\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2024 இல் ஜனநாயகம்

Filed in தலையங்கம், முகவுரை by on December 23, 2024 0 Comments

இந்த ஆண்டு 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், அதாவது உலக மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் தங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்துள்ளனர். ஏதோவொரு வகையில், தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள், தங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பளித்து, நலம் புரிவார்கள் என்ற நம்புகிறார்கள். அதே நேரத்தில் இந்த தலைவர்கள் அனைவரும் நியாயமான முறையில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அல்ஜீரியா, வெனிசுவேலா, துனிசியா உட்பட சில நாடுகளில் தேர்தலுக்கு முன்பே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டு, பேருக்காகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது கண்கூடு. ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் சில நாடுகளில், சில பிரிவினர் வாக்களிக்க அனுமதியளிக்கப்படவில்லை. அரசாங்க அமைப்புகளே வாக்குச் சாவடிகளை நெருங்கவிடாமல் அவர்களை விரட்டியடித்தன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளில் உலகளாவிய போக்குகளைக் கண்காணித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஃபிரிடம் ஹவுஸ்’ (https://freedomhouse.org/) எனும் தனியார் அமைப்பு 2013 முதல் 2024 வரையிலான பத்தாண்டுக்கான புள்ளிவிவரங்களைத் தொகுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,  உலகளவில் குடிமக்களுக்கான சுதந்திரம் தொடர்ந்து குறைந்துவந்துள்ளது. 52 நாடுகளில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டன; 21 நாடுகளில் மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டது. ஆரோக்கியமற்ற, தவறான தேர்தல் முறைகள் மற்றும் ஆயுத மோதல்கள் ஜனநாயக வீழ்ச்சிக்குப் பங்களித்தன; மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்தையும், மனித துன்பங்களையும் ஏற்படுத்தியது.

இதே அறிக்கை வன்முறை, சூழ்ச்சி, தில்லுமுல்லு முறைகேடு, கையாடல் உள்ளிட்ட பலவும் இந்தாண்டு நடைபெற்ற தேர்தல்களின் பரவலான பிரச்சனைகள் எனச் சுட்டிக் காட்டுகிறது. ஆயுத மோதல்கள் மற்றும் எதேச்சதிகார ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் உலகை பாதுகாப்பற்றதாக, ஜனநாயகமற்றதாக மாற்றி மனித உரிமைகளின் சீரழிவுக்கு வழிவகுத்தன.

சமூக நலனுக்கும் மேம்பாட்டுக்கும் ஆதாரமாக விளங்கும் பன்மைத்துவம் பெரும் தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பல்வேறு அரசியல் அமைப்புகள், அதிகாரப் பலத்தின் வழியே, பன்மைத்துவத்தை, அதாவது வெவ்வேறு மத, இன, மொழி அடையாளங்களைக் கொண்ட மக்களின் அமைதியான சகவாழ்வை செங்குத்தாகப் பிளந்து ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளதையும் காணமுடிகிறது.

‘உலகில் சுதந்திரம் 2013-2024’ (Freedom in the World 2013-2024) என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தேர்தல் செயலாக்கங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் மதிப்பெண் அளித்து, மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை அளவிட்டுள்ளது இந்த ஆய்வு நிறுவனம். இந்தப் பட்டியலில் மிகக் குறைந்த புள்ளிகளுடன், கடைசி ஐந்து இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் – தெற்கு சூடான் (1 புள்ளி), சிரியா (1), துர்க்மெனிஸ்டான் (2), எரித்ரேயா (3), வட கொரியா (3). அதிக மதிப்பெண்களுடன் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் – ஃபின்லாந்து (100 புள்ளிகள்), ஸ்வீடன் மற்றும் நியுசிலாந்து (தலா 99); நார்வே (98); கனடா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சான் மரினோ (தலா 97 புள்ளிகள்). 

