கிறிஸ்துமஸ் – கிறிஸ்து பிறப்பு – ஓர் எதார்த்த தேடல்
அனைவருக்கும் அன்பும், அமைதியும், சமாதானமும் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…!
ஊரெங்கும்… நகரெங்கும்…உலகெங்கும்… என எங்கு நோக்கினும் மாடிடைக் குடில்கள்; இறைமைந்தனை புகழ்ந்தேத்தும் மெல்லிசை பாடல்கள்…
குடிசை குப்பங்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார கோபுரங்கள் வரை எங்கு பார்த்தாலும் பளபளக்கும் மின்விளக்குகள், மினுக்கும் தோரணங்கள்.
இவை எல்லாம் கிறிஸ்து பிறப்பைப் பரபரப்பாக வரவேற்க இயங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்……. என்னுள் சிதறி எழும் எண்ணங்கள்…!
ஒருபுறம் குதூகலத்தையும், மறுபுறம் வேறுபட்ட தாக்கங்களையும் எற்படுத்துவதை தவிர்க்க முயலாது பகிர உங்களோடு விரும்புகிறேன் …!
சமூக ஏற்றத்தாழ்வுகளை தகர்க்கும் இறைவனாய்….!
(புனித லூக்காஸ் 1:5) “ஏரோது யூதேயா நாட்டு அரசனாக இருந்த காலத்தில், ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில், சதுசேயர்கள், பரிசேயர்கள், ஆளுநர்கள் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள், இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகள்…. இவற்றில் சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதர்கள். இறைவன் சமுதாயத்தில் மேலாதிக்கக் கலாச்சாரத்தைத் தகர்த்து, எளியவர்களின் வாழ்வு முறையில் மாற்றம் ஏற்படுத்த எண்ணினார்.
எல்லாம் வல்ல இறைவன், தாழ்ச்சியே உருவான கன்னி மரியாளைத் தேர்ந்தெடுத்தார். நீதிமானாய் வாழ்ந்த வளன் சூசையை இறைவன் தனது மகனின் வளர்ப்புத் தந்தையாய் இருப்பதற்குத் தகுதியானவர் என அறிந்தார். கன்னி மரியாளை, தூய ஆவியாரின் அருளால் கருவுறச்செய்து, வளன் சூசையிடம் கன்னி மரியாளை மனைவியாக ஏற்கச் செய்தார். இரக்கத்தின் அரசராக எளிமைக் கோலம்பூண்ட குழந்தை இயேசுவை, பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறக்கச் செய்தார். இதன்மூலம் எக்காலத்தவர்க்கும் ஏற்புடைய அன்பை, இரக்கத்தை, எளிமையை மேலோங்கச் செய்தார்.
குழந்தை இயேசு இத்தரணியைத் தன்வயப்படுத்தி அன்பு, நீதி, இறைவிசுவாசம் எனும் விழுமியங்களால் அணிசெய்து, முடிவற்ற இறையாட்சிக்கு வித்திட்டார். உலகத்தார் அனைவரின் மீட்பிற்காய் பிறந்த இறை பாலன் இயேசு மாட்டு தீவனத்தொட்டியில் இருகரம் உயர்த்தி இறையாசீர் அளிக்கப் பிறந்துள்ளார்.
மாட்டுத் தொழுவத்தில் எளிமையின் தேவனாய் பிறந்ததின் மூலம், தாம் எல்லாம் வல்ல இறைமகனாய் இருப்பினும், தமது அரசில் எத்தகைய மனிதர்கள் முன்னிலை பெறுவர் என்பதை வெளிப்படுத்தினார். அதிகார வர்க்கத்திற்கும் ஆணவத்திற்கும் இறைவனின் அரசில் இடமில்லை என்பதை நேர்த்தியாக, அமைதியாக, உறுதியாக தமது செயலால் வெளிப்படுத்தினார். தமது மனித அவதாரம் துயருவோர்க்கும், ஏழை எளியவர்க்கும் ஆறுதல் அளிப்பதே தமது வருகையின் திட்டம் என்பதைத் தெள்ளத் தெளிவாக உலக வரலாற்றில் பதித்திருக்கிறார்.
கடவுள் அவதாரத்தின் மறையுண்மையை இறையியலாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அல்லாத கல்வியறிவற்ற ஏழை ஆடு மேய்ப்பர்களுக்கு அறிவிப்பதற்காக தேவதூதர்களை அனுப்புகிறார். இதன்மூலம், சராசரி மனிதரை அடக்கி ஆளும் அதிகார வர்க்கமும், மேல்தட்டு மக்களும், இறையரசிற்கு ஏற்றவர்கள் அல்ல என்பதையும், ஏழை எளியவர்களுக்கே இறையரசில் இடமுண்டு என்பதை தெளிவுற உணர்த்தினார். எளியவர்களே தமது அரசில் பங்கேற்கும் தகுதி உடையவர்கள், தமக்கு பிரியமானவர்களாக விளங்குவார்கள் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
அந்த மாட்டுக் தொழுவமோ, அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களால் அல்ல, எளிய மனம் படைத்தவர்களாலும் மற்றும் இறைபடைப்புகளான கால்நடைகளினால் மட்டுமே நிரம்பி உள்ளது.
வன்முறைகளை களங்கச்செய்யும் இயேசு பிறப்பு
ஞானிகளாகத் திகழ்ந்தாலும் இறைபக்தியில் நிறைந்து, இறையரசிற்காகத் தங்களை அர்பணிக்கும் குணமுடையவர்களுக்கு விண்ணரசில் இடமுண்டு என்பதை உணர்த்த, மெல்கியாஸ் (பாரசிக ஞானி), கஸ்பார் (எதியோப்பிய ஞானி), பல்தசார் (அராபிய ஞானி) என்ற மூன்று ஞானிகளுக்கு விண்மீன் வழிகாட்ட, மனுமகனாய் குழந்தை பிறந்த நிகழ்வினைக் காண வாருங்கள் என்று அறிவித்தார். வால்நட்சத்திரம் அனைவருக்கும் தெரியும் போது, இறைவன் குழந்தையாய்ப் பிறப்பார் அதற்கான அறிகுறிகள் வானிலே தோன்றும் என்பதை அந்த மூன்று ஞானிகள் மட்டுமே உணர்ந்திருந்தனர்.
அது… ஏரோது அரசனின் காலம். கீழ்த்திசையியிலிருந்து யெருசலேம் நோக்கி வந்த மூன்று ஞானிகளும் ஏரோதுவிடம் வந்து, “யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே? அவருடைய விண்மீன் எழுதலைக்கண்டு, அவரை வணங்க வந்தோம்” என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். குழந்தை இயேசுவை கொல்லத் துடித்தான்.
ஏரோது அரசன் இறைவனுக்கு எதிராக பல காரியங்களைச் செய்து, தனது குடும்பத்தில் பலரைக் கொன்று, அகஸ்து சீசரைத் தன்வயப்படுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றி, வன்முறை ஆட்சி செய்து, வரிகள் பலவிதித்து, எதிர்ப்புகளை ஒழித்த, தனது ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்று எண்ணி எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்தான்.
அதே போன்று இன்றும்…
உலகெங்கும் மலிந்து கிடக்கும் சுயநலச் சிந்தை.
தம்மையே உயர்த்தி போற்றும் ஆடம்பர கலாச்சாரம் எங்கும் மேலோங்கி நிற்கிறது.
இதனை இயேசு பாலனின் மாட்டுத்தொழுவத் தெய்வீகக் காட்சி தலைகீழாக மாற்றுகிறது.
எங்கும் போர் மேகம். இராணுவ தளவாடங்களினால் அதிக இலாபம். ஆயுதங்கள் முன் மனித உயிர்களைப் பணயம் வைக்கும் சூழல். அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு. ஆட்சியாளர்களுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே நடந்து வரும் ஆயுத மோதல்கள்.
ஆனால், இறைவன், இத்தகைய வன்முறைக் கலாச்சாரத்திற்கும், வரைமுறையற்ற அரசாட்சி செய்பவர்களுக்கு மாற்றாக “அன்பு மொழி” பேசும் வண்ணமாகவும், அன்பின் அடையாளமாகவும், அமைதியின் அரசராகவும், சமாதானத் தூதுவராகவும், இரக்கத்தின் தேவனாகவும் இவ்வுலகத்தில் பிறந்தார்.
எளிமைக் கோலம் பூண்டதன் மூலம் மேலாதிக்கத்தின் கலாச்சாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்து, அன்பின் மூலம் வன்முறைக் கலாச்சாரத்தை களைந்து, உலகெங்கிலும் அமைதி நிலவச்செய்து மனிதம் மலர பிறரன்பு மேலோங்க செய்வதே இறைதந்தையின் விருப்பம் என்பதை அழுந்தச் சொல்வதே கிறிஸ்து பிறப்பின் உள்ளார்ந்த உண்மை நற்செய்தி…
அன்பு, அமைதி, இரக்கம், தாழ்ச்சி, தூய்மை எனும் அணிகலன்களை நமக்குள் நிறைத்து இயேசு பாலனை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கச் செய்வோம்.
அனைவருக்கும் எளிமைமிகு கிறிஸ்து பிறப்பு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் …!!!
-ஆ. ரெக்ஸ் மோகன் குமார்,
சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
Tags: Celebration, Christmas, Jesus