அமெரிக்காவிலும் சாதி…
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்:
https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html
இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/
அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று நீங்கள் வியந்தால் அதற்கு ஆமாம் என்று பதிலளிக்கக் கூடிய இழி நிலைதான் உள்ளது. எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த ஒரு சாதி நிகழ்வு அதனை ஒட்டிய மாத இதழில் வெளி வந்த ஓரு பக்கச் செய்தி.
இங்கே பிறந்து வளர்ந்த எந்தக் குழந்தைக்கும் “சாதி” என்றால் என்னவென்றே தெரியாது, அதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கில்லை. தமிழகத்தில் சாதியினால் சில பயன்கள் உண்டு ஆனால் அமெரிக்கக் கலாசாரத்தில் இதற்கு இன வெறுப்பு என்றுதான் பெயர்.
அமெரிக்காவில் இனவெறுப்பு இல்லையென்று யாரும் பறைசாற்ற முடியாது, 40 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கே அனைவருக்கும் வாக்குரிமையே வழங்கப்பட்டது, பண்பட்ட சமுதாயத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதனை மனிதனாக
நடத்தும் பண்பு வந்ததென்றால் அது என்றுமே வரலாற்றின் கரும்புள்ளிதான். ஆனால் ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற சங்க நன்னூல் இலக்கியத்தின் கூற்றுப்படி இனவெறுப்பை ஒழிப்பதற்கு நிலையான சட்டங்கள் இந்நாட்டில் உள்ளன, சட்டங்கள் இயற்றப்படுவது மட்டுமல்லாமல் அவை மிகப்பெரும்பான்மையான தருணங்களில் கடைபிடிக்கவும் படுகிறது. இந்தியத் திருநாட்டிலும் சட்டங்கள் உண்டு அதைக் கடைபிடிப்பது தான் இல்லை, எல்லோருமே அந்நாட்டு மன்னர் அல்லவா!
அமெரிக்காவில் தீவிர வாதச் சட்டம் உள்ளது ஆதலால் “தமிழ்” “தமிழன்” என்று அடையாளப்படுத்திக் கொண்டால் எனக்குச் சிக்கல்கள் வரும் ஆதலால் இவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று நாக்கூசாமல் புதுச் சட்டத்தை உருவாக்கிக் கற்பனை செய்து தட்டிக்கழிக்கும் தமிழர்கள் இங்கே ஏராளம்.
கூர்ந்து நோக்கினால் இதைப் போன்றவர்கள் சாதியையும் மதத்தையும் தூக்கி பிடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள், அவர்களிடம் அமெரிக்க நாட்டில் இன வெறுப்புச்சட்டம் உள்ளது சாதிகளை முன்னிறுத்துவது சட்டப்படி குற்றம் என்று சொல்ல வேண்டும்.
வந்த நாட்டில் இருந்து தன் சொந்த நாடாக ஏற்றுக் கொண்ட நாட்டில் எந்தவிதத் தேவையும் பயனும் (தன் சொந்தப் பெருமை மட்டுமே பயன்) இன்றி அடுத்த தலைமுறையை இந்த இனவெறுப்பு (அ) இனப்பெருமை (like White suremacist and Nazis) கொண்டவர்களாக ஆக்க நினைப்பது மற்றும் விளைவது நம் அனைவருக்கும் ஒரு தார்மீகச் சீர்கேடு.
அரை நூற்றாண்டுக்கு மேல் பெரியாரும் அம்பேத்கர் காந்தி போன்றோரும் போராடியும் இந்தச் சாதி இன்னும் இந்தியாவில் ஒழியவில்லை, தற்பொழுது இருக்கும் அரசியல் சமுதாயச் சூழலில் சாதி மென்மேலும் புரையோடி அடிப்படை மக்கள் பண்புகளை சிதைத்து வருகிறது. கையூட்டு போன்று சாதியைத் தமிழகம் இந்தியாவில் அழிக்க முடியாது.
நாம் ஏன் இந்நாட்டில் சாதியை முன்நிறுத்த வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியம். தேவையற்ற ஒன்றை நிலைப்படுத்திக் கல்யாணமாலையில் சாதி பார்த்தும் இதழ்களில் கோத்திரம் குறிப்பிட்டு வாழ்விணையரை தேடும் பழக்கத்தையும் விட்டொழிக்கப் பாடுபடுவோம்.
இதை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டால் அமெரிக்க மண்ணிலும் சாதி வேறூன்றி 100 சமுதாயச் சீர்திருத்த வாதிகள் தோன்றினாலும் இதை அழிக்க முடியாது.
மா.சிவானந்தம்
மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இந்த காலகட்டத்தில், மெத்த படித்தவர்கள்தான் சாதி அடையாளத்தை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.. மிகவும் அருவருக்க தக்க முறையில் தற்போது பெண்களும் சாதி (Iyer & Iyengar) அடையாளத்தை தங்கள் பெயருக்கு பின்னால் அதிகமாக பயன்படுத்தி ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர்களில் சாதி அடையாளத்தை சேர்க்கிறார்கள்..