நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு
‘யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்’ என்ற பழமொழியைப் பலர் அறிந்திருக்கக் கூடும். வெவ்வேறு பொருள் தரக்கூடிய இப்பழமொழி, வீடு கட்டுவது பெரும்பாடென்றால், அதனைப் பழுதில்லாமல் பராமரிப்பது அதனினும் சிரமம் எனுமொரு கருத்தையும் தெரிவிக்கிறது. தலைக்குமேல் ஒரு நிரந்தரக் கூரை என்பது சாத்தியப்படும்பொழுது, கனவு வசப்பட்ட சந்தோஷம் வழிந்தாலும், அரும்பாடுபட்டு கட்டிய அல்லது வாங்கிய வீடு பல ஆண்டுகள் பாதுகாப்பாக நிலைத்திருக்க வேண்டுமென உள்ளுக்குள் அச்சமும் தொற்றிக் கொள்ளும். ஒரு காலக்கட்டம் வரையில், வீட்டுக் காப்பீட்டுத் திட்டம், சற்றேனும் மனநிம்மதியைத் தந்து கொண்டிருந்தது. ஆனால், காலநிலை மாற்றங்கள், வெப்பமயமாதல் என பல காரணங்களால் அதிகரிக்கும் இயற்கைப் பேரிடர்கள், காப்பீட்டுக் கோட்பாட்டையே அசைத்துள்ளது.
வீட்டு உரிமையாளர் காப்பீடு
வீட்டு உரிமையாளர் காப்பீடு (Home owners insurance) அல்லது வீட்டுக் காப்பீடு உங்கள் வீடு, வீடு தொடர்பான கட்டமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளை (house, property structures, and personal possessions) இயற்கை பேரழிவுகள், எதிர்பாராத சேதம், திருட்டு மற்றும் நாசவேலை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. பொதுவாக வீட்டுக் காப்பீடு, வெள்ளம் அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுகளை உள்ளடக்காது. அவற்றை கூடுதல் காப்பீட்டுக் கட்டணம் (premium) செலுத்தி, தனித்தனியாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். காப்பீட்டுத் தொகை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கேற்ப காப்பீட்டுக் கட்டணம் வேறுபடும்.
அமெரிக்காவில், வீட்டுக் காப்பீடு, சட்டப்படி கட்டாயமல்ல என்றாலும் வீட்டுக் கடன் பெற, காப்பீடு அத்தியாவசியம். கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், ஒருவேளை, இயற்கை சீற்றங்களால் வீடு பாதிக்கப்பட்டால், அதனை மறுபடியும் வாழத் தகுந்தளவில் கட்டியெழுப்பும் அளவுக்கு காப்பீட்டுத் தொகை இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும். வீட்டு உரிமையாளர் காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்தத் தவறிவிட்டால் அல்லது காப்பீட்டை ரத்துசெய்து விட்டால், நிதி நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர் சார்பாக காப்பீடு பெற்று, அதற்கான செலவைக் கடன் தொகையோடு சேர்த்துவிடும் உரிமையைச் சட்டம் அனுமதிக்கிறது.
வீடு மற்றும் சொத்து காப்பீடு குறித்த வரலாறு
வீடு மற்றும் அனைத்து வகையான சொத்துக்களுக்குமான காப்பீடு முதன் முதலில் லண்டன் மாநகரில், 1666 ஆம் ஆண்டு உருவானதாகத் தெரிகிறது. அதற்கு முன்பும் சிறு சிறு நிறுவனங்கள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவை தனிப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கானதாக இருக்கவில்லை. 1666 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 13,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துபோனது. இவ்விபத்தில் இழந்த சொத்துக்களுக்கு ஈடுசெய்ய ஏதாவது ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்பதை உணர்ந்து வீட்டுக் காப்பீடு கருத்துருவாக்கம் பெற்றது. ஆனால் அவை, இன்று இருப்பதைப் போல வீட்டுக் கட்டமைப்பு முழுவதுக்குமானதாக இல்லை. கதவுகளுக்கு, கூரைக்கு, தீவிபத்துக்கு எனத் தனித்தனி காப்பீடு திட்டங்களாகவே இருந்தது. 1730களில், முதன் முறையாக காப்பீட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில், தென் கரோலினா மாகாணத்தில் துவக்கப்பட்டன. இருந்தாலும், 1752இல், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் முன்னெடுப்பில் ‘Philadelphia Contributionship for the Insurance of Houses from Loss by Fire’ எனும் அமைப்பு வீட்டு காப்பீடுக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிறுவனமாகத் தோற்றுவிக்கப்பட்டது. (இன்றும் இந்த நிறுவனம் காப்பீட்டுத் துறையில் புகழ் பெற்று விளங்குகிறது). ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் தனியார் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த காப்பீட்டு நிறுவனங்களைச் சீரமைக்க அரசாங்கம் 1935 ஆம் ஆண்டு விதிமுறைகளைக் கொணர்ந்தது. பின்னர் பல பரிணாமங்களைக் கண்ட காப்பீட்டுத் துறை இன்று வீடு, வாகனம், ஆயுள், வாகனம், உடல்நலம், பிற சொத்துகள் என விரிந்து படர்ந்துள்ளது.
காப்பீடு நிறுவனங்களுக்கும் காப்பீடு
சாமான்யரின் சொத்துகளை காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பது போல, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகப்படியான இழப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மறுகாப்பீடு (Reinsurance) எனப்படும் காப்பீட்டைக் கொண்டுள்ளன. மறுகாப்பீடு என்பது ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தமாகும். அதன் மூலமாகக் காப்பீட்டு நிறுவனம் தனது இடர்களை அல்லது ஆபத்தை மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றுகிறது. மறுகாப்பீட்டு நிறுவனம் வழங்கும் பாதுகாப்பு, உத்தரவாதங்கள் காப்பீட்டு நிறுவனம் தங்களது மூலதனத்தை லாபகரமானதாக்கவும், விரிவடைய செய்வதற்கும் வழிவகுக்கிறது.
சிக்கலில் காப்பீடு
அண்மைக் காலங்களில் பெருகி வரும் இயற்கைப் பேரிடர்கள், காப்பீடு கோட்பாட்டை உலுக்கியுள்ளது. பூமிப்பரப்பு வெப்பமடைவதால், காலநிலைக்கு மாறான பேரிடர்கள் குறிப்பாகக் காட்டுத் தீ, சூறாவளி, பெருவெள்ளம், அதனால் ஏற்படும் நிலச்சரிவுகள் என நாடு முழுதும் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இவை ஏற்படுத்தும் சேதங்களைச் சீரமைக்க, சொத்து உரிமையாளர்கள் வைக்கும் இழப்பீடு கோரிக்கைகளைச் சமாளிக்க முடியாமல் காப்பீட்டு நிறுவனங்கள் திண்டாடுகின்றன. பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கி வந்த காப்புறுதியை சரிவர நிறைவேற்றுவதில்லை. கடற்கரை பகுதிகள், மலைகள், காடுகளை அடுத்துள்ள நகரங்களில், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்கள் ஆகியவற்றின் காப்பீடு கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தபட்டுள்ளன. அநேகரின் காப்புறுதி ஒப்பந்தம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு, அடுத்தடுத்து சூறாவளி, பெருமழை, வெள்ளம் என பல இடர்களைக் கண்ட ஃப்ளாரிடா மாநிலத்தில், டாம்பா பகுதியைச் சுற்றிலுமுள்ள பல வீடுகளின் காப்புறுதி ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது. மயாமி பகுதியில் கடல் அரிப்பு காரணமாக அடுக்குமாடி கட்டடங்கள், மற்றும் வீடுகள் மண் அரிப்பு காரணமாக அமிழ்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகையான கட்டடங்கள் காலப்போக்கில். பல பத்தாண்டுகளில், அதிகப்பட்சமாக அரை அங்குலம் முதல் ஒரு அங்குலம் வரை அமிழ்வதுண்டு. ஆனால் சமீபத்திய ஆய்வறிக்கை பத்தாண்டுகள் கூட நிரம்பாத பல கட்டடங்கள் 3 அங்குலம் வரை அமிழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் காப்பீட்டுக் கட்டணம் அதிரடியாக, 250% உயர்த்தப்பட்டுள்ளது. பலரது காப்புறுதி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல், காப்பீட்டு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டு, காலாவதியாகிப் போனது. அட்லாண்டிக் கடலையொட்டி அமைந்துள்ள, ஜார்ஜியா, தென் / வட கரோலினா, நியு ஜெர்சி, நியுயார்க் மாநில உயர்கட்டடங்கள் பலவும் அமிழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. காட்டுத் தீ அதிகம் ஏற்படக்கூடிய கலிபோர்னியா மாநிலத்திலும், வீட்டுக் காப்பீடு கடுமையான கட்டண உயர்வைச் சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், நூறு ஆண்டுகளுக்கு மேலாக காப்பீட்டுத் துறையில் இயங்கும் நிறுவனம் ஒன்று, ஒரே நாளில் 72000 கலிபோர்னிய வீடுகளின் காப்பீட்டை ரத்து செய்துவிட்டது. குறிப்பாக லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் சமீபத்திய காட்டுத் தீயில் எரிந்து போன பல வீடுகள் காப்பீடு இல்லாதவை. இவற்றில் பல வீடுகள், கட்டடங்களின் காப்பீட்டு ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்னர், காப்பீட்டு நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டன என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி, மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏன் இந்த நிலை?
ஏற்கனவே சொன்னது போல் எதிர்பாராத பேரிடர் மற்றும் பேரழிவுகள் காரணமாக பல வீடுகள் / சொத்துகள் முற்றிலுமாக அழிந்து போவதால், காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றின் மறுகட்டமைப்புக்கு நிதி வழங்க முடியாத நிலை உண்டாகியிருக்கிறது. ஃப்ளாரிடா டாம்பா பகுதியில் 2022 ஆம் ஆண்டு இயான் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பின் காப்பீட்டு இழப்பீடு வழியே மறுகட்டமைக்கப்பட்ட வீடுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில், குறிப்பாக ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளிகள் அதே பகுதியைத் தாக்கியதால் அழிந்துவிட்டன. ஒவ்வொரு முறையும் பூஜ்ஜியத்திலிருந்து மறுகட்டமைக்கபடும் வீடுகள், அடுத்த சூறாவளியில் தரைமட்டமாகப் படுவதால், காப்பீட்டு நிறுவனங்கள் காப்புறுதியளிக்க முன் வருவதில்லை. இதன் காரணமாக, கடன் பெற்று வீடு கட்டிய உரிமையாளர்கள் வங்கிகளால் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். வங்கிகள், தங்களது கடன் தொகையைப் பாதுகாக்க மிக அதிக கட்டணத்துக்கு காப்புறுதி பெற்று, அத்தொகையைக் கடனுடன் சேர்த்து விடுகிறார்கள்.
இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாது, பணவீக்கம் காரணமாக கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பும் காப்பீடு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த காரணமாகியுள்ளது. காப்புறுதி மாற்றுரிமை (assignment of benefits – AOB) எனும் கோட்பாடு பல போலி இழப்பீடுகளை கோருகிறது என்பது காப்பீட்டு நிறுவனங்கள் வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டு. காப்புறுதி மாற்றுரிமை, மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு கோரிக்கைகளைத் தாக்கல் செய்து காப்பீடு செய்யப்பட்ட நபரின் சார்பாக பணம் வசூலிக்க அனுமதிக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தப்படி, வீட்டு உரிமையாளர், வேறொரு நபருக்கு காப்பீட்டு நிறுவனத்துடன் பேசி, பாதிப்புக்குள்ளான வீட்டைச் சீரமைக்க அனுமதி அளிக்கிறார். சான்றாக, ஆலங்கட்டி மழை (hail) காரணமாக வீட்டுக் கூரைகள் பாதிப்படைவதுண்டு. அடுத்த சில நாட்களில் கட்டுமான நிறுவனத்தினர் அப்பகுதிக்கு படையெடுத்து வந்து உங்கள் வீட்டு கூரை பாதிப்படைந்துள்ளதைப் போல் தெரிகிறது. நாங்கள் உங்கள் சார்பாக காப்பீட்டு நிறுவனத்துடன் பேசி, கூரையைச் சீரைமத்து அல்லது மாற்றித் தருகிறோம் என்று கேட்பார்கள். இந்த நேரத்தில் வீட்டு உரிமையாளர் போடும் ஒரு கையெழுத்து, கட்டுமான நிறுவனத்துக்கு முழு உரிமையையும் தந்துவிடுகிறது. அவர்கள், காப்பீட்டு நிறுவனத்தினருடன் பேசி, கூரையைச் சீரமைத்து தருவார்கள். இதில் அந்நிறுவனம் கோரும் தொகையைத் தரவேண்டிய கட்டாயத்துக்கு காப்பீட்டு நிறுவனம் தள்ளப்படுகிறது. பெரும்பாலும் இவ்வகை ஓப்பந்தத்தில் கட்டுமான நிறுவனம் கூடுதலானத் தொகையை பெறமுடியும். இங்கு வீட்டு உரிமையாளர் பேரம் எதுவும் பேசாமல், நாலைந்து கட்டுமான நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்காமல் ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிடுவது இழப்பீட்டை அதிகரிக்கிறது.
பல நேரங்களில், பாதிப்புகளைச் சீரமைக்க காப்பீட்டு நிறுவனம் தரும் தொகையை, சீரமைப்பு வேலை எதுவும் செய்யாமலே வீட்டு உரிமையாளர் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பகிர்ந்து கொள்வார்கள். அடுத்த முறை மழை வரும் பொழுது முன்னர் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டி மீண்டும் இழப்பு கோரும் அவலங்களும் நடப்பதுண்டு.
மாநிலச் சட்டங்களும் காப்பீட்டுத் துறை தனது காப்புறுதியை விலக்கிக் கொள்வதற்கு ஒரு காரணம். எடுத்துக் காட்டுக்கு, ஃப்ளாரிடா மாநிலத்தில் நிலவும் ‘டார்ட்’ சட்டம் காப்பீட்டு நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கிறது என்கிறார்கள். இச்சட்டப்படி, வேறொருவர் செய்த தவறினால், உரிமையாளரது காப்பீட்டு உரிமை பறிக்கப்படாது. அதாவது, வீட்டு கட்டுமானப் பணியாளர் கவனக் குறைவாக செய்யும் தவறு அல்லது பயன்படுத்திய தரமற்ற பொருளினால் ஏற்படும் இழப்புகள், வீட்டு உரிமையாளரின் காப்பீட்டை பாதிக்காது. அவருக்கு முழு இழப்பீட்டுத் தொகையைப் பெரும் உரிமையுண்டு. இச்சட்டம் மூலமாக, ஃப்ளாரிடாவில், 2021 ஆம் ஆண்டு மட்டும், காப்பீட்டு நிறுவனங்கள் மீது 116,000 வழக்குகள் பதியப்பட்டன. ‘டார்ட்’ சட்டம் இல்லாத பிற மாநிலங்களில் இவ்வகையான வழக்குகள் சில நூறு மட்டுமே.
மறுகாப்பீட்டு கட்டணம் உயர்ந்துவிட்டதும், காப்பீடு நிறுவனங்கள் தடுமாறுவதற்கு ஒரு காரணம். பெருந்தொற்றுக்குப் பிறகு விநியோகச் சங்கிலி முறிந்து போனதைக் காரணம் காட்டுகிறார்கள் இவர்கள். வெளியூர்களிலிருந்து பெறவேண்டிய வீட்டுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை அல்லது கூடுதலான விலை கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள். 2019 மற்றும் 2022 க்கு இடையில் மறுகட்டமைப்பு மற்றும் சீரமைப்புச் செலவுகள் 55% அதிகரித்துள்ளதாக காப்பீட்டுத் துறை கூறுகிறது. மேலும், மறுகாப்பீட்டு நிறுவனங்கள் பல வருட இழப்புகளுக்குப் பிறகு, தங்களது கட்டணத்தை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளன.
சமூகத் தாக்கம்
கடனில் வீட்டை வாங்கியிருக்கும் உரிமையாளர்கள் விரும்பினாலும், காப்பீடு இல்லாமல் இருக்க முடியாது, ஏனெனில் கடன் தரும் வங்கிகள் அல்லது நிதி அமைப்புகள், முதலில் தங்களது கடன் தொகையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவது இயற்கை. வீட்டுக் கடன் இல்லாத உரிமையாளர்கள் உயரும் காப்பீடு கட்டணத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் தவிக்கிறார்கள். இதில் பலர், காப்பீடு வாங்குவதையே தவிர்க்கிறார்கள். அமெரிக்க நுகர்வோர் கூட்டமைப்பு அறிக்கையின்படி, சுமார் 6 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக் காப்பீட்டைக் கைவிடத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது நாட்டில் உள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களில் சுமார் 7.4% ஆகும். இவற்றின் மதிப்பு சுமார் $1.6 டிரில்லியன்.
வீட்டுக் காப்பீடு கட்டணம் அதிகரிப்பது, அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் நட்டத்தை ஈடுகட்ட கட்டண அதிகரிப்பைப் பரப்பி நிரவி விடுவதால் ஆபத்தான பகுதிகளில் இல்லாதவர்க்கும் காப்பீட்டு விலை உயர்கிறது. மேலும், காப்பீட்டு விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல், தங்களது வீடுகளை விற்க பலர் முயல்கின்றனர். இவற்றை வாங்குவதற்கு மக்கள் தயாராக இல்லாத நிலையில், வீட்டு விலை அதிரடியாகக் குறைக்கப்படுகிறது. இது அந்தப் பகுதியின் வீடுகளுக்கான சந்தை (housing market) விலையைக் கணிசமாகப் பாதிக்கிறது.
காப்பீடின் எதிர்காலம்
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இப்படி அதிரடியாக விலையை உயர்த்துவதால் அல்லது காப்பீடை நிராகரிப்பதால், மக்கள் இறுதிப் புகலிடமாக அரசு ஆதரவு பெற்ற காப்பீட்டு நிறுவனங்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். இவை பெரும்பாலும், அரைகுறை காப்பீடு வழங்குவதாகவே உள்ளன. மேலும் இவற்றுக்கான கட்டணம் மிக அதிகம். வேறு வழியில்லாமல், மக்கள் இதனை நாடுவதால் அரசு ஆதரவு பெரும் காப்பீட்டு அமைப்புகள் அதிகரித்துள்ளன. ஃப்ளாரிடாவில், அரசு ஆதரவு பெற்ற ‘குடிமக்கள் சொத்து காப்பீடு’ (Citizens Property Insurance) கடந்த ஆண்டில் மட்டும் வழங்கிய பாலிசிகளின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்து 1.3 மில்லியனாக உயர்ந்துள்ளது – இது சந்தையில் 16% க்கு சமம். மாநிலத்தில் எந்தவொரு தனியார் காப்பீட்டாளரை விட இது மிக அதிகம். தனியார் காப்பீட்டுய் நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறுவதால், அரசு ஆதரவு பெற்ற காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்க பல மாநிலங்கள் விரும்புகின்றன.
கட்டடத் துறையில் மாற்றங்கள் வராமல், காப்பீடுத் துறை நிலைபெறாது என்பது காப்பீடு வல்லுனர்களின் வாதமாகவுள்ளது. அதாவது, பெரும்பாலும் மரத்தால் கட்டப்படும் வீடுகள், வைனல் பட்டைகளால் (vinyl siding) உருவாக்கப்படும் வெளிச் சுவர்கள், காரைப் பலைகள் (stucco), கருங்காரை கூரைத் தகடுகள் (asphalt shingles) போன்ற கட்டுமானப் பொருட்கள் எளிதில் பாதிப்படையக் கூடியவை என்பதால் அவற்றுக்கு மாற்று தேடவேண்டும் என்கிறார்கள்.
வீடு, சொத்துக் காப்பீடு மட்டுமின்றி ஆயுள், வாகனம், உடல்நலக் காப்பீடு போன்றவையும் தொடர்ந்து விலை உயர்வைக் கண்டு வருகிறது. வீட்டுக் காப்பீட்டைப் பொறுத்தவரை, வேறு வழியேதும் இல்லாததால், விலையேற்றத்தைப் புது இயல்பாகக் கருதவேண்டியுள்ளது. நாம் இருக்கும் நகர் பரிந்துரைக்கும் கட்டட விதிகளைப் பின்பற்றுவது, பழுதுகளைச் சீரமைக்க அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை அமர்த்துவது, தொடர் பராமரிப்பு ஆகியவை ஓரளவுக்குப் பாதுகாப்பை அளிக்கும். உங்கள் பகுதி காட்டுத்தீ ஆபத்து மண்டலத்துக்கு உட்பட்டதென்றால் தீ தடுப்பு இரசாயனங்களால் உருவாக்கப்பட்ட கூரை, சுவர்கள், வண்ணப்பூச்சு போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். சூறாவளி ஒரு கவலையாக இருந்தால், கதவுகள், ஜன்னல்களைப் பாதுகாக்க ‘புயல் தடுப்பு பலகைகளை’ (storm shutters) பயன்படுத்தலாம். இவை சேதங்களை ஓரளவுக்கு குறைக்குமே தவிர முழுமையான பாதுகாப்பு தராது. நம்மையும், நம் உடமைகளை மட்டுமே சிந்திக்காமல், இயற்கையைப் பாதுகாப்பது தான் உசிதம். இயற்கையைச் சீண்டுவது, சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் மனித நல்வாழ்வுக்கும் தீங்கிழைக்கும்.
- ரவிக்குமார்.
Tags: Home, Home Insurance, insurance