காற்றில் உலவும் கீதங்கள் – 2024
இவ்வருடத்தில் வெளியான படங்களில் இருந்து ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களில் தொகுப்பு.
அரண்மனை 4 – அச்சோ அச்சோ
சென்ற வருடம் அனிருத் இசையில், தமன்னா ஆட்டத்தில் புகழ்பெற்ற “வா காவலா வா” பாடல் போலவே, இவ்வருடம் ஹிப்ஹாப் ஆதி இசையில் தமன்னா மற்றும் ராஷி கன்னா ஆட்டத்தில் ஹிட் அடித்த பாடல் இது. அதே போன்ற இசை, அதே போன்ற ஆட்டம், ரசிகர்களுக்கும் அதே போல் பிடித்துப் போனது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைத் தாண்டி வசூலில் இவ்வருடம் இடம் பிடித்தது இப்படம்.
ப்ரதர் – மக்காமிஷி
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான படம். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த படத்தை, இப்பாடல் அடையாளம் காட்டியது. Gen Z வாண்டுகளிடையே புகழ்பெற்ற, பால் டப்பா என்கின்ற இக்காலக் கவிஞர்(!!) எழுதி, பாடிய பாடல். சாண்டியில் நடன அமைப்பில், பாடல் உருவாக்கப்பட்ட விதமும் கவனம் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த படம் என்றாலும், மொத்த படத்தில் இந்த ஒரு பாடல் தான் ஹிட்டடித்தது. அப்படி ஹிட்டடித்த இப்பாடலாலும், இப்படத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது தான் சோகம்.
வேட்டையன் – மனசிலாயோ
ரஜினியின் முந்தைய படமான ஜெயிலரில் ஹிட்டான ‘மனசிலாயோ’ என்ற வார்த்தையை வைத்தே இப்படத்தில் ஒரு குத்து பாடலைக் கொடுத்து விட்டார் இசையமைப்பாளர் அனிருத். AI மூலம் மலேசியா வாசுதேவன் குரலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடலில் கேட்க வைத்து விட்டார். ஏதோ செய்து, கொஞ்சம் அங்கிங்கு மெனக்கெட்டு, பாடலை ஹிட் செய்ய வைத்துவிடுகிறார். வழக்கம் போல, அவரின் மற்ற பாடல்களைப் போல, இப்பாடலின் இன்ஸ்டா ரீல்ஸ் எண்ணிக்கையில் சாதனை செய்தது.
லால் சலாம் – அன்பாலே
ரஜினி நடித்த படம் என்றாலும், அதிகம் கவனம் பெறாமல் போன படம். அதிலும் இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேனிசை தென்றல் தேவா பாடி இருந்தாலும், கவனிக்கப்படாமல் போனது. ஆனாலும், காலம் கடந்து இப்பாடல் நிற்கும் என்பது நம் எண்ணம். படத்தில் காட்சிப்படுத்தியதைவிட, இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க, அவர் முன்னால் உருக்கமாகத் தேவா பாடிய காட்சி பேரனுபவத்தைக் கொடுத்தது.
விடுதலை 2 – மனசுல மனசுல
81 வயதிலும் சினிமா, கச்சேரி, சிம்பொனி என இந்தாண்டு பிசியாக இருக்கிறார் இசை ஞானி இளையராஜா. வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த விடுதலை இரண்டாம் பாகம், 2024 வருட கடைசியில் வெளியானது. பாடல்களை இளையராஜாவே எழுதி, இசையமைத்து இருக்கிறார். இந்தப் பாடலைப் பாடி இருப்பவர், பிரபல கர்னாடக இசை கலைஞர் சஞ்சய் சுப்ரமணியன். இளையராஜாவின் மெல்லிசையில் சஞ்சய் சுப்ரமணியன், அனன்யா பட் ஆகியோரது குரலிசை பாடலுக்கு மேலும் மென்மையைச் சேர்த்துள்ளது.
ராயன் – அடங்காத அசுரன்
தனுஷ் இயக்கத்தில், நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஏ.ஆர். ரஹ்மானும் தனுஷும் இணைந்து பாடிய இப்பாடல், நடுவில் வரும் “உசுரே நீதானே” என்ற வரிக்காகவே உயரம் பெற்றது. படத்தின் இறுதியில் வரும் இப்பாடலில் படத்தின் மொத்த கதாபாத்திரங்களும் வந்து நடனமாடுவார்கள். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலில் ஆடிய நடிகர்கள் அனைவரும் பிரபுதேவா போலவே ஆடியிருப்பார்கள். இயக்குனராகத் தனுஷ் வெற்றியடைந்த இரண்டாவது படம் இது.
தங்கலான் – மினுக்கி மினுக்கி
விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த படம். ஆனால், படத்தின் வசனம் புரியவில்லை, கதை புரியவில்லை என்று எழுந்த விமர்சனங்களால் அப்படியே அமுங்கி போனது. தங்கத் தேடல் கதையை, இயக்குனர் அவருடைய பாணியில், அவருடைய அரசியலுடன் கலந்து சொன்னது, வெகுஜன ரசிகர்களிடம் எடுபடாமல் போனது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டது. விழா மேடைகளில் பெண்கள் குழுவாக ஆட, இப்பாடலைப் பிடித்துக் கொண்டனர்.
கிரெட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T.) – சின்னச் சின்னக் கண்கள்
படத்தின் நாயகன் விஜய்யோ, இயக்குனர் வெங்கட் பிரபுவோ இப்படத்தினால் அதிகம் விமர்சிக்கப்படவில்லை. படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் விமர்சன அம்புகளால் துளைக்கப்பட்டார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெளியான சமயம், பலமான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தார். விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, பாடல்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். சமீபத்தில் மறைந்த அவருடைய சகோதரி, பாடகி பவதாரிணியின் குரலை இப்பாடலில் AI மூலம் மீட்டுருவாக்கம் செய்திருந்தனர். AI குரல் என்றாலும், பவதாரிணியின் ரசிகர்கள் பாடலைக் கேட்டு நெகிழ்ந்து போனார்கள்.
லப்பர் பந்து – சில்லாஞ்சிறுக்கியே
இந்தப் படம் தான், இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட். கிரிக்கெட் ஆட்டக் களத்தில் காதல், குடும்பம், சமூகம் என அனைத்தையும் கலந்து, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கதை சொல்லி இருந்தார், இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து. இளையராஜாவின் “நீ பொட்டு வச்ச” பாடல், படத்தைப் பெரிய அளவில் தூக்கிவிட்டாலும், படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் படத்தைக் கைவிடவில்லை. அவர் பங்கிற்கு “சில்லாஞ்சிறுக்கியே” என்று ஒரு நல்ல பாடலை, பாடகர்கள் பிரதீப் குமார், ஷிவாங்கி குரலில் கொடுத்திருந்தார்.
அமரன் – வெண்ணிலவு சாரல்
குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழும் ஒரு போர்வீரன், காயம் பட்டு ஓய்விற்காகக் குடும்பத்துடன் வாழும் சிறு காலத்தில் அவர்களிடையே ஏற்படும் பிணைப்பையும், வலியையும் ஒரு சேர இப்பாடலில் வடித்திருப்பார்கள் பாடலாசிரியர் யுவபாரதியும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும். ஜி.வி.பிரகாஷின் இசைக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது. அதை விட்டுவிடாமல், நடிக்கப் போகாமல் அவருடைய இசை பங்களிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.
பத்து என்கின்ற எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு இப்பாடல்களைத் தொகுத்துள்ளோம். இதில் இடம்பிடிக்காத பல நல்ல பாடல்களும், இவ்வாண்டு வெளிவந்துள்ளன. இவ்வாண்டு வெளியான பாடல்களில், உங்களைக் கவர்ந்த பாடல்களை, பின்னூட்டத்தில் பகிரவும்.
- சரவணகுமரன்