வர்த்தகப் போர் – இறக்குமதி வரி
“என்னைப் பொறுத்தவரை, இறக்குமதி தீர்வை (Tariff), அகராதியில் உள்ள மிக அழகானதொரு சொல்லாகும். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை”. தனது தேர்தல் பிரச்சாரங்களில் ‘இறக்குமதி தீர்வையை’ முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து வென்று, இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு. டிரம்ப்பின் வார்த்தைகள் இவை. வெற்றிக்குப் பிறகு, அவர் தனது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் முதற்கட்டமாக, சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒட்டுமொத்தமாக 25% தீர்வையும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, தற்போது இருப்பதைவிட 10% கூடுதலான தீர்வையும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதே புதிய தீர்வைகளின் நோக்கமென அவர் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
இறக்குமதி வரி (Tariff)
சுருக்கமாகச் சொன்னால், இறக்குமதி தீர்வை என்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் ஒரு பொருளுக்கு, உள்நாட்டு அரசாங்கம் விதிக்கும் வரி. இதனைச் சுங்க வரி என்றும் சொல்லலாம். சில நேரங்களில் நாம் ஒரு நாட்டுக்குள் செல்லும்பொழுது, தங்கம், கணினி, மின்னணுவியல் போன்ற ஏதேனும் அரிய / விலைமதிப்புள்ள பொருளைக் எடுத்துச் செல்ல சுங்கவரி செலுத்த வேண்டியிருக்கும். தனிப்பட்ட முறையில் செலுத்தப்படும் இந்த வரி அந்தந்த நாட்டுக்குத் தகுந்தாற்போல, கொண்டு செல்லும் காரணத்துக்குத் தகுந்தாற்போல வேறுபடும்.
உதாரணமாக ‘ஆப்பிள்’ தயாரிப்பான ஒரு சராசரி கணினியை, தனிமனித பயன்பாட்டுக்காக அல்லது அன்பளிப்புக்காக, இந்தியாவுக்குள் சுங்கவரி செலுத்தாமல் எடுத்துச் செல்லமுடியும். அதே நேரத்தில், ஒருவர் 10 ஆப்பிள் கணினிகளை எடுத்தச் செல்ல முயன்றால் அவர் சுங்கவரி செலுத்த நேரிடும். காரணம், அந்தக் கணினிகள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுமெனில், அங்கிருக்கும் உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும். அதனைத் தடுக்க, உள்ளூர் சந்தைவிலையை விட குறைவாக விற்க முடியாத அளவில், அவற்றிற்கு சுங்கவரி விதிக்கப்படும். சுங்கவரி, உள்நாட்டுத் தொழிலை மேம்படுத்த அல்லது பாதுகாக்க வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதிக்கும் கொள்கையாகும்.
‘பாதுகாப்புவாதம்’ (protectionism)
பாதுகாப்புவாதம் எனும் கொள்கை, உள்நாட்டுத் தொழில்களுக்கு உதவுவதற்காக சர்வதேச வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கக் கொள்கைகளைக் குறிக்கிறது. அதுமட்டுமல்லாது, தரக் கோட்பாடு, கலாச்சாரக் கொள்கை போன்ற பல அம்சங்கள் காரணமாகவும் பாதுகாப்புவாதம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பறவை / விலங்கு போன்ற உயிரினங்களை அல்லது அவற்றின் பாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்யமுடியாது. 1970களில், இந்தியாவில் இயக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் 40%க்கு மேல் முதலீட்டு உரிமை பெறமுடியாது என்றொரு கொள்கை மேற்கொள்ளப்பட்டு, கொகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் முடக்கப்பட்டன. வர்த்தகச் சுதந்திரம் பிரபலமடையத் துவங்கிய காலக்கட்டத்துக்குப் பின்பும் கூட, இந்நிறுவனக் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் குறிப்பிட்ட இராசயனப் பொருட்கள், இந்தியர்களின் மரபணுக்களைப் பாதிக்ககூடியது என்ற காரணத்தால் 2006 இலும் பல மாநிலங்கள் இப்பொருட்களுக்கு தடை விதித்தன.
சுங்க வரி (Tariff), இறக்குமதி ஒதுக்கீடுகள் (Import Quota), பொருட்களின் தரநிலைகள் (Product standards), அரசு மானியங்கள் (Subsidies) போன்ற பல்வேறு அலகுகள் மூலமாக பாதுகாப்புவாதம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்புவாதம் குறித்து பொருளாதார வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்களிடையே பல்வேறு காலக்கட்டங்களில், பல முரண்பட்ட கருத்துகள் எழுந்ததுண்டு. அமெரிக்காவில் 1789ஆம் ஆண்டிலேயே சுங்கவரி சட்டத்துக்கான வரைவுகள் கொணரப்பட்டு, ஜூலை 4 1789 அன்று, அன்றைய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் கையெழுத்துடன் சட்டமானது. 1816 ஆம் ஆண்டு, இங்கிலாந்துடனான வர்த்தக ஏற்றத்தாழ்வு, அமெரிக்க தொழில்களைச் சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்த ‘டாலஸ் சுங்கவரி’ அமல்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்காவில் விதிக்கப்பட்ட முதல் சுங்கவரி எனலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிகார்டோ ‘வர்த்தகச் சுதந்திரம்’, அதிக சமூக ஆதாயங்களுக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டனர். இவர்களின் வாதம், ஒரு நாடு, தன் வளங்களுக்கேற்ப சிறந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தவேண்டும்; தேவைகளுக்கேற்ப தமக்குத் தேவைப்படும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என்பதாகும். எளிய முறையில் சொல்லவேண்டுமென்றால், நானே அத்தனையையும் உற்பத்தி செய்துகொள்வேன் என்ற பெயரில் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து, திருப்தி கொள்வதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் தத்துவமாகயிருந்தது. முதலாம் உலகப் போர் முடியும்வரை பாதுகாப்புவாதத்தின் ஒரு அலகான சுங்கவரி பரவலாக பல நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. 1945க்கு பிறகு வர்த்தகச் சுதந்திரம் பரவத் தொடங்கிய பின்னர் பாதுகாப்புவாதம் படிப்படியாகக் குறைந்தது. 1990களில் நாஃப்டா(North American Free Trade Agreement – NAFTA) ஒப்பந்தம், WTO (World Trade Organization) அமைப்புகள் வர்த்தக உலகமயமாக்கலுக்கான வாசலைத் திறந்து வைத்தது. கடந்த இருபதாண்டுகளில் தடையற்ற வர்த்தகச் சுதந்திரம் நாடுகளுக்கிடையேயான இடைச்சார்புத் தன்மையை (interdependency) அதிகரித்தது. மறுபுறம் நுகர்வோர்க்கு தங்களுக்கு தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்க எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தந்தது. இன்றைய பொருளாதாரச் சூழல் மீண்டும் வர்த்தகத் தடைகளை உருவாக்கும் பட்சத்தில் நுகர்வோர்க்கான விருப்பத்தேர்வு வாய்ப்புகள் வெகுவாகச் சுருங்கலாம்.
தற்சார்புள்ள வர்த்தகச் சுதந்திரம் எனும் கற்பனாவாத பொருளாதாரம் இன்று சாத்தியமில்லை. இன்னும் சொல்லப் போனால், நவீன உலகில் முழுமையான தன்னாட்சி நாடுகள் அல்லது தற்சார்பு பொருளாதார நாடு (self reliant or autarky) என்று எதுவும் இல்லை, ஏனெனில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கூட சர்வதேச வர்த்தகத்தில் ஓரளவு பங்கேற்கிறார்கள் அல்லது வெளிநாட்டு உதவியைப் பெறுகிறார்கள். முழு அளவில் ‘Made in America’, ‘Made in EU’, ‘Make in India’ போன்றவை வெறும் கொள்கை முழக்கங்கள் மட்டுமே. சர்வதேச அரங்கிலிருந்து தன்னை முற்றிலும் தனிமைப்படுத்திக்கொண்ட வட கொரியா கூட எரிபொருள், கோதுமை, அரிசி, ரப்பர், இரசாயன உரங்கள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்துகொள்கிறது.
தடையற்ற வர்த்தகம் பல்கி பெருகிய கடந்த சில தசாப்தங்களில், சுங்கவரி முற்றிலும் வழக்கொழிந்துவிடவில்லை. பல்வேறு நாடுகள், தங்களது தேவைகளைப் பொறுத்து, குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதி வரி விதித்துக் கொண்டுதானிருந்தன. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (Office of the U.S. Trade Representative) சலவை இயந்திரங்கள் (washing machines) மீதான சுங்கவரியை அறிவித்தது. வீட்டு உபயோகத்துக்கான சலவை இயந்திரங்களின் இறக்குமதி 2012 முதல் 2016 வரை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் உள்நாட்டு சலவை இயந்திர உற்பத்தியாளர்களின் விற்பனை சரிந்து நிதி நெருக்கடியைச் சந்திக்கத் துவங்கின. அதனால் அமெரிக்க சலவை இயந்திர தயாரிப்பு நிறுவனமான ‘வேர்ல்பூல்’ தாக்கல் செய்திருந்த மனுவின் பேரில் தென் கொரிய நிறுவனங்களான ‘சாம்சங்’ மற்றும் ‘எல்.ஜி’ இயந்திரங்களின் இறக்குமதியைக் குறைக்க சுங்கவரி விதிக்கப்பட்டது. இதன் படி முதல் 1.2 மில்லியன் இயந்திரங்களுக்கு 20% சுங்கவரியும், அதனைத் தாண்டி அதே ஆண்டில் இறக்குமதியாகும் ஒவ்வொரு இயந்திரத்துக்கும் 50% சுங்கவரியும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்பார்த்திருந்த ‘சாம்சங்’ நிறுவனம், சுங்கவரி அறிவிப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனது சலவை இயந்திர உற்பத்தியை தென் கரோலினாவில் உள்ள ஒரு புதிய ஆலைக்கு மாற்றியது. அந்த நேரத்தில் சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க நுகர்வோர், இனி குறைவான தேர்வுகளுடன் அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
அதெப்படி நியாயம்? அமெரிக்காவிலேயே தயாரிப்பதால் சுங்கவரி இருக்காதே பின் எப்படி விலை அதிகரிக்கும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். சலவை இயந்திரத் தயாரிப்புக்கான கச்சா பொருட்களும், உதிரி பாகங்களும் தென்கொரியாவில் கிடைத்த அதே விலையில் அமெரிக்காவில் கிடைப்பதில்லை. அவற்றை ஒன்றுகூட்டி இயந்திரமாக உருவாக்கும் தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில், தென் கொரியாவில் கொடுத்ததை விட அதிகமான ஊதியம் தரவேண்டியிருக்கும். அமெரிக்காவில் இயங்கும் தொழிற்சாலைகள் அதிகப்பட்ச பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டவை. அதற்காகும் செலவும் சலவை இயந்திரத்தில் சேர்க்கப்படும். இறுதியாக இந்த உற்பத்தியினால் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதில் அமெரிக்காவில் அதிக கெடுபிடிகள் உள்ளன. இது போன்ற பல காரணங்களால், சுங்கவரியைத் தவிர்க்க அமெரிக்காவில் தொழிற்சாலையை நிறுவினாலும், உண்டாகும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க, விலையை கூட்டுவதைத் தவிர சாம்சங் நிறுவனத்துக்கு வேறு வழியில்லை. ஆக, சுங்க வரி என்ற கருத்தாக்கம் எதோவொரு வகையில் நுகர்வோர் மீது சுமையை ஏற்றுகிறது. ஆனாலும் அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளே சுங்கவரி தாக்கத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வேன் என்று சொல்வது சாத்தியமற்றது.
உதாரணமாக, கனடா நாட்டில் தயாராகும் ஒரு $30,000 மதிப்புள்ள ‘டொயோட்டா’ கார், அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வரும் பொழுது அதன் மீது 10% சுங்க வரி என்று வைத்துக் கொண்டால், $3000 வரி விதிக்கப்பட்டு, இறக்குமதியாளர் அந்த காருக்கு $33000 செலுத்துவார். அதன் பின்னர் இறக்குமதியாளர், விநியோகஸ்தர், கொள்முதல் செய்பவர் என அனைவரும் தங்கள் பங்குக்கு தலா 5% லாபத்தை சேர்ப்பார்கள் என்று வைத்துக் கொண்டால், விநியோகஸ்தர் $34650, கொள்முதல் செய்பவர் $36,382 என இறுதியில் வாடிக்கையாளர் கைக்கு வரும் சமயத்தில் அதே காருக்கு $38201 செலுத்தவேண்டியிருக்கும். அதிபர் டிரம்ப் சொல்லியிருப்பது போல சுங்க வரி 25% உயர்த்தப்படும் பட்சத்தில் இறக்குமதியாளர் அதே காருக்கு $37,500 கொடுக்க வேண்டிவரும். இறக்குமதியாளர், விநியோகஸ்தர், கொள்முதல் செய்பவர்கள் அதே தலா 5% லாபம் சேர்க்கும் பொழுது அவை முறையே $39,375,$41,343, $43,410 என்று விலை அதிகரிக்கும்.
மேற்சொன்ன ஒப்பீட்டை அட்டவணையாகப் பார்த்தால், கூடுதலான சுங்கவரியைத் தவிர்த்து ஒவ்வொரு கட்டத்திலும் நுகர்வோர் செலுத்தவேண்டிய விலை அதிகரிப்பதைக் காணலாம். சுங்கவரியும், இடையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனம் செலுத்தும் வரியும் ‘அங்கிள் சாம்’ (‘Uncle Sam’) என்றழைக்கப்படும் அமெரிக்க அரசாங்கத்துக்குப் போய்சேரும்.
காரின் அசல் மதிப்பு | சுங்க வரி | இறக்குமதியாளர் விலை | விநியோகஸ்தர் விலை | கொள்முதலாளி விலை | நுகர்வோர் விலை | இறக்குமதியாளர் லாபம் 5% | விநியோகஸ்தர் லாபம் 5% | கொள்முதலாளி லாபம் 5% |
30,000 | 10% | 33,000 | 34,650 | 36,382 | 38,201 | 1650 | 1732 | 1819 |
30,000 | 25% | 37,500 | 39,375 | 41,343 | 43,410 | 1875 | 1968 | 2067 |
சுங்கவரியின் சாதக / பாதகங்கள்
சாதகங்கள்
- உள்ளூர் வர்த்தகம் வளமடையும்
வெளிநாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் (A), உள்ளூர் நிறுவனம் (B) ஒரே பொருளைத் தயாரிக்கின்றன என வைத்துக்கொள்வோம். A அந்தப் பொருளை $100 க்கு விற்கிறது. B அந்தப் பொருளை $110 விற்கிறது. 25% சுங்கவரிக்குப் பின், A விற்கும் பொருள் $125 ஆகிவிடுவதனால் நுகர்வோர் $110 க்கு B நிறுவனப் பொருளையே வாங்குவார்கள். இதனால், உள்ளூர் வர்த்தகம், வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவை வளரும்.
- உள்ளூரில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் வளர்வதோடு, புதிய நிறுவனங்கள் உருவாகும்.
- வெளிநாட்டில் இயங்கும் உள்ளூர் நிறுவனங்கள், உற்பத்தியை உள்நாட்டுக்கு மாற்ற முயல்வதால் உள்ளூர் வேலைவாய்ப்பு பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- தொலைநோக்கில், உள்ளூரில், திறம் மிக்க ஊழியர்கள் (skilled labor) உருவாவதால், தொழிற்துறை வளர்ச்சியடையும்.
பாதகங்கள்
- இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்படுவதில்லை. இவற்றைத் தயாரிக்க புது நிறுவனங்கள், உட்கட்டமைப்பு (infrastructure) போன்றவை உருவாக்கப்பட வேண்டும்.
- ஜெர்மானியம் போன்ற கச்சாப்பொருட்களைத் தயாரிக்க உள்ளூரில் தாதுவளம் இல்லாவிடில், அவற்றை இறக்குமதி செய்யவேண்டும் அல்லது மாற்றுப் பொருளை கண்டுபிடிக்கவேண்டும்.
- தயாரிப்பு கழிவுகளை சூழலியல் காரணங்களால் வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டி வரலாம். அந்தச் சமயத்தில், வெளிநாடுகள் அவற்றுக்கு சுங்கவரி விதிக்கலாம்.
- உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் சில சமயங்களில், தரமில்லாமல் போகலாம். (இறக்குமதி செய்யும் பொழுது, தரமற்ற பொருட்களை திரும்ப அனுப்பிவிடும் வழக்கமுள்ளது).
அடுத்து என்ன?
புதிய சுங்கவரி சதவிகிதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதிபர் டிரம்ப் சொல்வது போல் அந்த நாடுகள் வரிச் சுமையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 2018 ஆம் ஆண்டு அலுமினிய பொருட்களுக்கு சுங்கவரியை கூட்டிய பொழுது, ஆஸ்திரேலியா அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தங்கள், நேச நாடு, ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் $40 பில்லியன் வர்த்தக உபரி போன்ற காரணங்களைக் காட்டி சுங்கவரி விலக்கு பெற்றது.
நவம்பர் மாதத்தில் திரு. டிரம்பைச் சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க-கனடா உறவு வலுப்படவேண்டுமென தெரிவித்திருந்தார். டிரம்ப் கனேடியப் பொருட்களுக்கு 25% சுங்கவரி அறிவித்த தினத்தன்றே அவரை தொலைபேசியில் அழைத்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ “நாங்கள் ஒன்றாக வேலை செய்யக்கூடிய சில சவால்களைப் பற்றி பேசினோம். இருநாடுகளுக்கிடையே உறவில் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வோம்” என்றார். ஆனால், எதிர்க்கட்சிகள், டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னர் அதனை தடுத்து நிறுத்தவேண்டுமென ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
சீனாவும், சுங்கவரி உயர்வை ஏற்கும் மனநிலையில் இல்லை. “ வர்த்தகப் போரில் யாரும் வெற்றிபெற மாட்டார்கள். சீனா-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இயற்கையில் பரஸ்பர நன்மை பயக்கும் என்று சீனா நம்புகிறது” என தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் டிரம்ப் தனது முந்தைய ஆட்சியிலும், அலுமினியம், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட $25 சீனப் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கேலியம், ஜெர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் அமெரிக்க விவசாயப் பொருட்களைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த சீனா, மெக்சிகோ, பிரேசில் நாடுகளுக்கு மாறியதில், அமெரிக்க விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். அவர்களின் இழப்பை ஈடுகட்ட, அமெரிக்க அரசு அவர்களுக்கு $28 பில்லியன் உதவித் தொகை அளிக்கவேண்டிவந்தது. இந்த முறை சீனா விபரீதமாக முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது என அஞ்சுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்து பழி வாங்குவதற்குப் பதிலாக, தன் வசமுள்ள $750 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க கருவூலப் பத்திரங்களை (U.S. Treasury securities) விற்க முயன்றால், அமெரிக்க டாலர் மதிப்பும், பொருளாதாரமும் அதலபாதாளத்துக்கு செல்லும் அபாயமுண்டு.
பதவியேற்ற பின்பு, சுங்க வரி பற்றி டிரம்ப் என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை. ஒரு வேளை, மற்ற நாடுகளைத் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், பேரம் பேச, பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் உத்தியாகவும் அவர் சுங்கவரியை கையிலெடுத்திருக்கலாம். எப்படியாகிலும், மிகையான சுங்கவரி நுகர்வோர் மீது சுமையைக் கூட்டுவதோடு, உலக நாடுகளிடையே வர்த்தகப் போரை உண்டாக்கும் அபாயமும் உண்டு. ஏற்கனவே எல்லை, இராணுவப் போர்களில் சிக்கித் தவிக்கும் உலகம், வர்த்தகப் போரையும் தாங்கிக்கொள்ளத் தயாரில்லை.
- ரவிக்குமார்.