2011ஆம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக மாறிய தெற்கு சூடான் 2013இல் 32 புள்ளிகள் பெற்றிருந்தது. அதன்பின் தொடங்கிய உள்நாட்டு போர், கலவரங்கள் காரணமாக தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டு  இன்று 1 புள்ளியுடன் சர்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எதேச்சிகார பிடியில் சிக்குண்டிருக்கும் சிரியா 2013இலும் 1 புள்ளியுடன் கடைசி இடத்திலேயே இருந்தது. நடுவில் நிலைமை லேசாக சீர்படத் துவங்கி 5 புள்ளிகள் பெற்று, அடுத்த ஆண்டிலேயே மோசமடைந்து -1 என்ற நிலைக்குச் சென்றது. இந்நாடுகளில் தேர்தல் என்பது வெறும் சம்பிரதாய நடவடிக்கையாகவே மாறிப்போயிருக்கிறது.

இந்த பட்டியலில் 2013இல் 93  புள்ளிகளைப் பெற்றிருந்த அமெரிக்கா 10 புள்ளிகளை இழந்து 2024இல் 83 புள்ளிகளுக்கு சரிவடைந்துள்ளது. அதே போல், 2013இல் 76  புள்ளிகளைப் பெற்றிருந்த இந்தியாவும் 10 புள்ளிகளை இழந்து 2024இல் 66 புள்ளிகள் பெற்று நிற்கிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் ‘கருத்து சுதந்திரம் மற்றும் நம்பிக்கை துணைப்பிரிவு’ மற்றும் ‘தனிமனித / நிறுவன உரிமைகள் துணைப்பிரிவு’களில், கடந்த 11 ஆண்டுகளில், தலா 4 புள்ளிகளை இழந்துள்ளது. ‘சிவில் (குடிமக்கள்) உரிமைகள் வகைக்கான மொத்த மதிப்பெண்’ 10 புள்ளிகள் குறைந்துள்ளது இங்கு கவனிக்கப்படவேண்டியது. 

அமெரிக்கா, ‘பன்மைத்துவ சமூகப் பங்கெடுப்பு’, ‘கருத்து சுதந்திரம் மற்றும் நம்பிக்கை’, ‘சட்ட வரைமுறை’ பிரிவுகளில் தலா 2 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதுடன், ‘சிவில் (குடிமக்கள்) உரிமைகள் வகைக்கான மொத்த மதிப்பெண்’களில்  6 புள்ளிகளை இழந்துள்ளது. இவ்வகையான புள்ளி விவரங்களைத் தவிர்த்துவிட்டு, சற்று ஆழ்ந்து கவனித்தால், அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட வெற்றிக்காகச் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துவது சாமானியர்க்கும் விளங்கும். 

‘(ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த) சட்டவிரோத குடியேறிகள் செல்லப்பிராணிகளைத் திருடி உண்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் பேசினார். சட்டவிரோத குடியேறிகளைப் பொதுமைப்படுத்தி, ‘அவர்கள் உங்கள் சமையலறைக்குள் நுழைந்து உங்களைக் கழுத்தறுத்துக் கொன்று விடுவார்கள்’; ‘தேர்தலில் என்னை எதிர்த்து நிற்கும் ‘மனநலம் குன்றிய’வர் தான் மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 425,431 பேரை உள்ளே அனுமதித்துள்ளார்’ என்று தவறான செய்தியைப் பரப்பினார். (உண்மையில் இது கடந்த 40 ஆண்டுகளில், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையாகும்). திறந்தவெளியில் பேசிக்கொண்டிருந்தவரது முகத்தருகே பறந்து வந்த வண்டைத் தட்டிவிட்டவர், ‘இந்த வண்டு எங்கிருந்து, எப்படி இங்கே வந்தது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய ஆட்சியாக இருந்திருந்தால் இந்த வண்டு வர அனுமதித்திருக்கமாட்டேன்’ என்று தமாஷ் செய்தார்.

இந்திய பிரதமர் வேட்பாளர் ஒருவர் ‘எதிர்கட்சியினர் வெற்றி பெற்றால் நாட்டின் கிரிக்கெட் அணியில் இஸ்லாமியர்கள் மட்டுமே இருப்பார்கள்’, ‘அவர்கள் முஸ்லிம் ஊடுருவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்; வெற்றி பெற்றால் பெண்களின் தாலியை அறுத்து ‘அனைவர்க்கும்’ பிரித்துக்கொடுத்துவிடுவார்கள்; உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் அதில் ஒன்றைப் பறித்து ‘அவர்களுக்கு’ கொடுத்துவிடுவார்கள்’; ‘குழந்தை ராமரை வெளியில் வைத்துவிட்டு (அயோத்தி) ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவார்கள்’ என்றெல்லாம் பேசி இன/ மத துவேஷம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்தார். ‘80 (சதவிகிதத்தினர்) க்கும், 20 (சதவிகிதத்தினர்) க்குமான போட்டி இது’ என்று மாநிலத் தேர்தல் வேட்பாளர் ஒருவர், இருவேறு மதத்தவருக்கான போட்டி என்று மறைமுகமாகக்  கொக்கரித்தார். 

ரஷ்யாவின் தேர்தல் சுதந்திரம் 27புள்ளிகளிலிருந்து, 13 புள்ளிகளுக்கு சரிந்ததற்கு அலெக்ஸி நவால்னியின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. வங்காளதேசத்தின் மதிப்பெண் 56 இலிருந்து 40ஆக குறைந்ததின் எதிரொலியாக, சில மாதங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார்.

இதேபோல், உலகநாடுகளில் ஜனநாயகத் தன்மையின் பல பரிமாணங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிடும் ஸீவிடனைச் சேர்ந்த ‘வீ-டெம்’ (V-Dem – https://www.v-dem.net/), எனும் நிறுவனம் ‘ஊடகங்களில் அரசின் தணிக்கை’ எனும் பிரிவின் கீழ் மிக வேகமாக எதேச்சிகாரத்தை நோக்கிச் செல்லும் மூன்று நாடுகள் என்று எல்-சால்வடார், மெளரீஷியஸ், இந்தியாவைப் பட்டியலிடுகிறது. குறிப்பாக இந்தியா 1975 (நெருக்கடி நிலை) காலகட்டத்துக்கு சரிந்துவிட்டதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதில், சமமற்ற பிரநிதித்துவம் இல்லாததை (3 தெரிவர்களில் இருவர் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள்) சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நியாயமற்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கு இதுவே முதன்மையாக வழிகோலுகிறது என்கிறது. (அமெரிக்காவில் இரு பிரதான கட்சிகள் மட்டும் இருப்பதினால், இரு கட்சிகளிலிருந்தும் தலா மூன்று பேர் என்ற கணக்கில் ஆறு பேர் கூட்டமைப்பு தேர்தல் ஆணையர்களாக  (Federal Election commissioners) செயல்படுவர்).  

மொத்தத்தில் வாக்காளர் சுதந்திரம் பறிபோவதை, அறிந்தோ அறியாமலோ, பொதுஜனம் புதிய இயல்புநிலையாக  (new normal) எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது. தங்களது உரிமை, சமூகநீதி, நலன்கள் பற்றி சிந்திக்காத வண்ணம், அவர்களது கவனங்களை மதம், இனம், மொழி, நாட்டுப்பற்று, முன்னேற்றம் என்று மாற்றி மாற்றி சிதறடித்து, வட்டரங்கு வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றன அரசியலமைப்புகள். இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல. இக்கட்டுரை எழுதப்பட்ட நாளன்று, சிரியாவில் கிளர்ச்சிக்குழுக்கள் அதிரடியாக வன்முறை மூலம் ஆளும் அரசைக் கவிழ்த்துள்ளார்கள். பல பத்தாண்டுகளாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட ஜனநாயக வேட்கை அழுத்தம் தாளாமல் கிளர்ச்சிகளாகக் கிளர்ந்தெழுந்து வெடித்துள்ளது. இன்று பெயரளவில் ‘ஜனநாயக நாடு’ என்றறியப்படும் பல நாடுகளின் அரசியலமைப்புகள், சிரியா நிகழ்வைப் பாடமாக எடுத்துக்கொண்டு உண்மையான ஜனநாயகம் துளிர்த்து தழைத்தோங்கச் செய்வார்கள் என நம்புவோம்.

  • ரவிக்குமார்.

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad