் அறிந்திராதவர் பெரியார், ஆனால் தீர்க்கதரிசனமாக அவர் முன்மொழிந்த புதிய எழுத்துகள் கணினியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட குறைந்த பகுதியில் அனைத்துச் சொற்களையும் ஒரே சீருடன் கொம்பு எழுத்து இல்லாமல் துணைக்கால் எழுத்துகள் உதவியுடன் தட்டச்சு செய்ய முடிவது சாத்தியமானது. 6 வது வரையே பள்ளிப்படிப்பு முடித்த பெரியாரின் முற்போக்கான அறிவியல் சிந்தனையும் வியக்க வைக்கிறது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உடன் ஆன நட்பு  ஒரு முறை அடிகளாரின் அழைப்பின் பேரில், பெரியார் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.அவர் நெற்றியில் அடிகளார் விபூதி பூசியதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அது பற்றித் தனது தொண்டர்களிடம் பெரியார் பேசிய போது,” நான் எங்கே விபூதி பூசினேன்?…அடிகளார் தான் பூசி விட்டார்.அவ்வளவு தான் அதை அவர் எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினேன். அந்த நேரத்தில் நான் முகத்தைத் திருப்பிக் கொண்டால்,அவரை அவமதிப்பதாகிவிடும்…எனவே நான் மறுக்க வில்லை”, என்றார்.

அடிகளாரைப்பற்றி பெரியார் இப்படி எழுதுகிறார்.

“சைவர்கள் நெற்றியில் விபூதி பூசிக்கொள்வதுதான் பக்தர்களின் இன்றியமையாத கடமை என்பார்கள். வைஷ்ணவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வதுதான் பக்தர்களின் இன்றியமையாத கடமை என்பார்கள். பகுத்தறிவுவாதிகளோ இவை இரண்டையும் பார்த்துச் சிரிப்பார்கள்.

மனிதச் சமுதாய நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மதம் ஒரு முட்டுக்கட்டை என்று கருதுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகள். சிரிப்பதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களால் முடிந்த அளவுக்குப் பகுத்தறிவுவாதிகளை அனுசரித்து ஆதரித்து பயன்படுத்திக் கொள்வர் சிலர். அக்குழுவில் சேர்ந்தவர்தாம் நம் பணிவுக்கும் போற்றுதலுக்கும் உரிய குன்றக்குடி மகா சன்னிதானமாவார்கள்.

அதாவது சர்க்கஸ் வளையத்தில் சிங்கமும் ஆடும் எப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விளையாட்டுக்காட்டி ஒன்றை ஒன்று சுமக்கிறதோ, அது போலத்தான் ஒன்றுக்கொன்று பரிகாசம், வெறுப்பு, எதிர்ப்புக்கொள்ளக்கூடிய பகுத்தறிவும் மதமும் குலவுவதுமாகும்.

சிங்கத்துக்கும் ஆட்டுக்கும் உள்ள ஒற்றுமைக்குக் காரணம் சர்க்கஸ் மாஸ்டரின் சவுக்கடிதான். அதுபோல மதமும் பகுத்தறிவும் ஒன்றுபட்டுக் குலவக்காரணம் மக்கள் நலமும் வளர்ச்சியும் தாம். ஆகவே இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.”

93 வயதில் திருநெல்வேலியில் பேசச் சென்ற பெரியார், அதற்கு முந்தைய கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இனம், மேல் சாதியினருக்கு அடிமையா இருக்கிறது என்று பேசியிருந்ததால் அவரின் உயிருக்கு நெல்லைக் கூட்டத்தில் ஆபத்து என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி பெரும் திரளான காவல்துறையை ஏகக் கெடுபிடிகளுடன் காவலுக்கு நிறுத்தி இருந்தார். மேடைக்கு வந்த பெரியார் எல்லாக் காவலர்களையும் வீட்டுக்குப் போகச்சொன்னபின் சொன்னது “யாருக்கு நான் பாடுபடுறேனோ அவனே என்னை அடிச்சுக் கொன்னான்னா கொன்னுட்டு போகட்டும், உனக்கென்ன கவலை”. அத்தனை காவலரும் விலக்கப்பட்ட பின்பே அவர் பேசினார்,

தற்கால அரசியல் வியாதிகள் பாதுகாப்பு என்ற பெயரில் அரசுப்பணத்தில் செய்யும் பாதுகாப்பு கெடுபிடிகளைப் பார்த்தால் நகைப்புதான் வருகிறது.

அவரின் 80 ஆண்டு மேடைப்பேச்சில் அவர்மேல் எறியப்பட்ட கற்களும், அழுகிய முட்டைகளும் எத்தனையோ, அவற்றிற்காக சளைத்தவரும் இல்லை தன் கருத்துகளை ஓரிருவரே இருந்து கேட்டாலும் அதற்காக வருத்தப்பட்டவரும் இல்லை.

இராசாசி, காமராசர் போன்ற காங்கிரசு தலைவர்களுடன் அவர்களின் கொள்கைகளில் ஒத்துப் போகாவிட்டாலும் நல்ல நட்புடன் இருந்தார். ஏன் தி.மு.க.வை எதிர்த்துக் காமராசருக்காக ஒரு தேர்தலில் முழுப்பிரசாரம் செய்தார் என்பது பலருக்குத் தெரியாது.

1945 ஆண்டு பேசிய ஒரு மேடைப்பேச்சில் வள்ளுவரின் வரிகளை மேற்க்கோள் காட்டிச் சொல்கிறார்

 “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்” – 1062

 பிச்சை எடுத்துத்தான் சிலர் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டழிந்து திரியட்டும் என்பது இதன் பொருள். இதனை விடுத்துப் பாரதி போல் ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இச்சகத்தினை அழித்திடுவோம்” என்று தன்னையும் அழித்துக்கொண்டு செய்ய முடியாததைப் பாடுவதனால் ஒரு விடிவும் வராது என்று சொல்கிறார் பெரியார்.

 பெரியார் ஒருமுறை சொன்னார் ”சுயமரியாதை இயக்கம் வந்ததினால் தான் வீதியோர மைல் கல்லெல்லாம் இன்னும் சாமி ஆகாம இருக்கு” என்று. ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்வது போல ‘ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியாது” என்பதென்னவோ உண்மை.

 மா.சிவானந்தம்

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    * ஆச்சரியப்பெரியார்.
    * அவரைப்பற்றி தெரியாத பல விடயங்கள்.
    * இன்று என்னைபோன்று எத்தனையோ பேர் அயலகம் வந்து பணி செய்ய
    அவர் ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.
    * அருமையான பதிவு.

  2. பிரபு says:

    பெரியார் மூடநம்பிக்கை ஒழித்தார், தீண்டாமை ஒழித்தார்..அதற்கு அவரை தலை வணங்குகிறேன். அனால் நாட்டுக்கு விடுதலையை எதிர்ப்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாது..பல விடுதலை தியாகிகள் சிறையில் அடைப்பட்டு அவதிப்பட்டு கிடைத்த சுதந்திரத்தை குறை சொல்வதா?

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      மூட நம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார் என்பது “ஒழித்தார்” என்பதை விடப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மூட நம்பிக்கை என்பது தமிழனுக்கு மட்டுமல்ல, இந்தியனுக்கு மட்டுமல்ல, மனிதனுக்குப் பொதுவான ஒரு குணம் என நம்புகிறேன். ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்கலம் செலுத்துவதற்கு ராகு காலம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களை நாம் வசைபாடுவது எளிது. நாஸாவில் (NASA) ஒரு வழக்கமிருக்கிறதாம் – புதிதாக வேலைக்குச் சேர்ந்த பொறியாளர் முதல்தினம் கழுத்துப்பட்டை (tie) அணிந்துகொண்டு வரக்கூடாதாம். அதேபோல் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்களும் (astronauts) தொழிலுக்குத் தாயாராக இருக்குங்காலை (ready for mission) ஒவ்வொரு தினமும் காலையில் டீன் மார்ட்டினின் “கோயிங் பேக் டு ஹ்யூஸ்டன்” (going back to Houston) கேட்டுக் கொண்டுதான் துயிலெழுவார்களாம். அப்படி எழுந்தால் உயிருக்குச் சேதமில்லாமல் ஹ்யூஸ்டன் வந்து சேரலாமென்பது அவர்களின் நம்பிக்கையாம். அதுசரி, வெள்ளைக்காரர்கள் செய்தால் எல்லாம் சரிதானே நமக்கு!!!

    • சிவானந்தம் மாரியப்பன் says:

      படித்து கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பிரபு.

      நாடு என்பது மக்களை உள்ளடக்கியதுதான், வெறும் நிலங்களும், வளங்களும்,எல்லைக்கோடுகளும் அல்ல, பெரியார் மிகப்பெரும்பான்மையான மக்களுக்கு யார் ஆண்டாலும் விடிவு இல்லை என்பதை திடமாக நம்பினார். அதனை சரிசெய்யாமலும், ஆட்சி அதிகாரத்தை பிடிக்க அலைந்த அரசியல்வாதிகளின் மேல்,
      சுதந்திரம் என்ற போர்வையில் அலைந்தாலும், அவற்றை ஏற்கத் தயாரில்லை அவர். ஆங்கிலேயர் எப்படி இந்தியத் துணைக்கண்டத்திற்கு அன்னியர்களோ,அதைப்போல் திராவிடத்தை மதிக்காத, அதன் தனித்தன்மையை ஒத்துக்கொள்ளாத வட நாட்டு அரசியல்வாதிகளை அவர் நம்பத் தயாரில்லை.
      ஆங்கிலேயரை அன்னியர் என்றுச் சொல்லிக்கொண்டு தன் சக “நாட்டினரையே” சரிசமமாக மதிக்க மறுத்தார்கள்.
      இந்திய நாட்டில் புரையோடியிருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆங்கிலேயர் புகுத்தியது அல்ல. சக இந்தியருக்கு சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கொடுக்க இந்தியச் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியருடன் போராடிதான் பெற வேண்டியிருந்தது.
      பிரித்தானியர் தன்னைத் தானே உயர்வாகக் கருதியது போல, பதவிக்கு வந்த இந்திய அரசியல்வாதிகள் அதேப் போன்ற மனப்பான்மையுடன் நடந்தார்கள் நடக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பிறப்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட இந்தியருக்கு சில உரிமைகளை வழங்குவதை எதிர்த்தது, இராசாசி வருணாசிரத் தர்மத்தை
      அரசியல் சட்டமாக்க முனைந்தது இந்தியச் சுதந்திரத்திற்கு பின்புதான்.
      தமிழருவி மணியன் அய்யா அவர்கள் மேற்க்கோள் காட்டுவார், 30 கோடி இந்தியருக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுக்கப் போராடியது வெரும் ஒரு இலட்சம் பேர்தான் என்று. அந்த ஒரு இலட்சம் பேரை பெரியார் குறை சொல்லவில்லை, அவர்களில் பெரும்பாலானோர் சுதந்திர இந்தியாவில் காணாமல் போனார்கள்.
      சுதந்திரத்திற்கு பின் ஆண்ட அரசியல் வியாதிகள் ஆங்கிலேயரைக் காட்டிலும் மோசமானவர்கள் தான், 562 சிற்றரசுகளை உள்ளடக்கிய இந்திய கூட்டாட்சி அமைப்பாக வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. அதற்குமுன் வரலாற்றில்
      இந்தியா என்ற ஒரு நாட்டை மூன்றில் ஒரு பங்கு கூட ஒரு பேரரசனால் ஆண்டப்பட்டது கிடையாது, இந்தியா என்ற பெயரில் அழைக்கப்பட்டதும் கிடையாது.
      அதிலும் தமிழகத்தைப் பொருத்தவரை சேர/சோழ/பாண்டியராக 2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆண்டார்கள், வடக்கு பேரரசர்கள் எவரும் விசயநகரத்தைத் தாண்டி தெற்கே ஆட்சி செய்ததில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பலருக்கு (காந்தி/நேரு/அம்பேத்கர் தவிர) இந்திய வரலாறு தெரியாது, குறிப்பாக தென்னிந்திய வரலாறு அவர்களுக்குத் தெரியாது.
      இந்தியா என்பது பல்வேறு பண்பாட்டையும் மொழியையும் பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்தன்மையோடு காத்த துணைக்கண்டம். இந்திய சுதந்திரத்திற்கு பின்பு தான் 220 இந்திய மொழிகள் அழிந்துள்ளது, ஒருமைப்பாடு என்ற பெயரால் நாட்டின் பல்வேறு ஆதாரக்கூறுகள் அழிக்கப்பட்டுள்ளன.
      100 ஆண்டுகளுக்கும் மேலான பிரித்தானிய ஆட்சியில் கொல்லப்பட்ட இந்தியர்களை விட, சுதந்திர இந்தியாவில் இந்திய அரசால் கொல்லப்பட்டவர்கள் தான் அதிகம், அதில் வடகிழக்கு மாகாணங்கள் ஆகட்டும், காசுமீர், பஞ்சாப், நக்சல் இந்தியர்களாகட்டும். மனித உரிமைக்கு மதிப்பில்லாமல் போனது சுதந்திர நாட்டில்தான், இவற்றை நன்குணர்ந்தவர் பெரியார். அவர் முன்னெடுத்த திராவிட நாடு/தனி நாடு கோரிக்கை போராட்டம் நிறைவேறியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் சொல்வதை கேளுங்கள்
      “The regional records were very diverse indeed, and if some states were separated out from rest of India, we would see a very different picture for the average of the country taken together. A number of Indian states–Kerala and Tamil Nadu, for example–would be at the top of the South Asian comparisons if they were treated as separate countries, and others–Uttar Pradesh Madhya Pradesh, for example–would do enormously worse.” (Professor Jean Drèze and Nobel Prize winning Amartya Sen
      in An Uncertain Glory: India and its Contradictions)

      • பிரபு says:

        விளக்கத்துக்கு நன்றி! உங்கள் வரலாற்று அறிவுதித்திறனுக்கு நான் என்றுமே பெரிய விசிறி! எனக்கு இந்த ஒரு விஷயத்தில் அவருடன் உடன்பாடில்லை.

        பாருக்குள்ளே நல்ல நாடு என்றைழைக்கப்படும் பாரத நாட்டை அழிக்க இன்றும் வெளிசக்திகள் பாடுபடுகிறார்கள். Geopolitics காரணமாக சீனா, பாகிஸ்தான், ஏன் அமெரிக்காவும் இந்திய மக்களை போராட்டத்துக்கு தூண்டி விடுகின்றன. வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் பண உதவி குடுத்து தூண்டிவிடுகின்றன. இதனை கட்டுபடுத்த ஒழுங்குமுறை கொணர இரும்புக்கரம் தேவைப்படுகிறது. அதை இனச்சாயம் பூசி மேலும் பெரிதுபடுத்துவதை விட, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது. இது என் கருத்து மட்டும் அல்ல. முப்பது கோடி முகம் உடையாள் எனில் மெய்புறம் ஒன்றுடையாள் என வேற்றுமையையும் ஒற்றுமையையும் பற்றி ஒரே வரியில் பாரதி எழுதினார்!

        ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு!

  3. vivek natarajan says:

    மிகவும் அருமையான பதிவு. நன்றி சிவானந்தம் sir.
    அன்புடன், விவேக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad